Satyaki killed Bhurisravas! | Drona-Parva-Section-142 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 58)
பதிவின் சுருக்கம் : நியாயமற்ற காரியத்தைச் செய்ததாக அர்ஜுனனைக் கடிந்து கொண்ட பூரிஸ்ரவஸ்; தன் செயல்பாட்டை நியாயப்படுத்திய அர்ஜுனன்; அர்ஜுனனின் நியாயத்தைக் கேட்டு அமைதியடைந்த பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு அருள் வழங்கிய கிருஷ்ணன்; பிராயோபவேசத்தில் அமர்ந்திருந்த பூரிஸ்ரவஸைக் கொன்ற சாத்யகி; தன் செய்கையை நியாயப்படுத்திய சாத்யகி...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டதும், வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததுமான (பூரிஸ்ரவஸின்) அந்தக் கரம் (இப்படி வெட்டப்பட்டு), அனைத்து உயிரினங்களுக்கும் பெரும் துயரத்தை அளிக்கும் வகையில் கீழே பூமியில் விழுந்தது.(1) உண்மையில், சாத்யகியின் தலையை வெட்ட இருந்த {பூரிஸ்ரவஸின்} அந்தக் கரம், {பூரிஸ்ரவஸின் கண்களுக்குக்} காணப்படாத அர்ஜுனனால் வெட்டப்பட்டு, ஐந்து தலை கொண்ட பாம்பொன்றைப் போலக் கீழே பூமியில் விழுந்தது.(2) பார்த்தனால் {அர்ஜுனனால்} தான் திறனறுபட்டதைக் கண்ட அந்தக் குரு {கௌரவப்} போர்வீரன் {பூரிஸ்ரவஸ்}, சாத்யகியிடம் இருந்த பிடியைக் கைவிட்டுக் கோபத்தால் நிறைந்து பாண்டுவின் மகனிடம் {அர்ஜுனனிடம்} கடிந்து பேசினான்.(3)
பூரிஸ்ரவஸ் {அர்ஜுனனிடம்}, “ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, என்னால் காணப்படாதவனாகவும், என்னுடன் (போரில்) ஈடுபடாதவனுமாக இருந்த நீ, என் கரத்தை வெட்டியதால் ஈவிரக்கமற்ற கொடூரமான காரியத்தைச் செய்திருக்கிறாய்.(4) தர்மனின் அரசமகனான யுதிஷ்டிரனிடம், “பூரிஸ்ரவஸ், போரில் வேறொருவனுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் என்னால் கொல்லப்பட்டான்” என்று நீ சொல்ல வேண்டியிருக்காதா?(5) உயர் ஆன்ம இந்திரனாலோ, ருத்ரனாலோ, துரோணராலோ, கிருபராலோ உனக்கு இப்படிப்பட்ட ஆயுதப் பயன்பாடு கற்றுக் கொடுக்கப்பட்டதா?(6) இவ்வுலகில் யாவரையும் விட ஆயுதங்களின் பயன்பாடு குறித்த விதிகளை நன்கறிந்தவன் நீயே. அப்படியிருக்கையில், போரில் உன்னுடன் ஈடுபடாத ஒரு போர்வீரனின் கரத்தை ஏன் நீ வெட்டினாய்?(7) கவனிக்காதவனையோ, பயந்தவனையோ, தேரற்றவனாக ஆக்கப்பட்டவனையோ, உயிரை, அல்லது பாதுகாப்பை இரந்து {கெஞ்சிக்} கேட்பவனையோ, துயரில் வீழ்ந்தவனையோ நீதிமான்கள் ஒரு போதும் தாக்குவதில்லை.(8) அப்படியிருக்கையில், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இழிந்தவனுக்கே தகுந்ததும், பொல்லாதவனால் மட்டுமே செய்யப்படுவதுமான இந்தப் பாவம் நிறைந்த, மிகவும் தகுதியற்ற செயலை ஏன் நீ செய்தாய்?(9) ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, மரியாதைக்குரிய ஒருவன், மரியாதைக்குரிய செயலை எளிதாகச் செய்துவிடுவான். எனினும், மதிப்பற்ற ஒரு செயலைச் செய்வது மதிப்புமிக்க ஒருவனுக்கு மிகக் கடினமாகும்.(10) யாருடன் ஒரு மனிதன் திரிகிறானோ, அவனது நடத்தையையே அவன் விரைவில் பிடித்துக் கொள்வான். ஓ! பார்த்தா, இதுவே உன்னில் காணப்படுகிறது.(11) நல்ல நடத்தையைக் கொண்டவனாக, சிறந்த நோன்புகளை நோற்றவனாக, அரசபரம்பரையைச் சேர்ந்தவனாக, அதிலும் குறிப்பாக குரு குலத்தில் பிறந்தவனாக இருப்பினும், க்ஷத்திரிய கடமைகளில் இருந்து எவ்வாறு நீ விலகினாய்?(12) விருஷ்ணி போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நீ செய்த இந்த அற்பச் செயல் வாசுதேவனின் {கிருஷ்ணனின்} ஆலோசனைகளுக்கு இணக்கமாகவே செய்யப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. உன்னைப் போன்ற ஒருவனுக்கு இத்தகு செயல் பொருந்தாது.(13) வேறொருவனுடன் போரில் ஈடுபட்டுக் கவனமற்று இருக்கும் ஒருவனுக்கு, கிருஷ்ணனின் நண்பனைத் தவிர வேறு எவனால் இத்தகு குற்றத்தை இழைக்க முடியும்?(14) பாவச்செயல்களிலேயே எப்போதும் ஈடுபடுபவர்களான விருஷ்ணிகளும், அந்தகர்களும், நிந்திக்கத்தக்க நடத்தைக்கு இயல்பிலேயே அடிமையான தீய க்ஷத்திரியர்களாவர். ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உனக்கு முன்மாதிரியாக அவர்களை ஏன் நீ கொண்டாய்? [1] [2]" என்றான் {பூரிஸ்ரவஸ்}.15
[1] "வங்க உரைகளில் முவ்வரியாக (triplet) இவ்வாறே அச்சிடப்பட்டுள்ளது. தீய க்ஷத்திரியர்கள் என்பது மூலத்தில் விராத்யர்கள் {Vratas) என்று இருக்கிறது. முறையான நேரத்தில் சாத்திரப்பூர்வமான வழக்கமான சடங்குகளைச் செய்து கொள்ளாத ஒரு பிராமணனோ, க்ஷத்திரியனோ, வைசியனோ விராத்யனாகிறான். வீழ்ந்த {தவறு செய்த} மனிதன் என்று அழைக்கப்படும் நிலைக்கு அவன் ஆளாகிறான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] வேறொரு பதிப்பில், "பார்த்தா, விராத்யர்களும், மிகவும் இகழத்தக்க செய்கையை உடையவர்களும், இயற்கையாகவே நிந்திக்கப்பட்டவர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் உன்னால் எவ்வாறு நிர்ணயம் சொல்லுகிறவர்களாகச் செய்யப்பட்டார்கள்?" என்றிருக்கிறது.
போரில் இப்படிக் கேட்கப்பட்ட பார்த்தன் {அர்ஜுனன்}, பூரிஸ்ரவஸுக்கு மறுமொழியாக, "ஓ! தலைவா {பூரிஸ்ரவஸ்}, மூடத்தனமான இவ்வார்த்தைகள் யாவும் உன்னால் சொல்லப்படுவதால், உடல் பலவீனத்தினால் ஒருவனது அறிவும் சிதைகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது [3].(16) ரிஷிகேசனையும் {கிருஷ்ணனையும்}, என்னையும் நீ நன்றாக அறிந்தாலும், உன்னால் எவ்வாறு எங்களை இப்படிக் கடிந்து கொள்ள முடிகிறது? போர்விதிகளையும், சாத்திரங்களின் பொருள் அனைத்தையும் அறிந்த நான், பாவச்செயல் எதையும் செய்ய மாட்டேன்.(17) இதை நன்றாக அறிந்தும், என்னை நீ நிந்திக்கிறாய். தொண்டர்கள், சகோதரர்கள், தந்தைமார், மகன்கள், உறவினர்கள், சொந்தங்கள், தோழர்கள், நண்பர்கள் ஆகியோரால் சூழப்பட்டவர்களாகவே க்ஷத்திரியர்கள் பகைவரோடு போரிடச் செல்வார்கள்.(18) அப்படித் தங்களைப் பின்தொடர்வோரை (பின்தொடர்வோரின் பலத்தை) நம்பியே அவர்கள் போரிடவும் செய்வார்கள்.(19) அப்படியிருக்கையில், என் சீடனும், அன்புக்குரிய சொந்தக்காரனும், விடுவதற்கு அரிதான உயிரையே துச்சமாக மதித்து எங்களுக்காகப் போரிடுபவனுமான சாத்யகியை நான் ஏன் காக்கக் கூடாது? [4](20) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, போரில் வெல்லப்பட முடியாதவனான சாத்யகி என் வலக்கரமாவான்.
[3] வேறொரு பதிப்பில், "முதுமையடைந்த மனிதன் தன்புத்தியையும் முதுமையடையச் செய்து கொள்கிறான்; இது வெளிப்படை" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "பயனற்ற வகையில் என்னை நீ இப்படி நிந்திப்பதால், உடலின் சிதைவு மனிதர்களின் அறிவையும் சிதைக்கிறது என்பது தெளிவாகிறது" என்று இருக்கிறது. மன்மதநாததத்தரின் வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.[4] "20ம் சுலோகம் முழுமையடையாமல் இருக்கிறது. பொருள் புரிந்து கொள்ளத்தக்க வகையில், 'நான் ஏன் காக்கக் கூடாது' என்ற வார்த்தைகளை நானே சேர்த்திருக்கிறேன். 21வது சுலோகத்தின் முதல் வரி 20வது சுலோகத்துடன் இலக்கண ரீதியாக இணைப்புடையதாகும். மோசமான வாக்கியக் கட்டுமானத்தைத் தவிர்க்கும்பொருட்டே இவற்றைத் தனி வாக்கியங்களாக வாசகருக்கு நான் அளிக்கிறேன்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
போருக்குச் செல்லும் ஒருவன் தன்னை மட்டுமே பாதுகாத்துக் கொள்வது தகாது.(21) ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, வேறொருவனின் காரியத்தில் ஈடுபடும் ஒருவன், (அந்த வேறொருவனால்) பாதுகாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்கள் பாதுகாக்கப்படுவதால், போரின் தொடர்ச்சியில் மன்னனும் பாதுகாக்கப்படுகிறான்.(22) பெரும்போரில், சாத்யகி கொல்லப்படப்போகும் தருணத்தில், (அவனைக் காக்க முயற்சி செய்யாமல்) நான் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தால், என்னுடைய அத்தகைய புறக்கணிப்பின் காரணமாக ஏற்படும் சாத்யகியின் மரணத்தால் நான் பாவத்தையே அடைவேன்.(23) நான் சாத்யகியைக் காத்ததற்காக என்னிடம் ஏன் நீ கோபம் கொள்கிறாய்? ஓ! மன்னா {பூரிஸ்ரவஸ்}, “வேறொருவனிடம் போரிட்டுக் கொண்டிருந்தாலும், உன்னால் நான் அங்கம் சிதைக்கப்பட்டேன்” என்று நீ என்னைக் கடிந்து கொள்கிறாய். அக்காரியத்தில் தவறாகத் தீர்மானித்தேன் என்றே நான் பதிலளிப்பேன்.
தேர்கள் மற்றும் யானைகள் நிரம்பியதும், குதிரைகள் மற்றும் காலாட்படை வீரர்கள் மிகுந்ததும், கடும் சிங்க முழக்கங்களை எதிரொலிப்பதும், அகன்ற கடலுக்கு ஒப்பானதுமான படைக்கு மத்தியில், சில நேரங்களில் என் கவசத்தை அசைத்துக் கொண்டும், சில நேரங்களில் என் தேரில் ஏறிச் சென்றும், சில நேரங்களில் வில்லின் நாணை இழுத்துக் கொண்டும், நான் என் எதிரிகளோடு போரிட்டுக் கொண்டிருந்தேன். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மற்றும் எதிரிகளுக்கு மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி} ஒரே ஒருவனுடன் மட்டுமே போரில் ஈடுபடுவது எப்படிச் சாத்தியம் [5]? பலருடன் போரிட்ட அந்தச் சாத்யகி, வலிமைமிக்கத் தேர்வீரர்கள் பலரை வென்று களைத்துப் போயிருந்தான்.(24-28) அவனது விலங்குகளும் {குதிரைகளும்} களைத்திருந்தன. ஆயுதங்களால் பீடிக்கப்பட்டிருந்த அவனும் {சாத்யகியும்} உற்சாகமற்றவனாகவே இருந்தான். வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகியை அப்படிப்பட்ட சூழ்நிலையில் வென்று, அவனை உன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, உனது மேன்மையை நீ வெளிக்காட்ட முனைந்தாய்.(29) அந்தப் போரில் உன் வாளால் சாத்யகியின் தலையை வெட்டவும் நீ விரும்பினாய்.(30) அந்நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை என்னால் அலட்சியமாகப் பார்க்க முடியாது [6]. (அடுத்தவனுக்குத் தீங்கிழைக்கையில்) உன்னைக் குறித்துக் {உன் பாதுகாப்பில்} கவனமில்லாமல் இருந்ததால், உன்னையே நீ நிந்தித்துக் கொள்ள வேண்டும். உண்மையில், ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன்னைச் சார்ந்த ஒருவனிடம் நீ எவ்வாறு நடந்து கொள்வாய்?” என்று கேட்டான் {அர்ஜுனன்}.(31)
[5] வேறொரு பதிப்பில், “குதிரைகளாலும், காலாட்களாலும் நெருங்கியதும், தேர்ப்படைகளும், யானைப்படைகளுமுள்ளதும், சிம்மநாதத்தினால் அதிகமான சப்தத்துடன் கூடியதும், ஆழ்ந்திருக்கின்றதுமான இந்தச் சேனாசமுத்திரத்தில் கவசம்பூண்டவனும், தேரின் மீதேறியிருக்கின்றவனும், எல்லா ஆயுதங்களையும் உடையவனும், எதிர்த்துப் போர் செய்யும் வீரனை எதிர்பார்த்திருக்கின்றவனும், தன்னைச் சேர்ந்த வீரர்களோடு கூடியவனும், அவ்வாறே ரணகளத்தில் பராக்ரமமிக்கவனுமான உனக்குச் சாத்யகியோடு சண்டையிடுவது எவ்வாறு தகுந்ததாகும்?” என்றிருக்கிறது. கங்குலியில் அர்ஜுனன் தன்னைக் குறித்துச் சொல்வதைப் போலுள்ளவை அனைத்தும் இதில் பூரிஸ்ரவஸ் குறித்தவையாகச் சொல்லப்பட்டுள்ளன. மன்மதநாததத்தரின் பதிப்பிலோ, "குதிரைகளும், காலாட்படை வீரர்களும் நிறைந்ததும், தேர்களையும் யானைகளையும் கொண்டதும், போராளிகளின் போர்க்கூச்சல்களை எதிரொலித்துக் கொண்டிருந்ததுமான தனது எதிரிகளின் படைக்கு மத்தியில், உனக்கு எதிராகத் தன் கவசத்தை அசைத்த சாத்யகி, தன் தேரில் ஏறிச் சென்று, தன் வில்லின் நாணை இழுத்து அந்த எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தான். ஒருவரோடொருவர் போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நண்பர்களுக்கும், எதிரிகளுக்கும் மத்தியில், அந்தச் சாத்வத வீரன் {சாத்யகி}, ஒருவனோடு மட்டுமே போரிடுவது எப்படிச் சாத்தியமாகும்?" என்றிருக்கிறது. இந்த மூன்றிலும், முழுவதும் சாத்யகியையே குறிக்கும் மன்மதநாததத்தரின் வரிகளே தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.[6] “உண்மையில், ’இந்த நிலைக்குக் குறைக்கப்பட்ட சாத்யகியை அலட்சியமாகக் காண எவனால் முடியும்?’ என்ற பொருள் படும்” எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில், “அவ்வாறு கஷ்டநிலைமையை அடைந்திருக்கும் சாத்யகியைப் பார்த்து எவன் பொறுப்பான்?” என்றிருக்கிறது.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “இப்படி (அர்ஜுனனால்) சொல்லப்பட்டவனும், வலிய கரங்கொண்டவனும், சிறப்பானவனும், வேள்விக்கம்பத்தை {யூபத்தைத்} தன் கொடியில் பொறித்திருந்தவனுமான பூரிஸ்ரவஸ், யுயுதானனை {சாத்யகியைக்} கைவிட்டு, பிராயம் என்ற நோன்பின்படி {பிராயோபவேசம் செய்து} [7] இறக்க விரும்பினான்.(32) பல நற்செயல்களால் புகழ்பெற்றவனான அவன் {பூரிஸ்ரவஸ்}, பிரம்ம லோகத்தை அடைய விரும்பி தன் இடக்கையால் அம்புப்படுக்கையைப் {கணைகளாலான ஆசனத்தைப்} பரப்பி, அவற்றைப் {அம்புகளைப்} பாதுகாக்கும் தெய்வத்தின் மீது கவனமாகத் தன் உணர்வுகளை நிலைக்கச் செய்தான்.(33) தன் பார்வையைச் சூரியனிலும், தூய்மையான தன் இதயத்தைச் சந்திரனிலும் நிலைக்கச் செய்து, பெரும் உபநிஷதத்தை (மஹா உபநிஷத் மந்திரங்களை) நினைத்த பூரிஸ்ரவஸ் யோகத்தை மேற்கொண்டு பேசுவதை நிறுத்தினான் [8].(34)
[7] “பொதுவாக உணவனைத்தையும் விலக்கிச் சாவது. பிராயம் என்பது யோகத்தால் உடலில் இருந்து ஆன்மாவை விடுவித்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாகும்” என இங்கே கங்குலி விளக்குகிறார்.[8] வேறொரு பதிப்பில், "புண்யமான லக்ஷணங்களையுடைய பூரிஸ்ரவஸ் இடக்கையினால் அம்புகளைப் பரப்பிப் பிரம்மலோகத்தையடைய எண்ணங்கொண்டு பிராணன்களை வாயுக்களில் ஒடுக்கிச் சூரியனிடத்தில் கண்ணைச் செலுத்திப் பிரஸன்னமான மனத்தை ஜலத்தில்சேர்த்து மகோபநிஷத்தைத் தியானஞ்செய்து கொண்டு யோகாப்பியாஸத்துடன் பிரம்மத்தை மனனம் செய்யலானான்” என்றிருக்கிறது.
அப்போது படைகள் அனைத்திலும் இருந்த மனிதர்கள் யாவரும் கிருஷ்ணனையும், தனஞ்சயனையும் {அர்ஜுனனையும்} நிந்தித்து, மனிதர்களில் காளையான அந்தப் பூரிஸ்ரவஸைப் பாராட்டினர்.(35) நிந்திக்கப்பட்டாலும், அந்தக் கிருஷ்ணர்கள் {கருப்பர்கள்} இருவரும் (இறந்து கொண்டிருக்கும் அந்த வீரனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு}) ஏற்பில்லாத எந்த ஒரு வார்த்தையையும் பேசவில்லை. யூபக்கொடி கொண்ட பூரிஸ்ரவஸும், தான் இப்படிப் புகழப்படுவதால் எந்த இன்பத்தையும் உணரவில்லை.(36) அப்போது, பல்குனன் என்றும் அழைக்கப்படும் பாண்டுவின் மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, உமது மகன்கள் இவ்வகையில் பேசுவதைப் பொறுத்துக் கொள்ள இயலாதவனாகவும், அவர்களின் வார்த்தைகளையும், பூரிஸ்ரவஸின் வார்த்தைகளையும் மனத்தில் கொண்டும், துயரத்துடனும், கோபமற்ற இதயத்துடனும், அவர்கள் அனைவருக்கும் நினைவூட்டும்படி இவ்வார்த்தைகளைச் சொன்னான்.{37, 38) அவன் {அர்ஜுனன்}, “மன்னர்கள் அனைவரும், என் பெருநோன்பான {மகாவிரதமான} ‘எங்கள் தரப்பினர் எவரும் என் கணைகளின் எல்லைக்குள் உள்ள வரையில், அவர்களைக் கொல்வதில் எவராலும் வெல்ல முடியாது’ என்பதை {என்ற என் சபதத்தை} அறிவர்.(39) ஓ யூபக் கொடியோனே {பூரிஸ்ரவஸ்}, இதை நினைவுகூரும் நீ என்னை நிந்தித்தல் தகாது. அறநெறி எதுவென அறியாத ஒருவன், பிறரை நிந்திப்பது முறையாகாது.(40) போரில் நன்கு ஆயுதம் தரித்திருந்த நீ, (ஆயுதமற்ற) சாத்யகியை கொல்லப்போகும் தருணத்தில், நான் உனது கரத்தை வெட்டியது அறநெறிக்கு முரணானதல்ல.(41) ஆனால், ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்}, ஆயுதமற்றவனும், தேரை இழந்தவனும், கவசம் நழுவியவனும், வெறும் பாலகனே ஆனவனுமான அபிமன்யுவின் கொலையை நேர்மையான எந்த மனிதன்தான் பாராட்டுவான்?” என்றான் {அர்ஜுனன்}.(42)
இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} சொல்லப்பட்ட பூரிஸ்ரவஸ் தன் தலையால் தரையைத் தொட்டு, (வெட்டப்பட்டிருந்த தன் வலக்கரத்தை) தன் இடக்கரத்தால் காணிக்கையளித்தான் {அர்ஜுனன் எதிரில் போட்டான்}.(43) கண்கவரும் பிரகாசத்தைக் கொண்டவனும், யூபக் கொடியோனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பார்த்தனின் {அர்ஜுனனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டுத் தன் தலையைத் தொங்கப் போட்டவாறே அமைதியாக இருந்தான்.(44) அப்போது அர்ஜுனன், “ஓ! சலனின் அண்ணனே, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரரிடமோ, வலிமைமிக்கோர் அனைவரிலும் முதன்மையான அந்தப் பீமரிடமோ, நகுலனிடமோ, சகாதேவனிடமோ நான் கொண்டுள்ள அன்புக்கு இணையாகவே நான் உன்னிடமும் {அன்பு} கொண்டுள்ளேன்.(45) என்னாலும், சிறப்புமிக்கக் கிருஷ்ணனாலும் கட்டளையிடப்படும் நீ, உசீநரனின் மகனான சிபி எங்கே இருக்கிறானோ, அந்த நல்லோரின் உலகங்களுக்குச் செல்வாயாக” என்றான் {அர்ஜுனன்}.(46) வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, “வேள்விகளையும், அக்னிஹோத்திரங்களையும் நீ தொடர்ச்சியாகச் செய்திருக்கிறாய். எனவே, காந்தியால் எப்போதும் சுடர்விடுவதும், பிரம்மனைத் தலைமையாகக் கொண்ட முதன்மையான தேவர்களாலும் விரும்பப்படுவதுமான என் தூய உலகங்களுக்குத் தாமதமில்லாமல் சென்று, எனக்கு இணையானவனாகி, கருடனால் சுமக்கப்படுவாயாக” என்றான்.(47)
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சோமதத்தன் மகனால் {பூரிஸ்ரவஸால்} விடுவிக்கப்பட்ட சிநியின் பேரன் {சாத்யகி}, எழுந்திருந்து, தன் வாளை உருவி கொண்டு, பூரிஸ்ரவஸின் சிரத்தைக் கொய்ய விரும்பினான்.(48) உண்மையில், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளித்தவனும், போரில் உணர்வுகள் அற்றுப் போனவனும், பாண்டுவின் மகனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனும், வெட்டப்பட்ட கையுடன் அமர்ந்திருந்தவனும், துதிக்கையற்ற யானைக்கு ஒப்பாக இருந்தவனும், சலனின் அண்ணனுமான பாவமற்ற அந்தப் பூரிஸ்ரவஸைச் சாத்யகி கொல்ல விரும்பினான்.(49) போர்வீரர்கள் அனைவரும் (அவனது நோக்கத்திற்காகப்) அவனை உரக்க நிந்தித்தனர். படைவீரர்கள் மறுத்துக் கூச்சலிட்டுக் கொண்டிருந்த போதும், கிருஷ்ணன், உயர் ஆன்ம பார்த்தன் {அர்ஜுனன்}, பீமன், (அர்ஜுனனுடைய தேரின்) இருசக்கரங்களையும் பாதுகாத்தவர்கள் (யுதாமன்யு மற்றும் உத்தமௌஜஸ்), அஸ்வத்தாமன், கிருபர், கர்ணன், விருஷசேனன் ஆகியோராலும், சிந்துக்களின் ஆட்சியாளனாலும் {ஜெயத்ரதனாலும்} கூடத் தடுக்கப்பட்ட போதிலும், அறிவை இழந்தவனான சாத்யகி, நோன்பை நோற்றுக் கொண்டிருந்த பூரிஸ்ரவஸைக் கொன்றான்.(50-52) உண்மையில், பார்த்தனால் {அர்ஜுனனால்} கை அறுபட்டவனும், தன் ஆன்மாவை உடலில் இருந்து விடுவிக்கப் பிராயத்தில் {பிராயம் என்ற நோன்பில்} அமர்ந்திருந்தவனுமான அந்தக் குரு போர்வீரனின் தலையைத் தன் வாளால் அறுத்தான் சாத்யகி.(53)
பார்த்தனால் முன்பே கிட்டத்தட்ட கொல்லப்பட்டவனான அந்தக் குருகுலத்தைத் தழைக்க வைத்தவனை {பூரிஸ்ரவஸைக்} கொன்றதற்காகச் சாத்யகியைப் போர்வீரர்கள் மெச்சவில்லை.(54) அந்தப் போரில் சக்ரனை {இந்திரனைப்} போன்ற பூரிஸ்ரவஸ், பிராய நோன்பை நோற்று அமர்ந்திருக்கையில் கொல்லப்பட்டதைக் கண்டும், அவனால் சாதிக்கப்பட்ட செயல்களால் வியப்படைந்தும், சித்தர்கள், சாரணர்கள், அங்கே இருந்த மனிதர்கள், ஏன் தேவர்களும் கூட அவனை {பூரிஸ்ரவஸைப்} புகழத் தொடங்கினர்.(55) உமது வீரர்களும் இக்காரியத்தை வாதிட்டுக் கொண்டே, "இது விருஷ்ணி வீரனின் {சாத்யகியின்} தவறன்று. ஏற்கனவே விதிக்கப்பட்டதே நடந்திருக்கிறது. எனவே, நாம் கோபமடைய வேண்டாம். கோபமே மனிதர்களின் கவலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.(56,57) விருஷ்ணி வீரனால் {சாத்யகியால்} பூரிஸ்ரவஸ் கொல்லப்பட வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது. இது {இக்குற்றம்} யாருடையது, அல்லது யாருடையதில்லை என்று ஆராய்வது பயனற்றதாகும். சாத்யகியே போரில் பூரிஸ்ரவஸின் மரணத்திற்குக் காரணமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளன் {பிரம்மன்} விதித்திருக்கிறான்" என்றனர்.(58)
சாத்யகி, "பாவிகளான கௌரவர்களே, நீதி {அறம் / தர்மம்} என்ற ஆடையை மேலுக்குப் போர்த்திக் கொண்டு, இந்தப் பூரிஸ்ரவஸ் கொல்லப்படத்தகாதவன் என்று என்னிடம் நீங்கள் அறச்சொற்களில் {தர்ம வாதங்கள்} பேசுகிறீர்கள்.(59) எனினும், ஆயுதங்களை இழந்திருந்த பாலகனான சுபத்திரையின் மைந்தனை {அபிமன்யுவை} நீங்கள் கொன்ற போது உங்கள் நீதி {அறம்} எங்கே சென்றது?(60) 'போரில், உயிரோடு என்னைக் கீழே தூக்கிப் போட்டுச் சினத்துடன் தன் காலால் எவன் என்னைத் தாக்குவானோ, அவன் தவத்தைச் செய்பவனாகவே இருப்பினும், அந்தப் பகைவன் என்னால் கொல்லப்படுவான்' என நான் ஒரு குறிப்பிட்ட அளவு அகந்தையோடு சபதம் செய்திருக்கிறேன்.(61) கைகளோடும், கண்களோடும், முழுவதும் நலமாக மோதலில் போராடிக் கொண்டிருந்த என்னை இறந்தவன் என்றே நீங்கள் கருதினீர்கள். அஃது உங்கள் மூடத்தனமே. குருக்களில் காளையரே, என்னால் சாதிக்கப்பட்ட பூரிஸ்ரவஸின் படுகொலை முற்றிலும் முறையானதே. எனினும் பார்த்தர் {அர்ஜுனர்}, என் மீது கொண்ட பற்றாலும், (தன் தரப்பில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும்படி) தான் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றும்பொருட்டும் வாளைப் பிடித்திருந்த இவனது {பூரிஸ்ரவஸின்} கரத்தை வெட்டி என் புகழைக் களவாடிவிட்டார்.(64) எது விதிக்கப்பட்டுள்ளதோ அது நடக்கவே வேண்டும். இங்கே விதியே வேலை செய்கிறது. போர் நடந்து கொண்டிருக்கும்போதே பூரிஸ்ரவஸ் கொல்லப்பட்டிருக்கிறான். {இதில்} நான் என்ன பாவத்தை இழைத்துவிட்டேன்?(65) பழங்காலத்தில் பூமியில் வால்மிகி "ஓ! குரங்கே, பெண்கள் கொல்லப்படக்கூடாது என நீ சொல்கிறாய்.(66) எனினும், மனிதர்கள் எப்போதும் எதிரிகளுக்கு வலியை {துன்பத்தைக்} கொடுப்பதை உறுதியான கவனத்துடன் {பாதுகாப்புடன்} எக்காலத்திலும் சாதிக்க வேண்டும்" என இவ்வரிகளைப் பாடியுள்ளார்" என்றான் {சாத்யகி} [9].(67)
[9] வாலி ராமனால் மறைந்திருந்து கொல்லப்பட்டான். அதே போல பூரிஸ்ரவஸும், தன்னால் காணப்படாத அர்ஜுனனால் கொல்லப்பட்டான். எனவே, வாலியிடம் ராமன் சொன்னதாக சொல்லும் வால்மிகியின் வார்த்தைகளை இங்கே சாத்யகி கௌரவர்களிடம் சொல்வதாகத் தெரிகிறது. "ஓ குரங்கே" என்பது வாலியைச் சுட்டும் சொல்லாகவே இருக்க வேண்டும்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "சாத்யகி இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களிலோ, கௌரவர்களிலோ எவரும் எதையும் பேசவில்லை. மறுபுறம் அவர்கள் பூரிஸ்ரவஸை மனத்தால் புகழ்ந்தனர்.(68) காட்டில் வாழும் தவசிக்கோ, பெரும் வேள்வியில் மந்திரங்களால் தூய்மையடைந்த ஒருவனுக்கோ ஒப்பானவனும், ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களைக் கொடையாக அளித்தவனுமான சிறப்புமிக்கச் சோமதத்தன் மகனின் {பூரிஸ்ரவஸின்} படுகொலையை எவரும் மெச்சவில்லை.(69) அழகிய நீலக் குழல்களால் அருளப்பட்டதும், புறாக்களைப் போலச் சிவந்த கண்களைக் கொண்டதுமான அவ்வீரனின் {பூரிஸ்ரவஸின்} தலையானது, குதிரை வேள்வியில் {அஸ்வமேதயாகத்தில்} அறுக்கப்பட்டு வேள்விப்பீடத்தில் வைக்கப்பட்டிருக்கும் குதிரையின் தலையைப் போலத் தெரிந்தது [10].(70) தன் ஆற்றலாலும், ஆயுத முனையில் தான் அடைந்த மரணத்தாலும் புனிதமடைந்தவனும், எவ்வரத்துக்கும் தகுந்தவனும், வரங்களை அளிப்பவனுமான பூரிஸ்ரவஸ், அந்தப் பெரும்போரில் தன் உடலைத் துறந்து, தன் அறங்களால் {நற்பண்புகளால்} ஆகாயத்தை நிறைத்தபடியே உயர்ந்த உலகங்களுக்குச் சென்றான்" {என்றான் சஞ்சயன்}.(71)
[10] "உண்மையில், 'வேள்வி நெய் வைக்கப்படும் இடத்திற்கு அருகே' என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆங்கிலத்தில் | In English |