The inter-array formed by Drona! | Drona-Parva-Section-087 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 03)
பதிவின் சுருக்கம் : பதினான்காம் நாள் போர்த்தொடக்கம்; துரோணர் வியூகம் வகுத்துக் கொண்டிருந்தபோது இருந்த வீரர்களின் நிலை; வீரர்களும் ஜெயத்ரதனும் ஏற்க வேண்டிய நிலைகளை அவர்களுக்குச் சொன்ன துரோணர்; சகட, சக்கர, பத்ம மற்றும் சூசிமுக வியூகங்கள் கலந்த புது வியூகமொன்றை வகுத்த துரோணர்; அந்த வியூகத்தில் வீரர்கள் ஏற்றுக் கொண்ட நிலைகள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அந்த இரவு கடந்ததும், ஆயுதங்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான துரோணர், தன் படைப்பிரிவுகள் அனைத்தையும் போருக்கு அணிவகுக்கத் தொடங்கினார். அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சினத்துடன் கதறியவர்களும், ஒருவரையொருவர் கொல்ல விரும்பியவர்களுமான கோபக்கார வீரர்களின் பல்வேறு ஒலிகள் அங்கே கேட்கப்பட்டன. சிலர் தங்கள் விற்களை வளைத்தனர், சிலர் தங்கள் கரங்களை வில்லின் நாண்கயிறுகளில் தேய்த்தனர். அவர்களில் பலர் ஆழ்ந்த மூச்சுகளைவிட்டபடியே "அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்} எங்கே?" என்று கதறினர்.
சிலர் நன்கு கடினமாக்கப்பட்டவையும், வானத்தின் நிறத்தைக் கொண்டவையும், பெரும் கூர்மை கொண்டவையும் அழகிய பிடிகளுள்ளவையும், உறையிலிருந்து எடுக்கப்பட்டவையுமான வாள்களை உயர வீச (உயர வீசவும், அதை மீண்டும் பிடிக்கவும்) தொடங்கினர். போரை விரும்பிய துணிச்சல்மிக்க வீரர்கள் பலர், பயிற்சியால் அடையப்பட்ட திறனுடன், வாள்வீசுவோர் மற்றும் வில்லாளிகளின் படிமுறை வளர்ச்சியை அங்கே செயல்பாட்டில் காட்டினர். சிலர், மணிகள் நிறைந்தவையும், சந்தனக்குழம்பால் பூசப்பட்டவையும், தங்கம் மற்றும் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டவையுமான தங்கள் கதாயுதங்களைச் சுழற்றியபடியே பாண்டுவின் மகன்களைக் குறித்து விசாரித்தனர்.
செருக்கால் போதையுண்டவர்களும், பருத்த கரங்களைக் கொண்டவர்களுமான சிலர், இந்திரனைக் கௌரவிக்க உயர்த்தப்பட்ட கம்பங்களுக்கு ஒப்பான பரிகங்களால் (கொடிக்கம்பங்களின் காட்டைக் கொண்டு மறைப்பதைப் போல) ஆகாயத்தைத் தடுத்தனர். அழகிய மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவர்களும், போரை விரும்பியவர்களுமான பிறர், பல்வேறு ஆயுதங்களுடன், களத்தின் பல்வேறு பகுதிகளில் நின்றனர். அவர்கள், "அர்ஜுனன் எங்கே? அந்தக் கோவிந்தன் {கிருஷ்ணன்} எங்கே? செருக்குள்ள பீமன் எங்கே? அவர்களது கூட்டாளிகள் எங்கே?" என்றபடியே அவர்களைப் போருக்கு அழைத்தனர்.
அப்போது தன் சங்கை முழக்கி, தன் குதிரைகளை மிக விரைவாகத் தூண்டிய துரோணர் தன் தருப்புகளை அணிவகுத்தபடியே பெரும் வேகத்துடன் இங்குமங்கும் திரிந்தார். போரில் களிப்புற்ற அந்தப் படைப்பிரிவுகள் அனைத்தும் தங்கள் நிலைகளை ஏற்ற பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பரத்வாஜர் மகன் {துரோணர்} ஜெயத்ரதனிடம், "நீ, சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், அஸ்வத்தாமன், சல்லியன், விருஷசேனன், கிருபர் ஆகியோர், நூறாயிரம் {100,000} குதிரைகள், அறுபதாயிரம் {60,000} தேர்கள், மதங்கொண்ட பதினாலாயிரம் {14,000} யானைகள், கவசம் பூண்ட நூற்று இருபதாயிரம் {120,000} காலாட்படை வீரர்கள் ஆகியவற்றுடன் எனக்குப் பின்புறத்தில் இருபது மைல்கள் {ஆறு குரோசங்கள்} தொலைவில் உங்கள் நிலைகள் ஏற்பீர்களாக. அங்கே வாசவனின் {இந்திரனின்} தலைமையிலான தேவர்களாலும் கூட உன்னைத் தாக்க இயலாது, எனவே, பாண்டவர்களைக் குறித்து என்ன சொல்லப்பட வேண்டும். ஓ! சிந்துக்களின் ஆட்சியாளா {ஜெயத்ரதா}, ஆறுதலடைவாயாக", என்ற வார்த்தைகளைச் சொன்னார் {துரோணர்}.
சிந்துக்களின் ஆட்சியாளன் ஜெயத்ரதன், (துரோணரால்) இப்படிச் சொல்லப்பட்டதும் ஆறுதலை அடைந்தான். அவன் {ஜெயத்ரதன்}, பெரும் தேர்வீரர்களாலும், கவசம்பூண்டு, கையில் சுருக்குக் கயிறுகளைக் {பாசங்களைக்} கொண்டு மூர்க்கமாகப் போரிடத் தீர்மானித்திருந்த காலாட்படை வீரர்கள் பலராலும் சூழப்பட்டு, துரோணரால் சுட்டப்பட்ட பகுதிக்கு காந்தார வீரர்கள் பலருடன் சென்றான் [1]. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, சாமரங்களாலும், தங்க ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயத்ரதனின் குதிரைகள் அனைத்தும் நன்றாக இழுக்கும் திறன் கொண்டவையாகவும் இருந்தன. ஏழாயிரம் {7000} அத்தகு குதிரைகளும், சிந்து இனத்தில் மூவாயிரம் {3000} குதிரைகள் பிறவும் அவனுடன் இருந்தன.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "மனத்தேறுதலையடைந்த சிந்து தேசாதிபதியான ஜயத்ரதன், அந்த மகாரதர்களாலும், கவசமணிந்தவர்களும், சன்னதர்களும் ஈட்டியைக் கையில் பிடித்துக் குதிரையின் மேல் ஏறியிருக்கின்றவர்களுமான குதிரை வீரர்களாலும் சூழப்பட்டுக் காந்தாரர்களுடன் சேர்ந்து அவ்விடம் சென்றான்" என்றிருக்கிறது.
போரிட விரும்பிய உமது மகன் துர்மர்ஷணன், கவசம் பூண்டவையும், பெரும் அளவிலானவையும், கடும் செயல்கள் செய்யக்கூடியவையும், நன்கு பயிற்சி பெற்ற பாகர்களோடு கூடியதுமான மதங்கொண்ட ஆயிரத்து ஐநூறு யானைகளுடன் {1500} துருப்புகள் அனைத்துக்கும் முன்னிலையில் தன்னை நிறுத்திக் கொண்டான். உமது மற்ற மகன்களான துச்சாசனன் மற்றும் விகர்ணன் ஆகியோர் இருவரும், ஜெயத்ரதனின் நோக்கங்களைச் சாதிப்பதற்காக முன்னேறிச் செல்லும் படைகளுக்கு மத்தியில் தங்கள் நிலைகளைக் கொண்டனர்.
பரத்வாஜர் மகனால் {துரோணரால்}, {ஒரு} பகுதி சகடமாகவும், {ஒரு} பகுதி சக்கரமாகவும் அமைக்கப்பட்ட வியூகமானது, முழுமையாக நாற்பத்து எட்டு மைல்கள் நீளமும், அதன் பின்புறத்தின் இருபது மைல்கள் [2] அகலமும் கொண்டிருந்தது. அந்த வியூகத்தின் பின்புறத்தில் தாமரை வடிவித்தில் துளைக்கப்பட முடியாத மற்றொரு வியூகம் {பத்ம வியூகம்} அமைக்கப்படிருந்தது. அந்தத் தாமரைக்குள், சூசீ {ஊசி} என்று அழைக்கப்படும் மற்றுமொரு அடர்த்தியான {நெருக்கமான} வியூகம் அமைக்கப்பட்டிருந்தது. துரோணர், தன் வலிமைமிக்க வியூகத்தை இப்படி அமைத்த பிறகு, தனது நிலையை ஏற்றார்.
[2] வேறொரு பதிப்பில் இது, "பனிரெண்டு கவ்யூதி நீளமும், ஐந்து கவ்யூதி அகலமும் கொண்டது" எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு கவ்யூதி என்பது இரண்டு குரோசங்களைக் கொண்டதாகும். ஒரு குரோசம் என்பது இரண்டு மைல்கள் எனச் சொல்லப்படுகிறது. எனவே ஒரு கவ்யூதி நான்கு மைல்களைக் கொண்ட அளவாகும். நான்கு குரோசங்கள் சேர்ந்தது ஒரு யோஜனையாகும். மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே மைல்கணக்கிலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
அந்தச் சூசியின் {ஊசியின்} வாய்ப்பகுதியில் வலிமைமிக்க வில்லாளியான கிருதவர்மன் தன் நிலையை எடுத்துக் கொண்டான். கிருதவர்மனுக்கு அடுத்ததாக, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காம்போஜர்களின் ஆட்சியாளனும் {சுதக்ஷிணனும்}, ஜலசந்தனும் [3] நின்றனர். இவர்களுக்கு அடுத்ததாகத் துரியோதனனும், கர்ணனும் நின்றனர். அவர்களுக்குப் பின்னால், அந்தச் சகட வியூகத்தில், அதன் {அந்த வியூகத்தின்} தலையைப் பாதுகாப்பதற்காகப் புறமுதுகிடாத வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் அதில் {அந்த வியூகத்தில்} இருந்தனர். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் அனைவருக்கும் பின்புறத்தில், ஒரு பெரும் படை சூழ மன்னன் ஜெயத்ரதன் அந்தச் சூசீ {ஊசி} வடிவ வியூகத்தின் ஒரு புறத்தில் நின்றான்.
[3] துரியோதனன் தம்பியருள் ஜலசந்தன் என்ற ஒருவன் பீஷ்ம பர்வம் பகுதி 64அ-ல் பீமனால் கொல்லப்பட்டான். இங்கே குறிப்பிடப்படும் இந்த ஜலசந்தன் வேறொருவனாக இருக்க வேண்டும். இவன் துரோண பர்வம் பகுதி 114ல் சாத்யகியால் கொல்லப்படுகிறான். இவன் பூரு குலத்தவன் என்றும், குரு வீரன் என்றும் துரோணபர்வம், கர்ண பர்வம் மற்றும் சல்லிய பர்வங்களில் நினைவுகூரப்படுகிறான்.
அந்தச் சகடத்தின் {சகட வியூகத்தின்} நுழைவாயிலில் பரத்வாஜரின் மகன் {துரோணர்} இருந்தார். துரோணருக்குப் பின்னால் அவரைப்பாதுகாக்கும் போஜர்களின் தலைவன் {கிருதவர்மன்} இருந்தான். வெண்கவசமும், சிறந்த தலைப்பாகையும், அகன்ற தோளும், வலிமைமிக்கக் கரங்களையும் கொண்ட துரோணர் தன் பெரிய வில்லை வளைத்தபடி சினத்தில் இருக்கும் அந்தகனைப் போல நின்றார். அழகிய கொடிமரம், சிவப்பு வேள்விப்பீடம், கருப்பு மான் தோல் ஆகியவற்றுடன் அருளப்பட்டிருந்த துரோணரின் தேரைக் கண்டு கௌரவர்கள் மகிழ்ச்சியால் நிறைந்தனர்.
துரோணரால் அமைக்கப்பட்ட அந்த வியூகம் கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பானதாக இருந்ததால், சித்தர்கள், சாரணர்கள் ஆகியோர் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அந்த வியூகமானது, தன் மலைகள், கடல்கள், கானகங்கள் மற்றும் பல பொருட்கள் நிறைந்த முழு உலகத்தையே விழுங்கிவிடும் என அனைத்து உயிர்களும் எண்ணின. தேர்கள், மனிதர்கள், குதிரைகள் மற்றும் யானைகள் நிறைந்ததும், அற்புதவடிவில் பயங்கரமாக முழங்குவதும், எதிரிகளின் இதயங்களைப் பிளக்கவல்லதும், சகட வடிவிலானதுமான [5] அந்த வலிமைமிக்க வியூகத்தைக் கண்ட மன்னன் துரியோதனன் மகிழ்ச்சியடையத் தொடங்கினான்" {என்றான் சஞ்சயன்}.
[5] வில்லி பாரதம் இவ்வியூகத்தை இப்படிச் சொல்கிறது.
அணிகளைந்தைந்தாலைவகைவியூகமாகியசேனையின்சிரத்து,மணிமுடிபுனைந்துவைத்தெனவலங்கல் வலம்புரிமார் பனைநிறுத்திப்,பணிவுறுமவுணர்பதாகினிவகுத்தபார்க்கவனிவனெனப்பயில் போர்த்,துணிவுடன்பஃறோர்சூழ்வரச்சகடதுண்டத்துநின்றனன்றுரோணன்.
- வில்லி 13:42:7
பொருள்: சதுரங்கங்கள்கூடின தனது பெருஞ்சேனைத்தொகுதியைத் தனித்தனிஐந்தாகப்பிரித்து, அவற்றை ஐந்துவியூகமாக அமைத்து, அவற்றிற்கெல்லாம் ஒருமகுடம்வைத்தாற்போல அலங்காரமாயமையும்படி துரியோதனனைத் தலைமையாகநிறுத்தித் தான் அவ்வைந்து வியூகங்களுட் பிரதானமானதும் மற்றை நான்கையுந் தனக்குள்ளேகொண்ட மகாவியூகமான சகடவியூகத்தின் முன்னிடத்திலே நின்றனனென்பதாம். ஐந்துவியூகம் - சகடம், பதுமம், கர்ப்பம், சூசீ, கூடம் என்பன.
ஆங்கிலத்தில் | In English |