Bhima killed eight Kauravas! | Bhishma-Parva-Section-089 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 47)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரை எதிர்த்த பாண்டவத் துருப்புகள்; பாஞ்சாலர்களை வீழ்த்திய பீஷ்மர்; பாண்டவர்களில் பீமன் மட்டுமே பீஷ்மரை எதிர்த்தது; தன் தம்பிகள் சூழப் பீஷ்மரைப் பாதுகாத்த துரியோதனன்; துரியோதனன் தம்பிகள் எண்மரைக் கொன்ற பீமன்; திருதராஷ்டிரனின் மற்ற மகன்கள் அஞ்சி ஓடியது; தன் தம்பிகளின் மறைவால் துயருற்ற துரியோதனன் பீஷ்மரிடம் புலம்பியது; துரியோதனனுக்குப் பழையதை நினைவூட்டி உறுதி அளித்த பீஷ்மர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரில் கோபத்தால் தூண்டப்பட்டவரும், சுட்டெரிக்கும் வெம்மை கொண்ட சூரியனைப் போல அனைத்துப் புறங்களையும் எரிப்பவருமான பீஷ்மரைப் பார்ப்பதற்கும் சக்தியற்றவர்களாகப் பாண்டவர்கள் இருந்தார்கள். கூர்மையான கணைகளால் அனைத்தையும் கலங்கடித்துக் கொண்டிருந்த கங்கையின் மைந்தரை {பீஷ்மரைத்} தாக்க, தர்மனுடைய மகனின் {யுதிஷ்டிரனின்} கட்டளைக்கிணங்க (பாண்டவத்) துருப்புகள் அனைத்தும் விரைந்தன. எனினும் {அப்படியிருந்தாலும்}, போரில் மகிழ்ந்த பீஷ்மர், சிருசஞ்சயர்கள் மற்றும் பாஞ்சாலர்களில் வலிமைமிக்க வில்லாளிகளை வீழ்த்தினார். பீஷ்மரால் இப்படிக் கொல்லப்பட்டாலும், மரணபயத்தைக் கைவிட்ட பாஞ்சாலர்கள், சோமகர்களுடன் கூடி அவரை {பீஷ்மரை} நோக்கி மூர்க்கமாக விரைந்தனர்.
எனினும், சந்தனுவின் மகனான வீர பீஷ்மர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அப்போரில் அவர்களுடைய {பாஞ்சாலத்} தேர்வீரர்களின் தலைகளையும் கரங்களையும் துண்டித்தார். உமது தந்தையான தேவவிரதர் {பீஷ்மர்}, அவர்களது {பாஞ்சாலர்களின்} தேர்வீரர்கள், தங்கள் தேர்களை இழக்கச் செய்தார். குதிரைகளில் இருந்த அவர்களது குதிரைப்படை வீரர்களின் தலைகள் விரைவாக விழுந்தன. மலைகளைப் போன்ற பெரும் யானைகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் பாகன்களை இழந்து, பீஷ்மரின் ஆயுதங்களால் முடக்கப்பட்டு, சுற்றி அனைத்துப் பக்கங்களிலும் விழுந்து கிடப்பதை நாங்கள் கண்டோம்.
பாண்டவர்களில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பீஷ்மரைத் தடுப்பதற்கு) தேர்வீரர்களில் முதன்மையான, வலிமைமிக்கப் பீமசேனனைத் தவிர வேறு ஒரு மனிதனும் இல்லை. உண்மையில், பீமன் மட்டுமே பீஷ்மரை அணுகி, அவருடன் போரில் மோதினான் {போரிட்டான்}. பீமனுக்கும், பீஷ்மருக்கும் இடையிலான அம்மோதலில், (கௌரவத்) துருப்புகள் அனைத்தின் மத்தியிலும், கடும் ஆரவாரம் பயங்கரமாக எழுந்தது. மகிழ்ச்சியால் நிறைந்த பாண்டவர்கள் சிங்க முழக்கமிட்டார்கள். அழிவை ஏற்படுத்திய அந்தப் படுகொலையின் போது, தன் உடன் பிறந்த தம்பிகள் சூழ இருந்த மன்னன் துரியோதனன், அந்தப் போரில் பீஷ்மரைப் பாதுகாத்து வந்தான்.
அப்போது, தேர்வீரர்களில் முதன்மையான அந்தப் பீமன், பீஷ்மரின் தேரோட்டியைக் கொன்றான். அதன் பேரில், கட்டுப்பாட்டினை இழந்த {பீஷ்மரின்} அந்தக் குதிரைகள், தேருடன் களத்தைவிட்டு ஓடின. பிறகு எதிரிகளைக் கொல்லும் அந்தப் பீமன், ஒரு கூரிய க்ஷுரப்ரத்தால் {குதிரை லாடம் போன்ற தலை கொண்ட ஒரு கணையால்} சுநாபனின் [1] தலையைக் கொய்தான். (இப்படிக்) கொல்லப்பட்ட பின்னவன் {சுநாபன்} கீழே பூமியில் விழுந்தான்.
[1] சுநாபன் துரியோதனனின் தம்பிகளில் ஒருவன்.
வலிமைமிக்கத் தேர்வீரனும், பெரும் வில்லாளியுமான அந்த உமது மகன் {சுநாபன்} கொல்லப்பட்ட போது, அவனது வீரச் சகோதரர்கள் எழுவரால், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, (அச்செயலை அமைதியாகத்) தாங்கிக் கொள்ள முடியவில்லை. போரிட விருப்பமுள்ளவர்களும், பலவண்ணங்களிலான அழகிய கவசங்களையும், ஆயுதங்களையும் தரித்தவர்களும், எதிரிகளைக் கலங்கடிப்பவர்களுமான ஆதித்யகேது, பஹ்வாசி, குண்டதாரன், மஹோதரன், அபராஜிதன், பண்டிதகன், வெல்லப்படமுடியாத விசாலாக்ஷன் ஆகியோர் பாண்டுவின் மகனை {பீமனை} எதிர்த்து விரைந்தனர்.
விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, (பெரும் அசுரனான) நமுசியைத் தாக்கியதைப் போல, அந்தப் போரில், வஜ்ரத்திற்கு இணையான சக்தி கொண்டவையும், சிறகு படைத்தவையுமான ஒன்பது {9} கணைகளால் மஹோதரன், பீமசேனனைத் துளைத்தான். ஆதித்யகேது எழுபது {70}கணைகளாலும், விஷ்ணு {பஹ்வாசி} ஐந்தாலும் {5 கணைகளாலும்} பீமனைத் தாக்கினர். மேலும் குண்டதாரன் தொண்ணூறு {90} கணைகளாலும், விசாலாக்ஷன் ஏழாலும் {7 கணைகளாலும்} அவனை {பீமனைத்} தாக்கினர். எதிரிகளை வெல்பவனும், வலிமைமிக்கத் தேர்வீரனுமான அபராஜிதன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும்பலம்படைத்த அந்தப் பீமசேனனைப் பல கணைகளால் பீடித்தான். பண்டிதகனும், அப்போரில் மூன்று {3} கணைகளால் அவனைத் {பீமனைத்} துளைத்தான். எனினும், போரில் தனது எதிரிகளின் இந்தத் தாக்குதலைப் பீமனால் (பொறுமையாகத்) தாங்கிக் கொள்ள இயலவில்லை.
தன் இடக்கையால் வில்லை வலுவாகப் {அழுத்திப்} பிடித்த அந்த எதிரிகளைக் கலங்கடிப்பவன் {பீமன்}, நல்ல {அழகிய} மூக்குடன் கூடிய உமது மகன் அபராஜிதனின் தலையை அப்போரில் நேரான கணை ஒன்றால் அறுத்தான். இப்படிப் பீமனால் வீழ்த்தப்பட்ட அவனது தலை தரையில் விழுந்தது.
பிறகு, உமது துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்த போதே, வலிமைமிக்கத் தேர்வீரனான குண்டதாரனை மற்றொரு பல்லத்தால் {அகன்ற தலை கொண்ட கணையால்} காலனின் உலகத்திற்குப் பீமன் அனுப்பிவைத்தான்.
பிறகு அளவிடமுடியாத ஆன்மா கொண்ட அந்த வீரன் {பீமன்}, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போரில் மீண்டும் ஒரு கணையைக் குறிபார்த்து, பண்டிதகன் மீது ஏவினான். காலனால் தூண்டப்பட்ட ஒரு பாம்பு, (தன் காலம் வந்த {முடிந்த} ஒரு) மனிதனைக் கொன்று விரைவாகப் பூமிக்குள் நுழைவதைப் போலவே பண்டிதகனைக் கொன்ற அந்தக் கணையும் பூமிக்குள் நுழைந்தது.
சோர்விலா ஆன்மா {மனம்} கொண்ட அந்த வீரன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தனது முன்னாள் துயரங்களை நினைவுகூர்த்து, விசாலாக்ஷனின் தலையை மூன்று {3} கணைகளால் வெட்டிவீழ்த்தினான்.
பிறகு அந்தப் போரில், வலிமைமிக்க வில்லாளியான மஹோதரனை ஒரு நாராசத்தால் {நீண்ட கணையால்} நடுமார்பில் பீமன் தாக்கினான். (அதனால்) கொல்லப்பட்ட பின்னவன் {மஹோதரன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பூமியில் விழுந்தான்.
பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் ஆதித்யகேதுவின் குடையை ஓர் அம்பினால் அறுத்த அவன் {பீமன்}, மற்றொரு மிகக்கூரிய பல்லத்தினால் அவனது {ஆதித்யகேதுவின்} தலையையும் அறுத்தான்.
பிறகு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்தால் தூண்டப்பட்ட பீமன் வேறொரு நாராசத்தால் {நீண்ட கணையால்}, பஹ்வாசினை {பஹ்வாசியை} யமலோகத்தை நோக்கி அனுப்பிவைத்தான் [2].
[2] பீஷ்ம பர்வம் பகுதி 64ல் பீமன் ஏற்கனவே எட்டு பேரைக் கொன்றிருக்கிறான். இப்போது கொன்றவர்களையும் சேர்த்து இதுவரை பதினாறு {16} கௌரவர்களைக் கொன்றிருக்கிறான்.
பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மற்ற உமது மகன்கள், சபையில் (கௌரவர்களுக்கு மத்தியில்) பீமன் சொன்ன வார்த்தைகள் [3] உண்மையே எனக் கருதி ஓடிப்போனார்கள். தனது தம்பிகள் குறித்த துக்கத்தால் பீடிக்கப்பட்ட மன்னன் துரியோதனன், தன் துருப்புகள் அனைத்திடமும், "பீமன் அங்கே இருக்கிறான். அவன் கொல்லப்பட வேண்டும்" என்றான். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டவர்களும், வலிமைமிக்க வில்லாளிகளுமான உமது மகன்கள், பெரும் அறிஞரான விதுரரால் சொல்லப்பட்டவையும், நன்மை மற்றும் அமைதி தருபவையுமான அந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்தனர்.
[3] அதாவது, திருதராஷ்டிரன் மகன்கள் அனைவரையும் போரில் தானே கொல்லப்போவதாகச் சொன்ன அவனது {பீமனின்} உறுதி மொழி என இங்கே விளக்குகிறார் கங்குலி.
உண்மைநிறைந்த விதுரரின் வார்த்தைகள் இப்போதுதான் உண்மையில் உணரப்படுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பேராசை மற்றும் மூடத்தனத்தின் தாக்கத்தாலும், உமது மகன்கள் மீது கொண்ட பாசத்தாலும் நன்மை நிறைந்த அந்த வார்த்தைகளை அப்போது உம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. அந்த வலிய கரம் கொண்ட வீரன் {பீமன்}, கௌரவர்களைக் கொல்லும் முறையைப் பார்த்தால், உமது மகன்களின் அழிவுக்காகவே அந்த வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்} தனது பிறப்பை எடுத்திருக்கிறான் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.
ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அதே வேளையில் மன்னன் துரியோதனன், பெரும் துயரத்தில் மூழ்கிப் பீஷ்மரிடம் சென்று, துக்கம் மேலிட " என் வீரத் தம்பிகள் போரில் பீமசேனனால் கொல்லப்பட்டனர். என்னதான் நமது துருப்புகள் அனைத்தும் துணிச்சலுடன் போரிட்டாலும், தோல்வியையே அடைகின்றன. ஏதோ அக்கறையேயில்லாத பார்வையாளனைப் போல நடந்து கொண்டு, (நீர் செயல்படுவது போலவே) எங்களை நீர் புறக்கணிப்பதாகவே தெரிகிறது. ஐயோ, என்ன வழியை நான் மேற்கொண்டேன் {அடைந்திருக்கிறேன்}. கொடுமையான என் விதியைப் பாரும்" எனச் சொல்லி அங்கே புலம்பத் தொடங்கினான் {துரியோதனன்}."
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "துரியோதனனின் இந்தக் கொடிய வார்த்தைகளைக் கேட்ட உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இஃதை அவனிடம் சொன்னார். "நானும், துரோணரும், விதுரனும், புகழ்பெற்ற காந்தாரியும் முன்பே இஃதை உனக்குச் சொன்னோம். ஓ! மகனே {துரியோதனா}, அப்போது அதை நீ புரிந்து கொள்ளவில்லை. ஓ! எதிரிகளைக் கலங்கடிப்பவனே {துரியோதனா}, நானோ, துரோணரோ எப்போதும் இந்தப் போரில் இருந்து உயிருடன் தப்ப மாட்டோம் என்ற {எங்கள்} தீர்மானத்தையும் முன்பே நான் உனக்குச் சொல்லியிருக்கிறேன் [4]. போரில் பீமன் யார் மீதெல்லாம் தனது கண்களைச் {பார்வையைச்} செலுத்துவானோ, {அவர்களையெல்லாம்} அவன் நிச்சயம் கொல்வான் என்று நான் உண்மையாகவே சொல்கிறேன். எனவே, ஓ! மன்னா {துரியோதனா}, உன் பொறுமையனைத்தையும் வரவழைத்துக் கொண்டு, போரை உறுதியாகத் தீர்மானித்து, சொர்க்கத்தை உனது குறிக்கோளாகக் கொண்டு, பிருதையின் மகன்களுடன் {பாண்டவர்களுடன்} போரிடுவாயாக. பாண்டவர்களைப் பொறுத்தவரை, வாசவனைக் (தங்கள் தலைமையில்) கொண்ட தேவர்களாலேயேகூட அவர்கள் {பாண்டவர்கள்} வெல்லப்பட இயலாதவர்களாக இருக்கிறார்கள். எனவே, ஓ! பாரதா {துரியோதனா}, உனது இதயத்தைப் போரில் உறுதியாக நிலைக்கச் செய்து போரிடுவாயாக" என்றார் {பீஷ்மர்}" {என்றான் சஞ்சயன்}.
[4] இங்கே "போரில் நானாவது, ஆசாரியர் துரோணரவாது எவ்விதத்தாலும் ஏவத்தக்கவர்களல்லர்" என்று துரியோதனனிடம் பீஷ்மர் சொல்வதாக வேறொரு பதிப்பில் இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |