Bhima beheld Arjuna! | Drona-Parva-Section-127 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 43)
பதிவின் சுருக்கம் : துரோணரின் கணைமாரியைக் கலங்கடித்துக் கௌரவப் படையினரை அழித்த பீமன்; துரோணரின் தேரை வீசியெறிந்து உடைத்தது; கிருதவர்மனின் படையைக் கலங்கடித்துக் கடந்து சென்றது; போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சாத்யகியைக் கண்டது; அர்ஜுனன் போர்புரிந்து கொண்டிருப்பதைக் கண்ட பீமன் மாமுழக்கம் செய்தது; பீமன் மற்றும் அர்ஜுனனின் முழக்கங்களைக் கேட்டுச் செய்தியை உணர்ந்து கொண்ட யுதிஷ்டிரன் பீமனை மெச்சி சிந்தனையில் ஆழ்ந்து அந்த எண்ணங்களை வார்த்தைகளாக்கியது...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "பாண்டுவின் மகன் {பீமன்} அந்தத் தேர்ப்படையைக் கடந்ததும், அவனது வழியைத் தடுக்க விரும்பிய ஆசான் துரோணர், சிரித்துக் கொண்டே கணை மாரிகளால் அவனை {பீமனை} மறைத்தார். துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட அந்தக் கணைகளைக் குடித்து விடுபவனைப் போலத் தன் மாய சக்திகளால் மலைக்கச் செய்த பீமசேனன், தன் தம்பியரை (உமது மகன்களை) எதிர்த்து விரைந்தான். பிறகு, உமது மகன்களால் தூண்டப்பட்ட பெரும் வில்லாளிகளான மன்னர்கள் பலர் மூர்க்கமாக விரைந்து அவனை {பீமனைச்} சூழ்ந்து கொண்டனர்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களால் சூழப்பட்ட பீமன் சிரித்துக் கொண்டும், சிங்க முழக்கம் செய்து கொண்டும், படையணிகளை அழிக்கவல்ல ஒரு கடும் கதாயுதத்தை எடுத்து அவர்கள் மீது வீசினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்திரனால் வீசப்பட்ட இந்திரனின் வஜ்ரத்தை {இடியைப்} போலவே கடினமான பலத்தைக் கொண்ட அந்தக் கதாயுதமானது, போரில் உமது படைவீரர்களை நசுக்கியது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது பேரொலியால் மொத்த உலகையும் நிறைப்பதாகத் தெரிந்தது. காந்தியால் சுடர்விட்ட அந்தக் கடும் கதாயுதமானது உமது மகன்களை அச்சுறுத்தியது. மூர்க்கமாகச் செல்வதும், மின்னலின் கீற்றுகளைக் கொண்டதுமான அந்தக் கதாயுதம் தங்களை நோக்கி வருவதைக் கண்ட உமது வீரர்கள் பயங்கரமாகக் கதறியபடியே தப்பி ஓடினர். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தக் கடும் கதாயுதத்தின் பொறுத்துக் கொள்ள முடியாத ஒலியால் மனிதர்கள் பலர் தாங்கள் எங்கே நின்றனரோ அங்கேயே விழுந்தனர், தேர்வீரர்கள் பலரும் தங்கள் தேர்களில் இருந்து கீழே விழுந்தனர். கதாயுதம் தரித்த பீமசேனனால் கொல்லப்பட்ட உமது வீரர்கள், புலியால் தாக்கப்பட்ட மான்களைப் போல அச்சங்கொண்டு போரிடுவதில் இருந்து தப்பி ஓடினர்.
குந்தியின் மகன் {பீமன்}, வீரமிக்கத் தன் எதிரிகளைப் போரில் முறியடித்து, அழகிய இறகுகளைக் கொண்ட கருடனைப் போல அந்தப் படையை வேகமாகக் கடந்து சென்றான். தேர்ப்படைத் தலைவர்களின் தலைவனான அந்தப் பீமசேனன், இத்தகு பேரழிவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பரத்வாஜர் மகன் {துரோணர்} அவனை {பீமனை} நோக்கி விரைந்தார். துரோணர் தன் கணை மாரிகளால் பீமனைத் தடுத்து, பாண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் திடீரெனச் சிங்க முழக்கம் செய்தார். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரோணருக்கும், உயர் ஆன்ம பீமனுக்கும் இடையில் நடைபெற்ற போரானது உக்கிரமானதாகவும், பயங்கரமானதாகவும், பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த மோதலுக்கு ஒப்பானதாகவும் இருந்தது. துரோணரின் வில்லில் இருந்து ஏவப்பட்ட கூரிய கணைகளால், அந்தப் போரில் வீரமிக்கப் போர்வீரர்கள் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்பட்டனர்.
தன் தேரில் இருந்து கீழே குதித்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தன் கண்களை மூடிக் கொண்டு, துரோணரின் தேரை நோக்கிப் பெரும் வேகத்துடன் காலாளாகவே விரைந்தான். உண்மையில், ஒரு காளையானது கடும் மழைப்பொழிவை எளிதாகத் தாங்கிக் கொள்வதைப் போலவே அந்த மனிதர்களில் புலியான பீமனும், துரோணரின வில்லில் இருந்து வந்த அந்தக் கணை மழையைப் பொறுத்துக் கொண்டான் [1]. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் துரோணரால் தாக்கப்பட்ட அந்த வலிமைமிக்கப் பீமன், துரோணருடைய தேரின் ஏர்க்காலைப் பிடித்துப் பெரும் பலத்துடன் கீழே வீசி எறிந்தான். ஓ! மன்னா, போரில் துரோணர் இப்படிக் கீழே தூக்கி வீசப்பட்டாலும் மற்றொரு தேரில் விரைவாக ஏறிக் கொண்டு, அந்நேரத்தில் தன் தேரோட்டியைப் பெரும் வேகத்துடன் தன் குதிரைகளைத் தூண்டச்செய்து, வியூகத்தின் வாயிலை நோக்கிச் சென்றார். ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, பீமசேனனால் அடையப்பட்ட அந்தச் சாதனை மிக அற்புதமானதாகத் தெரிந்தது [2].
[1] வேறொரு பதிப்பில், "பலவானும், நரசிரேஷ்டனுமான பீமசேனன் தலையைத் தோளில் சாய்த்துக் கொண்டும், கைகளை ஸ்திரமாக மார்பில் வைத்துக் கொண்டும், மனம், காற்று, கருடன் இவைகளுடைய வேகத்தையடைந்து, காளையானது வர்ஷதாரையை விளையாட்டுடன் தாங்குவது போல அம்பு மழையை ஏற்றுக் கொண்டான்" என்றிருக்கிறது.[2] இதன் பிறகு வேறொரு பதிப்பில் இன்னும் விரிவாக இருக்கிறது. அது பின்வருமாறு, "அவ்வாறு வருகின்றவரும், உத்ஸாகத்தையிழந்தவருமான அந்தத் துரோணாசாரியரைப் பீமன் அப்பொழுது பார்த்து வேகத்தோடு மறுபடியும் சென்று தேரினுடைய ஏர்க்காலைப் பிடித்து மிக்கக் கோபத்துடன் அந்தப் பெரிய ரதத்தையும் எறிந்தான். இவ்வாறே பீமசேனனால் விளையாட்டாகவே எட்டு ரதங்கள் எறியப்பட்டன. அவன் திரும்பவும், திரும்ப வரும் ஒரு கண்ணிமைப்பொழுதுக்குள் தன் ரதத்தையடைந்தவனாகக் காணப்பட்டான். ஆச்சர்யத்தினால் மலர்ந்த கண்களையுடையவர்களான உம்முடைய யுத்த வீரர்களும் (அவனைப்) பார்த்தார்கள். அந்த க்ஷணத்தில் அந்தப் பீமசேனனுடைய சாரதியானவன் குதிரைகளை விரைவாக ஓட்டினான். அஃது ஆச்சரியமாயிருந்தது" என்றிருக்கிறது. கங்குலியிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் மேற்படி வர்ணனை இல்லை.
பிறகு, அந்த வலிமைமிக்கப் பீமன் தன் தேரில் ஏறிக் கொண்டு, உமது மகனின் படையை நோக்கி வேகமாக விரைந்தான். வரிசையான மரங்களை நசுக்கும் சூறாவளியைப் போலவே அவன் {பீமன்} போரில் க்ஷத்திரியர்களை நசுக்கினான். உண்மையில் பீமன், பொங்கும் கடலைத் தடுக்கும் மலையைப் போலவே பகைவரின் போர்வீரர்களைத் தடுத்தான். ஹிருதிகன் மகனால் {கிருதவர்மனால்} காக்கப்பட்ட போஜத் துருப்புகளிடம் வந்த பீமசேனன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதைப் பெரிதும் தரைமட்டமாக்கிவிட்டு அதைக் கடந்து சென்றான். பகைவரின் படைவீரர்களைத் தன் உள்ளங்கைகளின் தட்டொலிகளால் அச்சுறுத்திய பீமன், ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, காளைக்கூட்டத்தை வெல்லும் ஒரு புலியைப் போல அவர்கள் அனைவரையும் வென்றான். போஜப்படைப் பிரிவையும், காம்போஜர்களுடையவையையும், போரில் சாதித்தவர்களான எண்ணற்ற மிலேச்ச இனங்களையும் கடந்து சென்று, வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி போரில் ஈடுபடுவதைக் கண்ட அந்தக் குந்தியின் மகனான பீமசேனன், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனஞ்சயனைக் {அர்ஜுனனைக்} காணும் விருப்பத்தால் பெரும் வேகத்துடனும், தீர்மானத்துடனும் முன்னேறிச் சென்றான்.
அந்தப் போரில் உமது வீரர்கள் அனைவரையும் மீறிச் சென்ற அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான அர்ஜுனன் போரில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைக் கண்டான். மனிதர்களில் புலியான அந்த வீரப் பீமன், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்லத் தன் ஆற்றலை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அர்ஜுனனைக் கண்டு, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மழைக்காலங்களில் முழங்கும் மேகங்களைப்போல மாமுழக்கம் செய்தான். முழங்கிக் கொண்டிருந்த அந்தப் பீமசேனனின் பேரொலியானது, ஓ! குரு குலத்தவரே {திருதராஷ்டிரரே}, போருக்கு மத்தியில் இருந்த அர்ஜுனன் மற்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} ஆகிய இருவராலும் கேட்கப்பட்டது. வலிமைமிக்கப் பீமனின் அந்த முழக்கங்களை அடுத்தடுத்துக் கேட்ட அந்த வீரர்கள் இருவரும், விருகோதரனை {பீமனைக்} காணும் விருப்பத்தால் மீண்டும் மீண்டும் முழங்கினர். பிறகு, அர்ஜுனனும், மாதவனும் {கிருஷ்ணனும்}, முழங்கிக் கொண்டிருக்கும் இரு காளைகளைப் போலப் பெருமுழக்கம் செய்தபடியே போரில் திரிந்தனர்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமசேனனின் அம்முழக்கத்தையும், வில் தரித்த பல்குனனின் {அர்ஜுனனின்} முழக்கத்தையும் கேட்ட தர்மனின் மகனான யுதிஷ்டிரன், பெரும் மனநிறைவை அடைந்தான். பீமன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் இவ்வொலிகளைக் கேட்டு மன்னன் யுதிஷ்டிரன் தன் துயரத்தில் இருந்து விடுபட்டான். மேலும் அந்தத் தலைவனான யுதிஷ்டிரன், போரில் தனஞ்சயன் வெற்றியடைய மீண்டும் மீண்டும் வாழ்த்தினான். மூர்க்கமான பீமன் இப்படி முழங்கிக் கொண்டிருந்த போது, வலிய கரங்களைக் கொண்டவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனும், தர்மனின் மகனுமான யுதிஷ்டிரன், சிறிது நேரம் புன்னகைத்தபடியே சிந்தித்து, தன் இதயத்தில் எழுந்த எண்ணங்களுக்கு {பின்வரும்} இந்த வார்த்தைகளைக் கொடுத்தான், "ஓ! பீமா, நீ எனக்கு உண்மையாகவே செய்தியை அனுப்பிவிட்டாய். உனக்கு மூத்தவனின் {உன் அண்ணனின்} கட்டளைகளுக்கு உண்மையில் நீ கீழ்ப்படிருந்திருக்கிறாய். ஓ! பாண்டுவின் மகனே {பீமனே}, உன்னை எதிரியாகக் கொண்டோர் வெற்றியை அடையவே முடியாது.
இடது கையாலும் வில் ஏவவல்ல தனஞ்சயன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட வீரச் சாத்யகியும் நற்பேறாலேயே பாதுகாப்பாகவும், நலமாகவும் இருக்கிறான். வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் தனஞ்சயன் {அர்ஜுனன்} ஆகிய இருவரின் இந்த முழக்கங்களை நற்பேறாலேயே நான் கேட்கிறேன். போரில் சக்ரனையே {இந்திரனையே} வென்று, வேள்விக் காணிக்கைகளைத் தாங்கிச் செல்பவனை {அக்னியை} மனம் நிறையச் செய்தவனும், எதிரிகளைக் கொல்பவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே இந்தப் போரில் உயிருடன் இருக்கிறான். எவனுடைய கரங்களின் வலிமையால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எதிரிப் படைகளைக் கொல்பவனான அந்தப் பல்குனன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். ஒரே வில்லின் துணையைக் கொண்ட எவனால் தேவர்களாலும் வீழ்தப்பட முடியாத தானவர்களான நிவாதகவசர்கள் வெல்லப்பட்டனரோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். விராடனின் பசுக்களைப் பிடித்துச் செல்ல மத்ஸ்ய நகரத்தில் ஒன்று கூடிய கௌரவர்கள் அனைவரையும் எவன் வென்றோனோ அந்தப் பார்த்தன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். பதினாலாயிரம் {14000} காலகேயர்களைத் தன் கரங்களின் வலிமையால் எவன் கொன்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான். துரியோதனனுக்காகக் கந்தர்வர்களின் வலிமைமிக்க மன்னனை {சித்திரசேனனைத்} தன் ஆயுதங்களின் சக்தியால் எவன் வென்றானோ அந்தப் பார்த்தன் நற்பேறாலேயே உயிரோடிருக்கிறான். கிரீடத்தாலும், (தங்க) மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டவனும், பெரும் பலத்தைக் கொண்டவனும், (தன் தேரில் பூட்டப்பட்ட) வெண்குதிரைகளைக் கொண்டவனும், கிருஷ்ணனையே தன் தேரோட்டியாகக் கொண்டவனும், எப்போதும் எனது அன்புக்குரியவனுமான அந்தப் பல்குனன் {அர்ஜுனன்} நற்பேறாலேயே உயிருடன் இருக்கிறான்.
தன் மகனின் {அபிமன்யுவின்} மரணத்தால் துயரில் எரிபவனும், மிகக் கடினமான சாதனையைச் செய்து கொண்டிருப்பவனும், ஐயோ, செய்த சபதத்தால் ஜெயத்ரதனைக் கொல்ல எவன் இப்போதும் முயல்கிறானோ, அந்தத் தனஞ்சயன் {அர்ஜுனன்}, போரில் சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனைக்} கொல்வதில் வெல்வானா? வாசுதேவனால் {கிருஷ்ணனால்} பாதுகாக்கப்பட்டு, சூரியன் மறைவதற்குள் தன் சபதத்தை நிறைவேற்றப் போகும் அர்ஜுனனை நான் மீண்டும் காண்பேனா? துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ள சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்}, பல்குனனால் {அர்ஜுனனால்} கொல்லப்பட்டுத் தன் எதிரிகளை மகிழ்விப்பானா? போரில் சிந்துக்களின் ஆட்சியாளன் கொல்லப்படுவதைக் காணும் மன்னன் துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? போரில் பீமசேனனால் தன் தம்பிகள் கொல்லப்படுவதைக் காணும் தீய துரியோதனன் நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா? பெரும் போர் வீரர்கள் பிறர் பூமியின் பரப்பில் விழுந்து கிடப்பதைக் கண்டு தீய துரியோதனன் வருத்தத்தை அடைவானா? பீஷ்மர் ஒருவரின் தியாகத்தோடு நமது பகைமைகள் ஒழியாதா? (அவனிடமும், நம்மிடமும் இன்னும் மீந்து) எஞ்சியிருப்பவர்களைக் காப்பதற்காகச் சுயோதனன் {துரியோதனன்} நம்முடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொள்வானா?" {என்றான் யுதிஷ்டிரன்}. கருணையால் நிறைந்திருந்த மன்னன் யுதிஷ்டிரனின் மனதை இவ்வகையான பல்வேறு எண்ணங்களே கடந்து சென்றன. அதே வேளையில், (பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும்) இடையில் கடுஞ்சீற்றத்துடனும், உக்கிரமாகவும் போர் நடந்தது" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |