Satyaki drunk kairata! | Drona-Parva-Section-111 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 27)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனின் வார்த்தைகளை ஏற்ற சாத்யகி; தான் கடக்க வேண்டிய தொலைவையும், வீரர்களையும், படைகளையும் யுதிஷ்டிரனுக்குச் சுட்டிக் காட்டியது; தனக்கு வேண்டிய ஆயுதங்கள் மற்றும் ஏற்பாடுகளை யுதிஷ்டிரனிடம் கேட்டது; நீராடி, மங்கலச் சடங்குகளைச் செய்து, கைராதகம் மற்றும் தேன் குடித்து ஸ்நாதக பிராமணர்களின் ஆசிகளைப் பெற்றுப் புறப்பட்ட சாத்யகி; சாத்யகியைப் பின்தொடர்ந்து சென்ற பீமன்; பீமனைத் தடுத்து யுதிஷ்டிரனின் பாதுகாப்புக்கு நிற்குமாறு சாத்யகி வேண்டியது; பீமன் திரும்பியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிநி குலத்துக் காளை {சாத்யகி}, மன்னனை {யுதிஷ்டிரனை} விட்டு தான் நீங்கிச் சென்றால் அர்ஜுனன் செய்யப்போகும் கண்டனத்திற்கு அஞ்சினான். எனினும், (யுதிஷ்டிரனுக்குக் கீழ்ப்படியாவிட்டால்) மக்கள் நிச்சயம் அதைக் கோழைத்தனமெனச் சுட்டிக்காட்டுவார்கள், என்பதைக் கண்ட அவன் {சாத்யகி}, தனக்குள்ளேயே, "அர்ஜுனரிடம் செல்வதற்கு நான் அஞ்சுகிறேன் என மக்கள் சொல்ல வேண்டாம்" என்று சொன்னான்.
இதைக் குறித்து மீண்டும் மீண்டும் சிந்தித்தவனும், போரில் வெல்லப்பட முடியாதவனும், மனிதர்களில் காளையுமான அந்தச் சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உமது பாதுகாப்பிற்கு இவ்வேற்பாடுகள் போதுமானது எனத் தாம் கருதினால், உமது உத்தரவை ஏற்று நான் பீபத்சுவிடம் {அர்ஜுனரிடம்} செல்வேன். ஓ! மன்னா, எனக்குப் பல்குனரை {அர்ஜுனரை} விட அன்புக்குரிய வேறு எவரும் இந்த மூன்று உலகத்தில் இல்லை என்பதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஓ! மதிப்பு அளிப்பவரே, {உமது} உத்தரவின் பேரில், நான் அவரது பாதையைத் தொடர்ந்து செல்வேன். உமக்காக என்னால் செய்யத்தகாதது என்று எதுவுமில்லை. ஓ! மனிதர்களில் சிறந்தவரே, என் ஆசானின் {அர்ஜுனரின்} கட்டளைகள் எனக்கு எப்போதும் கனமானதே.
ஆனால், ஓ! தலைவா {யுதிஷ்டிரரே}, உமது கட்டளைகளோ, எனக்கு அதைவிடக் கனமாதே {மேன்மையானதே}. உமது சகோதரர்களான [1] கிருஷ்ணரும், தனஞ்சயரும் {அர்ஜுனரும்}, உமக்கு ஏற்புடையதையே எப்போதும் செய்கின்றனர். ஓ! தலைவா, அர்ஜுனருக்காக உமது உத்தரவுகளை என் சிரம் மேல் கொண்டு, ஓ! மனிதர்களில் காளையே, ஊடுருவமுடியாத இந்தப் படையை நான் பிளந்து செல்வேன். கடலுக்குள் உலாவும் மீனைப் போல, துரோணரின் இந்தப் படைக்குள் கோபத்துடன் உலவும் நான், ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, கர்ணன் மற்றும் கிருபர் ஆகிய முதன்மையான தேர்வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, தன் துருப்புகளை நம்பிக்கொண்டு, பாண்டுவின் மகன் {அர்ஜுனர்} மீது கொண்ட அச்சத்துடன் ஜெயத்ரதன் எங்கே நிற்கிறானோ அங்கே நான் செல்வேன்.
[1] மைத்துனன் ஆனதால், கிருஷ்ணனும் யுதிஷ்டிரனுக்குச் சகோதரனைப் போன்றவனே.
ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இங்கிருந்து செல்லும் தொலைவு மூன்று யோஜனைகளாகும் [2]. பார்த்தர் {அர்ஜுனர்}, ஜெயத்ரதனைக் கொல்லத் தயாராக இருக்கும் அந்த இடத்தை நினைத்துப் பார்க்கிறேன். பார்த்தர் மூன்று யோஜனைகள் தொலைவில் இருந்தாலும், அவரது பாதையை நான் நெஞ்சுரத்துடன் தொடர்ந்து சென்று, ஜெயத்ரதன் கொல்லப்படும் வரை அவருடனேயே {அர்ஜுனருடனேயே} இருப்பேன். மூத்தவர்களின் கட்டளைகள் இல்லாமல் போரிடச் செல்பவன் எவன் இருக்கிறான்? மேலும் உம்மால் கட்டளையிடப்பட்டதைப் போலக் கட்டளையிடப்பட்டும், போரிடமால் இருக்க என்னைப் போன்ற ஒருவனால் எப்படி முடியும்?
[2] ஒரு யோஜனை என்பது 8 கி.மீ. அளவுக்கு இணையானது என்பது ஆர்யபட்டரின் குறிப்பு. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் 13 கி.மீக்கு இணையானது என்கிறார். The Ancient Geography of Indiaவில் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் {Alexander Cunningham) 13.2 கி.மீ. என்கிறார். ஒரு யோஜனை என்பது 1.6 கி.மீ. தான் என்று சிலர் வாதிடுகின்றனர். தகவல்: https://en.wikipedia.org/wiki/Yojana. ஆக இந்தத் தொலைவு 24 கி.மீ. - 40 கி.மீ. இருக்கலாம்.
ஓ! தலைவா, நான் எந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நான் அறிவேன். பெருங்கடலைப் போன்றதும், கலப்பைகள், ஈட்டிகள், கதாயுதங்கள், பராசங்கள், கேடயங்கள், வாள்கள், ரிஷ்டிகள், வேல்கள், முதன்மையான கணைகள் ஆகியவற்றால் நிறைந்த இந்தப் படை எனும் பெருங்கடலை நான் இன்று கலங்கடிப்பேன். இதோ நீர் காணும் இந்த யானைப்படை, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, அஞ்சனம் என்ற இனப்பெயரைக் கொண்டவையும், பெரும் ஆற்றலைக் கொண்டவையும், பெரும் எண்ணிக்கையிலான மிலேச்சர்களால் நடத்தப்படுபவையும் {மிலேச்ச பாகர்களைக் கொண்டவையும்}, தாக்குவதில் சிறந்தவையும், போரில் மகிழ்ச்சி கொள்பவையும், மேகங்களில் இருந்து பொழியும் மழையைப் போலத் தங்கள் மதநீரை பெருக்குபவையும், தங்கள் முதுகில் இருப்போரால் தூண்டப்பட்டாலும் எப்போதும் பின்வாங்காதவையுமான ஆயிரம் யானைகளைக் கொண்டதாகும். ஓ! மன்னா, கொல்லப்படாமல் இவற்றை வெல்ல முடியாது.
மேலும், இதோ நீர் காணும் ஆயிரக்கணக்கான தேர் வீரர்கள் அனைவரும், அரசப் பரம்பரையில் பிறந்தவர்களும், மகாரதர்களுமாவர். இவர்கள் ருக்மரதர்கள் [3] என்று அழைக்கப்படுகிறார்கள். ஓ! ஏகாதிபதி, ஆயுதங்களிலும், தேரில் இருந்து போரிடுவதிலும், யானைகளின் முதுகில் இருந்து போரிடுவதிலும் இவர்கள் சாதித்தவர்களாவர். ஆயுத அறிவியலில் மேன்மையான தேர்ச்சி பெற்ற இவர்கள், தங்கள் முஷ்டிகளால் போரிடுவதிலும் சாதித்தவர்களாவர். கதாயுதம் கொண்டு போரிடுவதில் திறம்பெற்ற இவர்கள், கைச்சண்டைக் கலையிலும் மேன்மையான தேர்ச்சி பெற்றவர்களாவர். மேலும் இவர்கள் கத்தியைக் கொண்டு தாக்குவதிலும், வாள் மற்றும் கேடயத்தோடு எதிரியின் மீது பாய்வதிலும் இணையான சாதுர்யம் கொண்டவர்களாவர்.
[3] தங்கத் தேர்களைக் கொண்டவர்கள் என்பது பொருள் எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
துணிச்சலும், கல்வியும் கொண்ட இவர்கள் பகைமையால் தூண்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஓ! மன்னா, ஒவ்வொரு நாளும் இவர்கள் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்களைப் போரில் வெல்கின்றனர். கர்ணனால் ஆணையிடப்படும் இவர்கள், துச்சாசனனுக்கு அர்ப்பணிப்புள்ளவர்களாக இருக்கின்றனர். வாசுதேவரே {கிருஷ்ணரே} கூட இவர்களைப் பெரும் தேர்வீரர்களென மெச்சுகிறார். எப்போதும் கர்ணனின் நன்மையை வேண்டும் இவர்கள், அவனுக்குக் {கர்ணனுக்குக்} கீழ்ப்படிந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஓ! மன்னா, கர்ணனின் உத்தரவின் பேரால், அர்ஜுனருடன் போரிடுவதில் இருந்து இவர்கள் திரும்பியிருப்பதால், களைப்பில்லாதவர்களாக, சிரமத்தை அடையாதவர்களாக, ஊடுருவ முடியாத கவசங்களைப் பூண்டு, வலுவான விற்களைத் தரித்துக் கொண்டு, துரியோதனனாலும் ஆணையிடப்பட்டு வந்திருக்கும் இந்தத் துணிச்சல்மிக்க வீரர்கள், நிச்சயம் எனக்காகவே காத்திருக்கிறார்கள். ஓ! கௌரவரே, உமது நன்மைக்காக இவர்களை நொறுக்கிய பிறகு, சவ்யசச்சினுடைய {அர்ஜுனருடைய} பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.
கவசம்பூண்டவையும், கிராதர்களால் செலுத்தப்படுபவையும், ஆபரணங்கள் பூண்டவையுமாக அதோ நீர் காணும் எழுநூறு {700} பிற யானைகளும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, முன்பொரு சமயம், தன் உயிரை விரும்பிய கிராதர்களின் மன்னனால் {சுமணனால்} [4], பல வேலைக்காரர்களையும் அவற்றின் வரிசையில் சேர்த்துச் சவ்யசச்சினிடம் {அர்ஜுனனிடம்} கொடுக்கப்பட்டவையாகும். ஓ! மன்னா, முன்னர் இவை உமது பணியில் ஈடுபட நியமிக்கப்படிருந்தன. உமக்கு எதிராக இவை இப்போது போரிடுவதால், காலம் கொண்டுவரும் ஏற்றத்தாழ்வுகளைக் காண்பீராக. போரில் வீழ்த்துவதற்குக் கடினமான கிராதர்களால் இந்த யானைகள் செலுத்தப்படுகின்றன. அக்னி குலத்தில் உதித்த இவர்கள் அனைவரும் யானைகளில் இருந்து போரிடுவதில் சாதித்தவர்களாவர். முன்னர் இவர்கள் அனைவரும் போரில் சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வெல்லப்பட்டவர்களுமாவர். இப்போது அவர்கள், துரியோதனனின் உத்தரவுகளின் பேரில் எனக்காகக் கவனமாகக் காத்திருக்கின்றனர். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, போரில் வீழ்த்தக் கடினமான இந்தக் கிராதர்களை என் கணைகளால் கொன்ற பிறகு, சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லும் நோக்கோடு உள்ள அர்ஜுனரின் பாதையை நான் பின்தொடர்ந்து செல்வேன்.
[4] சபாபர்வம் பகுதி 4ல் யுதிஷ்டிரனின் அவையில் வீற்றிருந்த கிராதர்களின் மன்னனாகச் சுமணன் என்பான் குறிப்பிடப்படுகிறான். அதற்கு முன்பு புளிந்தன் என்பவனும் குறிக்கப்படுகிறான். மேலும் சபாபர்வம் பகுதி 29ல் கிராதர்களில் ஏழு மன்னர்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
அஞ்சனம் [5] என்ற குலத்தில் உதித்தவையும், ஊடுருவ முடியாத தோலைக் கொண்டவையும், நன்கு பயிற்சியளிக்கப்பட்டவையும், அலங்கரிக்கப்பட்டவையும், வாயில் மத நீர் ஒழுகுபவையும், முழுதாகத் தங்கக்கவசத்தால் நன்கு அலங்கரிக்கப்பட்டவையும், ஐராவதத்திற்கே ஒப்பானவையுமான அந்தப் பெரும் யானைகள் (வேறு யானைகள்), போரில் பெரும் வல்லமைமிக்கவையாகும். வடக்கு மலைகளில் இருந்து வந்திருக்கும் இவை, உறுதியான அங்கங்களைக் கொண்டவர்களும், போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவர்களும், எஃகு கவசங்களை அணிந்தவர்களும், சீற்றமிக்கவர்களுமான கள்வர்களால் செலுத்தப்படுகின்றன. அங்கே அவர்களில், பசுவுக்குப் பிறந்தவர்களும், குரங்குக்குப் பிறந்தவர்களும், பல்வேறு பிற உயிரினங்களுக்குப் பிறந்தவர்களும், மனிதர்களுக்குப் பிறந்தவர்களும் இருக்கின்றனர். பாவம்நிறைந்தவர்களான மிலேச்சர்களாலான அந்தப் படைப்பிரிவு, புகையின் நிறத்தைக் கொண்டதாகத் தூரத்தில் தெரிகிறது.
[5] கங்குலியின் பதிப்பில் இவ்வினம் {sprung from the race of Arjuna} அர்ஜுனம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேறொரு பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும், இந்த யானைகளில் இனமும் அஞ்சனம் என்றே குறிக்கப்படுகிறது. ஒருவேளை கங்குலியின் பதிப்பில் தட்டச்சுப்பிழையாக ஏற்பட்டிருக்க வேண்டும்.
இவர்களையும், எண்ணிலடங்கா க்ஷத்திரியர்களையும், கிருபரையும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரையும், சிந்துக்களின் ஆட்சியாளனையும் {ஜெயத்ரதனையும்}, கர்ணனையும் அடைந்த அவன் {துரியோதனன்}, பாண்டவர்களை மிக எளிதாக நினைக்கிறான். விதியால் உந்தப்பட்ட அவன் {துரியோதனன்}, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவனாக {கிருதார்த்தனாகத்} தன்னைக் கருதிக் கொள்கிறான். எனினும், என்னால் பெயர் குறிப்பிட்ட இவர்கள் அனைவரும் இன்று எனது கணைகள் அடையும் தொலைவிலேயே இருப்பார்கள். ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, அவர்கள் மனோவேகம் கொண்டவர்களாகவே இருந்தாலும் என்னிடம் இருந்து அவர்கள் தப்ப மாட்டார்கள். பிறரின் ஆற்றலைச் சார்ந்தே இருக்கும் இளவரசனான அந்தத் துரியோதனனால் எப்போதும் மதிக்கப்படும் இந்த வீரர்கள், என் கணை மேகங்களால் பீடிக்கப்பட்டு அழிவைச் சந்திப்பார்கள்.
ஓ! மன்னா, தங்கக் கொடிமரங்களைக் கொண்டவர்களாக, தடுப்பதற்குக் கடினமானவர்களாக அதோ நீர் காணும் அந்தத் தேர்வீரர்கள் பிறர் காம்போஜர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்கள், துணிச்சல்மிக்கவர்களாகவும், சாதித்தவர்களாகவும், ஆயுதங்களின் அறிவியலில் உறுதியான அர்ப்பணிப்பு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் நன்மையை விரும்பும் அவர்கள் அனைவரும் ஒற்றுமையாகவும் உறுதியுடனும் இருக்கிறார்கள். ஓ! பாரதரே, முழுமையாக ஓர் அக்ஷௌஹிணி அளவுக்கு இருக்கும் அந்தக் கோபக்காரப் போர்வீரர்கள், குருவீரர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டு, எனக்காகவே கவனமாக நிற்கின்றனர் {காத்திருக்கின்றனர்}. ஓ! மன்னா, அவர்கள் தங்கள் கண்களை என்மேல் கொண்டு விழிப்புடனே இருக்கின்றனர். வைக்கோல் குவியலை அழிக்கும் நெருப்பைப் போலவே அவர்கள் அனைவரையும் நான் நிச்சயம் அழிப்பேன்.
எனவே, ஓ! மன்னா, தேர்களைத் தயார் செய்வோர், என் தேரில் உரிய இடங்களில் அம்பறாத்தூணிகளையும், தேவையான அனைத்தையும் வைப்பார்களாக. உண்மையில், இத்தகு பயங்கரப் போரில் பல்வேறு வகைகளிலான ஆயுதங்களை நிச்சயம் எடுத்துச் செல்ல வேண்டும். கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான காம்போஜர்களுடன் நான் மோதப் போவதால், படை அறிவியலின் பேராசிரியர்கள் அறிவுறுத்துவதை விட ஐந்து மடங்கு அளவுக்கு (தேவையான ஆயுதங்களால்) தேர் நிரப்பப்பட வேண்டும். போர்க்கலையின் பல்வேறு ஆயுதங்களைக் கொண்டவர்களும், கடும் நஞ்சுக்கு ஒப்பானவர்களும், தாக்குவதில் சாதித்தவர்களும், துரியோதனனால் எப்போதும் நன்கு நடத்தப்படுபவர்களும், துரியோதனனின் நன்மையையே நோக்கமாகக் கொண்டவர்களுமான கிராதர்களுடன் நான் மோத வேண்டும். சக்ரனின் {இந்திரனின்} ஆற்றலுக்கு நிகரான ஆற்றலைக் கொண்டவர்களும், நெருப்பைப் போன்ற கொடூரம் கொண்டவர்களும் சுடர்மிக்கக் காட்டுநெருப்பைப் போல அணைப்பதற்குக் கடினமானவர்களுமான சகர்களோடும் நான் மோத வேண்டும். உண்மையில், தடுப்பதற்குக் கடினமான பல போர்வீரர்களுடன் இந்தப் போரில் நான் மோத வேண்டும். இதனால், நல்ல இனத்தைச் சேர்ந்தவையும், மங்கலக் குறிகளைக் கொண்டவையும், நன்கு அறியப்பட்டவையுமான குதிரைகள், அவற்றின் தாகம் தணிக்கப்பட்டு, முறையாகச் சீரமைக்கப்பட்ட பிறகு என் தேரில் பூட்டப்பட வேண்டும்" என்றான் {சாத்யகி}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இதன் பிறகு யுதிஷ்டிரன், கணைகளாலும், பல்வேறு வகையான ஆயுதங்களாலும் நிறைந்த அம்பறாத்தூணிகளையும், உண்மையில், தேவையான அனைத்தையும், சாத்யகியின் தேரில் இடம்பெறச் செய்தான். பிறகு, நன்கு சேணம்பூட்டப்பட்ட அவனது சிறந்த குதிரைகள் நான்கையும், நுகத்தில் இருந்து விடுவித்த மனிதர்கள், தங்க நிறம் கொண்டவையும், நன்கு பயிற்சி அளிக்கப்பட்டவையும், பெரும் வேகம் கொண்டவையும், உற்சாகமானவையும், நன்கு அடிபணிபவையுமான அவ்விலங்குகளைக் {நீர்} குடிக்கவும், நடக்கவும், குளிக்கவும், உண்ணவும் செய்து, தங்க ஆரங்களால் அவற்றை அலங்கரித்து, அவற்றின் {உடல்களிலிருந்த} கணைகளைப் பிடுங்கி மீண்டும் அவனது தேரின் நுகத்தில் முறையாகப் பூட்டினர். அந்தத் தேரில் தங்கப் பிடரிமயிர்களைக் கொண்ட சிங்கம் பொறிக்கப்பட்ட ஒரு நெடிய கொடிமரம் நிறுவப்பட்டது. ஆயுதங்களின் அதிக எடையைத் தாங்கிக் கொண்டிருந்த அந்த வாகனத்தில் அந்தக் கொடிமரத்தைச் சுற்றி வெண்மேகங்களைப் போன்ற நிறத்தில் கொடிகளும் பொருத்தப்பட்டன. தங்க இழைகளால் அலங்கரிக்கப்பட்ட அந்தக் குதிரைகளை அந்தத் தேரின் நுகத்தில் பூட்டிய பிறகு, தேரோட்டியும், சாத்யகியின் அன்புக்குரிய {உயிர்} நண்பனுமான தாருகன் தம்பி {முகுந்தன்} [6] வந்து, வாசவனிடம் {இந்திரன்} தேர் தயாராக இருப்பதாகச் சொல்லவந்த மாதலி போலப் பின்னவனிடம் {சாத்யகியிடம்} தேர் தயாராக இருப்பதாகச் சொன்னான்.
[6] கிருஷ்ணனின் தேரோட்டியான தாருகனுக்கு முகுந்தன் என்ற ஒரு தம்பி உண்டு. தகவல்: http://www.jatland.com/home/Daruka
பிறகு நீராடி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, மங்கலச் சடங்குகள் அனைத்தையும் செய்த சாத்யகி, தனக்கு ஆசிகள் கூறிய ஸ்நாதகப் பிராமணர்கள் ஆயிரம்பேருக்கு தங்க நிஷ்கங்களைக் கொடுத்தான். அந்த ஆசிகளால் அருளப்பட்டவனும், அழகர்களில் முதன்மையானவனும், வழிபடத்தகுந்த வீரனுமான அந்தச் சாத்யகி, கைராதம் {கைராதகம்} [7] மற்றும் தேனைக் குடித்து, போதையால் சிவந்த கண்கள் உருளப் பிரகாசமாக ஒளிர்ந்தான். பிறகு, வெண்கலக் கண்ணாடியை [8] தொட்டு, பெரும் மகிழ்ச்சியால் நிறைந்து, தன் சக்தி இரட்டிப்படைந்தவனான அவன் {சாத்யகி} சுடர்மிக்க நெருப்பாகத் தெரிந்தான். தன் தோள்களில் வில்லையும் கணைகளையும் எடுத்துக் கொண்ட அந்த முதன்மையான தேர்வீரன் {சாத்யகி}, கவசம்பூண்டு, ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, மறுபிறப்பாளர்களைக் {பிராமணர்களைக்} கொண்டு நிவர்த்திச் சடங்குகளையும் செய்து கொண்டான். அழகான கன்னியர் அவன் {சாத்யகி} மீது பொரிகளையும் நறுமணப் பொருட்களையும், மலர் மாலைகளையும் பொழிந்து அவனைக் கௌரவித்தனர். பிறகு அந்த வீரன், தன் கரங்களைக் கூப்பி யுதிஷ்டிரனின் பாதங்களை வணங்கினான், பின்னவனும் {யுதிஷ்டிரனும்} அவனை உச்சி முகர்ந்தான். இந்த முறைமைகள் அனைத்தையும் செய்த அவன் {சாத்யகி} தன் முதன்மையான தேரில் ஏறினான்.
[7] வேறொரு பதிப்பில் இது கைராதக மது என்று குறிப்பிடப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இது Kailataka honey கைலாதகத் தேன் என்று சொல்லப்படுகிறது.[8] கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இது Brazen Mirror என்றிருக்கிறது. வேறொரு பதிப்பில் இது வீராகாம்ஸ்யம் என்றிருக்கிறது. காம்ஸ்யம் என்பது வெண்கலம் என்ற பொருளைத் தருவதால் நான் வெண்கலக் கண்ணாடி என்று மொழிபெயர்த்திருக்கிறேன். உண்மையில் இது முகம் பார்க்கும் கண்ணாடி போன்ற ஏதாவது வெண்கலப் பொருளாக இருந்திருக்க வேண்டும்.
அப்போது, உற்சாகமானவையும், வலுவானவையும், காற்றின் வேகத்தைக் கொண்டவையும், வெல்லப்பட முடியாதவையும், சிந்து இனத்தைச் சேர்ந்தவையுமான குதிரைகள், அவனை {சாத்யகியை} அந்த வெற்றித் தேரில் சுமந்து சென்றன. அதேபோலப் பீமசேனனும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனால் கௌரவிக்கப்பட்டு, அந்த ஏகாதிபதியை {யுதிஷ்டிரனை} மரியாதையாக வணங்கிய பிறகு சாத்யகியுடன் புறப்பட்டான். எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவ்விருவரும் உமது படைக்குள் ஊடுருவப் போகும் வேளையில், அவர்களது எதிரிகளான உமது துருப்புகள், துரோணரைத் தங்கள் தலைமையில் கொண்டு அசையாதிருந்தன.
அப்போது சாத்யகி, கவசம்பூண்டு தன்னைப் பின்தொடர்ந்து வரும் பீமனைக் கண்டு, அந்த வீரனை {பீமனை} வணங்கி, அவனிடம் இந்த இனிமையான வார்த்தைகளைப் பேசினான். உண்மையில், வீரச் சாத்யகி ஒவ்வொரு அங்கத்திலும் இன்பத்தால் நிறைந்து பீமனிடம், "ஓ! பீமரே, மன்னரை நீர் பாதுகாக்க வேண்டும். அனைத்தையும் விட இதுவே உமது மேலான கடமையாகும். காலம் வந்துவிட்ட படையான இதை {இந்த எதிரிப் படையை} நான் பிளந்து செல்லப் போகிறேன். இப்போதும், எப்போதும் மன்னரின் பாதுகாப்பே உமது மேலான கடமையாகும். ஓ! பீமரே, நீர் எனது ஆற்றலை அறிவீர், {எனவே} எனது நன்மையை விரும்பித் திரும்புவீராக" என்றான் {சாத்யகி}. சாத்யகி இப்படிச் சொன்னதைக் கேட்ட பீமன், "{அப்படியெனில்} உன் நோக்கத்தின் வெற்றிக்காக நீ செல்வாயாக. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {சாத்யகியே}, நான் மன்னரைப் பாதுகாப்பேன்" என்று மறுமொழி கூறினான். இப்படிச் சொல்லப்பட்ட அந்த மதுகுலத்தோன் {சாத்யகி}, பீமனிடம், "ஓ! பிருதையின் மகனே {பீமரே}, திரும்பிச் செல்வீராக. இப்படி என் தகுதிகளால் {புண்ணியங்களால்} வெல்லப்பட்ட நீர் இன்று என் விருப்பங்களுக்குக் கீழ்ப்படிவதால் எனது வெற்றி உறுதியானதாகும். உண்மையில், ஓ! பீமரே, இந்த மங்கலச் சகுனங்கள் அனைத்தும் என் வெற்றியை உறுதி செய்கின்றன. பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {அர்ஜுனரால்} சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} கொல்லப்பட்ட பிறகு நான் அற ஆன்மா கொண்ட மன்னர் யுதிஷ்டிரரைத் தழுவுவேன்" என்று பதில் கூறினான் {சாத்யகி}.
பீமனிடம் இவ்வார்த்தைகளைச் சொல்லி, அந்தச் சிறந்த போர்வீரனைத் தழுவி விடைபெற்றுக் கொண்ட அவன் {சாத்யகி}, மான்கூட்டத்தைக் காணும் ஒரு புலியைப் போல உமது துருப்புகளின் மேல் கண்களைச் செலுத்தினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது படையை இப்படிப் பார்த்த அவனைக் கண்ட உமது துருப்புகள் மீண்டும் மலைப்படைந்து, பயங்கரமாக நடுங்கத் தொடங்கின. பிறகு, ஓ! மன்னா, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனின் ஆணைக்கிணங்க அர்ஜுனனைக் காண விரும்பிய சாத்யகி, தீடீரென உமது துருப்புகளை எதிர்த்து மோதினான்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |