Drona fell suddenly! | Bhishma-Parva-Section-121 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 79)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் அடைந்த வேதனை; கௌரவர்களின் துயரமும், பீமசேனனின் மகிழ்ச்சியும்; பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணரிடம் தெரிவித்த துச்சாசனன்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த துரோணர்; பீஷ்மரிடம் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மர்...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம் சொன்னார்}, “ஐயோ, ஓ! சஞ்சயா, தன் மரியாதைக்குரிய தந்தைக்காக {சந்தனுவிற்காகப்} பிரம்மச்சாரியானவரும், தேவர்களைப் போன்றவருமான பீஷ்மரை இழந்த போது (என்) வீரர்களின் நிலை எவ்வாறு இருந்தது? பீஷ்மர், துருபதன் மகனை {சிகண்டியை} இழிவாகக் கருதி அவனைத் தாக்காதிருந்தபோதே பாண்டவர்களால் குருக்களும் மற்றவர் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதினேன். இழிந்த நிலையில் இருக்கும் நான், இன்று என் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதையும் கேட்டேன்.
இதைவிடக் கனமான துன்பம் வேறென்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, பீஷ்மரின் மரணத்தைக் கேட்டும் நூறு துண்டுகளாக உடையாமல் இருக்கும் என் இதயம் நிச்சயம் உருக்காலானதே. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {சஞ்சயா}, குரு குலச் சிங்கமான வெற்றியை விரும்பும் பீஷ்மர் போரில் கொல்லப்பட்ட போது, என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. தேவவிரதர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஐயோ, பழங்காலத்தில் ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} தெய்வீக ஆயுதங்களாலும் கொல்லப்படாத அவர் {பீஷ்மர்}, ஐயோ துருபதன் மகனான பாஞ்சால இளவரசன் சிகண்டியால் இப்போது கொல்லப்பட்டாரே” என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலையில் கொல்லப்பட்ட குரு பாட்டன் பீஷ்மர் {தன் மறைவால்} தார்தராஷ்டிரர்களைக் கவலை கொள்ளச் செய்து, பாஞ்சாலர்களை மகிழ்வித்தார். அவர் {பீஷ்மர்} பூமியில் விழுந்தாலும், அவரது உடலானது பூமியைத் தொடாதவகையில், கணைகளின் படுக்கையில் கிடந்தார். உண்மையில், பீஷ்மர் தன் தேரில் இருந்து வீசப்பட்டுப் பூமியின் பரப்பில் விழுந்த போது, அனைத்து உயிரினங்களும், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின.
குருக்களின் எல்லை மரமானவரும் {வேலியானவரும்}, எப்போதும் வெல்பவருமான பீஷ்மர் விழுந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு படை க்ஷத்திரியர்களின் இதயங்களில் அச்சம் நுழைந்தது. கொடிமரம் வீழ்த்தப்பட்டு, கவசம் பிளக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டு, குருக்களும், பாண்டவர்களும் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்தப்பட்டார்கள். ஆகாயம் இருளால் மூடப்பட்டது, சூரியனும் {ஒளியிழந்து} மங்கினான். சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டபோது, பூமி உரக்க அலறுவதாகத் தெரிந்தது.
“வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவர் இவர்! {பீஷ்மர்!} வேதங்களை அறிந்தோரில் சிறந்தவர் இவர் {பீஷ்மர்}” என்றே (கணைகளின் படுக்கையில்) கிடந்த அந்த மனிதர்களில் காளையை {பீஷ்மரைக்} குறித்து உயிரினங்கள் பேசின. [1]“முன்பு, தன் தந்தை {சந்தனு} காமத்தால் பீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட இந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, தன் உயிர் வித்தை மேலெழுப்பத் தீர்மானித்தவராவார்” என்றே கணைகளின் படுக்கையில் கிடந்த பாரதர்களில் முதன்மையானவரைக் குறித்துச் சித்தர்கள் மற்றும் சாரணர்களோடு கூடிய முனிவர்கள் பேசினர்.
பாரதர்களின் பாட்டனான சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்ட போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன செய்வது என்பதை உமது மகன்கள் அறியவில்லை. அவர்களது முகங்கள் துன்பக்குறிகளை அணிந்து கொண்டன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது முகத்தோற்றங்கள் காந்தியை இழந்தன, அவர்கள் அனைவரும் அவமானத்தில் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டபடியே நின்றனர். மறுபுறம், வெற்றியடைந்த பாண்டவர்கள் தங்கள் படையணிகளின் தலைமையில் நின்றனர். பிறகு அவர்கள் அனைவரும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் பெரிய சங்குகளை முழங்கினர்.
ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் மகிழ்ச்சியின் விளைவால் ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் படைத்தவனும், குந்தியின் மகனுமான பீமசேனன் பெரும் பலமிக்கப் பகை வீரர்கள் பலரைக் கொன்று, பெரும் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.
குருக்கள் அனைவரையும் பெரும் மயக்கம் ஆட்கொண்டது. கர்ணனும் [1], துரியோதனனும், அடிக்கடி பெருமூச்சுவிட்டார்கள். குரு பாட்டனான பீஷ்மர் இப்படி விழுந்தபோது சுற்றிலும் துன்பக்குரல்கள் கேட்கப்பட்டன, (குரு படையின் மத்தியில்) பெரும் குழப்பம் நிலவியது.
[1] கர்ணன் களத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பீஷ்மரின் படுகொலை கேள்விப்பட்டு வருந்தியிருக்க வேண்டும்.
பீஷ்மர் விழுந்ததைக் கண்ட உமது மகன் துச்சாசனன், துரோணரின் தலைமையிலான படைப்பிரிவுக்குள் பெரும் வேகத்தோடு நுழைந்தான். தன் துருப்புகளின் தலைமையில் கவசம் பூண்டவனாக நின்ற அந்த வீரன் {துச்சாசனன்}, (பீஷ்மரின் பாதுகாப்பிற்காகத்) தன் அண்ணனால் நிறுத்தப்பட்டிருந்தான். அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தன் தலைமையிலான துருப்புகளைத் துன்பத்தில் ஆழ்த்தியபடி இப்போது அங்கே {துரோணரிடம்} வந்தான். இளவரசன் துச்சாசனன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட கௌரவர்கள், அவன் {துச்சாசனன்} சொல்வதைக் கேட்க விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.
குரு குலத்தின் துச்சாசனன் பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணருக்குத் தெரிவித்தான். அந்தத் தீய செய்திகளைக் கேட்ட துரோணர், தன் தேரில் இருந்து திடீரென விழுந்தார். பிறகு, தன் சுயநினைவை விரைவாக அடைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தொடர்ந்து போரிடும் குரு படையைத் தடுத்தார். போரில் இருந்து குருக்கள் விலகுவதைக் கண்ட பாண்டவர்களும், வேகமான குதிரைகளில் செல்லும் தூதர்களைக் கொண்டு, போரிடுவதை நிறுத்தினர். இரு படைகளின் மன்னர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றி பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். போரில் இருந்த விலகிய ஆயிரக்கணக்கான {பிற} வீரர்களும், அனைத்து உயிர்களின் தலைவனை {பிரம்மனை} நோக்கிச் செல்லும் தேவர்களைப் போல உயர் ஆன்ம பீஷ்மரை நோக்கிச் சென்றனர்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (அப்போது அம்புப் படுக்கையில் கிடந்த) பீஷ்மரை அணுகிய பாண்டவர்களும், குருக்களும், அவருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். நீதிமிக்க ஆன்மா கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், இப்படித் தன்னை வணங்கித் தன் முன் நின்ற பாண்டவர்களிடமும், குருக்களிடமும் பேசினார்.
அவர் {பீஷ்மர்}, “உயர்ந்த அருளைப் பெற்றவர்களே {பெரும்பாக்கியசாலிகளே}, உங்களுக்கு நல்வரவு! வலிமைமிக்கத் தேர்வீரர்களே, உங்களுக்கு நல்வரவு! தேவர்களுக்கு ஒப்பான உங்களைக் கண்டதால் நான் மனநிறைவடைகிறேன்” என்றார். தலையைத் தொங்கப்போட்டபடியே அவர்களிடம் பேசிய அவர் {பீஷ்மர்} மீண்டும் அவர்களிடம், “என் தலை அதிகமாகத் தொங்குகிறது. ஒரு தலையணையை எனக்குக் கொடுப்பீராக” என்றார். பிறகு, (அங்கே நின்று கொண்டிருந்த) மன்னர்கள், மிக மென்மையானவையும், மிக மெல்லிய துணிகளாலான பல அற்புத தலையணைகளைக் கொண்டு வந்தனர். எனினும், பாட்டன் {பீஷ்மர்} அவற்றை விரும்பவில்லை.
பிறகு அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சிரித்துக் கொண்டே அந்த மன்னர்களிடம், “மன்னர்களே, இவை வீரனின் படுக்கைக்காகாது” என்றார். பிறகு, அவர்களைக் {அந்த மன்னர்களைக்} கண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்}, உலகங்கள் அனைத்திலும் உள்ள தேர்வீரர்களில் வலிமையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. {அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் எனக்குத்} தகுந்தது என்று நீ கருதும் தலையணையை எனக்குக் கொடுப்பாயாக” என்றார் {பீஷ்மர்}” {என்றான் சஞ்சயன்}.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html#sthash.B9j1J7uG.dpuf
http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html
பத்தாம் நாள் போர் முற்றும்
[1} பீஷ்மர், “ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன். ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். நான் மகனற்று இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்." என்றான்.
அங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்த செயற்கரிய செயலைப் பாராட்டி "இவன் {தேவவிரதன்} உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்!" என்றனர். சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால், பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, "நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ! பாவமற்றவனே {பீஷ்மனே}, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்", என்றான் {சந்தனு}.
பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100
http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html
ஆங்கிலத்தில் | In English |