Impenetrable array to the very gods! | Drona-Parva-Section-031 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 01)
பதிவின் சுருக்கம் : பனிரெண்டாம் நாளை தோற்றதாகக் கருதிய கௌரவ வீரர்கள்; எரிச்சலும் கோபமும் கொண்ட துரியோதனன் துரோணரிடம் பேசியது; பாண்டவர்களின் வீரர்களில் முதன்மையான ஒருவரைக் கொல்வதாகத் துரியோதனனிடம் சூளுரைத்த துரோணர்; பதிமூன்றாம் நாள் போரில் சக்கர வியூகம் அமைத்த துரோணர்; நாளின் இறுதியில் அபிமன்யு கொல்லப்பட்டதாகத் திருதராஷ்டிரனிடம் சொல்லும் சஞ்சயன்; திருதராஷ்டிரன் அடைந்த துயரம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "முதலில் அளவிலா ஆற்றல் கொண்ட அர்ஜுனனால் {தாங்கள்} பிளக்கப்பட்டதாலும், யுதிஷ்டிரன் நன்கு பாதுகாக்கப்பட்டதால், துரோணர் செய்திருந்த சபதம் தோல்வி அடைந்த காரணத்தாலும் உமது வீரர்கள் தோற்கடிக்கப்பட்டதாகவே கருதப்பட்டனர். புழுதி படிந்தும் பிளந்திருந்த கவசங்களுடனுமிருந்த அவர்கள் அனைவரும் சுற்றிலும் தங்கள் கண்களை ஆவலாகச் சுழலவிட்டனர். உறுதியான இலக்கைக் கொண்ட தங்கள் எதிரிகளால் வீழ்த்தப்பட்டு, போரில் அவர்களால் {எதிரிகளால்} அவமதிக்கப்பட்ட அவர்கள் {கௌரவ வீரர்கள்}, துரோணரின் சம்மதத்தின் பேரில் களத்தில் இருந்து திரும்பினர். அப்படித் திரும்பிக் கொண்டிருக்கையில், உயிர்களனைத்தும் பல்குனனின் {அர்ஜுனனின்} எண்ணற்ற தகுதிகளைப் புகழ்வதையும், அனைவரும் அர்ஜுனனிடம் கேசவன் {கிருஷ்ணன்} கொண்ட நட்பைப் பேசுவதையும் அவர்கள் கேட்டனர். சம்பவங்களின் கோர்வையை நினைவு கூர்ந்த அவர்கள், சாபத்தில் வீழ்ந்த மனிதரைப் போல முற்றான அமைதி கொண்டு அந்த இரவைக் கழித்தனர் [1].
[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, "பிராணிகள் பல்குனனுடைய அளவற்ற குணங்களைப் புகழவும், அவனிடத்திலிருக்கின்ற கிருஷ்ணனுடைய நேசமானது சொல்லப்படவும், உம்மைச் சேர்ந்தவர்க் எல்லோரும் (பிரம்மஹத்தி முதலான தோஷத்தினால்) நிந்திக்கப்பட்டவர்கள் போலத் தியானத்தில் ஊமைத்தன்மையை அடைந்தார்கள்” என்றிருக்கிறது.
அடுத்த நாள் காலையில், துரியோதனன், தங்கள் எதிரியின் செழிப்பைக் கண்டு இதய உற்சாகத்தைப் பெரிதும் இழந்து, எரிச்சலாலும், கோபத்தாலும் இந்த வார்த்தைகளைத் துரோணரிடம் சொன்னான். பேச்சில் திறமையுள்ள அந்த மன்னன் {துரியோதனன்}, எதிரி அடைந்த வெற்றியை எண்ணி சினத்தால் நிறைந்து, துருப்புகள் அனைத்தும் கேட்டுக் கொண்டிருக்கும்போதே இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! மறுபிறப்பாளர்களில் முதன்மையானவரே {பிராமணோத்தமரே}, உம்மால் அழிக்கப்பட வேண்டிய மனிதர்களால் இன்று நீர் எங்களைத் தாழ்த்திவிட்டீர் {கீழான நிலைக்குக் கொண்டுவந்து விட்டீர்} என்பதில் ஐயமில்லை. அடையத்தக்க தூரத்தில் யுதிஷ்டிரனைக் கொண்டிருந்தும், இன்று அவனை நீர் பிடிக்கவில்லை. போரில் உம்மால் பிடிக்கத்தக்க அந்த எதிரி, உமது பார்வையில் ஒரு முறை பட்டாலே, தேவர்களாலேயே உதவப்பட்டு, பாண்டவர்களால் பாதுகாக்கப்பட்டாலும் கூட அவன் உம்மிடம் இருந்து தப்புவது இயலாதே. மனம் நிறைந்திருந்த நீர் எனக்கு ஒரு வரத்தை அளித்தீர்; எனினும், இப்போதோ அதன் படி செயல்படாமலிருக்கிறீர். (உம்மைப் போன்ற) உன்னதர்கள், தங்களிடம் அர்ப்பணிப்புக் கொண்ட ஒருவனின் நம்பிக்கைகளை ஒருபோதும் பொய்யாக்குவதில்லை" என்றான் {துரியோதனன்}.
துரியோதனனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} நாணிக் குறுகினார். மன்னனிடம் {துரியோதனனிடம்} அவர் {துரோணர்}, "என்னை நீ இப்படி நினைப்பது உனக்குத் தகாது. உனக்கு ஏற்புடையதைச் சாதிக்கவே நான் எப்போதும் முயல்கிறேன். கிரீடம் தரித்தவனால் (அர்ஜுனனால்) பாதுகாக்கப்படும் படையைத் தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், நாகர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கூடிய மூன்று உலகங்களாலும் வீழ்த்த இயலாது. அண்டத்தை உண்டாக்கிய கோவிந்தன் எங்கிருக்கிறானோ, அர்ஜுனன் தலைவனாக எங்கிருக்கிறானோ, அங்கே முக்கண் மகாதேவனைத் தவிர வேறு எவனுடைய பலம் செல்லுபடியாகும்? ஓ! ஐயா {துரியோதனா}, நான் இஃதை இன்று உனக்கு உண்மையாகவே சொல்கிறேன், இது வேறுவகையிலாகாது.
இன்று நான், பாண்டவ வீரர்களில் முதன்மையான ஒரு வலிமைமிக்கத் தேர்வீரனைக் கொல்வேன். இன்று நான், தேவர்களாலும் ஊடுருவமுடியாத ஒரு வியூகத்தை அமைப்பேன். எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, எவ்வழிகளிலாவது அர்ஜுனனை களத்திலிருந்து {வெளியே} கொண்டு செல்வாயாக. அவன் அறியாததோ, போரில் அடையமுடியாததோ யாதொன்றும் இல்லை. {உலகத்தாரால்} போரைக் குறித்து {இதுவரை} அறியப்பட்ட அனைத்தையும் அவன் பல்வேறு இடங்களில் இருந்து அடைந்திருக்கிறான்" என்றார் {துரோணர்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "துரோணர் இவ்வார்த்தைகளைச் சொன்ன பிறகு, மீண்டும் போரிடுவதற்காக அர்ஜுனனைச் சவாலுக்கழைத்த சம்சப்தகர்கள், களத்தின் தென் பகுதிக்கு அவனை {அர்ஜுனனைக்} கொண்டு சென்றனர். பிறகு, எப்போதும் பார்க்கப்படாத, கேள்விப்படாத வகையில் அர்ஜுனனுக்கும், அவனுடைய எதிரிகளுக்கும் {சம்சப்தகர்களுக்கும்} இடையிலான அந்த மோதல் இருந்தது.
மறுபுறம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணர் அமைத்த வியூகமானது பிரகாசிப்பதாகத் தெரிந்தது. உண்மையில், உச்சியை அடைந்து, (கீழிருக்கும் அனைத்தையும்) எரிக்கும் சூரியனைப் போல அந்த வியூகமானது பார்க்கப்பட முடியாததாக இருந்தது. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அபிமன்யு, தன் தந்தையுடைய மூத்த அண்ணனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், போரில் ஊடுருவ முடியாத அந்தச் சக்கர வியூகத்தின் பல இடங்களைத் துளைத்தான். மிகக் கடினமான அருஞ்செயல்களைச் செய்து, ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொன்ற அவன் {அபிமன்யு}, (இறுதியில்) ஒன்று சேர்ந்திருந்த ஆறு வீரர்களால் {ஒரே நேரத்தில்} எதிர்க்கப்பட்டான். ஓ! பூமியின் தலைவா, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே} இறுதியாக அந்தச் சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, துச்சாசனன் மகனிடம் [2] பலியாகி தன் உயிரை விட்டான். இதனால் நாங்கள் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தோம், பாண்டவர்களோ பெரும் துன்பத்தில் நிறைந்தனர். சுபத்திரையின் மகன் {அபிமன்யு} கொல்லப்பட்ட பிறகு, நம் துருப்புகள் இரவு ஓய்வுக்காகப் பின்வாங்கப்பட்டன {திரும்ப அழைக்கப்பட்டன}" {என்றான் சஞ்சயன்} [3].
[2] இவன் பெயர் துர்மாசனன் durmashana என்று வலைத்தளங்கள் பலவற்றில் காணப்படுகிறது.[3] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகமானவை இருக்கின்றன, அவை பின்வருமாறு, "அப்போது, ஜனமேஜயன், "போரில் விடாமுயற்சியுடையவர்களும், செயல்களாலே சிரமங்களைத் தெரிவிப்பவர்களும், கிருஷ்ணனோடு கூடியவர்களுமான பாண்டவர்கள் அனைவரும் தேவர்களாலும் அணுக முடியாதவர்கள் ஆவர். அடிக்கடி தொடர்ச்சியான உத்தம காரியங்களாலும், புத்தியினாலும், சுபாவத்தினாலும், கீர்த்தியினாலும், ஐசுவரியத்தினாலும், கிருஷ்ணனுக்கு நிகரான ஒரு மனிதன் உண்டானதுமில்லை; உண்டாகப் போவதுமில்லை. மன்னன் யுதிஷ்டிரன், சத்யம், தர்மம், தவம், தானம், பிராம்மணப் பூஜை முதலான குணங்களாலே தேகத்துடனே சொர்க்கம் அடைந்தானாம். ஊழிக்காலத்து அந்தகன், கீர்த்தியுடைய ஜமதக்னி மகனான பரசுராமர், யுத்த அரங்கத்தில் நிற்கின்ற பீமசேனன் ஆகிய மூவரும் சமானர்களாகச் சொல்லப்படுகிறார்கள். பிரதிஜ்ஞை செய்த காரியத்தை நிறைவேற்றுவதில் சாமர்த்தியமுள்ளவனும், ரணகளத்தில் காண்டீவத்தை வில்லாகக் கொண்டவனுமான பார்த்தனுக்குச் {அர்ஜுனனுக்குச்} சமமான உவமையை இப்புவியில் அறிகிறேனில்லை. நகுலனிடத்தில் அதிகமாகக் குருபக்தி, செய்யப்பட்டதையும், செய்யத்தக்கதையும் வெளியிடாமலிருத்தல், வணக்கம், மன அடக்கம், சௌந்தரியம், வல்லமை ஆகிய ஆறும் நிலைபெற்றிருந்தன. வீரனான சகதேவன் கல்வி, இனிமை, காம்பீர்யம், தைரியம், ரூபம், பராக்கிரமம் இவைகளால் அசுவினி தேவதைகளுக்கு ஒப்பானவனாவான். கிருஷ்ணனிடத்திலும், பாண்டவர்களிடத்திலும் அதிகமான எந்தக் குணங்களுண்டோ மங்களகரங்களான அந்தக் குணங்கள் அபிமன்யு ஒருவனிடத்தில் இருக்கின்றவையாகக் காணப்பட்டனவாம். பிராம்மணோத்தமரே, வல்லமையினால் யுதிஷ்டிரனுக்கும், ஒழுக்கத்தினால் கிருஷ்ணனுக்கும், செய்கையினால் பயங்கரச் செய்கையுடைய பீமசேனனுக்கும், வடிவத்தினால் மங்களகரமான பராக்கிரமத்தினால் தனஞ்சயனுக்கும், வணக்கத்தில் சகதேவனுக்கும் நகலனுக்கும் ஒப்பாயிருக்கின்றவனும், பகைவர்களால் தோல்வியடைவிக்கத்தகாதவனும், சுபத்திரையின் மகனுமாகிய {என் பாட்டன்} அபிமன்யுவைப் பற்றிய விருத்தாந்தத்தை நான் முழுதும் கேட்க விரும்புகிறேன். அவன் போரில் எவ்வாறு கொல்லப்பட்டான்?" என்று வினவ, வைசம்பாயனர் சொல்லத் தொடங்கினார். "பெரும் மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிர மன்னன், அபிமன்யு கொல்லப்பட்டதைக் கேட்டுச் சஞ்சயனைக் குறித்து (அபிமன்யுவின் விருத்தாந்தத்தை) விஸ்தாரமாக வினவினான்" என்று வைசம்பாயனர் சொன்ன பிறகு கங்குலியில் உள்ளது போலவே பின்வரும் சம்பவங்கள் தொடர்கின்றன. மேற்சொன்ன செய்திகள் கங்குலி மற்றும் மன்மதநாததத்தரின் பதிப்புகளில் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட இதே பொருளைக் கொண்ட விவரிப்பை சஞ்சயன் சொல்வதாக அடுத்த பகுதியில் {துரோண பர்வம் பகுதி 32ல்} வருகிறது.
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "ஓ! சஞ்சயா, இளமையை அடையாதவனும், மனிதர்களில் சிங்கத்தின் {அர்ஜுனனின்} மகனுமான அவன் (அபிமன்யு) கொல்லப்பட்டதைக் கேட்டு என் இதயம் தூள் தூளாக நொறுங்குகிறது. உண்மையில், ஆட்சி உரிமையை விரும்பும் துணிச்சல்மிக்க மனிதர்கள், மனவுறுத்தல் ஏதுமின்றி ஒரு குழந்தையின் மீது ஆயுதங்களை ஏவத்தக்க வகையில் சட்டம் இயற்றுபவர்களால் {தர்மகர்த்தாக்களால்} ஏற்படுத்தப்பட்ட க்ஷத்திரியர்களின் கடமைகள் கொடூரமானவையே. ஓ! கவல்கணன் மைந்தா {சஞ்சயா}, ஆடம்பரமாக வளர்க்கப்பட்டிருந்தாலும் அச்சமற்ற வகையில் களத்தில் திரிந்த அந்தக் குழந்தையை {அபிமன்யுவை}, ஆயுதங்களில் சாதித்தவர்களான இத்தனை பல வீரர்கள் சேர்ந்து எவ்வாறு கொன்றார்கள் என்பதை எனக்குச் சொல்வாயாக. ஓ! சஞ்சயா, போரில் நம் தேர் அணிவகுப்பினுள் ஊடுருவிய அளவிலா சக்தி கொண்ட சுபத்திரையின் மகனிடம் {அபிமன்யுவிடம்} நம் வீரர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நீர் என்னிடம் கேட்கும் சுபத்திரை மகனின் {அபிமன்யுவின்} படுகொலையை {வதத்தை} விரிவாகச் சொல்கிறேன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, கவனமாகக் கேட்பீராக. நம் படையணிகளுக்குள் ஊடுருவிய அந்த இளைஞன் {அபிமன்யு}, தன் ஆயுதங்களுடன் எவ்வாறு விளையாடினான் என்பதையும், வெற்றி பெறும் நம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட நமது படையின் தடுக்கப்பட முடியாத வீரர்கள் அனைவரும் அவனால் {அபின்யுவால்} எவ்வாறு பீடிக்கப்பட்டனர் என்பதையும் இப்போது நான் உமக்குச் சொல்கிறேன். செடிகள், மூலிகைகள், மரங்கள் ஆகியன நிறைந்த காட்டில், {காட்டுத்} தீயால் அனைத்துப் பக்கங்களிலும் சூழப்பட்ட காட்டுவாசிகள் அனைவரையும்போல, உமது படையின் வீரர்கள் அனைவரும் அச்சத்தால் நிறைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |