Arjuna grieved thinking Bhishma! | Bhishma-Parva-Section-108c | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 66)
பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் இருந்து தங்கள் பாசறைக்கு வந்த பாண்டவர்கள்; பீஷ்மரை நினைத்து வேதனையடைந்த அர்ஜுனன்; கிருஷ்ணனிடம் தன் குழந்தைப் பருவத்தைச் சொன்ன அர்ஜுனன்; பீஷ்மரைக் கொல்ல மாட்டேன் என்று சொன்ன அர்ஜுனன்; விதியை மாற்ற முடியாது என்று சொன்ன கிருஷ்ணன்; சிகண்டி கொல்வான் என்று சொல்லி படுக்கைக்குச் சென்ற அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இவை அனைத்தையும் உறுதி செய்து கொண்ட பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, குரு பாட்டனான உயர் ஆன்ம பீஷ்மரை வணங்கிவிட்டுத் தங்கள் பாசறைகளுக்குத் திரும்பினர்.
அடுத்த உலகத்திற்குச் செல்லத் தயாராகிவிட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்ன பிறகு, வேதனையில் எரிந்து, அவமானம் முகத்தில் பரவிய {அவமானம் நிறைந்த முகத்துடன்} அர்ஜுனன், இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! மாதவா {கிருஷ்ணா}, எங்கள் குலத்தின் முதிர்ந்த உறுப்பினரும் {குருக்களில் முதிர்ந்தவரும்}, ஞானமும் புத்திசாலித்தனமும் கொண்டவரும், வயதில் எனக்கு {மிக} மூத்தவருமான பாட்டனோடு {பீஷ்மரோடு} போரில் நான் எவ்வாறு மோதுவேன்?
குழந்தைப் பருவ நாட்களில் நான் விளையாடிக் கொண்டிருக்கையில், ஓ! வாசுதேவா {கிருஷ்ணா}, அழுக்கான உடலுடன் இவரது மடியில் ஏறி, உயர் ஆன்மா கொண்ட இந்த ஒப்பற்றவரின் {பீஷ்மரின்} உடலை நான் புழுதியால் பூசுவேன் {அழுக்காக்குவேன்}. ஓ! கதனின் அண்ணனே {கிருஷ்ணா}, அவர் {பீஷ்மர்}, என் தந்தை பாண்டுவின் தந்தையாவார். நான் குழைந்தையாயிருக்கையில், ஒரு முறை இந்த உயர் ஆன்மாவின் {பீஷ்மரின்} மடியில் ஏறி, தந்தை என்று நான் அழைத்தபோது, “ஓ! பாரதா {அர்ஜுனா}, நான் உன் தந்தையல்ல, ஆனால் உன் தந்தைக்கே தந்தையாவேன் {உன் பாட்டனாவேன்}” என்றார். இதுவே என் குழந்தைப் பருவத்தில் அவர் எனக்கு (மறுமொழியாகச்) சொன்னது.
ஓ! இப்படிச் சொன்னவர் எப்படி என்னால் கொல்லப்படலாம்? ஓ! என் படை அழியட்டும். வெற்றியோ, மரணமோ, எதை நான் அடைந்தாலும், அந்த உயர் ஆன்மாவிடம் {பீஷ்மரிடம்} நான் ஒரு போதும் போரிட மாட்டேன். (இதையே நான் நினைக்கிறேன்}. ஓ! கிருஷ்ணா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்} [1].
[1] வேறு ஒரு பதிப்பான மன்மத நாத தத்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பின்படி, அர்ஜுனன் பின்வருமாறு சொல்கிறான். "ஓ வாசுதேவா {கிருஷ்ணா}, குழந்தைப் பருவ நாட்களில் விளையாடிக் கொண்டிருக்கையில், தூசி படிந்த என் உடலுடன் உயர் ஆன்மா கொண்ட அந்த ஒப்பற்றவரின் {பீஷ்மரின்} மடியில் ஏறி அவரது ஆடைகளை மண்ணாக்குவேன். ஓ கதனின் அண்ணனே {கிருஷ்ணா}, என் குழந்தைப் பருவத்தில் (எங்கள் தந்தையான) பாண்டுவின் உயர் ஆன்ம தந்தையின் {பீஷ்மரின்} மடியில் ஏறி, "தந்தையே" என்று சொல்வேன். "நான் உன் தந்தையல்லேன், மாறாக உன் தந்தைக்கே தந்தையாவேன் {உன் பாட்டனாவேன்} என்ற வார்த்தைகளையே அவர் எனக்கு மறுமொழியாகச் சொல்வார். என்னை இப்படி நடத்தியவர் எவரோ, அவர் என்னால் எப்படிக் கொல்லப்படலாம்? என் துருப்புகள் அனைத்தையும் அவர் கொல்லட்டும். வெற்றி அல்லது மரணத்தையே நான் அறுவடை செய்தாலும் அந்த உயர் ஆன்மாவுடன் {மகாத்மாவுடன் [பீஷ்மருடன்]} நான் போரிடேன். ஓ கிருஷ்ணா நீ என்ன நினைக்கிறாய்?"
வாசுதேவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, “முன்னர்ப் பீஷ்மரைக் கொல்வதாகச் சூளுரைத்த பிறகு, ஓ! ஜிஷ்ணு {அர்ஜுனா}, க்ஷத்திரியக் கடமைகளுக்கு ஏற்புடைய வகையில் அவரை {பீஷ்மரை} நீ எப்படிக் கொல்லாமல் இருக்க முடியும்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, போரில் வெல்லப்பட முடியாமல் இருக்கும் அந்த க்ஷத்திரியரை {பீஷ்மரை}, அவரது தேரில் இருந்து கீழே வீசி எறிவாயாக. கங்கையின் மைந்தரைப் {பீஷ்மரைக்} கொல்லமால் ஒருபோதும் வெற்றி உனதாகாது.
இப்படியே அவர் {பீஷ்மர்} யமனின் வசிப்பிடத்தை அடைவார். இது தேவர்களால் முன்பே தீர்மானிக்கப்பட்டதாகும். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, முன்பே விதிக்கப்பட்டது நடக்க வேண்டும். இது வேறாக முடியாது. ஓ! வெல்லப்பட முடியாதவனே {அர்ஜுனா}, வாயைத் திறந்திருக்கும் காலனைப் போன்ற வெல்லப்பட முடியாத பீஷ்மரிடம் உன்னைத் தவிர யாராலும், ஏன் வஜ்ரபாணியால் {இந்திரனால்} கூடப் போரிட முடியாது. கவலையேதுமற்று பீஷ்மரைக் கொல்வாயாக.
பெரும்புத்திசாலியான பிருஹஸ்பதி, பழங்காலத்தில் சக்ரனிடம் {இந்திரனிடம்} சொன்னவையான இந்த எனது வார்த்தைகளைக் கேட்பாயாக. “அனைத்துத் தகுதியும் கொண்ட, மதிக்கத்தகுந்த முதிய மனிதனேயானாலும், அவன் எதிரியாக வந்தாலோ, உண்மையில் வேறு எவனும் தன்னை அழிக்க அணுகினாலோ, அவனை ஒருவன் கொல்ல வேண்டும்” {என்பதே அவ்வார்த்தைகள்}.
ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, போரிடுவது, குடிகளைக் காப்பது, வேள்விகளை நடத்துவது ஆகிய அனைத்தையும் தீமையில்லாமல் செய்வதே க்ஷத்திரியர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நித்திய கடமையாகும்” என்றான் {கிருஷ்ணன்}.
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, “ஓ! கிருஷ்ணா, சிகண்டி நிச்சயமாகப் பீஷ்மரின் மரணத்துக்குக் காரணமாவான், ஏனெனில், பாஞ்சால இளவரசனான அவனைக் {சிகண்டியைக்} கண்ட உடனேயே, பீஷ்மர் தாக்குவதை நிறுத்துகிறார். எனவே, அவருக்கு, {பீஷ்மருக்கு} எதிரில் நமக்கு முன்னிலையில் சிகண்டியை நிறுத்தும் வழிமுறையால் நாம் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} வீழ்த்துவோம்.
பெரிய வில்லாளிகளான பிறரை நான் எனது கணைகளால் தடுப்பேன். சிகண்டியைப் பொறுத்தவரை, அவன், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீஷ்மருடன் தனியாகப் போரிடுவான்.
சிகண்டி முன்பு பெண்ணாகப் பிறந்து, அதன்பிறகு ஆணாக மாறியவனாதலால், அவனை {சிகண்டியை} அவர் தாக்க மாட்டார் என்று நான் அந்தக் குருக்களின் தலைவரிடம் இருந்தே {பீஷ்மரிடமிருந்தே} கேட்டிருக்கிறேன்” என்றான் {அர்ஜுனன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பீஷ்மரின் அனுமதியுடன் இதைத் தீர்மானித்த பாண்டவர்கள், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன், மாதவனுடன் {கிருஷ்ணனுடன்} சென்றனர். பிறகு அந்த மனிதர்களில் காளையர், தங்கள் தங்கள் படுக்கைக்குச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |