Bhishma avoided Sikhandin onceagain! | Bhishma-Parva-Section-087 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 45)
பதிவின் சுருக்கம் : பீமனால் தேரிழந்த சித்திரசேனனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட விகர்ணன்; பீஷ்மருக்கும் யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடைபெற்ற போர்; குதிரைகள் கொல்லப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனின் தேரில் ஏறிக் கொண்டது; நகுலசகாதேவர்களைத் தன் கணைகளால் மறைத்த பீஷ்மர்; வில்லால் விளையாடிய பீஷ்மர்; சிகண்டியைத் தவிர்த்த பீஷ்மர்; திருஷ்டத்யும்னனின் குதிரைகளைக் கொன்ற விந்தனும் அனுவிந்தனும்; சாத்யகியின் தேரில் ஏறிக் கொண்ட திருஷ்டத்யும்னன்; ஏழாம் நாள் போரின் முடிவிலான களநிலவரம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "இப்படி {பீமனால்} தன் தேரை இழந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான உமது மகன் சித்திரசேனனைக் கண்ட உமது {மற்றொரு} மகன் விகர்ணன், அவனை {சித்திரசேனனைத்} தன் தேரில் ஏறச் செய்தான். கடுமையாகவும், கொடூரமாகவும் நடைபெற்ற அந்தப் பொதுவான போரில், சந்தனுவின் மகனான பீஷ்மர், யுதிஷ்டிரனை நோக்கி மூர்க்கமாக விரைந்தார்.
அப்போது, தங்கள் தேர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றோடு கூடிய சிருஞ்சயர்கள் நடுங்கத் தொடங்கினார்கள். யுதிஷ்டிரன் ஏற்கனவே காலனின் வாய்க்குள் அகப்பட்டுவிட்டதாகவே அவர்கள் {சிருஞ்சயர்கள்} கருதினார்கள். எனினும், இரட்டையர்களுடன் {நகுல சகாதேவர்களுடன்} சென்ற குரு குலத்தின் தலைவனான யுதிஷ்டிரன், வலிமைமிக்க வில்லாளியும், மனிதர்களில் புலியுமான பீஷ்மரை நோக்கி முன்னேறினான். அப்போது, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவிய அந்தப் பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, சூரியனை மறைக்கும் மேகங்களைப் போலப் பீஷ்மரை மறைத்தான்.
யுதிஷ்டிரனால் நன்கு அடிக்கப்பட்ட அந்த எண்ணிலா கணைகளை, நூறு நூறாகவும், ஆயிரங்களாகவும் தனித் தனித் தொகுப்புகளாக அந்தக் கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} ஏற்றுக் கொண்டார் [1]. (பதிலுக்கு) பீஷ்மரால் ஏவப்பட்ட கணைகள், காற்றில் பறக்கும் பூச்சிகளின் கூட்டத்தைப் போல எண்ணற்றவையாக இருந்தன. கண்ணிமைக்க ஆகும் பாதி நேரத்தில், சந்தனுவின் மகனான பீஷ்மர், தொகுப்புகளாக அடிக்கப்பட்ட எண்ணிலாக் கணைகளால் குந்தியின் மகனை {யுதிஷ்டிரனை} அந்தப் போரில் மறைத்தார்.
[1] இங்கே பொருள் என்னவென்றால், யுதிஷ்டிரனால் ஏவப்பட்ட அம்புகளின், எண்ணிலா தனித் தொகுப்புகளில், ஒவ்வொரு தொகுப்பும், ஒவ்வொரு நேரத்தில் பீஷ்மரால் தனித்தனியாகத் துண்டிக்கப்பட்டன என்பதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
அப்போது, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், அந்த உயர் ஆன்மக் கௌரவர் {பீஷ்மர்} மீது நஞ்சுமிக்கப் பாம்பைப் போன்ற ஒரு நாராசத்தை {நீண்ட கணையை} வேகமாக ஏவினான். எனினும், வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அம்மோதலில் யுதிஷ்டிரனின் வில்லில் இருந்து அடிக்கப்பட்ட அந்த நாராசம், தன்னை அடைவதற்கு முன்பே, ஒரு க்ஷூரப்ரத்தால் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட கணையால்} அதனைத் துண்டாக்கினார். காலனுக்கு ஒப்பான அந்த நாராசத்தைத் துண்டித்த பீஷ்மர், குருக்களின் வழிவந்த அந்த இளவரசனுடையவையும் {யுதிஷ்டிரனுடையவையும்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான அந்தக் குதிரைகளைக் கொன்றார்.
பிறகு, குதிரைகள் கொல்லப்பட்ட தனது தேரைக் கைவிட்ட பாண்டுவின் மகன் யுதிஷ்டிரன், உயர் ஆன்ம நகுலனின் தேரில் விரைவாக ஏறிக் கொண்டான். அப்போது, பகை நகரங்களை அடக்குபவரான பீஷ்மர் கோபத்தால் தூண்டப்பட்டு, அப்போரில் இரட்டையரிடம் {நகுலன் மற்றும் சகாதேவனிடம்} வந்து, அவர்களைக் கணைகளால் மறைத்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் கணைகளால் இப்படிப் பீடிக்கப்பட்ட அந்த (சகோதரர்கள்) இருவரையும் கண்ட யுதிஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீஷ்மரின் அழிவை (நிர்ணயிக்க) விரும்பி ஊக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு, அந்த யுதிஷ்டிரன், "ஒன்றாகக் கூடி சந்தனுவின் மகனான பீஷ்மரைக் கொல்வீராக" என்று சொல்லி தன் நண்பர்களையும், (தன் தரப்பிலுள்ள) ஆட்சியாளர்களையும் தூண்டினான். பிருதை மகனின் {குந்தியின் மகனின் யுதிஷ்டிரனின்} இவ்வார்தைகளைக் கேட்ட அந்த ஆட்சியாளர்கள் அனைவரும், பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடன் பாட்டனைச் {பீஷ்மரைச்} சூழ்ந்து கொண்டனர். அப்போது, அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வீழ்த்தித் தன் வில்லால் விளையாடத் தொடங்கினார்.
களத்தில் இப்படிக்கட்டுப்படுத்தப்பட முடியாமல் திரிந்து கொண்டிருந்த அந்தக் குரு குலத்தவரை {பீஷ்மரை}, காட்டில் மான் கூட்டத்திற்கு மத்தியில் திரியும் இளஞ்சிங்கத்தைப் போலப் பாண்டவர்கள் கண்டார்கள். அந்தப் போரில் பேரொலியுடன் முழங்கித் துணிவுமிக்க வீரர்களின் இதயங்களைத் தன் கணைகளால் அச்சங்கொள்ளச் செய்யும் அவரை {பீஷ்மரைக்} கண்ட க்ஷத்திரியர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிங்கத்தைக் கண்ட சிறு விலங்குகளைப் போல அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். உண்மையில், போரில் அந்தப் பாரதக் குலச் சிங்கத்தின் {பீஷ்மரின்} அசைவுகளைக் காற்றின் உதவியால் வைக்கோலை எரிக்கும் காட்டு நெருப்புக்கு ஒப்பானதாகவே அந்த க்ஷத்திரியர்கள் கண்டார்கள்.
கனிந்த (பனம்) பழங்களைத் தாங்கும் மரங்களிலிருந்து (கல்லைக் கொண்டு) அவற்றை {கனிகளை} வீழ்த்தும் திறமைமிக்க ஒரு மனிதனைப் போல, அந்தப் போரில் தேர்வீரர்களின் தலைகளைப் பீஷ்மர் வீழ்த்தினார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியின் பரப்பில் விழுந்த வீரர்களின் தலைகள், கல் மழையை ஒத்த பேரொலியை எழுப்பின. கடுமையானதும், பயங்கரமானதுமான அப்போர் நடந்து கொண்டிருந்த போது, துருப்புகள் அனைத்தின் மத்தியிலும் ஒரு பெரிய குழப்பம் தோன்றியது. அந்தக் குழப்பத்தின் விளைவால் (இரு படையின்) வியூகங்களும் {அணிவகுப்புகளும்} உடைந்தன. ஒருவரையொருவர் தனிப்பட்ட முறையில் {போருக்கு} அழைத்த க்ஷத்திரியர்கள், போரிடுவதற்காக ஒருவரையொருவர் அணுகினர்.
அப்போது, பாரதர்களின் பாட்டனைக் {பீஷ்மரைக்} கண்ட சிகண்டி, "நில்லும், நில்லும்" என்று சொன்னபடி அவரை நோக்கி மூர்க்கமாக விரைந்தான். எனினும், சிகண்டியின் பெண்தன்மையை நினைவுகூர்ந்த பீஷ்மர், அதன் காரணமாக அவனை {சிகண்டியை} அலட்சியம் செய்து சிருஞ்சயர்களை நோக்கி முன்னேறினார் [2]. அதன்பேரில், அந்தப் பெரும்போரில் பீஷ்மரைக் கண்ட சிருஞ்சயர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர். அவர்கள் {சிருஞ்சயர்கள்} தங்கள் சங்கொலிகளுடன் கலந்து, பல்வேறு விதமான உரத்த முழக்கங்களையும் செய்தனர். அதன் பிறகு தொடங்கிய கடுமையான போரில் தேர்களும் யானைகளும் ஒன்றோடொன்று கலந்தன. ஓ தலைவா {திருதராஷ்டிரரே}, நாளின் அந்த மணித்துளியின் போது, சூரியன் (நெடுங்கோட்டுக்கு {தீர்க்கரேகைக்கு}) அடுத்தப் பக்கத்தில் {மேற்கில்} இருந்தான்.
[2] இதே போல் ஐந்தாம் நாள் போரிலும் சிகண்டியைத் தவிர்த்திருக்கிறார் பீஷ்மர். ஆனாலும், பீஷ்ம பர்வம் பகுதி 86ல் பீஷ்மர் சிகண்டியின் ஆயுதத்தை வெட்டியதாக ஒரு குறிப்பு இருக்கிறது. மேலும் பீஷ்மரைக் கண்ட சிருஞ்சயர்கள் மகிழ்ந்ததாக இங்கே சொல்லப்படுகிறது. இதே பகுதியில் யுதிஷ்டிரை நோக்கி முன்னேறிய பீஷ்மரைக் கண்டு சிருஞ்சயர்கள் நடுங்கியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த மனமாற்றம் ஏற்படுவதற்கு இடையில் ஏதாவது நடந்திருக்க வேண்டும்.
பிறகு பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும், கணைகள் மற்றும் வேல்களின் மழையால் (பாரதர்களின் அந்தப்) படையைப் பெரிதும் பீடித்தனர். அவ்விருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எண்ணிலடங்காக் கணைகளால் அந்தப் போரில் உமது வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். எனினும், அந்தப் போரில் மேன்மையான தீர்மானத்தை அடைத்திருந்த உமது போராளிகள், ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, (இப்படிப்) போரில் கொல்லப்பட்டாலும், போரிடுவதிலிருந்து பின்வாங்கவில்லை. உண்மையில், உமது துருப்புகள் தங்கள் துணிச்சலின் அளவுக்குத்தக்க தாக்கத் தொடங்கினார்கள்.
எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதனின் ஒப்பற்ற மகனால் {திருஷ்டத்யும்னனால்} உமது உயர் ஆன்மப் போராளிகள் கொல்லப்பட்ட போது, அவர்களுக்கு மத்தியில் பேரொலியுடன் கூடிய துன்பக் கதறல்கள் கேட்கப்பட்டன. பேரொலியுடன் கூடிய அந்தக் கதறல்களைக் கேட்டு, உமது படையின் வலிமைமிக்க இரு தேர்வீரர்களான அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்து வேகமாகச் சென்றனர். அவனது {திருஷ்டத்யும்னனின்} குதிரைகளை வேகமாகக் கொன்ற அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள் இருவரும் சேர்ந்து, அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைக்} கணைமாரியால் மறைத்தனர். அதன்பேரில், வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தப் பாஞ்சாலர்களின் இளவரசன் {திருஷ்டத்யும்னன்}, தன் தேரைவிட்டு விரைவாகக் கீழே குதித்துக் காலந்தாழ்த்தாமல் உயர் ஆன்ம சாத்யகின் தேரில் ஏறிக் கொண்டான்.
பிறகு, கோபத்தால் தூண்டப்பட்ட மன்னன் யுதிஷ்டிரன், பெரும்படை ஒன்றின் துணையுடன், அவந்தியின் இரு இளவரசர்களான அந்த எதிரிகளைத் தண்டிப்பவர்களை {விந்தானுவிந்தர்களை} எதிர்த்துச் சென்றான். அதே போல, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அனைத்து விதங்களிலும் தயாராக இருந்த உமது மகனும் {துரியோதனனும்}, போரில் விந்தன் மற்றும் அனுவிந்தனைச் (அவர்களை ஆதரிப்பதற்காக) சூழ்ந்து நின்றான்.
அந்தப் போரில் சினம் தூண்டப்பட்ட அர்ஜுனனும், அசுரர்களை எதிர்த்த வஜ்ரபாணியை {இந்திரனைப்} போல க்ஷத்திரியக் குலத்தின் காளைகள் பலரை எதிர்த்துப் போரிட்டான். உமது மகனுக்கு {துரியோதனனுக்கு} ஏற்புடையதை எப்போதும் செய்யும் துரோணரும், அந்தப் போரில் கோபத்தில் எரிந்து, பஞ்சுக்குவியலை எரிக்கும் நெருப்பைப் போலப் பாஞ்சாலர்களை எரிக்கத் தொடங்கினார். துரியோதனனைத் தங்கள் தலைவனாகக் கொண்ட உமது பிற மகன்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் பீஷ்மரைச் சூழ்ந்து கொண்டு, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டனர்.
பிறகு, சூரியன் சிவப்பு நிறமடைந்த போது [3], ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது துருப்புகளிடம் பேசிய மன்னன் துரியோதனன், "நேரத்தை இழக்காதீர் {விரைவாகச் செயல்படுவீர்}" என்று சொன்னான். இப்படிப் போரிட்ட அவர்கள், அடைதற்கரிய சாதனைகளை அடைந்த பின், சூரியன் மேற்கு மலையில் ஓயச் சென்றதன் விளைவால் மறைந்த போது, அந்த அந்திப் பொழுதின் தொடக்கத்தில், குருதியையே வெள்ளமாகவும், அலைகளாகவும் கொண்டதும், எண்ணிலடங்கா குள்ளநரிகளால் மொய்க்கப்பட்டதுமான பயங்கர ஆறு ஒன்று விரைவாக அங்கே பெருக்கெடுத்தது. மேலும், தீமையை முன்னறிவிக்கும் வகையில், ஆவிகளும், பயங்கரமாக ஊளையிடும் குள்ளநரிகளும் நிறைந்து அந்தப் போர்க்களமே பயங்கரமாக மாறியது. ராட்சசர்களும், பிசாசங்களும் மற்றும் மனித ஊனுண்ணிகள் பிறவும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் சுற்றிலும் காணப்பட்டன.
[3] அதாவது சூரியன் மறைவதற்குச் சற்றே முன்னர் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
சுசர்மன் தலைமையிலான மன்னர்கள் அனைவரையும், அவர்களைப் பின்தொடர்பவர்களையும் {படைவீரர்களையும்} அவர்களது படைப்பிரிவின் மத்தியில் வெற்றிக் கொண்ட அர்ஜுனன், தன் பாசறையை நோக்கிச் சென்றான். இரவு தொடங்கிய போது, தன் தம்பிகளோடு கூடிய குரு குலத்தின் தலைவன் யுதிஷ்டிரனும், தன் துருப்புகள் பின் தொடர, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் பாசறையை நோக்கிச் சென்றான். துரியோதனன் தலைமையிலான மன்னர்களை வெற்றிக் கொண்ட பீமசேனனும், தனது பாசறையை நோக்கிச் சென்றான்.
அந்தப் பெரும்போரில் (தனது துருப்புகளுடன்) சந்தனுவின் மகனான பீஷ்மரைச் சூழ்ந்து கொண்ட மன்னன் துரியோதனனும், தன் பாசறையை நோக்கிச் சென்றான். மொத்த (தார்தராஷ்டிரப்) படையையும் சூழ்ந்து கொண்ட துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சல்லியன், சத்வத குலத்தின் கிருதவர்மன் ஆகியோரும், தங்கள் பாசறைகளை நோக்கிச் சென்றனர். அதே போல, தங்கள் படையைச் சூழ்ந்து கொண்ட சாத்யகியும், பிருஷதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்} தங்கள் பாசறைகளுக்குச் சென்றனர்.
இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எதிரிகளைத் தண்டிப்பவர்களான உமது துருப்பினரும், பாண்டவர்களும், இருளடைந்ததும் போரிடுவதை நிறுத்தினர். தங்கள் பாசறைகளுக்குச் ஓயச் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும், அவற்றில் {பாசறைகளில்} நுழைந்ததும், ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொண்டனர். துணிவுமிக்கத் தங்கள் வீரர்களின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து, விதிகளுக்கு ஏற்ப காவல்சாவடிகளை அமைத்து, (தங்கள் உடல்களில் இருந்து) கணைகளைப் பிடுங்கி, பல்வேறு விதங்களிலான நீரில் நீராடினர் {குளித்தனர்}.
பிறகு, அவர்களுக்காகச் சினமாற்றும் {அமைதிப்படுத்தும்} சடங்குகளை அந்தணர்கள் செய்தனர்; பாணர்கள் அவர்களது புகழைப் பாடினர். பிறகு அந்தப் புகழ்பெற்ற மனிதர்கள், கருவிகள் மற்றும் குரல் இசை ஆகிய இரண்டின் துணையோடும் சிறிது நேரம் களிப்பில் ஈடுபட்டனர் {உல்லாசமாகப் பொழுதைக் கழித்தனர்}. சிறிது நேரத்திற்கு {ஒரு முகூர்த்த நேரத்திற்கு} அந்த முழுக் காட்சியும் சொர்க்கத்தைப் போன்றே இருந்தது. அந்த மனிதர்களில் காளையர் சிறிது நேரம் போரைக் குறித்துப் பேசாதிருந்தனர். களைத்த மனிதர்களாலும், யானைகளாலும், குதிரைகளாலும் நிறைந்திருந்த அந்தப் படைகள் இரண்டும் அங்கே உறங்கிய போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, காண்பதற்கு அவை அழகாகின [4]" {என்றான் சஞ்சயன்}.
[4] களைத்திருக்கும் மனிதர்களோடு கூடியவையும், யானைகளாலும், குதிரைகளாலும் நெருங்கியவையும், நன்கு உறங்குகின்றவையுமான அந்த இருதிறத்துப் படைகளும் இராக்காலத்தில் பார்ப்பதற்கு ரமணீயமாயிருந்தன என்று வேறு ஒரு பதிப்பில் இருக்கிறது.
ஏழாம் நாள் போர் முற்றும்
ஆங்கிலத்தில் | In English |