Sikhandin challenged Bhishma! | Bhishma-Parva-Section-109 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 67)
பதிவின் சுருக்கம் : பாண்டவ கௌரவப் படைகளில் அவரவர் நின்ற வரிசைகள்; சிகண்டியை முன்னிறுத்திச் சென்ற பாண்டவப் படை; பீமனால் கொல்லப்பட்ட கௌரவப் படையினர்; தப்பி ஓடிய கௌரவப் படை; இவற்றைப் பொறுத்துக் கொள்ளாத பீஷ்மர்; பாண்டவர்களின் முக்கியத் தேர்வீரர்களைத் தடுத்த பீஷ்மர்; பாண்டவப் படைக்கு அச்சமூட்டிய பீஷ்மர்; பீஷ்மரின் சாதனைகளைக் கண்டு ஆச்சரியமடைந்த கௌரவர்கள்; பீஷ்மரின் மார்பைத் துளைத்த சிகண்டி; சிகண்டியைத் தாக்காத பீஷ்மர்; பீஷ்மரிடம் கோபத்துடன் பேசிய சிகண்டி; பீஷ்மருடன் போரிடச் சிகண்டியைத் தூண்டிய அர்ஜுனன்...
பீஷ்மருடன் போரிட்ட சிகண்டி |
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சிகண்டி போரில் கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} எவ்வாறு எதிர்த்துச் சென்றான்? பீஷ்மரும் பாண்டவர்களை எவ்வாறு எதிர்த்து சென்றார்? ஓ! சஞ்சயா இவையனைத்தையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “பிறகு அந்தப் பாண்டவர்கள் அனைவரும், சூரிய உதயக் காலத்தின் போது, சிகண்டியைத் தங்கள் முன்னிலையில் நிறுத்தி, பேரிகைகள், மத்தளங்கள், ஆனகங்கள் ஆகியவற்றை அடித்துக் கொண்டும், சுற்றிலும் பால்வெண்மை கொண்ட சங்குகளை ஊதிக் கொண்டும் போருக்குச் சென்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பகைவர்கள் அனைவருக்கும் அழிவை உண்டாக்கும் ஒரு வியூகத்தை [1] அமைத்துக் கொண்டு அவர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சிகண்டி துருப்புகள் அனைத்திற்கும் முன்னணியில் நின்றான். பீமசேனனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அவனது {சிகண்டியின்} தேர்ச்சக்கரங்களின் பாதுகாவலர்களானார்கள்.
[1] ஒன்பதாம் நாள் வியூகத்தையே பத்தாம் நாளிலும் கௌரவர்களும், பாண்டவர்களும் அமைத்துக் கொண்டதாக வில்லி பாரதம் கூறுகிறது. முரண் தொடங்கு சேனை வந்து முன்னர் நாளை யூகமே, அரண் தொடங்கு யூகமாக ஆகவத்துள் அணியவே, {வில்லி பாரதம் 3:ப.போ.ச.3}. அப்படியெனில், கௌவர்கள் அமைத்த வியூகமானது மீண்டும் சர்வதோபத்திர வியூகமாகவும், பாண்டவர்கள் அமைத்தது மண்டல {வில்லியின் படி பத்ம} வியூகமாகவும் இருத்தல் வேண்டும்.
அவனுக்கு {சிகண்டிக்குப்} பின்னால் திரௌபதியின் மகன்களும், வீர அபிமன்யுவும் இருந்தனர். வலிமைமிக்கத் தேர்வீரர்களான சாத்யகியும், சேகிதானனும் {சிகண்டியின்} இறுதிப் பாதுகாவலர்கள் ஆனார்கள் [2]. அவர்களுக்குப் பின் பாஞ்சாலர்களால் பாதுகாக்கப்பட்ட திருஷ்டத்யும்னன் இருந்தான். திருஷ்டத்யும்னனுக்குப் பின்னால் அடுத்து, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அரசத் தலைவனான யுதிஷ்டிரன், இரட்டையர்கள் {நகுலன் மற்றும் சகாதேவன்} துணையுடன், காற்றைச் சிங்க முழக்கங்களால் நிறைத்த படி அணிவகுத்தான். அவனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} அடுத்து தன் துருப்புகளால் சூழப்பட்ட விராடன் இருந்தான். அவனுக்கு {விராடனுக்கு} அடுத்து, ஓ! வலிய கரங்களைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, துருபதன் இருந்தான். கைகேயச் {கேகயச்} சகோதரர்கள் ஐவர், வீர திருஷ்டகேது ஆகியோர், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பாண்டவப்படையின் பின்புறத்தைப் பாதுகாத்தார்கள் [3]. தங்கள் பெரிய படையை இப்படிப்பட்ட வியூகத்தில் [4] அணிவகுத்த பாண்டவர்கள், தங்கள் உயிர்களையே விடத் துணிந்து உமது படையை எதிர்த்து விரைந்தனர்.
[2] வேறு ஒரு பதிப்பில் இவ்விரு வரிகளும் ஒன்றாக ஒரே வரியாக, “திரௌபதி மகன்கள், வீர அபிமன்யு, சாத்யகி, சேகிதானன் ஆகியோர் படைக்குப் பின் பக்கத்தைப் பாதுகாத்தார்கள்” என்று இருக்கிறது.[3] கடோத்கசனும் இவர்களுடன் சென்றதாக வேறு ஒரு பதிப்பில் குறிப்பு இருக்கிறது.[4] குறிப்பு [1]-ஐ காண்க.
அதே போலக் கௌரவர்களும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தங்கள் படை முழுமைக்கும் தலைமையில் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்தப் பீஷ்மரை நிறுத்திப் பாண்டவர்களை எதிர்த்துச் சென்றனர். அந்த வெல்லப்படமுடியாத வீரர் {பீஷ்மர்} உமது வலிமைமிக்க மகன்களால் பாதுகாக்கப்பட்டார். அடுத்து, அவர்களுக்குப் பின்னால் பெரும் வில்லாளியான துரோணரும், அவரது வலிமைமிக்க மகனும் (அஸ்வத்தாமனும்) இருந்தார்கள். அடுத்து, அதற்குப் பின்னால் தன் யானைப்படையால் சூழப்பட்ட பகதத்தன் இருந்தான். பகதத்தனுக்குப் பின்னால் கிருபரும், கிருதவர்மனும் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் காம்போஜர்களின் வலிமைமிக்க ஆட்சியாளன் சுதக்ஷிணனும், மகதர்களின் மன்னன் ஜயத்சேனனும், சுபலனின் மகனும் {சகுனியும்}, பிருஹத்பலனும் இருந்தனர். அதேபோல, பெரும் வில்லாளிகளான பிற மன்னர்கள் அனைவரும், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, உமது படையின் பின்புறத்தைப் பாதுகாத்தனர்.
ஒவ்வொரு நாள் வந்தபோதும், சந்தனுவின் மகனான பீஷ்மர், சில நேரங்களில் அசுரர்களின் முறைமையின்படியும், சிலநேரங்களில் பிசாசர்கள் மற்றும் சில நேரங்களில் ராட்சசர்கள் {முறைமையின்} படியும் போரில் வியூகங்களை அணிவகுத்தார். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, ஒருவரையொருவர் அடித்துக் கொள்ளும் உமது துருப்பினர் மற்றும் அவர்களுடையவர்கள் {அவர்களது துருப்பினர்} ஆகிய இருதரப்புகளுக்கும் இடையில் யமனின் ஆட்சிப்பகுதியில் வசிப்போர் எண்ணிக்கையைப் பெருக்கும்படியான போர் தொடங்கியது. பார்த்தர்கள் {பாண்டவப் படையினர்}, அர்ஜுனனைத் தங்கள் தலைமையில் கொண்டு, சிகண்டியை முன்னணியில் நிறுத்தி, பல்வேறு விதங்களிலான கணைகளை இறைத்தபடி அந்தப் போரில் பீஷ்மரை எதிர்த்துச் சென்றனர். பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் [5] கணைகளால் பீடிக்கப்பட்ட உமது வீரர்கள் (பலர்), பீறிட்ட குருதியில் குளித்து, அடுத்த உலகத்திற்குச் சென்றனர்.
[5] கங்குலியின் ஆங்கிலப் பதிப்பில் இங்கே Bhishma என்று தவறுதலாக இருக்கிறது. இது பீமனே.
நகுலன், சகாதேவன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் உமது படையை அணுகி, பெரும் வீரத்தால் அதை {உமது படையைப்} பீடிக்கத் தொடங்கினர். போரில் இப்படிக் கொல்லப்பட்ட உமது வீரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களின் அந்தப் பெரும்படையைத் தடுக்க முடியாதவர்களாக இருந்தனர். பிறகு, பெரும் தேர்வீரர்களால் பயங்கரமாகப் பீடிக்கப்பட்டு, இப்படி அவர்களால் எங்கும் கொல்லப்பட்டுவந்த உமது படையினர், அனைத்துப் புறங்களிலும் தப்பி ஓடினர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களின் கூரிய கணைகளால் கொல்லப்பட்ட அவர்கள், {தங்களுக்குப்} பாதுகாவலன் ஒருவனையும் கண்டடையவில்லை” {என்றான் சஞ்சயன்}.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “சினத்தால் தூண்டப்பட்ட வீர பீஷ்மர், பார்த்தர்களால் எனது படை பீடிக்கப்படுவதைக் கண்டு என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! பாவமற்றவனே {சஞ்சயா}, எதிரிகளைத் தண்டிப்பவரான அந்த வீரர் {பீஷ்மர்}, போரில் எப்படிப் பாண்டவர்களை எதிர்த்து விரைந்து, சோமகர்களை {எப்படிக்} கொன்றார் என்பதையும் எனக்குச் சொல்வாயாக” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்கள் மற்றும் சிருஞ்சயர்களால் உமது மகனின் {துரியோதனனின்} படை பீடிக்கப்பட்ட போது, உமது தந்தை {பீஷ்மர்} என்ன செய்தார் என்பதை நான் உமக்குச் சொல்கிறேன். ஓ! பாண்டுவின் அண்ணனே {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் வீரப் புதல்வர்கள், மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் (தாங்கள் சந்தித்த அனைவரையும்) கொன்றபடி உமது மகனின் {துரியோதனனின்} படையினருடன் மோதினர்.
ஓ! மனிதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, மனிதர்கள், யானைகள், குதிரைகள் ஆகியவற்றுக்கு நேர்ந்த அந்தப் பேரழிவையும், உமது படையின் எதிரியால் போரில் ஏற்படுத்தப்பட்ட அந்த அழிவைப் பீஷ்மரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வெல்லப்பட முடியாத அந்தப் பெரும் வில்லாளி {பீஷ்மர்}, தம் உயிரையே விடத் துணிந்து, பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், சிருஞ்சயர்கள் மீது நாராசங்களையும் {நீண்ட கணைகளையும்}, வத்சதந்தங்களையும் {கன்றுக்குட்டியின் பல் போன்ற கணைகளையும்}, அஞ்சலிகங்களையும் {பிறை வடிவக் கணைகளையும்} பொழிந்தார்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கோபத்துடன் கூடிய அவர் {பீஷ்மர்}, தாக்குதலுக்குரிய, தற்காப்புக்குரிய பிற ஆயுதங்களை சக்தியுடன் பொழிந்து, போரில் கடுமையாகப் போராடிக்கொண்டிருந்த பாண்டவர்களின் வலிமைமிக்கத் தேர்வீரர்களில் முதன்மையான ஐவரைத் தன் ஆயுதங்களாலும் கணைகளாலும் தடுத்தார். கோபத்தால் தூண்டப்பட்ட அவர் {பீஷ்மர்}, அந்தப் போரில் எண்ணற்ற யானைகளையும், குதிரைகளையும் கொன்றார். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மனிதர்களில் காளையான அவர் {பீஷ்மர்}, தேர்வீரர்கள் பலரை அவர்களது தேரில் இருந்தும், குதிரைவீரர்களை அவர்களது குதிரைகளில் இருந்தும், காலாட்படை வீரர் கூட்டத்தையும், யானைவீரர்களை அவர்கள் செலுத்திய விலங்குகளின் முதுகில் இருந்தும் கீழே தள்ளி, எதிரிக்கு அச்சமூட்டினார்.
பாண்டவ வீரர்கள் அனைவரும், ஒன்று கூடியிருக்கும் அசுரர்கள் வஜ்ரதாரியை {இந்திரனை} எதிர்த்து விரைவதைப் போல, போரில் தனியாகப் போராடிக் கொண்டிருக்கும் வலிமைமிக்கத் தேர்வீரரான பீஷ்மரை நோக்கிப் பெரும் சுறுசுறுப்புடன் விரைந்தார்கள். அவர் {பீஷ்மர்}, இந்திரனின் இடிக்கு ஒத்த தீண்டலைக் கொண்ட கூர்தீட்டப்பட்ட தன் கணைகளை அனைத்துப் புறங்களிலும் ஏவியபடி பயங்கரத் தோற்றம் கொண்டவராக எதிரிக்குத் தெரிந்தார். அந்தப் போரில் போரிட்டுக் கொண்டிருந்தபோது சக்ரனின் {இந்திரனின்} வில்லை ஒத்த அவரது பெரிய வில் எப்போதும் வட்டமாகவே வளைக்கப்பட்டே தெரிந்தது. போரில் அந்தச் சாதனைகளைக் கண்ட உமது மகன்கள், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் ஆச்சரியத்தால் நிறைந்து பாட்டனை {பீஷ்மரை} வழிபட்டார்கள்.
பார்த்தர்கள் {பாண்டவர்கள்}, போரில் போராடிக் கொண்டிருக்கும் உமது வீரத்தந்தையின் {பீஷ்மரின்} மேல், தேவர்கள் (அசுரன்) விப்ரசித்தியைப் (பழங்காலத்தில்) கண்டதைப் போல மகிழ்ச்சியற்ற இதயங்களுடன், தங்கள் கண்களைச் செலுத்தினர். அவர்களால், அகலவிரித்த வாயைக் கொண்ட அந்தகனை ஒத்த அந்த வீரரை {பீஷ்மரைத்} தடுக்க முடியவில்லை. அந்தப் பத்தாம் {10} நாள் போரில், பீஷ்மர், , காட்டை எரிக்கும் காட்டுத்தீயைப் போல, சிகண்டியின் படைப்பிரிவைத் தன் கூரிய கணைகளால் எரித்தார்.
கடும்நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்பையோ, காலனால் தூண்டப்பட்ட அந்தகனையோ ஒத்த சிகண்டி, மூன்று {3} கணைகளால் அவரது {பீஷ்மரின்} நடு மார்பைத் துளைத்தார். இப்படி ஆழத்துளைக்கப்பட்ட பீஷ்மர் (தன்னைத் துளைத்துக் கொண்டிருப்பது) சிகண்டி என்பதைக் கண்டார். கோபத்தால் தூண்டப்பட்டாலும், (சிகண்டியோடு போரிட) விரும்பாத பீஷ்மர் சிரித்துக் கொண்டே, “நீ என்னைத் தாக்கினாலும், தாக்காவிட்டாலும், நான் உன்னுடன் ஒருபோதும் போரிட மாட்டேன். படைப்பாளனால் {பிரம்மனால்} முதலில் செய்யப்பட்டது போலவே இன்னும் இருக்கும் அந்தச் சிகண்டியே நீ [6]" என்றார் {பீஷ்மர்}.
[6] பாலினம் மாற்றப்பட்டாலும் நீ இன்னும் பெண்ணே என்று சிகண்டியிடம் பீஷ்மர் சொல்வதாகக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அவரது {பீஷ்மரின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட சிகண்டி, கோபத்தால் உணர்வுகளை இழந்து, தன் கடைவாயை நாவால் நனைத்தபடி {நக்கியபடி}, அந்தப் போரில் பீஷ்மரிடம், “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, க்ஷத்திரிய இனத்தை அழிப்பவர் நீர் என்பதை நான் அறிவேன் [7]. ஜமதக்னியின் மகனுடனான {பரசுராமருடனான} உமது போரையும் நான் கேட்டிருக்கிறேன். மனிதசக்திக்கு மீறிய உமது ஆற்றலைக் குறித்தும் நான் அதிகம் கேட்டிருக்கிறேன். உமது ஆற்றலை அறிந்தும், நான் இன்று உம்மோடு போரிடுவேன்.
[7] வேறொரு பதிப்பில் க்ஷத்திரியர்களுக்குப் பயத்தை உண்டாக்குபவர் நீர் என்பதை நான் அறிவேன் என்று சிகண்டி சொல்வதாக இருக்கிறது.
பாண்டவர்களுக்கும், எனக்கும் ஏற்புடையதைச் செய்ய, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {பீஷ்மரே}, போரில் இன்று நான் உம்மோடு போரிடுவேன். நிச்சயமாக நான் உம்மைக் கொல்வேன். உமது முன்னிலையில் இதை நான் உண்மையின் {சத்தியத்தின்} மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். நீர் என்னைத் தாக்கினாலும், தாக்கவில்லையென்றாலும், நீர் என்னிடம் இருந்து உயிரோடு தப்ப முடியாது. ஓ! எப்போதும் வெல்வபரே, ஓ! பீஷ்மரே, இவ்வுலகை இறுதிமுறையாகக் காண்பீராக” என்றான் {சிகண்டி}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படிச் சொன்ன அந்தச் சிகண்டி தன் சொற்கணைகளால் ஏற்கனவே துளைத்தது போக, அந்தப் போரில் ஐந்து {5} நேரான கணைகளால் பீஷ்மரைத் துளைத்தான்.
வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன், சிகண்டியின் வார்த்தைகளைக் கேட்டு, அவனே {சிகண்டியே} பீஷ்மரை அழிப்பவன் எனக் கருதி, "என் கணைகளால் எதிரியை முறியடித்தபடி உன் பின்னால் இருந்து போரிடுவேன். சினம் தூண்டப்பட்ட நீ பயங்கர ஆற்றல் படைத்த பீஷ்மரை எதிர்த்து விரைவாயாக. வலிமைமிக்கப் பீஷ்மரால் போரில் உன்னைப் பீடிக்க இயலாது. எனவே, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {சிகண்டி}, பீஷ்மருடன் மூர்க்கமாகப் போரிடுவாயாக. ஓ! ஐயா {சிகண்டி}, பீஷ்மரைக் கொல்லாமல் நீ இன்று திரும்புவாயானால், என்னுடன் சேர்த்து நீ இவ்வுலகில் ஒரு கேலிப்பொருளாவாய். ஓ! வீரா {சிகண்டியே}, இந்தப் பெரும்போரில் நாம் கேலிக்கு ஆளாகாதவாறு போரிட முயற்சி செய்வாயாக. பீஷ்மரைக் கொல்வாயாக. ஓ! பெரும்பலம் கொண்டவனே {சிகண்டியே}, (குரு படையின்) தேர்வீரர்கள் அனைவரையும் தடுத்து நான் இந்தப் போரில் உன்னைக் காப்பேன். நீ பாட்டனை {பீஷ்மரைக்} கொல்வாயாக.
துரோணர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கிருபர், சுயோதனன் {துரியோதனன்}, சித்திரசேனன், விகர்ணன், சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், காம்போஜர்களின் ஆட்சியாளனான சுதக்ஷிணன், துணிச்சல்மிக்கப் பகதத்தன், மகதர்களின் வலிமைமிக்க மன்னன்{ஜெயத்சேனன்}, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, ராட்சசர்களில் துணிச்சல்மிக்கவனான ரிஷ்யசிருங்கனின் மகன் {அலம்புசன்}, திரிகர்த்த ஆட்சியாளன் {சுசர்மன்} மற்றும் (கௌரவப்படையின்) பெரும் தேர்வீரர்கள் பிறர் ஆகியோரை, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலத் தனியாக நான் தடுப்பேன். உண்மையில், ஒன்றுகூடி நம்மோடு போர்புரியக்கூடிய குருபடையின் வலிமைமிக்க வீரர்கள் அனைவரையும் நான் தடுத்து நிறுத்துவேன். நீ பாட்டனைக் {பீஷ்மரைக்} கொல்வாயாக" என்று சொல்லி அவனை {சிகண்டியைத்} தூண்டினான் {அர்ஜுனன்}" {என்றான் சஞ்சயன் திருதராஷ்டிரனிடம்}.
ஆங்கிலத்தில் | In English |