Kurma and Sringataka vyuhas! | Bhishma-Parva-Section-088 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 46)
பதிவின் சுருக்கம் : எட்டாம் நாள் போர் தொடங்கியது; கௌரவர்கள் அமைத்துக் கொண்ட வியூகம்; கௌரவவீரர்கள் வியூகத்துக்குள் நின்ற நிலைகள்; பாண்டவர்கள் அமைத்த எதிர்வியூகம்; பாண்டவர்களை எதிர்த்து விரைந்த பீஷ்மர்; தொடர்ந்து நடந்த பயங்கரப் போர்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவை நல்ல உறக்கத்தில் கழித்த மனிதர்களின் ஆட்சியாளர்களான கௌரவர்களும், பாண்டவர்களும் மீண்டும் போரிடச் சென்றனர். இரு படைகளின் துருப்புகளும், களத்திற்குச் செல்ல முற்பட்ட போது கேட்கப்பட்ட பெரும் ஆரவாரமானது கடலின் பேரிரைச்சலுக்கு ஒப்பானதாக இருந்தது.
பிறகு, மன்னன் துரியோதனன், சித்திரசேனன், விவிம்சதி, தேர்வீரர்களின் முதன்மையான பீஷ்மர், பெரும் ஆற்றலைக் கொண்ட பரத்வாஜரின் மகன் {துரோணர்} ஆகிய கவசம் பூண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒன்று சேர்ந்து பாண்டவர்களுக்கு எதிரான கௌரவ வியூகத்தைப் பெருங்கவனத்துடன் அமைத்தனர். குதிரைகளையும், யானைகளையும் அலைகளாகவும், நீராகவும் கொண்ட கடுமையானக் கடலைப் போன்ற அந்த வலிமைமிக்க {ஊர்மி} வியூகத்தை [1] அமைத்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மாளவர்கள், தென்னாட்டில் குடியிருப்பவர்கள், அவந்திகள் ஆகியோர் துணையுடன், முழுப் படையின் முன்னணியில் சந்தனுவின் மகனான உமது தந்தை பீஷ்மர் சென்றார்.
[1] கூர்ம வியூகம் என்கிறது வேறொரு பதிப்பு. மற்றொரு பதிப்பில் ஊர்மி வியூகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஊர்மி வியூகம் என்றால் கடலலைகளை ஒத்த வியூகம் என்று பொருளாம்.
அவருக்கு {பீஷ்மருக்கு} அடுத்துப் புளிந்தர்கள், பாரடர்கள் [2], க்ஷூத்திரகமாலவர்கள் ஆகியோருடன் பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, இருந்தார். துரோணருக்கு அடுத்ததாக, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரிடும் உறுதியான தீர்மானத்துடன் மகதர்கள், கலிங்கர்கள் மற்றும் பிசாசர்களோடு [3] வீர பகதத்தன் இருந்தான். பகதத்தனுக்குப் பின்னே மேகலர்கள், திரிபுரர்கள், சிசிலர்கள் {குருவிந்தர்கள்} ஆகியோருடன் கோசலர்களின் மன்னனான பிருஹத்பலன் இருந்தான். பிருஹத்பலனுக்கு அடுத்ததாகப் பெரும் எண்ணிக்கையிலான காம்போஜர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான யவனர்களுடன் [4], துணிவுமிக்கப் பிரஸ்தல ஆட்சியாளனான மன்னன் திரிகர்த்தன் இருந்தான்.
[2] இவர்கள் பரதவம்சத்தவர் அல்ல; வேறு இனத்தவர் என்று வேறொரு பதிப்பில் சுட்டப்படுகிறது. இன்றைய பலுச்சிஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று புரானிக் என்சைக்ளோபீடியா சொல்கிறது.[3] வேறு சில நாட்டவர்கள் என்று வேறொரு பதிப்பில் சுட்டப்பட்டுள்ளது.[4] பூருவின் மகனான துர்வசுவின் வம்சத்தினரே யவனர்கள் என்று அழைக்கப்பட்டதாக ஆதிபர்வம் பகுதி 85ல் குறிப்பு ஒன்று இருக்கிறது. பாண்டுவால் கூட வீழ்த்த முடியாத யவனர்களின் மன்னனையே அர்ஜுனன் வீழ்த்தினான் என்ற குறிப்பு ஆதிபர்வம் பகுதி 141ல் இருக்கிறது. யவன மன்னனின் பெயர் சானுர் என்பது சபாபர்வம் பகுதி 4ல் காணக்கிடைக்கிறது.
திரிகர்த்தர்களின் ஆட்சியாளனுக்கு அடுத்து, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்க வீரனான துரோண மகன் {அஸ்வத்தாமன்} சிங்கமுழக்கமிட்டபடி பூமியை எதிரொலிக்கச் செய்தான். துரோணரின் மகனுக்கு {அஸ்வத்தாமனுக்கு} அடுத்ததாகத் தன்னுடன் தம்பிகளால் சூழப்பட்டபடிருந்த மொத்தப் படையுடன் மன்னன் துரியோதனன் சென்றான். துரியோதனனுக்குப் பின்பு சரத்வானின் மகனான கிருபர் சென்றார். இப்படியே கடலை ஒத்த அந்த வலிமைமிக்கப் படை (போரிடச்} சென்றது. ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, கொடிமரங்கள், வெண்குடைகள், அழகிய தோள்வளைகள், விலையுயர்ந்த விற்கள் ஆகியன ஆங்கே தங்கள் ஒளியைப் பொழிந்தன.
உமது படைகளின் அந்த வலிமைமிக்க வியூகத்தைக் கண்டப் பெரும் தேர்வீரனான யுதிஷ்டிரன், (தன் படையின்) தலைவனான பிருஷதன் மகனிடம் {திருஷ்டத்யும்னனிடம்} வேகமாக, "ஓ! பெரும் வில்லாளியே {திருஷ்டத்யும்னா}, கடல் போன்று ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் அந்த {கூர்ம} வியூகத்தைப் பார். ஓ! பிருஷதனின் மகனே {திருஷ்டத்யும்னா}, தாமதமில்லாமல் நீயும் எதிர்வியூகத்தை அமைப்பாயாக" என்றான்.
(இப்படிச் சொல்லப்பட்டதும்), ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பிருஷதனின் அந்த வீர மகன் {திருஷ்டத்யும்னன்}, பகைவியூகங்கள் அனைத்தையும் அழிப்பதும், சிருங்காடகம் [5] என்று அழைக்கப்படுவதுமான அந்தப் பயங்கர வியூகத்தை அமைத்தான். பல்லாயிரம் தேர்கள், குதிரைகள் மற்றும் காலாட்படைகளுடன் கூடியவர்களான பீமசேனனும், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியும் அதன் {அந்த சிருங்காட வியூகத்தின்} கொம்புகளில் {சிகரங்களில்} இருந்தனர். அவர்களுக்கு அடுத்ததாக, மனிதர்களில் முதன்மையானவனும், வெண்குதிரைகளையும், தன் தேரோட்டியோகக் கிருஷ்ணனையும் கொண்ட அர்ஜுனன் நின்றான். மன்னன் யுதிஷ்டிரனும், மாத்ரியின் மூலமான பாண்டுவின் இரட்டை மகன்களும் {நகுலனும், சகாதேவனும்} {வியூகத்தின்} நடுவில் நின்றனர். வியூகங்களின் அறிவியலை அறிந்த மற்ற அரசவில்லாளிகள் தங்கள் துருப்புகளுடன் அந்த வியூகத்தை நிறைத்தனர். பின்புறத்தில் அபிமன்யு, வலிமிக்கத் தேர்வீரனான விராடன், திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன் ஆகியோர் இருந்தனர்.
[5] மூன்று சிகரங்களைக் கொண்ட மலை என்பது சிருங்காடகம் என்பதன் பொருளாகும். அது நாற்சந்தி தெரு போன்றது என்று வேறொரு பதிப்பில் விளக்கப்பட்டிருக்கிறது.வில்லிபாரதத்தில் கௌரவர்கள் சூசி வியூகமும், பாண்டவர்கள் சகட வியூகமும், அமைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும், துளப மால்
வென்றி கூர் பெருஞ் சகடமாம் வெய்ய யூகமும், செய்யவே. {வில்லி பாரதம் 3:எ.போ.ச.3}
இப்படியே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தங்கள் வியூகத்தை அமைத்துக் கொண்ட வீரப் பாண்டவர்கள், வெற்றியை விரும்பி போருக்கான ஏக்கத்துடன் களத்தில் காத்திருந்தனர். சங்கொலிகளுடனும், சிங்க முழக்கங்களுடனும், (போராளிகளின்) முழக்கங்கள் மற்றும் தோள்தட்டும் ஒலிகள் ஆகியவற்றுடன் கலந்த பேரிகைகளின் உரத்த ஒலி, திசைகள் அனைத்தையும் பயங்கரமாக நிறைத்தது. போருக்காக ஒருவரையொருவர் அணுகும் அந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} கண்களைச் சிமிட்டாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர். பிறகு அந்த வீரர்கள், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, முதலில் ஒருவரையொருவர் பெயர் சொல்லி சவாலுக்கழைத்த பிறகு, தங்களுக்குள் மோதிக் கொண்டனர் [6]. பிறகு, உமது துருப்புகளும், எதிரியின் துருப்புகளும் ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. அவற்றுக்கிடையில் கடுமையானதும் பயங்கரமானதுமான ஒரு போர் தொடங்கியது
[6] தென்னகப் பதிப்பு ஒன்றில், இந்த இடத்தில், "அந்தச் சூரர்கள் ஒருவரையொருவர் நாடி இமை கொட்டடாமல் ஒருவரை ஒருவர் பார்த்தார்கள். அந்தப் போர்வீரர்கள் மனத்தினாலேயே போரிட்டார்கள். பிறகு அவர்கள் பரஸ்பரம் அழைத்து உடலாலும் போரிட்டார்கள்" என்று சொல்லப்பட்டுள்ளது. "இந்த இடத்தில் namabhis என்று சொல்லும் பம்பாய் உரையே சரியென்று தான் நினைப்பதாகவும், வங்க உரையில் manobhis என்று இருப்பதாகவும், தங்கள் எதிரிகளைத் தனிமைப்படுத்தினாலும், மனிதர்கள் ஒருவரையொருவர் மனதால் சவாலுக்கழைக்க எப்படி முடியும்? என்று கேள்வி கேட்டும் {இங்கே வங்க உரை தவறாக இருக்கக்கூடும் என்றும்}" இங்கே விளக்குகிறார் கங்குலி.
அந்தப் போரில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, திறந்த வாயுடன் கூடிய பயங்கரப் பாம்புகளைப் போல, கூர்மையான நாராசங்கள் மழையாக விழுந்தன. மூர்க்கமான வேகத்துடன் கூடியவையும், எண்ணெயில் தோய்க்கப்பட்டவையுமான பளபளக்கும் ஈட்டிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மேகங்களில் ஒளிரும் மின்னலின் கீற்றுகளைப் போலப் பிரகாசித்தன. தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, பளபளக்கும் பட்டைகள் இணைக்கப்பட்டு, களமெங்கும் விழுந்து கிடந்த கதாயுதங்கள், மலைகளின் முகடுகளைப் போலத் தெரிந்தன. தெளிந்த (நீல) வானின் நிறம் கொண்ட கத்திகளும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்ட காளைத்தோல் கேடயங்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, களமெங்கும் விழுந்தபோது, அவை அழகாகத் தெரிந்தன.
அந்த இரு படைகளும் ஒன்றோடொன்று போரில் ஈடுபட்ட போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளும் தேவர்களும், அசுரர்கூட்டங்களும் ஒளிர்ந்தது போல ஒளிர்வதாகத் தெரிந்தது. எல்லாவகையிலும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போரிட அவர்கள் விரைந்தனர். அரசத் தேர்வீரர்களில் முதன்மையானவர்கள், அந்தப் பயங்கரப் போரில் {எதிரிப்படையின்} தேர்வீரர்களை எதிர்த்து மூர்க்கமாக மோதித் தங்கள் எதிரிகளின் தேர் நுகத்தடி தங்கள் தேர்களில் சிக்கியபடியே போரிட்டனர். மேலும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, போரிடும் யானைகளின் தந்தங்களுடைய உராய்வின் விளைவால், களமெங்கும் புகையுடன் கூடிய நெருப்புப் பொறிகள் உண்டாகின., யானைகளின் முதுகிலிருந்த போராளிகள், வேல்களால் தாக்கப்பட்டுக் கீழே விழுவது, மலைகளின் சிகரங்களில் இருந்து (தளர்ந்து) விழும் பாறைகளைப் [7] போலத் தெரிந்தது. துணிவுமிக்கக் காலாட்படை வீரர்கள், வெறும் கைகளைக் கொண்டோ, வேல்களைக் கொண்டோ போரிட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது மிக அழகாகத் தெரிந்தது.
[7] மூலத்தில் இந்த இடத்தில் Nagas என்று இருக்கிறது. இதற்குக் கற்கள் என்றும் மரங்கள் என்று இரு பொருள்கள் உண்டு. இவ்விரண்டு ஒப்பீடுமே இந்த இடத்திற்குப் பொருந்தும் என இங்கே கங்குலி விளக்குகிறார்.
கௌரவ மற்றும் பாண்டவப் படைகளின் வீரர்கள், அம்மோதலில் ஒருவரையொருவர் அணுகி, பல்வேறுவிதமான கணைகளால் ஒருவரையொருவர் யமனுலகு அனுப்பி வைத்தனர். பிறகு, சந்தனுவின் மகனான பீஷ்மர், தன் தேரின் சடசடப்பொலியை (சுற்றிலும்) நிரப்பி, தனது வில்லின் நாணொலியால் எதிரிகளின் புலனுணர்வை இழக்கச் செய்தபடி, போரில் பாண்டவர்களை எதிர்த்து விரைந்தார். திருஷ்டத்யும்னனின் தலைமையிலான பாண்டவத் தேர்வீரர்களும், போரிட உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டு, கடுமுழக்கங்களிட்டபடி அவரை {பீஷ்மரை} நோக்கி விரைந்தனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது {பாண்டவர்களது} மற்றும் உமது காலாட்படைவீரர்கள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியவற்றுக்குள் போர் தொடங்கியது. அதில் போராளிகள் அனைவரும் கலந்து போனார்கள் {சிக்கிக் கொண்டார்கள்}" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |