Arjuna cut off the arm of Bhurisravas! | Drona-Parva-Section-141 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 57)
பதிவின் சுருக்கம் : சாத்யகியை எதிர்த்த பூரிஸ்ரவஸ்; சாத்யகியிடம் பேசிய பூரிஸ்ரவஸ்; பூரிஸ்ரவஸுக்கு சாத்யகியின் மறுமொழி; பூரிஸ்ரவஸுக்கும், சாத்யகிக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; களைத்துப் போயிருந்தவனும், புத்துணர்வுடன் கூடிய பூரிஸ்ரவஸை எதிர்த்துப் போரிட்டவனுமானச் சாத்யகியைக் காக்க அர்ஜுனனைத் தூண்டிய கிருஷ்ணன்; பூரிஸ்ரவஸிடம் அடங்கிய சாத்யகி; பூரிஸ்ரவஸின் ஒரு கரத்தைத் துண்டித்த அர்ஜுனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “போரில் வெல்லப்பட முடியாத அந்தச் சாத்வதன் {சாத்யகி} (அர்ஜுனனை நோக்கி) வருவதைக் கண்டவனும், சினமடைந்தவனுமான பூரிஸ்ரவஸ், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, திடீரென அவனை {சாத்யகியை} நோக்கிச் சென்றான்.(1) பிறகு அந்தக் குரு குலத்தோன் {பூரிஸ்ரவஸ்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சிநி குலத்துக் காளையிடம் {சாத்யகியிடம்}, “நற்பேறின் நிமித்தமாகவே இன்று நீ என் பார்வை அடையும் தொலைவுக்குள் வந்திருக்கிறாய்.(2) எப்போதும் என் மனதில் கொண்டிருந்த விருப்பத்தை இந்தப் போரில் நான் இன்று அடையப் போகிறேன். நீ போரில் இருந்து ஓடாமலிருந்தால், நீ உயிருடன் தப்ப மாட்டாய்.(3) {நீ கொண்ட} வீரத்தில் எப்போதும் செருக்குடையவனான உன்னை இன்று போரில் கொன்று, ஓ! தாசார்ஹ குலத்தோனே {சாத்யகி}, குரு மன்னன் சுயோதனனை {துரியோதனனை} நான் மகிழச் செய்யப் போகிறேன்.(4)
என் கணைகளால் எரிக்கப்பட்டுப் போர்க்களத்தில் கிடக்கும் உன்னை வீரர்களான கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் இன்று சேர்ந்திருந்து காண்பார்கள்.(5) உன்னை இந்தப் படைக்குள் ஊடுருவச் செய்தவனான தர்மனின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, என்னால் நீ கொல்லப்பட்டதைக் கேட்டு, வெட்கத்தில் மூழ்கப் போகிறான்.(6) இன்று நீ கொல்லப்பட்டு, குருதியால் மறைக்கப்பட்டு, பூமியில் கிடப்பதைப் பார்க்கையில், பிருதையின் {குந்தியின்} மகனான தனஞ்சயன் {அர்ஜுனன்}, என் ஆற்றலை அறிந்து கொள்வான்.(7) பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையிலான போரில், சக்ரன் மற்றும் பலியின் மோதலைப் போலவே உன்னுடன் {இப்போது} நேரப்போகும் இந்த மோதலை எப்போதுமே நான் விரும்பி வந்தேன்.(8) ஓ! சாத்வதா {சாத்யகி} இன்று நான் உனக்குப் பயங்கரப் போரைத் தருவேன். அப்போதுதான், உண்மையில் என் சக்தி, வலிமை மற்றும் ஆண்மை ஆகியவற்றை நீ புரிந்து கொள்வாய்.(9)
போரில் என்னால் கொல்லப்படும் நீ, ராமனின் தம்பியான லட்சுமணனால் கொல்லப்பட்ட ராவணனின் மகனை (இந்திரஜித்தைப்) போல இன்று யமனுலகை அடையப் போகிறாய்.(10) இன்று உன் கொலையைப் பார்க்கும் கிருஷ்ணன், பார்த்தன் {அர்ஜுனன்} மற்றும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர், ஓ! மது குலத்தோனே {சாத்யகி}, மனத்தளர்ச்சியடைந்து போரைக் கைவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை.(11) கூரிய கணைகளால் இன்று உனக்கு மரணத்தை ஏற்படுத்தி, ஓ! மாதவா {சாத்யகி}, போரில் உன்னால் கொல்லப்பட்டோர் அனைவரின் மனைவிமாரையும் மகிழச் செய்யப் போகிறேன்.(12) என் பார்வையின் இலக்குக்குள் வந்த நீ, சிங்கத்தின் பார்வை தொலைவுக்குள் வந்த சிறு மானைப் போல என்னிடம் இருந்து தப்ப மாட்டாய்” என்றான் {பூரிஸ்ரவஸ்}.(13)
அவனது {பூரிஸ்ரவஸ்ஸின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட யுயுதானன் {சாத்யகி}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிரித்துக் கொண்டே அவனுக்குப் {பூரிஸ்ரவஸ்ஸுக்குப்} பதிலளிக்கும் வகையில், “ஓ! குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்ஸே}, போரில் நான் எப்போதும் அச்சங்கொண்டதில்லை.(14) உன் வார்த்தைகளால் மட்டுமே என்னை அச்சுறுத்துவதில் உன்னால் வெல்ல முடியாது. எவன் என்னை ஆயுதங்களை இழக்கச் செய்வதில் வெல்வானோ, அவனாலேயே போரில் என்னைக் கொல்ல முடியும்.(15) எவன் போரில் என்னைக் கொல்வானோ, அவன் இனி வரப்போகும் காலம் முழுவதும் (எதிரிகளைக்) கொன்று கொண்டிருப்பான் [1]. வீணான வார்த்தைகளைக் கொண்டு நீண்ட மூச்சுடன் தற்பெருமை பேசுபவது எதற்குப் பயன்படும்? நீ சொல்வதைச் செயலில் சாதிப்பாயாக.(16) கூதிர்காலத்துக் கார்முகில்களின் கர்ஜனையைப் போலவே உன் சொற்களும் கனியற்றவையாகவே தெரிகின்றன. ஓ! வீரா {பூரிஸ்ரவஸ்}, உன் முழக்கங்களைக் கேட்டு, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.(17) ஓ குரு குலத்தோனே {பூரிஸ்ரவஸ்} நீண்ட நாட்களாக உன்னால் விரும்பப்பட்ட அந்த மோதல் இன்று நடக்கட்டும். ஓ! ஐயா {பூரிஸ்ரவஸ்} உன்னுடனான மோதலை விரும்பும் என் இதயத்தால், தாமதத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.(18) ஓ! இழிந்தவனே, உன்னைக் கொல்லாமல் நான் போரில் இருந்து திரும்பேன்” என்றான் {சாத்யகி}. இத்தகு வார்த்தைகளால் ஒருவரையொருவர் நிந்தித்துக் கொண்ட மனிதர்களில் காளையரான அவ்விருவரும், பெருங்கோபத்தால் தூண்டப்பட்டு, ஒருவரின் உயிரை மற்றவர் எடுக்க விரும்பி, ஒருவரையொருவர் போரில் தாக்கிக் கொண்டனர்.(19)
[1] “எவன் என்னைக் கொல்வானோ அவன் போரில் எப்போதும் வெற்றியாளனாக இருந்து, போரில் ஈடுபடும் போர் வீரர்களை எப்போதும் கொல்வான். எப்போதும் தோல்வி அவனுடையதாகாது” என்பதே இங்குப் பொருள் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
பெரும் வலிமை கொண்ட அந்தப் பெரும் வில்லாளிகள் இருவரும், ஒருவரையொருவர் அறைகூவியழைத்து, பருவ காலத்தில் உள்ள பெண்யானைக்காக மதங்கொண்ட இரண்டு கோபக்கார யானைகள் மோதுவதைப் போலப் போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(20) எதிரிகளைத் தண்டிப்பவர்களான பூரிஸ்ரவஸ் மற்றும் சாத்யகி ஆகிய இருவரும், மேகத்திரள்கள் இரண்டைப் போல ஒருவர் மீதொருவர் அடர்த்தியான கணைமாரிகளைப் பொழிந்தனர்.(21) அப்போது, அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, வேகமாகச் செல்லும் கணைகளால் சிநியின் பேரனை {சாத்யகியை} மறைத்து, ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, பின்னவனை {சாத்யகியைக்} கொல்லும் விருப்பத்தால் மீண்டும் அவனைப் {சாத்யகியைப்} பல கணைகளால் துளைத்தான்.(22)
பத்து கணைகளால் சாத்யகியைத் துளைத்த அந்தச் சோமதத்தன் மகன் {பூரிஸ்ரவஸ்}, அந்தச் சிநிக்களின் காளைக்கு {சாத்யகிக்கு} அழிவை ஏற்படுத்தும் விருப்பத்தால் அவன் மீது கூரிய கணைகள் பலவற்றை ஏவினான். எனினும் சாத்யகி, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, தன் ஆயுதங்களின் சக்தியால், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உண்மையில் பூரிஸ்ரவஸின் கணைகளில் எவையும் தன்னை அடையும் முன்பே அவை அனைத்தையும் ஆகாயத்திலேயே அறுத்தான். நற்குலத்தில் பிறந்தவர்களும், முறையே குருக்கள் மற்றும் விருஷ்ணிகள் ஆகியோரின் புகழை அதிகரித்தவர்களுமான அவ்விரு போர்வீரர்களும் இப்படியே ஒருவர் மீதொருவர் தங்கள் கணை மாரியைப் பொழிந்தனர். தங்கள் நகங்களைக் கொண்டு போரிடும் இரு புலிகள், அல்லது தங்கள் தந்தங்களைக் கொண்டு போரிடும் இரு பெரும் யானைகளைப் போன்றே அவர்கள், தேர்வீரர்கள் பயன்படுத்துபவையான கணைகளாலும், ஈட்டிகளாலும் ஒருவரையொருவர் சிதைத்துக் கொண்டனர்.(23-26) ஒருவரையொருவர் அங்கங்களைச் சிதைத்துக் கொண்டு, தங்கள் காயங்களில் குருதிப் பெருக்கெடுத்த அந்தப் போர்வீரர்கள் இருவரும், தங்கள் உயிரையே பணயம் வைத்து சூதாடி, ஒருவரையொருவர் தடுத்துக் கொண்டும், ஒருவரையொருவர் குழப்பிக் கொண்டும் இருந்தனர்.(27)
சிறந்த சாதனைகளைக் கொண்டவர்களும், முறையாகக் குருக்கள் மற்றும் விருஷ்ணிகளின் புகழை அதிகரிப்பவர்களுமான அந்த வீரர்கள், யானைக் கூட்டங்களின் தலைமையானைகளில் இரண்டைப் போல இப்படியே ஒருவருடனொருவர் போரிட்டனர்.(28) உண்மையில், உயர்ந்த உலகங்களை அடைய ஆசைப்பட்ட போர்வீரர்களான அவ்விருவரும், பிரம்ம லோகத்தை விரைவில் அடைய விரும்பி ஒருவரையொருவர் எதிர்த்து முழங்கினர். உண்மையில் மகிழ்ச்சியில் நிறைந்திருந்த சாத்யகியும், சோமதத்தன் மகனும் {பூரிஸ்ரவஸும்}, திருதராஷ்டிரர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தங்கள் கணைமாரிகளால் ஒருவரையொருவர் மறைக்கத் தொடங்கினர். அங்கே இருந்த மக்கள், அவ்விரு போர்வீரர்களுக்கு இடையில் நடந்த அந்த மோதல், பருவ காலத்தில் உள்ள பெண் யானைக்காக இரு தலைமை யானைகள் போரிடுவதைப் போலவே இருப்பதைக் கண்டனர் [2].(29-31)
[2] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகமாக இருக்கிறது. அது பின்வருமாறு, "அரசரே, கோபமிகுந்தவர்களான அவ்விருவரும் அடிக்கடி அம்புகளால் அடித்துக் கொண்டு காட்டில் இரண்டு சிங்கங்கள் சண்டையிடுவது போலப் பெரிதான யுத்தரங்கத்தில் சண்டை செய்தார்கள். மர்மஸ்தானத்தையறிந்தவர்களும், மிகுந்த கோபத்துடன் வதஞ்செய்யக் கருதியவர்களுமான அவ்விருவரும், பலனும் வஜ்ரதரனான இந்திரனும் போல ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு கர்ஜித்தார்கள். பிறகு, ஒருவரையொருவர் எதிர்த்து வருகின்ற அவ்விருவரும் படிந்த கணுக்களுள்ள அம்புகளாலே அந்யோன்யம் கொடிகளையும், ரதத்திலுள்ள எல்லா உபகரணங்களையும் நன்றாக அறுத்தார்கள். பின்னும் அவ்விருவரும் அம்பு மழைகளால் ஒருவரையொருவர் வர்ஷித்துக் கொண்டு விரைவாக ஒருவர் மற்றவருடைய சாரதிகளைக் கொன்றார்கள்" என்றிருக்கிறது. இதன்பின்னர் பின்வருவதைப் போலவே தொடர்கிறது. மேற்கண்ட நிகழ்வுகள் கங்குலியிலோ, மன்மதநாததத்தரின் பதிப்பிலோ இல்லை.
பிறகு அந்தத் தேரற்ற போராளிகள் ஒவ்வொருவரும் மற்றவரின் குதிரைகளைக் கொன்று, மற்றவரின் விற்களை அறுத்த பிறகு, வாள்களைக் கொண்டு அந்தப் பயங்கரப்போரில் ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(32) அவர்கள், அழகியவையும், பெரியவையும், பிரகாசமானவையும், காளையின் தோலால் செய்யப்பட்டவையுமான இரண்டு அழகிய கேடயங்களை எடுத்துக் கொண்டும், உறையிலிருந்து இரு வாள்களை உருவிக் கொண்டும் போர்க்களத்தில் திரிந்து கொண்டிருந்தனர்.(33) எதிரிகளைக் கலங்கடிப்பவர்களும், சினத்தால் தூண்டப்பட்டவர்களுமான அவர்கள், மண்டலகதிகளைப் பின்பற்றியும், பிறவகைகளிலான முறையான நகர்வுகளைச் செய்தும், தொடர்ந்து ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.(34) வாள்களை ஏந்தி, பிரகாசமான கவசம் பூண்டு, மார்புக்கவசங்கள் மற்றும் அங்கதங்களால் {தோள்வளைகளால்} அலங்கரிக்கப்பட்டிருந்தவர்களான புகழ்பெற்ற அந்தப் போர்வீரர்கள் இருவரும், பல்வேறு வகைகளிலான நகர்வுகளை வெளிப்படுத்தினர்.(35) அவர்கள் சக்கரமாகச் சுழன்று, உயரக் குதித்து, பக்கவாட்டில் உந்தித் தள்ளி, முந்தித் தாவி, முன்னோக்கியும் மேல்நோக்கியும் விரைந்தனர் [3].(36) எதிரிகளைத் தண்டிப்பவர்களான அவர்கள், தங்கள் வாள்களைக் கொண்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொரும் மற்றவனின் தவறுகளுக்காக ஆவலாகக் காத்திருந்தனர். அழகாகத் தாவிய அவ்வீரர்கள் இருவரும், தங்கள் பயிற்சி, நகர்வு நளினம் மற்றும் திறம் ஆகியவற்றை வெளிக்காட்டினர்.(37) போர்வீரர்களில் முதன்மையான அவர்கள், அந்தப் போரில் திறம்பட ஒருவரையொருவர் குத்தத் தொடங்கினர்.(38) ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒருக்கணம் ஓய்வெடுத்தனர்.(39)
[3] வேறொரு பதிப்பில், "கீர்த்திமான்களான அவ்விரு வீரர்களும், ப்ராந்தம், உத்பிராந்தம், ஆவித்தம், ஆப்லுதம், விப்லுதம், ஸ்ருதம், ஸம்பாதம், ஸமுதீர்ணம் எனும் கத்தி சுழற்றும் வகைகளைக் காண்பித்துக் கொண்டும், கத்திகளால் பரஸ்பரம் வெட்டிக் கொண்டும் ஆச்சரியகரமாக ஸஞ்சாரஞ்செய்தார்கள். யுத்தஞ்செய்கிறவர்களுள் சிறந்தவர்களான அவ்விருவரும் யுத்தரங்கத்தில் சிக்ஷையையும் லாகவத்தையும் அவ்வாறே தேர்ச்சியையும் காண்பித்துக் கொண்டு ஒருவரையொருவர் குத்திக் கொண்டனர்" என்றிருக்கிறது.
அந்த மனிதர்களில் புலிகளான இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} நூறு நிலவுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தங்கள் ஒவ்வொருவரின் கேடயங்களையும் தங்கள் வாள்களால் துண்டு துண்டாக வெட்டி மற்போரில் ஈடுபட்டனர்.(40) அகன்ற மார்புகள் மற்றும் நீண்ட கரங்களைக் கொண்டவர்களும், மற்போரில் திறம் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும், பரிகாயுதங்களுக்கு ஒப்பான இரும்பு போன்ற தங்கள் கரங்களைக் கொண்டு ஒருவரோடொருவர் மோதிக் கொண்டனர்.(41) தங்கள் கரங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், தங்கள் ஒவ்வொருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டும் இருந்த அவர்கள் தங்கள் கரங்களால் மற்றவரின் கழுத்தையும் பிடித்தனர்.(42) அப்படி அந்த வீரர்கள் போரிட்டுக் கொண்டிருந்தபோது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மலைச்சாரலில் விழும் இடிக்கு ஒப்பாக அந்தப் போரில் அவர்களால் உண்டாக்கப்பட்ட ஒலி பயங்கரமான பேரொலியாக இருந்தது.(43)
முறைப்படி குருக்கள் மற்றும் சாத்வத குலங்களின் போர்வீரர்களில் முதன்மையானவர்களும், சிறப்புமிக்கவர்களுமான அவ்விருவரும், தங்கள் தந்தங்களின் முனைகளைக் கொண்டு ஒன்றோடொன்று மோதும் இரு யானைகள், அல்லது தங்கள் கொம்புகளைக் கொண்டு மோதும் இரு காளைகளைப் போலவே, சில நேரங்களில் ஒருவரையொருவர் கரங்களால் கட்டியும், சில நேரங்களில் தங்கள் தலைகளால் ஒருவரையொருவர் தாக்கியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் ஒருவரையொருவர் பின்னியும், சில நேங்களில் தங்கள் நகங்களால் ஒருவரையொருவர் கிள்ளியும், சில நேரங்களில் ஒருவரையொருவர் இறுக்கமாகக் கட்டியும், சில நேரங்களில் தங்கள் கால்களால் மற்றவரின் இடுப்பைச் சுற்றிப் பின்னியும், சில நேரங்களில் தரையில் உருண்டும், சில நேரங்களில் முன்னேறியும், சில நேரங்களில் பின்வாங்கியும், சிலநேரங்களில் ஒருவரையொருவர் அறைகூவி அழைத்தும், சில நேரங்களில் ஒருவரையொருவர் கீழே தூக்கி வீசியும், சில நேரங்களில் எழுந்து கொண்டும், சில நேரங்களில் உயரத் தாவிக் கொண்டும் இருந்தனர்.(44-46) உண்மையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கப் போராளிகளான அவ்விருவரும் அவ்வகை மோதல்களின் இயல்புக்குத் தகுந்த முப்பத்திரண்டு விதமான தனிப்பட்ட திறன்கள் மற்றும் செயல்கள் ஆகிய {செயல்திறன்கள்} அனைத்தையும் அந்தப் போரில் வெளிக்காட்டினர்.(47)
பூரிஸ்ரவஸுடனான மோதலில் அந்தச் சாத்வதனின் {சாத்யகியின்} ஆயுதங்கள் தீர்ந்து போன போது, அர்ஜுனனிடம் வாசுதேவன் {கிருஷ்ணன்}, "வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனும், தேரை இழந்தவனுமான சாத்யகி போரில் ஈடுபடுவதைப் பார்.(48) ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, அவன் {சாத்யகி}, உன்னைத் தேடியே பாரதப் படைகளைப் பிளந்து அதற்குள் நுழைந்தான். பெரும் சக்தி கொண்ட பாரத வீரர்கள் அனைவருடனும் அவன் போரிட்டான்.(49) வேள்விக்கொடைகளைப் பெருமளவில் அளிப்பவனான பூரிஸ்ரவஸ், அந்தப் போர்வீரர்களில் முதன்மையானவன் {சாத்யகி} சோர்வும், களைப்பும் அடைந்திருக்கும்போது மோதுகிறான். போரிடும் விருப்பம் கொண்ட பூரிஸ்ரவஸ், முன்னேறி வரும் சாத்யகியோடு [4] மோதப் போகிறான் {பீமனோடும் என்றிருக்கிறது}. ஓ! அர்ஜுனா, இம்மோதல் சமமற்றதாவே {நியாயமற்றதாகவே} இருக்கும்" என்றான் {கிருஷ்ணன்}.(50)
[4] வேறொரு பதிப்பில், "அர்ஜுனா, சாத்யகி களைத்துப் போனதைப் பார். இவனை நீ காப்பாற்ற வேண்டும். பாண்டவா, இவன் பாரதச் சேனையை உடைத்துக் கொண்டு உன் பின்புறத்திலே நுழைந்துவிட்டான். பாரத! மிக்க வீர்யமுடையவர்களான எல்லாப் பாரதர்களாலும் போர்புரியும்படி செய்யப்பட்டான். கௌரவச் சேனையில் முக்கியர்களும், தலைமையானவர்களுமான மகாரதர்கள் நூறு நூறாகவும், ஆயிரமாயிரமாகவும் (இந்த) விருஷ்ணி வீரனால் கொல்லப்பட்டார்கள். அர்ஜுன, யுத்தஞ்செய்கிறவர்களுள் சிறந்தவனும், களைப்படைந்தவனும் இங்கு வருகின்றனவருமான இந்தச் சாத்யகியை மிக்கத் தக்ஷிணை கொடுப்பவனான பூரிஸ்ரவஸ் யுத்தத்தில் விருப்பமுள்ளவனாக எதிர்த்தான். இது சமமானதன்று" என்று இருக்கிறது. இதிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் பீமனைப் பற்றிய குறிப்பு இல்லை.
அப்போது போரில் வெல்லப்பட முடியாத போர்வீரனான பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மதங்கொண்ட எதிராளியைத் தாக்கும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போலச் சாத்யகியை மூர்க்கமாகத் தாக்கினான் [5].(51) கோபத்தால் தூண்டப்பட்டுத் தங்கள் தேர்களிலிருந்த அந்த முதன்மையான தேர்வீரர்கள் இருவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் தங்கள் மோதலைக் கண்டு கொண்டிருந்த போதே போரிட்டனர் [6].(52)
[5] மன்மதநாத தத்தரின் பதிப்பில் 51வது ஸ்லோகம், "அப்போது கட்டுக்கடங்காத பூரிஸ்ரவஸ், சினத்தால் தூண்டப்பட்டு, தன் வாளை உயர்த்தி, மதங்கொண்ட யானையொன்று அதே நிலையிலுள்ள மற்றொன்றைத் தாக்குவதைப் போலச் சாத்யகியைத் தாக்கினான்" என்றிருக்கிறது. பூரிஸ்ரவஸ் சாத்யகியைக் கத்தியால் தாக்கினான் என்பது கங்குலியிலும், வேறொரு பதிப்பிலும் இல்லை.[6] இப்படியே மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இருக்கிறது. ஆனால் வேறொரு பதிப்பிலோ, "யுத்தத்தில் கோபங்கொண்டவர்களும், வீரர்களுள் தலைவர்களும், ரதத்தில் வீற்றிருப்பவர்களுமான கேசவரும், அர்ஜுனனும் யுத்தகளத்தில் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே புஜபலமுள்ளவனான பூரிஸ்ரவஸ் சாத்யகியைத் தூக்கிப் பூமியில் அடித்தமையால் பக்கத்ததிலுள்ள சைனிகளர்களுக்கும் மேகத்தின் இடிமுழக்கம் போன்ற பெரிதான ஆரவாரம் உண்டாயிற்று" என்றிருக்கிறது. பூரிஸ்ரவசும், சாத்யகியும் தங்கள் தேர்களில் இருந்து போரிட்டனர் என்பது இல்லாமல், கிருஷ்ணனும், அர்ஜுனனும் தேரில் இருந்து கண்டதாகச் சொல்லப்பட்டுள்ளது.
அப்போது வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன், அர்ஜுனனிடம், "விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியானவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்குவதைப் பார்.(53) மிகக் கடினமான சாதனைகளை அடைந்த அவன் {சாத்யகி}, முயற்சியால் களைத்துப்போய்த் தன் தேரை இழந்தான். ஓ! அர்ஜுனா, உன் வீரச் சீடன் சாத்யகியைக் காப்பாயாக.(54) ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, மனிதர்களில் முதன்மையான அவன் {சாத்யகி}, வேள்விகளில் அர்ப்பணிப்புள்ள பூரிஸ்ரவஸுக்கு உன் நிமித்தமாக அடிபணியாதிருக்கும்படி பார்த்துக் கொள்வாயாக. ஓ !பலம் வாய்ந்தவனே {அர்ஜுனா}, தேவையானதை விரைந்து செய்வாயாக" என்றான் {கிருஷ்ணன்}.(55)
தனஞ்சயன் {அர்ஜுனன்}, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}, "காட்டில் மதங்கொண்ட யானையொன்று வலிமைமிக்கச் சிங்கத்துடன் விளையாடுவதைப் போல அந்தக் குருக்களில் காளையும் {பூரிஸ்ரவஸும்}, அந்த விருஷ்ணிகளில் முதன்மையானவனும் {சாத்யகியும்} ஒருவருடனொருவர் விளையாடுவதைப் பார்" என்றான்.(56) பாண்டுவின் மகனான தனஞ்சயன் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போதே, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பூரிஸ்ரவஸ் தீவிரமாக முயன்று, சாத்யகியைத் தாக்கி, அவனைத் தரையில் கிடத்தியதால், துருப்புகளுக்கு மத்தியில் "ஓ" என்றும், "ஐயோ" என்றும் கூச்சல்கள் எழுந்தன.(57,58) யானையை இழுத்துச் செல்லும் சிங்கத்தைப் போல, குரு குலத்தில் முதன்மையானவனும், வேள்விகளில் அபரிமிதமாகக் கொடையளிப்பவனுமான அந்தப் பூரிஸ்ரவஸ், அந்தச் சாத்வதர்களில் முதன்மையானவனை {சாத்யகியை} இழுத்துச் சென்ற போது, அந்தப் போரில் மிகப் பிரகாசமாகத் தெரிந்தான்.(59)
பிறகு அம்மோதலில் தன் உறையில் இருந்து வாளை உருவிய பூரிஸ்ரவஸ், சாத்யகியின் தலைமுடியைப் பிடித்திழுத்து, தன் காலால் அவனது மார்பைத் தாக்கினான்.(60) பிறகு பூரிஸ்ரவஸ், காது குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட சாத்யகியின் தலையை அவனது உடலில் இருந்து துண்டிக்க எத்தனித்தான். அப்போது அந்தச் சாத்வத வீரனின் {சாத்யகியின்} தலையானது, அதன் முடியை {குடுமியைப்} பிடித்திருந்த பூரிஸ்ரவஸின் கரத்தோடு சேர்ந்து கழியைச் சுற்றும் குயவனின் {மண் பாண்டம் செய்பவரின்} சக்கரம் போலச் சிறிது நேரம் வேகமாகச் சுழன்றது.(61,62)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தச் சாத்வதன் {சாத்யகி}, போரில் பூரிஸ்ரவஸால் இப்படி இழுத்துச் செல்லப்படுவதைக் கண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்} மீண்டும் அர்ஜுனனிடம், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் புலியும், உன் சீடனும், வில்லாளித்தன்மையில் {விற்திறமையில்} உனக்குச் சற்றும் குறைவில்லாதவனுமான அவன் {சாத்யகி}, சோமதத்தன் மகனுக்கு {பூரிஸ்ரவஸுக்கு} அடங்கிவிட்டான்.(64) ஓ! பார்த்தா {அர்ஜுனா}, இந்தப் பூரிஸ்ரவஸ், கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்ட விருஷ்ணி வீரன் சாத்யகியை இப்படி மீறியிருப்பதால், பின்னவனின் {சாத்யகியின்} பெயரே பொய்யாகப் போகிறது [7]" என்றான் {கிருஷ்ணன்}.(65)
[7] "65ம் சுலோகத்தை நான் சரியாக வழங்கவில்லை. "சத்யவிகர்மன்" என்று சாத்யகி அழைக்கப்படுகிறான், அஃதாவது "உண்மையான ஆற்றல் கொண்டவன்", அல்லது "கலங்கடிக்கப்பட முடியாத ஆற்றல் கொண்டவன்" என்பது அதன் பொருள். இவன் இன்று பூரிஸ்ரவஸிடம் தோல்வியை அடைந்தால், அவனது அந்தப் பட்டப் பெயர் பொய்யாகிவிடும். இதையே கிருஷ்ணன் சொல்ல வருகிறான்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.
வாசுதேவனால் {கிருஷ்ணனால்} இப்படிச் சொல்லப்பட்டவனும், வலிய கரங்களைக் கொண்டவனுமான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அந்தப் போரில் பூரிஸ்ரவஸை மனதினால் வழிபட்டான்.(66) அவன் {அர்ஜுனன்} "குருக்களின் புகழை அதிகரிப்பவனான பூரிஸ்ரவஸ், விளையாட்டில் இழுப்பதைப் போலப் போரில் சாத்யகியை இழுக்கிறான் என்பதில் நான் மகிழ்கிறேன்.(67) விருஷ்ணி குல வீரர்களில் முதன்மையானவனான சாத்யகியைக் கொல்லாமல், பெரும் யானையை இழுத்துச் செல்லும் வலிமைமிக்கச் சிங்கத்தைப் போல இந்தக் குரு போர்வீரன் {பூரிஸ்ரவஸ்} அவனை {சாத்யகியை} இழுத்துச்செல்ல மட்டுமே செய்கிறான்" என்று நினைத்தான் {அர்ஜுனன்}.(68)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிருதையின் {குந்தியின்} மகனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அர்ஜுனன், அந்தக் குரு {கௌரவப்} போர்வீரனை {பூரிஸ்ரவஸை} இப்படியே மனதால் பாராட்டிவிட்டு, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்}(69), "ஓ! மாதவா {கிருஷ்ணா}, என் கண்கள் சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} மீது நிலைத்திருந்ததால், என்னால் சாத்யகியைக் காண முடியவில்லை. எனினும், அந்த யாதவப் போர்வீரனுக்காக {சாத்யகிக்காக} நான் மிகக் கடினமான சாதனையையும் செய்வேன்" என்று மறுமொழி கூறினான்.(70)
வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்குப்} பணிந்து இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கூரிய க்ஷுரப்ரம் {கத்தி போன்ற தலை கொண்ட கணை} ஒன்றைக் காண்டீவத்தில் பொருத்தினான்.(71) பார்த்தனின் {அர்ஜுனனின்} கரங்களால் ஏவப்பட்டதும், ஆகாயத்தில் இருந்து சுடர்விட்டபடி விழும் கண்கவரும் விண்கல்லுக்கு ஒப்பானதுமான அந்தக் கணை, வாளைத் தன் பிடியில் கொண்டிருந்ததும், அங்கதத்தால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான அந்தக் குரு போர்வீரனின் {பூரிஸ்ரவஸின்} கரத்தைத் துண்டித்தது" என்றான் {சஞ்சயன்}.(72)
ஆங்கிலத்தில் | In English |