The fight of Arjuna! | Drona-Parva-Section-088 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 01)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனன் தரப்பிலும் கௌரவர் தரப்பிலும் நேர்ந்த சகுனங்கள்; அர்ஜுனனை எதிர்த்த துர்மர்ஷணன்; அர்ஜுனன் செய்த போர்; அச்சத்தால் ஓடிய கௌரவர்கள்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, குரு படைப்பிரிவுகள் (இப்படி) அணிவகுக்கப்பட்டுப் பெரும் ஆரவாரம் எழுந்த பிறகு; பேரிகைகளும், மிருதங்கங்களும் இசைக்கத்தொடங்கி, வீரர்களின் கூச்சலும், இசைக்கருவிகளின் இரைச்சலும் கேட்கத் தொடங்கிய பிறகு; சங்குகள் முழங்கி, மயிர்ச்சிலிர்ப்பை ஏற்படுத்தும் பயங்கர ஆரவாரம் எழுந்த பிறகு; போரிடுவதில் விருப்பமுள்ள பாரத வீரர்களால் போர்க்களம் மெதுவாக மறைக்கப்பட்ட பிறகு; ருத்ரம் என்று அழைக்கப்பட்ட காலம் தொடங்கிய பிறகு, அங்கே சவ்யசச்சின் {அர்ஜுனன்} தோன்றினான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பல்லாயிரக்கணக்கான காக்கைகளும் கருங்காக்கைகளும் அர்ஜுனனின் தேருக்கு முன்பாக விளையாடிக் கொண்டே சென்றன. போருக்கு நாம் செல்லும் போது பயங்கரமாகக் கதறும் பல்வேறு விலங்குகளும், அமங்கலமாகக் காட்சி தரும் நரிகளும் நம் வலப்பக்கத்திலிருந்து ஊளையிட்டன. ஆயிரக்கணக்கான எரிநட்சத்திரங்கள் பேரொலியுடன் விழுந்தன. அந்தப் பயங்கர நிகழ்வின் போது, மொத்த பூமியும் குலுங்கியது. போரின் தொடக்கத்தில் குந்தியின் மகன் {அர்ஜுனன்} வந்த போது, கூழாங்கற்கள் மற்றும் சரளைக் கற்கள் ஆகியவற்றை இறைத்தபடி, திசைகள் அனைத்திலும் இடியுடன் கூடிய வறண்ட காற்று வீசியது.
பிறகு, நகுலனின் மகன் சதானீகன், பிருஷதன் மகன் திருஷ்டத்யும்னன் ஆகிய பெரும் ஞானம் கொண்ட அந்த வீரர்கள் இருவரும், பாண்டவர்களின் பல்வேறு படைப்பிரிவுகளை அணிவகுத்தனர். அப்போது, நூறு தேர்கள், நூறு யானைகள், மூவாயிரம் வீரர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரர்கள் ஆகியோரோடு ஆயிரத்து ஐநூறு {1500} விற்களின் நீளம் அளவு கொண்ட நிலத்தை மறைத்துக் கொண்ட {தன் படைகளுக்கு எடுத்துக் கொண்ட} உமது மகன் துர்மர்ஷணன், துருப்புகள் அனைத்தின் முன்னணியில் நின்று கொண்டு, "எதிரிகளை எரிப்பவனும், போரில் தாங்கிக் கொள்ளபட முடியாத வீரனுமான அந்தக் காண்டீவதாரியை {அர்ஜுனனை}, பொங்கும் கடலைத் தடுக்கும் கரையைப் போலவே இன்று நான் தடுக்கப் போகிறேன். பாறைத்திரளை எதிர்க்கும் மற்றொரு பாறைத்திரளைப் போல, சினம் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்} என்னோடு மோதுவதை இன்று மக்கள் காணட்டும். போரை விரும்பும் தேர்வீரர்களே, நீங்கள் (சாட்சியாக) இருப்பீர்களாக. என் மதிப்பையும் புகழையும் மேம்படுத்தும் வகையில் ஒன்றாகத் சேர்ந்திருக்கும் பாண்டவர்கள் அனைவரையும் எதிர்த்து நான் தனி ஒருவனாகவே போரிடுவேன்" என்றான் {துர்மர்ஷணன்}. உயர் ஆன்மா கொண்ட உமது உன்னத மகனான அந்தப் பெரும் வில்லாளி {துர்மர்ஷணன்} இதைச் சொல்லிவிட்டு, பெரும் வில்லாளிகள் பலரால் சூழப்பட்டு அங்கேயே நின்றான்.
சினத்தால் தூண்டப்பட்டு நிவாதகவசர்களைக் கொன்றவனும், பலம் பெருகியவனும், எப்போதும் வெல்லும் ஜயனும், உண்மைக்கு அர்ப்பணிப்புள்ளவனும், தன் பெரும் சபதத்தை அடைய விரும்பியவனும், கவசம் பூண்டு வாள் தரித்தவனும், தங்கக் கீரடத்தை அணிந்தவனும், வெண்மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டவனும், வெள்ளுடை தரித்தவனும், அழகிய அங்கதங்களால் தோள்கள் அலங்கரிக்கப்பட்டவனும், காதுகளில் சிறந்த குண்டலங்களைக் கொண்டவனும், தன் முதன்மையான தேரில் ஏறியவனுமான நரன், நாராயணின் துணையுடன், சினங்கொண்ட அந்தகன் போலவோ, இடியுடன் கூடிய வாசவனை {இந்திரனைப்} போலவோ, காலத்தால் உந்தப்பட்டுத் தன் தண்டாயுதத்துடன் இருக்கும் தடுக்கப்பட முடியாத யமனைப் போலவோ, கோபமூட்டப்பட இயலாதவனும், திரிசூலம் தரித்தவனுமான மகாதேவனை {சிவனைப்} போலவோ, தன் சுருக்குக் கயிற்றுடன் {பாசத்துடன்} கூடிய வருணனைப் போலவோ, யுக முடிவின் போது, படைப்புகளை எரிக்க எழுந்த சுடர்மிக்க நெருப்பைப் போலவோ போரில் தன் காண்டீவத்தை அசைத்தபடி எழுஞாயிறை {உதயச் சூரியனைப்} போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட தனஞ்சயன் {அர்ஜுனன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அடர்த்தியான கணைமாரி எங்கு விழுமோ, அந்த இடமான தன் படைக்கு முன்னணியில் தன் தேரை நிறுத்தித் தன் சங்கை முழக்கினான் [1]. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, பார்த்தன் {தன் சங்கை} முழக்கியதும், கிருஷ்ணனும், பாஞ்சஜன்யம் என்றழைக்கப்படும் தன் முதன்மையான சங்கைப் பெரும்பலத்துடன் அச்சமற்றவகையில் முழக்கினான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே} அந்தச் சங்குகளின் முழக்கத்தினால், உமது படையைச் சேர்ந்த வீரர்கள் அனைவரும் உற்சாகத்தை இழந்து நடுங்கினர். அவ்வொலியின் முடிவில் அவர்களுக்கு மயிர்ச்சிலிர்ப்பு ஏற்பட்டது. இடியினொலியைக் கேட்டு அனைத்துயிர்களும் அச்சத்தால் ஒடுங்குவதைப் போலவே, அந்தச் சங்குகளின் ஓசையால் உமது வீரர்கள் அனைவரும் அச்சத்தை அடைந்தனர். விலங்குகள் அனைத்தும் மலமும், சிறுநீரும் கழித்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த (இரு) சங்குகளின் முழக்கத்தால் கவலையில் நிறைந்த உமது மொத்தப் படையும், அதன் விலங்குகளுடன் சேர்த்துத் தங்கள் பலத்தை இழந்தன. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்களில் சிலர் பயத்தால் தங்கள் புலன்களை இழந்தனர் {மயக்கமுற்றனர்}.
[1] வேறொரு பதிப்பில் இவ்வரி, "பிரதாபசாலியான அந்த அர்ஜுனன் முன்னணிக்கெதிரில் எய்த அம்பு போய் விழுந்தூரத்துக்கு ஒன்றரை மடங்கு தூரத்திலேயே ரதத்தை நிறுத்திச் சங்கத்தை ஊதினான்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ கங்குலியில் உள்ளதைப் போலவே இருக்கிறது.
அர்ஜுனனின் கொடியில் இருந்த குரங்கு {அனுமன்} தன் வாயை அகல விரித்து, அதனுடன் {அந்தக் கொடியுடன்} கூடிய பிற உயிரினங்களுடன் பயங்கர ஒலியை உண்டாக்கி உமது துருப்புகளை அச்சுறுத்தியது {அச்சுறுத்தினான்}. பிறகு, உமது வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக மீண்டும் சங்குகள், கொம்புகள், கைத்தாளங்கள் மற்றும் அனகங்கள் ஆகியன முழக்கப்பட்டன. (பிற) இசைக்கருவிகளின் பல்வேறு ஒலிகள், வீரர்களின் கூச்சல்கள், அவர்களின் தோள்தட்டல்கள், (தங்கள் எதிரிகளைச்) சவால் விட்டு அழைத்த பெரும் தேர்வீரர்களால் செய்யப்பட்ட சிங்க முழக்கங்கள் ஆகியவற்றோடு அவ்வொலிகளும் கலந்தது.
மருண்டோரின் அச்சத்தை அதிகரிக்கும் அந்தப் பயங்கர ஆரவாரம் எழுந்த போது, மகிழ்ச்சியால் நிறைந்த அந்தப் பகாசனன் {இந்திரனின்} மகன் {அர்ஜுனன்}, தாசார்ஹ குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்} இவ்வார்த்தைகளைச் சொன்னான். அர்ஜுனன், "ஓ! ரிஷிகேசா {கிருஷ்ணா}, துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைச் செலுத்துவாயாக. அந்த யானைப்படையினூடாகப் பிளந்து பகைவரின் படைக்குள் நான் ஊடுருவப் போகிறேன்" என்றான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன், துர்மர்ஷணன் இருக்கும் இடத்திற்குக் குதிரைகளைத் தூண்டினான். தேர்கள், யானைகள் மற்றும் மனிதர்களுக்குப் பேரழிவைத் தந்ததும், ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் தொடங்கியதுமான அந்த மோதல் கடுமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அப்போது, பொழியும் மேகத்திற்கு ஒப்பான பார்த்தன் {அர்ஜுனன்}, மலைச்சாரலில் மழையைப் பொழியும் மேகங்களின் திரளைப் போலக் கணைகளின் மாரியால் தன் எதிரிகளை மறைத்தான். பகைவரின் தேர்வீரர்களும், பெரும் கரநளினத்தை வெளிப்படுத்தி, கணைகளின் மேகங்களால் கிருஷ்ணன் மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரையும் விரைவாக மறைத்தனர்.
அப்போது தன் எதிரிகளால் போரில் இப்படி எதிர்க்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான பார்த்தன் {அர்ஜுனன்} கோபத்தால் நிறைந்து, தன் கணைகளால் தேர்வீரர்களின் தலைகளை அவர்களது உடல்களில் இருந்து வெட்டத் தொடங்கினான். மேல் உதடுகளால் கடிக்கப்பட்ட கீழுதடுகளுடனும், கோபத்தால் கலங்கிய கண்களுடனும் இருந்த முகங்களைக் கொண்டவையும், காதுகுண்டலங்கள் மற்றும் தலைப்பாகைகளால் அலங்கரிக்கப்பட்டவையுமாக அழகிய தலைகள் பூமியில் விரவிக் கிடந்தன. உண்மையில் அப்படிச் சிதறிக் கிடந்த வீரர்களின் தலைகளானவை, பறிக்கப்பட்டு, நசுக்கப்பட்டுக் களத்தில் விரவிக் கிடக்கும் தாமரைக் கூட்டத்தைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தன. குருதியின் நிறமேறி (களமெங்கும் அடர்த்தியாகக்) கிடந்த தங்கக் கவசங்கள், மின்னலுடன் கூடிய மேகங்களின் திரள்களைப் போலத் தெரிந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வெட்டப்பட்டுப் பூமியில் விழும் தலைகளின் ஒலி, உரிய காலத்தில் பழுத்து விழும் பனம்பழங்களுக்கு ஒப்பானதாக இருந்தது. தலையற்ற முண்டங்கள் சில கையில் வில்லுடனும், உறையில் இருந்து உருவி உயர்த்தப்பட்ட வாள்களுடன் {தலையற்ற முண்டங்கள்} சிலவும் தாக்குவதற்காக எழுந்தன. அர்ஜுனனின் சாதனைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களும், அவனை வீழ்த்த விரும்பியவர்களுமான அந்தத் துணிச்சல் மிக்க வீரர்கள், அர்ஜுனனால் எப்போது தங்கள் தலைகள் வெட்டப்பட்டன என்பதைத் தாங்கள் அறியாதிருந்தனர் [2].
[2] வேறொரு பதிப்பில், "ஒரு தலையில்லா முண்டமானது எழுந்திருந்து அம்புடன் கூடின வில்லை இழுத்து நாணொலி செய்து கொண்டு கிளம்பிற்று. மற்றோர் உடற்குறையானது கையினால் ஒரு கத்தியை உருவி ஓங்கிக் கொண்டு நின்றது. மற்றொரு கம்பந்தமானது வேறொருவனுடைய தலையை மயிர்களில் பிடித்துக் கொண்டு கூத்தாடியது. யுத்தத்தில் ஜயத்தை விரும்புகின்ற புருஷஸ்ரேஷ்டர்கள், அர்ஜுனனைப் பொறாதவர்களாகித் தலைகள் வீழ்ந்ததையும் தெரிந்து கொள்ளவில்லை" என்றிருக்கிறது.
குதிரைகளின் தலைகள், யானைகளின் துதிக்கைகள், துணிச்சல்மிக்க வீரர்களின் கைகள் மற்றும் கால்கள் ஆகியவற்றால் பூமி விரவி கிடந்தது. "இவனே பார்த்தன் {அர்ஜுனன்}", "பார்த்தன் எங்கே?", "இதோ பார்த்தன்!" என இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையின் வீரர்கள் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} குறித்த சிந்தனையில் மட்டுமே நிறைந்தனர். காலத்தால் புலன்களை இழந்த {மயக்கமடைந்த} அவர்கள், மொத்த உலகமும் பார்த்தனால் நிறைந்ததாகவே கருதினர். எனவே, அவர்களில் பலர் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், சிலர் தங்களையே தாக்கிக் கொண்டும் அழிந்தனர். துயரக் குரல் எழுப்பிய வீரர்கள் பலர், குருதியால் நனைந்து, தங்கள் புலன்களை இழந்து, பெரும் துன்பத்தால் தங்கள் நண்பர்களையும், சொந்தங்களையும் அழைத்தபடியே பூமியில் விழுந்து கிடந்தனர்.
பிண்டிபாலங்கள் {குறுங்கணைகள்}, வேல்கள், ஈட்டிகள், வாள்கள், போர்க்கோடரிகள், நிர்வியூகங்கள் {கூரான கழுமரம் போன்ற ஆயுதங்கள்}, கூன்வாள்கள், விற்கள், தோமரங்கள், கணைகள், கதாயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டவையும், கவசம்பூண்டு அங்கதங்கள் மற்றும் பிற ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும்பாம்புகளைப் போலத் தெரிந்தவையும், பெரும் கதாயுதங்களுக்கு ஒப்பானவையும், வலிமைமிக்க ஆயுதங்களால் (உடலில் இருந்து) வெட்டப்பட்டவையுமான கரங்கள், பெரும்பலத்துடன் அசைந்து, துடித்து, சினத்தில் குதிப்பதாகத் தெரிந்தது.
அந்தப் போரில் கோபம் நிறைந்து பார்த்தனை {அர்ஜுனனை} எதிர்த்துச் சென்றோர் ஒவ்வொருவரும், அந்த வீரனால் மரணத்துக்கு ஒப்பான சில கணைகளால் தங்கள் உடல் துளைக்கப்பட்டு அழிந்தனர். தன் தேர் சென்ற போது, தன் வில்லை வளைத்துக் கொண்டு அதில் ஆடுபவனைப் போலத் தெரிந்த அவனை {அர்ஜுனனைத்} தாக்குவதற்கான ஒரு சிறு வாய்ப்பையும் அங்கிருந்த யாராலும் கணிக்க முடியவில்லை. அவன் {அர்ஜுனன்} தன் கணைகளை எடுத்து, அவற்றை வில்லில் பொருத்தி, அவற்றை ஏவும் வேகம் அவனது எதிரிகள் அனைவரையும் ஆச்சரியத்தில் நிறைத்தது.
உண்மையில், பல்குனன் {அர்ஜுனன்}, தன் கணைகளால் யானைகள், யானைப் பாகர்கள், குதிரைகள், குதிரையோட்டிகள், தேர்வீரர்கள், தேரோட்டிகள் ஆகியோரைத் துளைத்தான். அவனது எதிரிகளில், அவன் எதிரில் நின்றவர்களையோ, போரில் போராடியவர்களையோ, சுழன்றவர்களையோ, எவரையும் அந்தப் பாண்டுவின் மகன் கொல்லாமல் விடவில்லை. அடர்த்தியான இருளை அழித்த படி ஆகாயத்தில் எழும் சூரியனைப் போலவே, அர்ஜுனனும் கங்க இறகுகளின் சிறகுகளைக் கொண்ட தன் கணைகளின் மூலம் அந்த யானைப்படையை அழித்தான். யானைகள் பிளக்கப்பட்டு அதில் விழுந்ததால், உமது துருப்புகள் நின்ற அந்தக் களமானது, பிரளயத்தின் போது பெரும் மலைகளால் விரவிக்கிடக்கும் பூமியைப் போலத் தெரிந்தது.
எப்படி நடுப்பகல் சூரியனை அனைத்து உயிரினங்களாலும் காண இயலாதோ, அப்படியே கோபத்தால் தூண்டப்பட்ட தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, போரில் தன் எதிரிகளால் காணப்பட முடியாதவனாக இருந்தான். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {திருதராஷ்டிரரே}, உமது மகனின் துருப்புகள் (தனஞ்சயனின் {அர்ஜுனனின்} கணைகளால்) பீடிக்கப்பட்டு, அச்சத்தால் சிதறி ஓடின. வலிமைமிக்கக் காற்றால் மேகங்களின் திரள்கள் பிளக்கப்பட்டு விரட்டப்படுவதைப் போலவே, அந்தப் படையும், பார்த்தனால் துளைக்கப்பட்டு முறியடிக்கப்பட்டது. அந்த வீரன் எதிரியைக் கொன்று கொண்டிருந்த போது, யாராலும் அவனைப் பார்க்க முடியவில்லை.
{சொற்கள் மற்றும் செயல்களாலான} உந்துதல்கள், தங்கள் விற்களின் நுனிகள், ஆழமான உறுமல்கள், உத்தரவால் ஊக்குவிப்பது, கசைகள், அவர்களது விலாக்களில் வெட்டுகள், பயமுறுத்தும் பேச்சு ஆகியவற்றால் தங்கள் வீரர்களைப் பெரும் வேகம் கொள்ளச் செய்த உமது மனிதர்கள், அஃதாவது உமது குதிரைப்படை, உமது தேர்வீரர்கள், மற்றும் உமது காலாட்படை வீரர்கள் ஆகியோர், அர்ஜுனனின் கணைகளால் தாக்கப்பட்டுக் களத்திலிருந்து தப்பி ஓடினர்.
(யானைகளில் சென்ற) சிலர், தங்கள் அங்குசங்களால் அந்தப் பெரும் விலங்குகளின் விலாப்புறங்களைத் தூண்டிய பிறரும், பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட இன்னும் பல வீரர்களும், ஓடுகையில் பார்த்தனையே {அர்ஜுனனையே} எதிர்த்துச் சென்றனர். உண்மையில் உமது வீரர்கள் அனைவரும் உற்சாகமற்று, சிந்தனை குழம்பியவர்களாகினர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |