The Circular array! | Drona-Parva-Section-032 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 02)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஒவ்வொருவரின் தகுதிகளையும், கிருஷ்ணனின் பெருமையையும் எடுத்துச் சொல்லும் சஞ்சயன்; துரோணர் அமைத்த சக்கர {பத்ம} வியூகம்; அந்த வியூகத்தில் கௌரவ வீரர்கள் ஒவ்வொருவரும் நின்ற நிலைகளைக் குறித்த வர்ணனை...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "போரில் கடுஞ்செயல்களைச் செய்பவர்களும், களைப்பனைத்துக்கும் மேம்பட்டவர்களும், சாதனைகளால் தங்களை நிரூபித்துக் கொள்பவர்களுமான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்} ஐவரும், கிருஷ்ணனுடன் கூடி தேவர்களாலும் தடுக்கப்பட முடியாதவர்களாக இருக்கின்றனர்.
நீதி, செயல்கள், பரம்பரை, நுண்ணறிவு {புத்திக்கூர்மை}, சாதனைகள், புகழ், செழிப்பு ஆகியவற்றில் யுதிஷ்டிரனைப் போன்ற வேறொரு மனிதன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதுமில்லை. உண்மைக்கும் {சத்தியத்துக்கும்}, நீதிக்கும் அர்ப்பணிப்புடன், ஆசைகளைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், பிராமணர்களை வழிபடுவதன் விளைவாலும், அது போன்ற இயல்புடைய பிற அறங்களாலும் {சிறப்பு குணங்களாலும்} எப்போதும் சொர்க்கத்தில் இன்புறுகிறான்.
யுக முடிவின் {ஊழிக்காலத்து} அந்தகன், ஜமதக்னியின் வீர மகன் (ராமர்) {பரசுராமர்}, தன் தேரிலுள்ள பீமசேனன் ஆகிய மூவரும் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இணையானவர்களாகவே சொல்லப்படுகின்றனர்.
போரில் தன் உறுதிமொழிகளை எப்போதும் அடையும் காண்டீவதாரியான பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} பூமியில் சரியான இணை {ஒப்புவமை} ஒன்றையும் நான் காணவில்லை.
மேன்மையானவர்களிடம் மதிப்பு {குருபக்தி}, ஆலோசனைகளை வெளியிடாமை, பணிவு, சுயக்கட்டுப்பாடு, மெய்ந்நலம் {மேனியழகு}, துணிச்சல் ஆகிய ஆறும் எப்போதும் நகுலனிடம் இருக்கின்றன.
சாத்திரங்களில் அறிவு, ஈர்க்கும் தன்மை {இனிமை}, பண்பில் இனிமை {கம்பீரம்}, நீதி, ஆற்றல் ஆகிவற்றில் அசுவினிகளுக்கே இணையானவனாக வீர சகாதேவன் இருக்கிறான்.
கிருஷ்ணனிடமும், பாண்டவர்களிடம் உள்ள உன்னதக் குணங்கள் அனைத்தின் கூட்டும் அபிமன்யுவிடம் மட்டுமே காணப்படுகிறது. உறுதியில் யுதிஷ்டிரனுக்கு இணையானவனாக, நடத்தையில் கிருஷ்ணனுக்கும், சாதனைகளில் பயங்கரச் செயல் புரியும் பீமசேனனுக்கும் இணையானவனாக இருந்த அவன் {அபிமன்யு}, மேனி அழகு, ஆற்றல், சாத்திர அறிவு ஆகியவற்றில் தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்கு} இணையானவனாக இருந்தான். பணிவிலோ, அவன் சகாதேவன் மற்றும் நகுலனுக்கு இணையானவனாக இருந்தான்” என்றான் {சஞ்சயன்} [1].
[1] மேற்கண்ட வர்ணனை முழுவதும் வேறொரு பதிப்பில் ஜனமேஜயன் வாயிலாக வைசம்பாயனருக்குச் சொல்லப்பட்டதாகச் சென்ற பகுதியின் {துரோண பர்வம் பகுதி 31ன்} [3]ம் அடிக்குறிப்பில் குறிப்பிட்டிருக்கிறோம். இங்கே சஞ்சயனே அவற்றைச் சொல்வதாக வருகிறது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, “ஓ! சூதா {சஞ்சயா}, வெல்லப்பட முடியாத சுபத்திரையின் மகன் அபிமன்யு போர்க்களத்தில் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விரிவாகக் கேட்க விரும்புகிறேன்” என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உறுதியுடனிருப்பீராக. தாங்க முடியாத உமது சோகத்தைத் தாங்கிக் கொள்வீராக. உமது சொந்தங்களின் பெரும்படுகொலைகளைக் குறித்து உம்மிடம் நான் சொல்லப் போகிறேன்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஆசான் {துரோணர்} பெரும் சக்கர வியூகத்தை [2] அமைத்தார். அதில் சக்ரனுக்கு {இந்திரனுக்கு} இணையான (நமது தரப்பின்) மன்னர்கள் அனைவரும் நிறுத்தப்பட்டனர். சூரியப் பிரகாசத்தைக் கொண்ட இளவரசர்கள் அனைவரும் {அந்த வியூகத்தின்} நுழைவாயிலிலேயே நிறுத்தப்பட்டனர் [3]. (ஒருவரோடொருவர் சேர்ந்து நிற்போம் என்று) அவர்கள் அனைவரும் உறுதி மொழிகளை ஏற்றிருந்தனர். தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரங்களை அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர். சிவப்பு ஆடைகளையும், சிவப்பு ஆபரணங்களையும் அவர்கள் அனைவரும் அணிந்திருந்தனர். சிவப்பு கொடிகளையும் அவர்கள் அனைவரும் கொண்டிருந்தனர், மேலும் தங்க மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு, சந்தனக் குழம்பையும், நறுமணமிக்க வேறு தைலங்களையும் {காரகில் சாந்துகளையும்} பூசிக் கொண்டு பூமாலை அணிந்தவர்களாக அவர்கள் அனைவரும் இருந்தனர். போரிட விரும்பிய அவர்கள் ஒரே அமைப்பாகச் செயல்பட்டு, அர்ஜுனன் மகனை {அபிமன்யுவை} நோக்கி விரைந்தனர். உறுதியான வில்லாளிகளான அவர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பத்தாயிரம் பேராக இருந்தனர். இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவரோடொருவர் இரக்கம் கொண்டு, வீரச்செயல்களில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக்கொண்டு, ஒருவரையொருவர் விஞ்ச விரும்பி, ஒருவருக்கொருவர் நன்மை செய்யத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட அவர்கள் அனைவரும் உமது அழகிய பேரன் லக்ஷ்மணனைத் {துரியோதனன் மகனைத்} தலைமையில் கொண்டு போரிடச் சென்றனர்.
[2] வேறொரு பதிப்பில் இது பத்ம வியூகம் என்று சொல்லப்படுகிறது. “எக் கரமும் படை கொண்டு எழு சேனையை, எயில்கள் வளைப்பனபோல், சக்கரயூகம் வகுத்து இரதத்திடை சயம் உற நின்றனனே” வில்லிபாரதம் 3:41:4. அதேபோல வில்லி பாரத்தில் பாண்டவர்கள் மகர வியூகம் வகுத்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது, “வரு படைதன்னை நிறுத்தி விதம்பட, மகரவியூகம் வகுத்து, ஒரு பகல் யூகமும் இப் பகலுக்கு இனி ஒப்பு அல என்றிடவே, குருபதியும் திருமாலும் மதிக்க அணிந்து, அடு கோள் அரிபோல், துருபதன் மைந்தனும் நின்றனன், அந்தரத் துந்துபிமீது எழவே” வில்லிபாரதம் 3:41:6. இந்தக் குறிப்புக் கங்குலியில் இல்லை.[3] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தியில் உள்ள இந்தப் பகுதி வேறு மாதிரியாக இருக்கிறது, அது பின்வருமாறு, “மகாராஜரே, ஆசாரியரால் (அந்த ரணகளத்தில்) பத்மவ்யூஹம் அமைக்கப்பட்டது. அந்தப் பத்ம வியூகத்தில் மன்னர்கள் அனைவரும் தாமரைப் பூவைப் போலவும், அரசவர்க்கத்தைச் சேர்ந்த மகன்கள் தாதுக்கள் போலவும் அமைக்கப்பட்டனர். அந்தப் பத்மவியூகத்துக்குத் துரியோதனன் கர்ணிகை {தாமரைப்பூவில் இருக்கும் காயின்} ஸ்தானத்தில் நிற்பவனானான்.
ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, துரியோதனன் தன் படைகளுக்கு மத்தியில் நின்றிருந்தான். அந்த மன்னன் {துரியோதனன்}, வலிமைமிக்கத் தேர்வீரர்களான கர்ணன், துச்சாசனன், கிருபர் ஆகியோரால் சூழப்பட்டுத் தன் தலைக்கு மேல் உயர்த்திப் பிடிக்கப்பட்ட குடையைக் கொண்டிருந்தான். காட்டெருதின் வாலால் {சாமரம்} வீசப்பட்ட அவன் {துரியோதனன்} தேவர்களின் தலைவனைப் {இந்திரனைப்} போலப் பிரகாசித்தான்.
அந்தப் படையின் தலைமையில் இருந்த படைத்தலைவரான துரோணர் உதயசூரியனைப் போலத் தெரிந்தார். அங்கே பெரும் மேனி அழகைக் கொண்ட சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மேருவின் முகட்டைப் போல அசையாதவனாக நின்றான். அஸ்வத்தாமனின் தலைமையில் நின்றவர்களும், தேவர்களுக்கு ஒப்பானவர்களுமான உமது மகன்கள் முப்பது {30} பேர், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிந்துக்களின் ஆட்சியாளனுடைய {ஜெயத்ரதனின்} பக்கத்தில் நின்றனர். பிறகு, ஜெயத்ரதனின் விலாப்புறத்தில், சூதாடியான காந்தார ஆட்சியாளன் (சகுனி), சல்லியன் மற்றும் பூரிஸ்ரவஸ் ஆகிய வலிமைமிக்கத் தேர்வீரர்கள் நின்றனர். பிறகு, உமது படைவீரர்களுக்கும், எதிரிகளுடையவர்களுக்கும் இடையில் கடுமையானதும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான போர் தொடங்கியது. மரணத்தையே இலக்காகக் கொண்டு இரு தரப்பும் போரிட்டன” {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |