The reproach of Sanjaya! | Drona-Parva-Section-086 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 02)
பதிவின் சுருக்கம் : போருக்கான காரணமாகத் தன் மகனைப் பழித்த திருதராஷ்டிரனை சஞ்சயன் நிந்தித்தது; அதன் பிறகு நடந்த போரைக் குறித்து விவரிக்கத் தொடங்கியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "என் கண்களால் சாட்சியாகக் கண்ட அனைத்தையும் நான் உமக்குச் சொல்வேன். அமைதியாகக் கேட்பீராக. உமது தவறு பெரியது. (வயலின்) நீர் பாய்ந்து போன பிறகு, அணையானது பயனற்றுப் போவதைப் போலவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது இந்தப் புலம்பல்களும் பயனற்றவையே. ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, கவலைப்படாதீர். அந்தகனின் ஆச்சரியமான இந்தச் செயல்கள், மீறப்படமுடியாதவையாகும். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, இது புதிதல்ல என்பதால் கவலைப்படாதீர்.
குந்தியின் மகனான யுதிஷ்டிரனையும், உமது மகன்களையும் பகடையாட்டத்தில் இருந்து நீர் முன்னர்த் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.
அதே போல, போருக்கான நேரம் வந்த போது, சினத்தில் எரிந்த இரு தரப்பையும் நீர் தடுத்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.
அதே போல, கீழ்ப்படியாத துரியோதனனைக் கொல்லும்படி குருக்களை நீர் முன்னர்த் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது [1].
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "கௌரவர்களின் நன்மையைக் கருதி மூர்க்கனான துரியோதனனை முந்திச் சிறைப்படுத்தியிருப்பீராகில், நீர் பெரும்புகழைப் பெற்றிருப்பீர்" என்றிருக்கிறது. கங்குலியில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலோ, "அதே போல, சீருக்கு இடம் கொடுக்காத துரியோதனனின் இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் பிற குருக்களை நீர் தூண்டியிருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது" என்று இருக்கிறது.
(இச்செயல்களில் ஏதேனும் ஒன்றை நீர் செய்திருந்தாலும்), பாண்டவர்கள், பாஞ்சாலர்கள், விருஷ்ணிகள் மற்றும் பிற மன்னர்கள் ஆகியோர் உமது நேர்மையற்ற புத்தியை {பிடிவாதத்தை} ஒருபோதும் அறிந்திருக்க மாட்டார்கள்.
அதே போல, ஒரு தந்தையின் கடமையாகத் துரியோதனனை அறவழியில் நிறுத்தி, அதன்வழியே அவனை {துரியோதனனை} நடக்கச் செய்திருந்தால், இந்தப் பேரிடர் உம்மை ஒருபோதும் அணுகியிருக்காது.
இந்தப் பூமியில் ஞானிகளில் சிறந்தவராக நீர் இருக்கிறீர். {அப்படிப்பட்ட நீர்}, நித்தியமான அறத்தைக் கைவிட்டு, துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோரின் ஆலோசனைகளை எவ்வாறு பின்பற்றினீர். எனவே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (இவ்வுலக) செல்வத்தில் பற்றுள்ள உமது இந்தப் புலம்பல்கள், தேனுடன் கலந்த நஞ்சாகவே எனக்குத் தெரிகிறது. முன்பு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டுவின் மகனான மன்னன் யுதிஷ்டிரனையோ, துரோணரையோ கூட உம்மை மதிக்கும் அளவுக்குக் கிருஷ்ணன் மதித்ததில்லை. எனினும், எப்போது மன்னரின் கடமைகளில் இருந்து நீர் வழுவினீர் என்பதை அவன் {கிருஷ்ணன்} அறிந்தானோ அப்போதிலிருந்து உம்மை {அந்த அளவுக்கு} மரியாதையாகக் கருதுவதை நிறுத்திக் கொண்டான். பிருதையின் {குந்தியின்} மகன்களிடம் {பாண்டவர்களிடம்} பல்வேறு கடும் சொற்களை உமது மகன்கள் பேசியிருக்கின்றனர்.
ஓ! அரசுரிமையைக் கொண்டவரே {திருதராஷ்டிரரே}, அந்தப் பேச்சுகளின் போது, நீர் உமது மகன்களுக்காகப் பாகுபாடு காட்டினீர். அந்த உமது பாகுபாட்டின் விளைவே உம்மை இப்போது பீடிக்கிறது. ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, பரம்பரை அரசுரிமை இப்போது ஆபத்திலிருக்கிறது {சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது}. (இல்லையெனில்), பிருதையின் {குந்தியின்} மகன்களால் அடக்கப்பட்ட முழு உலகையும் இப்போது அடைவீராக [2]. குருக்கள் அனுபவிக்கும் அரசும், அவர்களின் {குருக்களின்} புகழும் பாண்டுக்களால் {பாண்டு மற்றும் பாண்டவர்களால்} அடையப்பட்டதே. பாண்டுவின் அறம்சார்ந்த மகன்களே அந்த அரசையும், புகழையும் மேலும் பெருக்கினர். எனினும், உம்முடைய தொடர்பாலும், பேராசை கொண்ட நீர் அவர்களது பரம்பரை அரசை அபகரித்துக் கொண்டதாலும், அவர்களது அந்தச் சாதனைகள் (அவர்களுக்குக்) கனியற்றவையாகின [3].
[2] "Apavrittam என்பதற்கு ஆபத்துக்குள்ளானது, சந்தேகத்திற்கிடமானது என்று பொருள் என நீலகண்டரால் விளக்கப்படுகிறது. அதாவது, சஞ்சயன் என்ன சொல்கிறான் என்றால் அஃது அப்படி இல்லையென்றால், பாண்டவர்களால் உமக்கு அளிக்கப்படும் முழு உலகையும் ஆளும் கசப்பை அடைய வேண்டியிருக்கும். ஒன்று பாண்டவர்கள் உமது நாட்டைப் பறித்துக் கொள்வார்கள், அல்லது உமது மகன்களைக் கொன்ற பிறகு முழுவதற்கும் உம்மையே ஆட்சியாளராக்குவார்கள். இந்த இரண்டில் எதுவும் உமக்குக் கசப்பையே தரும் என்பது பொருள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[3] வேறொரு பதிப்பில், "தகப்பன் பாட்டன் வழியாகக் கிடைத்திருந்த ராஜ்யத்தை நீர் சந்தேகத்துக்குள்ளாக்கிவிட்டீர். ஏனெனில், பார்த்தர்களால் ஜயிக்கப்பட்ட பூமி முழுமையும் நீரே அடைந்தீர். முன்பு கௌரவர்களின் ராஜ்யமும், கீர்த்தியும் பாண்டுவினாலேயே தேடப்பட்டன. தர்மத்தை அனுஷ்டிக்கின்றவர்களான பாண்டவர்களாலே மறுபடியும் அவ்விரண்டும் அதிகமாக்கப்பட்டன. இவ்வுலகில் ராஜ்யபோகத்தில் பேராசையுள்ளவரான உம்மாலே பிதாவைச் சேர்ந்த ராஜ்யத்திலிருந்து பாண்டவர்கள் விலகும்படி செய்யப்பட்டமையால், அவர்களுடைய அந்தக் காரியமானது உம்மை அடைந்து மிகவும் பயனற்றதாகிவிட்டது." என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "உமது மூதாதையரிடம் இருந்து நீரடைந்த அரசுரிமை இப்போது உமது கரங்களில் இருந்து நழுவப் போகிறது; அல்லது பிருதையின் மகன்களிடம் இருந்து அதை நீர் பெறுவீர் (பாண்டவர்கள் உமது மகன்களைக் கொன்று அவர்களிடம் இருந்து அதை நிச்சயம் பறிப்பார்கள்). குருக்களின் ஆட்சிப்பகுதிகளும், அவற்றின் புகழும் பாண்டுவால் அடையப்பட்டு, நன்னடத்தைக் கொண்ட பாண்டுவின் மகன்களால் புகழும், ஆட்சிப்பகுதிகளும் மேலும் பெருகின. உம்முடைய தொடர்பால் அவர்களது முயற்சிகளனைத்தும் கனியற்றவையாகின. மேலும், பேராசை கொண்ட உம்மால் அவர்களது பரம்பரை அரசுரிமையையும் இழந்தனர்" என்று இருக்கிறது.
இப்போதோ, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போர் தொடங்கிய பிறகு, உமது மகன்களின் பல்வேறு தவறுகளைச் சுட்டிக்காட்டி நீர் அவர்களை நிந்திக்கிறீர். இஃது உமக்குத் தகாது. போரிடும்போது, க்ஷத்திரியர்கள் தங்கள் உயிர்களைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. உண்மையில் அந்த க்ஷத்திரியர்களில் காளைகள், பார்த்தர்களின் வியூகத்தைத் துளைத்துப் போரிடுகின்றனர். உண்மையில், கிருஷ்ணன், அர்ஜுனன், சாத்யகி மற்றும் விருகோதரன் {பீமன்} ஆகியோரால் பாதுகாக்கப்படும் அந்தப் படையுடன் கௌரவர்களைத் தவிர வேறு யார் போரிடத் துணிவர்?
அர்ஜுனனைத் தங்கள் போர்வீரனாகவும், ஜனார்த்தனனை {கிருஷ்ணனைத்} தங்கள் ஆலோசகராகவும், சாத்யகி மற்றும் விருகோதரனை {பீமனைத்} தங்கள் பாதுகாவலர்களாகவும் கொண்டோரை, கௌரவர்களையும், அவர்களின் தலைமையில் பின்தொடர்வோரையும் தவிர வேறு எந்த மனித வில்லாளி எதிர்க்கத் துணிவான்? வீரத்தைக் கொண்டு, க்ஷத்திரியக் கடமைகளை நோற்கும் நட்பு மன்னர்களால் அடையத்தக்க அனைத்தையும், கௌரவர்கள் தரப்பில் உள்ள வீரர்களும் செய்கின்றனர். எனவே, குருக்கள் மற்றும் பாண்டவர்கள் ஆகிய அந்த மனிதர்களில் புலிகளுக்கு இடையில் நடந்த பயங்கரப் போரைக் குறித்த அனைத்தையும் இப்போது கேட்பீராக" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |