Satyaki defeated the Yavanas! | Drona-Parva-Section-118 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 34)
பதிவின் சுருக்கம் : அச்சமில்லாமல் முன்னேறுமாறு தேரோட்டியை அறிவுறுத்திய சாத்யகி; சாத்யகியின் பெருமைகளைச் சொன்ன தேரோட்டி; யவனர்களின் தோற்றம் பற்றிய குறிப்புகள்; யவனர்கள், காம்போஜர்கள் முதலியோரை வீழ்த்திய சாத்யகி...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "[1] விருஷ்ணி குலத்துவீரனும், பெரும் நுண்ணறிவு கொண்டவனுமான உயர் ஆன்ம சாத்யகி, சுதர்சனனைக் கொன்ற பிறகு மீண்டும் தன் தேரோட்டியிடம் {முகுந்தனிடம்}, "தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றால் நிறைந்ததும், கணைகள் மற்றும் ஈட்டிகளாலான அலைகளைக் கொண்டதும், வாள்கள், கத்திகளாலான மீன்களைக் கொண்டதும், கதாயுதங்களாலான முதலைகளைக் கொண்டதும், கணைகளின் 'விஸ்' ஒலிகளையும், பல்வேறு ஆயுதங்களின் மோதலையும் முழக்கமாகக் கொண்டதும், உயிரை அழிக்கக்கூடிய கடுமையான பெருங்கடலானதும், பல்வேறு இசைக்கருவிகளின் ஒலிகளால் எதிரொலிக்கப்படுவதும், வெற்றிவீரர்களுக்கு இனிமையற்றதும் தாங்க முடியாததுமான தீண்டலைக் கொடுப்பதும், ஜலசந்தனின் படையைச் சேர்ந்த கடுமையான மனித ஊனுண்ணிகளால் [2] பாதுகாக்கப்பட்ட வரம்புகளைக் கொண்டதும், கிட்டத்தட்ட கடக்க முடியாத பெருங்கடலுமான துரோணரின் படைப்பிரிவையே கடந்த பிறகு, ஆழமற்ற நீரைக் கொண்ட சிறு ஓடையைப் போல வியூகத்தில் எஞ்சியிருக்கும் பகுதியைக் கடப்பது எளிதானது என்றே நான் நினைக்கிறேன்.
[1] மன்மதநாததத்தரின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போலவே இந்தப் பகுதி தொடங்கினாலும், வேறொரு பதிப்பில் இதற்கு முன்பே நிறைய விபரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவை பின்வருமாறு: "ஓ மன்னா, உண்மையான வீரமுள்ளவனும், உயர் ஆன்மாவுமான அந்தச் சாத்யகி போரில் கிருதவர்மனையும், பாரத்வாஜரையும் {துரோணரையும்}, சூரனும், நன்கு போர் புரிபவனுமான துரியோதனனையும் வென்று, ஜலசந்தனையும், சூரசேனனென்கிற {சுதர்சனனாக இருக்க வேண்டும்} மன்னனையும் போரில் கொன்று, பலவகைப்பட்ட மிலேச்சர்களையும், காசி இளவரசனையும், நிஷாதர்களையும், தங்கணர்களையும், கலிங்கர்களையும், மகதர்களையும், கேகயர்களையும், சூரசேனர்களையும், மலைநாட்டு வீரர்களையும், காம்போஜர்களையும், யவனர்களையும், வசாதிகளையும், சிபிக்களையும், கோசலர்களையும் மற்ற வீரர்களையும் போரில் கொன்றபடியே போர்க்களத்தில் சென்றான். ஓ மன்னா, அந்தச் சாத்யகி மயிர்களாகிற பாசிக்கொத்துக்களும், புல்தரைகளும் உள்ளதும், சக்திகளாகிற முதலைகளால் நான்கு பக்கங்களிலும் சூழப்பட்டதும், குடைகளாகிய அன்னப்பறவைகளைக் கொண்டதும், கோரமாயிருப்பதும், பயந்தவர்களால் எப்போதும் தாண்டமுடியாததும், வீரமக்களிடம் பெருகுவதுமான ரத்தவெள்ளமயமான நதியை உண்டாக்கி மகிழ்ச்சியாக மீண்டும் சாரதியை நோக்கி...'' என்று இருக்கிறது. இதற்குப் பின்னர்க் கிட்டத்தட்ட கங்குலியின் பதிப்பில் வருவதைப் போலவே தொடர்கிறது.[2] வேறொரு பதிப்பில் இது சற்றே மாறுபடுகிறது. அது பின்வருமாறு: "இந்தப் போர்க்களத்தில் ராட்சசர்கள் போன்ற ஜலசந்தனுடைய படையிலுள்ளவர்களால் சூழப்பட்ட இந்தத் துரோணச் சேனையைத் தவிர மிச்சமிருக்கிற மற்ற சேனையைத் தாண்டத்தக்கதும் ஸ்வல்பஜலம் உள்ளதுமான சிற்றாற்றைப் போல எண்ணுகிறேன்" என்றிருக்கிறது.
எனவே, அச்சமில்லாமல் குதிரைகளைச் செலுத்துவாயாக. நான் சவ்யசச்சினுக்கு {அர்ஜுனருக்கு} மிக அருகில் இருப்பதாகவே நினைக்கிறேன். வெல்லப்பட முடியாத துரோணரையும், அவரைப் பின்தொடர்பவர்களையும், போர்வீரர்களில் முதன்மையான அந்த ஹிருதிகன் மகனையும் {கிருதவர்மனையும்} வென்ற பிறகு தனஞ்சயரிடம் {அர்ஜுனரிடம்} இருந்து நான் தொலைவில் இருக்க முடியாது என்றே நான் நினைக்கிறேன். எண்ணற்ற எதிரிகளை என் எதிரில் கண்டாலும் என் இதயத்திற்கு அச்சமேற்படுவதில்லை. எனக்கு இவர்கள் சுடர்மிகும் காட்டுத்தீயில் உள்ள வைக்கோல், அல்லது புற்குவியலைப் போன்றவர்களே.
பாண்டவர்களில் முதன்மையான அந்தக் கிரீடம் தரித்தவர் (அர்ஜுனர்) சென்ற பாதையானது, பெரும் எண்ணிக்கையிலான காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்வீரர்கள், யானைகள் ஆகியன கொல்லப்பட்டு கிடப்பதால் சமமற்றிருப்பதைக் காண்பாயாக. அந்த உயர் ஆன்மப் போர்வீரரால் {அர்ஜுனரால்} முறியடிக்கப்பட்ட கௌரவப் படையானது ஓடுவதைக் காண்பாயாக. ஓ! தேரோட்டியே, புறமுதுக்கிட்டோடும் தேர்கள், யானைகள் மற்றும் குதிரைகளால் எழுப்பப்படும் கரும்பழுப்புப் புழுதியைக் காண்பாயாக. கிருஷ்ணரைத் தன் தேரோட்டியாகக் கொண்டவரும், வெண்குதிரைகளைக் கொண்டவருமான அர்ஜுனர் எனக்கு மிக அருகில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன். அளவற்ற சக்தியைக் கொண்டதும், புகழ்பெற்றதுமான காண்டீவத்தின் நாணொலி கேட்கப்படுவதை உற்றுக் கேட்பாயாக. என் பார்வையில் தோன்றும் சகுனங்களின் தன்மைகளால், சூரியன் மறைவதற்குள் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} அர்ஜுனர் கொல்வார் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
எங்கே பகைவர்களின் படையணிகள் இருக்கின்றனவோ, எங்கே துரியோதனனைத் தலைவனாகக் கொண்டவர்களும், தங்கள் கரங்களில் தோலுறைக் கவசம் பூண்டவர்களும் இருக்கின்றனரோ, எங்கே, கவசம் பூண்டவர்களும், குரூரமான செயல்களைச் செய்பவர்களும், போரில் வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான காம்போஜர்களும், கணைகளையும், விற்களையும், தரித்துத் தாக்குவதில் திறன்வாய்ந்தவர்களான யவனர்களும், சகர்களும், தரதர்களும், பர்ப்பரர்களும், தாம்ரலிப்தர்கர்களும், பற்பல ஆயுதங்களைக் கையில் கொண்ட பல மிலேச்சர்களும் இருக்கின்றனரோ அங்கே, (மீண்டும் சொல்கிறேன்) எங்கே துரியோதனனைத் தலைவனாகக் கொண்டவர்களும், தங்கள் கரங்களில் தோலுறைக் கவசம் பூண்டவர்களும் என்னுடன் போரிடும் விருப்பத்தால் தூண்டப்பட்டு என்னை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றனரோ அங்கே {அவ்விடத்திற்கு} குதிரைகளின் வலிமையைக் குன்றச் செய்யாதபடிக்கு மெதுவாக அவற்றை {குதிரைகளைத்} தூண்டுவாயாக. ஓ! சூதா, தேர்கள், யானைகள், குதிரைகள், காலாட்படை வீரர்கள் ஆகியோரில் உள்ள இந்தப் போராளிகள் அனைவரையும் நான் போரில் கொன்றதும், இந்தக் கடுங்காட்டை ஏற்கனவே கடந்துவிட்டதாகக் கருதுவாயாக" என்றான் {சாத்யகி}.
இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி {முகுந்தன்}, "ஓ! விருஷ்ணி குலத்தோனே {சாத்யகியே}, ஓ! கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனே {சாத்யகியே}, நான் அச்சமேதும் கொள்ளவில்லை. நீ கடுங்கோபத்தைக் கொண்ட ஜமதக்னியின் மகனையோ {பரசுராமரையோ}, தேர்வீரர்களில் முதன்மையான துரோணரையோ, மத்ரர்களின் ஆட்சியாளனையோ {சல்லியனையோ} உன்னெதிரில் கொண்டிருந்தாலும், ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, நான் உனது பாதுகாப்பு நிழலின் கீழ் இருக்கும்வரை என் இதயத்துக்குள் அச்சம் நுழையாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {சாத்யகி}, கவசம் பூண்டவர்களும், குரூரமான செயல்களைச் செய்பவர்களும், போரில் வீழ்த்துவதற்குக் கடினமானவர்களுமான காம்போஜர்களும், கணைகளையும், விற்களையும், தரித்துத் தாக்குவதில் திறன்வாய்ந்தவர்களான யவனர்களும், சகர்களும், தரதர்களும், பர்ப்பரர்களும், தாம்ரலிப்தர்கர்களும், பற்பல ஆயுதங்களைக் கையில் கொண்ட பல மிலேச்சர்களும் உன்னால் ஏற்கனவே வீழ்த்தப்பட்டுவிட்டனர். எந்தப் போரிலும் இதற்கு முன்னர் நான் ஒருபோதும் அச்சத்தை உணர்ந்ததில்லை. எனவே, ஓ! பெரும் துணிவு கொண்டவனே, துயர்மிகுந்த இப்பிணக்கில் [3] நான் ஏன் அச்சமெதையும் அடையப் போகிறேன்? நீண்ட {வாழ்} நாட்களால் அருளப்பட்டவனே {சாத்யகி}, நான் உன்னைத் தனஞ்சயன் {அர்ஜுனன்} இருக்குமிடத்திற்கு எவ்வழியில் அழைத்துச் செல்ல வேண்டும்? ஓ! விருஷ்ணி குலத்தோனே, யாவரின் மேல் நீ கோபம் கொண்டிருக்கிறாய்? (எதிரியை எதிர்த்து) உனது ஆற்றலை வெளிப்படுத்துபவனும், யுகத்தின் முடிவில் தோன்றும் அந்தகனுக்கு ஒப்பான ஆற்றலைக் கொண்டவனுமான உன்னைக் கண்டு இந்தப்போரில் இருந்து ஓடப்போகிறவர்கள் யாவர்? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, மன்னன் வைவஸ்வதன் இன்று யாவரை நினைக்கிறான்?" என்று கேட்டான் {தேரோட்டி முகுந்தன்}.
[3] வேறொரு பதிப்பில், "அவ்வாறிருக்க, பசுவின் குளம்படி போன்ற இந்தப் போரை அடைந்து நான் எப்படிப் பயப்படுவேன்?" என்றிருக்கிறது.
சாத்யகி {தேரோட்டி முகுந்தனிடம்}, "தானவர்களை அழிக்கும் வாசவனை {இந்திரனைப்} போல, நான் சிரங்கள் மழிக்கப்பட்ட {மொட்டைத் தலையர்களான} இந்தப் போர்வீரர்களைக் கொல்வேன். இந்தக் காம்போஜர்களைக் கொல்வதால் நான் எனது உறுதிமொழியை நிறைவேற்றுவேன். அங்கே {யவனர்களிடமும், காம்போஜர்களிடமும்} என்னை அழைத்துச் செல்வாயாக. இவர்களுக்கு மத்தியில் ஒரு பேரழிவை உண்டாக்கிவிட்டு, இன்று நான் பாண்டுவின் அன்பு மகனிடம் {அர்ஜுனரிடம்} செல்வேன். மழிக்கப்பட்ட சிரங்களைக் கொண்ட {மொட்டையர்களான} இந்த மிலேச்சர்களின் படைப்பிரிவை முற்றாக அழித்து, மொத்த கௌரவப்படையையும் நான் இன்று பெரும் துன்பத்தில் ஆழ்த்தும்போது, சுயோதனனைத் {துரியோதனனைத்} தங்கள் தலைமையில் கொண்ட கௌரவர்கள் எனது ஆற்றலை காண்பார்கள். போரில் என்னால் சிதைக்கப்பட்டு, பிளக்கப்படும் கௌரவப்படையின் உரத்த ஓலங்களைக் கேட்டு சுயோதனன் {துரியோதனன்} இன்று வருந்துவான். எனது ஆசானும், வெண்குதிரைகளைக் கொண்டவருமான உயர் ஆன்ம பாண்டவரிடம் {அர்ஜுனரிடம்}, அவரிடமிருந்து நான் அடைந்த ஆயுதத் திறனை இன்று காட்டுவேன். என் கணைகளால் இன்று கொல்லப்படும் ஆயிரக்கணக்கான முதன்மையான போர்வீரர்களைக் கண்டு மன்னன் துரியோதனன் பெரும் துயரில் மூழ்குவான்.
என் எதிரிகளின் மீது கணைகளை ஏவுவதற்காக நாணை நான் இழுக்கும்போது, என் கரங்களில் நெருப்புக்கோளத்திற்கு {கொள்ளிவட்டத்திற்கு} ஒப்பான வில்லைக் கௌரவர்கள் இன்று காண்பார்கள். கோபத்துடன் கூடிய நான், முதன்மையான குரு வீரர்களைக் கொல்லும்போது, சுயோதனன் இரண்டு அர்ஜுனர்களை இன்று காண்பான். இன்றைய பெரும்போரில் என்னால் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கண்டு, மன்னன் துரியோதனன் துயரால் நிறையப் போகிறான். இன்று ஆயிரக்கணக்கான மன்னர்களைக் கொன்று, உயர் ஆன்மாக்களான பாண்டுவின் அரச மகன்கள் {பாண்டவர்கள்} மீது கொண்ட என் அன்பையும், அர்ப்பணிப்பையும் {பக்தியையும்} நான் காட்டப் போகிறேன். எனது வலிமை, சக்தி, (பாண்டவர்களிடம்) நான் கொண்ட நன்றியுணர்வு ஆகியவற்றின் அளவை இன்று கௌரவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்றான் {சாத்யகி}.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, இனிய நடையையும், சந்திரனின் நிறத்தையும் கொண்ட அந்த நன்கு பழக்கப்படுத்தப்பட்ட குதிரைகளை அவற்றின் உச்சபட்ச வேகத்திற்குத் தூண்டினான். காற்று, அல்லது மனத்தின் வேகத்தைக் கொண்ட அந்தச் சிறந்த விலங்குகள் வானத்தையே விழுங்கிவிடுவதைப் போல அந்த யவனர்கள் இருந்த இடத்திற்கு யுயுதானனை {சாத்யகியைச்} சுமந்து சென்றன. பெரும் எண்ணிக்கையிலானவர்களும், கரநளினம் கொண்டவர்களுமான யவனர்கள், புறமுதுகிடாதவனான சாத்யகியை அணுகி கணைமாரியால் அவனை மறைத்தனர். எனினும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, விரைவாகச் சென்ற சாத்யகி, யவனர்களின் அந்தக் கணைகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தையும் தன் நேரான கணைகளால் வெட்டினான்.
பிறகு கோபத்தால் தூண்டப்பட்ட யுயுதானன் {சாத்யகி}, பெருங்கூர்மையும், தங்கச் சிறகுகளும், கழுகின் இறகுகளும் கொண்டவையுமான தன் நேரான கணைகளால் யவனர்களின் கரங்களையும், சிரங்களையும் அறுத்தான். மேலும் அக்கணைகளில் பல, இரும்பு மற்றும் பித்தளையால் ஆன அவர்களின் கவசங்களைத் துளைத்துச்சென்று பூமிக்குள் நுழைந்தன. அந்தப் போரில் துணிச்சல்மிக்கச் சாத்யகியால் தாக்கப்பட்ட மிலேச்சர்கள், உயிரை இழந்து நூற்றுக்கணக்கில் கீழே பூமியில் விழத் தொடங்கினர். தன் வில்லை முழுமையாக வளைத்த அந்த வீரன் {சாத்யகி}, தொடர்ச்சியான சரமாகத் தன் கணைகளை ஏவி, ஐந்து, ஆறு, ஏழு அல்லது எட்டு யவனர்களை ஒரே நேரத்தில் கொல்லத் தொடங்கினான். ஆயிரக்கணக்கான காம்போஜர்களும், சகர்களும், பர்ப்பரர்களும் அதே போலவே சாத்யகியால் கொல்லப்பட்டனர். உண்மையில் உமது துருப்புகளில் பேரழிவை உண்டாக்கிய அந்தச் சிநியின் பேரன் {சாத்யகி}, சதையாலும் குருதியாலும் சேறாக்கியபடி பூமியைக் கடக்கமுடியாததாகச் செய்தான்.
அந்தக் கள்வர்களின் தலைப்பாகைளும், நீண்ட தாடிகளின் விளைவால் இறகுகளற்ற பறவையைப் போலத் தெரிந்த அவர்களின் மழிக்கப்பட்ட தலைகளும், போர்க்களமெங்கும் விரவிக் கிடந்தன. உண்மையில், எங்கும் குருதிக் கறைகளைக் கொண்ட தலையற்ற உடல்களால் மறைக்கப்பட்டிருந்த அந்தப் போர்க்களமானது, தாமிர மேகங்களால் மறைக்கப்பட்ட ஆகாயத்தைப் போல அழகாகத் தெரிந்தது. இந்திரனின் வஜ்ரத்திற்கு ஒப்பான தீண்டலைக் கொண்ட அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} நேரான கணைகளால் கொல்லப்பட்ட அந்த யவனர்கள் பூமியின் பரப்பையே மறைத்தனர். சாத்வதனால் போரில் வெல்லப்பட்டவர்களும் கவசம் தரித்தவர்களுமான துருப்பினரில் எஞ்சியிருந்தோர் சிலர், தங்கள் உயிர்கள் பறிக்கப்படும் சமயத்தில் உற்சாகமற்றவர்களாகி, பிளந்து, சவுக்குகளாலும், சாட்டைகளாலும் தங்கள் குதிரைகளை உச்சபட்ச வேகத்தில் தூண்டி அச்சத்துடன் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வெல்லப்பட முடியாத காம்போஜப் படையையும், யவனர்களின் படையையும், சகர்களின் பெரும்படையையும் முறியடித்து உமது படைக்குள் ஊடுருவியவனும், மனிதர்களில் புலியும், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனுமான சாத்யகி, "{விரைந்து} செல்வாயாக" என்று சொல்லி தன் தேரோட்டியைத் தூண்டினான். வேறு எவராலும் இதற்கு முன்னர் அடையமுடியாத அவனது சாதனையை அந்தப் போரில் கண்ட சாரணர்களும், கந்தர்வர்களும் அவனை மிகவும் பாராட்டினர். உண்மையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சாரணர்களும், ஏன் உமது போர்வீரர்களே கூட அர்ஜுனனுக்கு உதவி செய்ய முன்னேறிச் செல்லும் யுயுதானனைக் (அவனது வீரத்தைக்) கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தனர்" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |