Sacrifice of profuse gold! | Aswamedha-Parva-Section-88 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 73)
பதிவின் சுருக்கம் : வியாசரின் ஆணையின் பேரில் அஸ்வமேத யாகத்தைத் தொடங்கிய யுதிஷ்டிரன்; யாகத்தில் செய்யப்பட்ட சில சடங்குள்; யூபங்களில் கட்டப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை; யாகத்தை ஒட்டிய அழகிய சூழ்நிலை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாண்டவர்களின் அரண்மனைக்குள் நுழைந்த அந்த வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட இளவரசன் {பப்ருவாஹனன்}, ஆறுதல் தரும் இனிய சொற்களால் தன் பாட்டியை {பிதாமஹியை} வணங்கினான்.(1) அப்போது, ராணி சித்ராங்கதை, கௌரவ்யன் (என்ற பாம்பின்) மகள் (உலூபி) ஆகியோர் ஒன்றாகச் சேர்ந்து பிருதையையும் {குந்தியையும்}, கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} பணிவோடு அணுகினர். அதன் பிறகு அவர்கள் உரிய வழக்கத்தின்படி சுபத்திரையையும், குரு குலத்தின் பிற பெண்மணிகளையும் சந்தித்தனர்.(2) குந்தி அவர்களுக்கு ரத்தினங்கள் பலவற்றையும், விலைமதிப்புமிக்கப் பொருட்களையும் கொடுத்தாள். திரௌபதி, சுபத்திரை மற்றும் குரு குலத்தின் பிற பெண்மணிகள் ஆகியோர் அனைவரும் அவர்களுக்குப் பரிசுகளை அளித்தனர்.(3) பார்த்தனுக்கு {அர்ஜுனனுக்கு} ஏற்புடையதைச செய்யும் விருப்பத்துடன் கூடிய குந்தியால் அன்புடனும், மதிப்புடனும் நடத்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும், மதிப்புமிக்கப் படுக்கைகளுடனும், இருக்கைகளுடனும் அங்கேயே வசித்தனர்.(4)
(குந்தியால்) முறையாகக் கௌரவிக்கப்பட்டவனும், பெரும் சக்திமிக்கவனுமான மன்னன் பப்ருவாஹனன், உரிய சடங்குகளின்படி திருதராஷ்டிரனைச் சந்தித்தான்.(5) அதன் பிறகு மன்னன் யுதிஷ்டிரன், பீமன் மற்றுப் பிற பாண்டவர்களிடம் சென்றவனும், வலிமைமிக்கவனுமான அந்த மணிப்புர இளவரசன் அவர்கள் அனைவரையும் பணிவுடன் வணங்கினான்.(6) அவர்கள் அனைவரும் அவனைப் பேரன்புடன் தழுவிக் கொண்டு முறையான மதிப்பை அளித்தனர். அவனிடம் பெரும் நிறைவடைந்த அந்த வலிமைமிக்கத் தேர்வீரர்கள், அவனுக்குப் பெருஞ்செல்வக் கொடைகளை அளித்தனர்.(7) அதன் பிறகு, அந்த மணிப்புர மன்னன், தந்தையை அணுகும் இரண்டாம் பிரத்யும்னனைப் போலச் சக்கரம் மற்றும் கதாயுதம் தரித்த வீரனான கிருஷ்ணனைப் பணிவுடன் அணுகினான்.(8) கிருஷ்ணன் அந்த மன்னனுக்கு {பப்ருவாஹனனுக்குப்} பெரும் மதிப்புமிக்கதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், சிறந்த குதிரைகள் பூட்டப்பட்டதுமான சிறந்த தேரைக் கொடுத்தான்.(9) நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், பீமன், பல்குனன், இரட்டையர்கள் ஆகியோரும் தனித்தனியாக அவனைக் கௌரவித்து விலைமதிப்புமிக்கப் பரிசுப்பொருட்களை அளித்தனர்.(10)
மூன்றாம் நாளில், நாநயமிக்கவர்களில் முதன்மையானவரும், சத்யவதியின் மகனுமான வியாசர், யுதிஷ்டிரனை அணுகி,(11) "ஓ! குந்தியின் மகனே, இந்நாளில் இருந்து உன் வேள்வி தொடங்கட்டும். அதற்கான நேரம் வந்துவிட்டது. தொடங்குவதற்கான கணம் அருகில் இருக்கிறது. புரோஹிதர்கள் உன்னைத் தூண்டுகிறார்கள்.(12) எந்த அங்கமும் பழுதுபடாதவண்ணம் இந்த வேள்வி செய்யப்படட்டும். இந்த வேள்விக்குப் பெரும் அளவிலான தங்கம் தேவைப்படுவதன் விளைவால், அபரிமிதமான தங்க வேள்வி {பஹுஸுவர்ணகம்} என்று இஃது அழைக்கப்படுகிறது[1].(13) ஓ! பெரும் மன்னா, இந்த வேள்விக்கு ஆணையிட்ட தக்ஷிணையைவிட மூன்று மடங்கு கொடுப்பாயாக. பிராமணர்கள் இக்காரியத்தில் திறம்பெற்றவர்களாவர்[2].(14) ஓ! மன்னா, அபரிமிதமான கொடைகளுடன் கூடிய மூன்று குதிரை வேள்விகளைச் செய்த பலன்களை அடைவதன் மூலம் நீ உன் உற்றார் உறவினரைக் கொன்ற பாவத்தில் இருந்து விடுபடுவாய்.(15) ஓ! ஏகாதிபதி, குதிரைவேள்வியின் நிறைவில் ஒருவன் செய்யும் நீராடல் உயர்ந்த தூய்மையை அளிப்பதும், உயர்ந்த புண்ணியத்தை உண்டாக்குவதுமாகும். ஓ! குரு குலத்து மன்னா, அந்தப் பலன் {புண்ணியம்} உன்னுடையதாகும்" என்றார் {வியாசர்}.(16)
[1] கும்பகோணம் பதிப்பில், "விகல்பமுள்ளதான உன்னுடைய இந்த யாகமானது அஹீனமென்னப்படுகிறது. இதற்குப் பஹுவான ஸுவர்ணம் வேண்டியிருப்பதால் பஹுஸுவர்ணகமென்று பிரஸித்தி பெற்றது" என்றிருக்கிறது. விகல்பம் என்பதன் அடிக்குறிப்பில், "பலவிதமாயுள்ள" என்றும், அஹீனம் என்பதன் அடிக்குறிப்பில், "’அநேகம் ஸோமயாகங்கள் சேர்ந்தது; அல்லது திரவிய முதலியவற்றால் குறைவற்றத” என்பது பழைய உரை" என்றும் இருக்கிறது.[2] "ஒரு குதிரைவேள்விக்காக முக்கிய ரித்விக்குக்கு அல்லது வேறு பிராமணர்கள் உள்ளிட்ட ரித்விக்குகள் அனைவருக்கும் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும் தக்ஷிணை அல்லது வேள்விக் கொடை என்பது ஒரு குறிப்பிட்ட அளவில் ஆணையிடப்படும். வியாசர் அந்தத் தக்ஷிணையை மூன்று மடங்கு உயர்த்தித் தருமாறு அறிவுறுத்துகிறார். தக்ஷிணையை அதிகரிப்பதன் மூலம், வேள்வி செய்பவனின் புண்ணியமும் அதன்படியே அதிகரிக்கும் என்பது இங்கே பொருளாகத் தெரிகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அளவிலா நுண்ணறிவைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பட்டதும், நீதி மிக்க ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட யுதிஷ்டிரன், குதிரைவேள்வி செய்வதற்கான தீக்ஷைக்கு உட்பட்டான்[3].(17) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்}, அபரிமிதமான கொடைகளுடனும், உணவுக் கொடையுடனும் கூடியதும், அனைத்து விருப்பங்களும் கனியும் நிலையை எட்டச் செய்வதும், அனைத்துப் புண்ணியங்களையும் உண்டாக்கக்கூடியதுமான பெரும் குதிரை வேள்வியைச் செய்தான்.(18) வேதங்களை நன்கறிந்தவர்களான புரோகிதர்கள், முறையாக அனைத்துத் திசைகளிலும் திரிந்து கொண்டே அனைத்து சடங்குகளைச் செய்தனர். அவர்கள் அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்டவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருந்தனர்.(19) அங்கே விதிப்பிறழ்வுகள் ஏதும் நடக்கவில்லை, முறையற்ற வகையில் ஏதும் செய்யப்படவில்லை. மறுபிறப்பாளர்களில் முதன்மையானவர்களான அவர்கள், (சாத்திரங்களில்) விதிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, எந்த {சாத்திரப்} பரிந்துரையும் இல்லாத இடங்களில் எவ்வாறு செய்ய வேண்டுமோ அவ்வாறே செய்தனர்[4].(20)
[3] "தீக்ஷை என்பது தொடக்க விழாவாகும். எதை விரும்பி வேள்வி செய்கிறார்களோ அந்த நோக்கத்தை அறிவிக்கும் வகையில் அதில் மந்திரங்கள் சொல்லப்படும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[4] "ஒரு வேள்வி அல்லது அறச்சடங்கின் நடைமுறையே கர்மம் என்பதாகும். உண்மையில் சடங்குகளின் நடைமுறைகள் சாத்திரங்களில் விதிக்கப்பட்டிருக்கின்றன. எனினும், குறிப்பிட்ட செயல்கள் விதிக்கப்படவில்லையெனினும், அறிவுக்குப் பொருத்தமாக ஏற்புடைய வகையில் இருக்கும் அவையும் செய்யப்படுகின்றன. எனவே, 20ம் ஸ்லோகத்தின் இரண்டாம் வரியில் சொல்லப்படுவது என்னவெனில், விதிக்கப்பட்ட வகையிலும், உள்ளுணர்வுகளுக்கு இணக்கமான வகையிலும் என இரு வகைகளிலும் நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டன என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, மறுபிறப்பாளர்களில் சிறந்தவர்களான அவர்கள், தர்மம் என்றும் வேறு பெயரில் அழைக்கப்படுவதும், பிரவர்க்யம் என்றும் அழைக்கப்படுவதுமான சடங்கை முதலில் செய்து, அதன் பிறகு அபிஷவம் எனும் சடங்கையும் முறையாகச் செய்தனர்[5].(21) சோமத்தைப் பருகுபவர்களின் முதன்மையான அவர்கள், ஓ! ஏகாதிபதி, சோமச்சாற்றைப் பிரித்தெடுத்த பிறகு, சாத்திரங்களின் ஆணைகளைப் பின்பற்றி ஸவனச் சடங்கைச்[6] செய்தனர்.(22) அந்த வேள்விக்கு வந்தோரின் மத்தியில் உற்சாகமற்ற எவரையும், வறுமையில் உள்ள எவரையும், பசியில் உள்ள எவரையும், துயரில் மூழ்கிய எவரையும், மோசமாகத் தெரிபவர் எவரையும் காணமுடியவில்லை.(23) மன்னனின் {யுதிஷ்டிரனின்} ஆணையின் பேரில், வலிமையும், சக்தியுமிக்கப் பீமசேனன், உண்ண விரும்புவோருக்கு மத்தியில் இடையறாமல் உணவைப் பரிமாறச் செய்தான்.(24) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், அனைத்து வகை வேள்விச் சடங்குகளையும் நன்கறிந்தவர்களுமான புரோஹிதர்கள், ஒவ்வொரு நாளும் அந்தப் பெரும் வேள்வி நிறைவடைவதற்குத் தேவையான செயல்களை அனைத்தையும் செய்தனர்.(25)
[5] "ப்ரவர்க்யம் என்பது ஒரு வேள்வியில் செய்யப்படும் தொடக்கநிலை சிறப்புச் சடங்காகும். அபிஷவம் என்பது மந்திரங்களைக் கொண்டு புனிதமாக்கப்பட்ட சோமக்கொடியில் இருந்து சாற்றைப் பிரித்தெடுக்கும் சடங்காகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தர்மத்தை அறிந்த பிராம்மண ஸ்ரேஷ்டர்கள் ப்ரவர்க்யம் என்னும் கர்மத்தை விதிப்படி செய்தார்கள். அந்தப் பிராம்மணர்கள் அவ்வாறே அபிஷவம் என்னும் கர்மாவையும் விதிப்படி செய்தார்கள்" என்றிருக்கிறது. ப்ரவர்க்யம் என்பதன் அடிக்குறிப்பில், "ஸோம யாகத்தில் முதலில் செய்யப்படும் யாகம்" என்றும், அபிஷவம் என்பதன் அடிக்குறிப்பில், "’ஸோமலதையை இடிப்பது’ என்பது பழைய உரை" என்றும் இருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "தர்மத்தை அறிந்தவர்களும், பிராமணர்களில் உயந்தவர்களுமான அவர்கள், தொடக்கச் சடங்குகளைச் செய்தனர். ஓ! மன்னா, விதிகளைப் பின்பற்றும் அந்தப் பிராமணர்கள் சோமச்சாற்றையும் பிரித்தெடுத்தனர்" என்றிருக்கிறது.[6] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், ஸவனம் என்பது, "ஹோமங்களின் வகைகள்" என்றிருக்கிறது.
பெரும் நுண்ணறிவைக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரனுடைய சத்யஸ்களுக்கு மத்தியில், (வேத) கல்வியின் ஆறு கிளைகளை நன்கறியாத எவரும் இல்லை. அவர்களுக்கு மத்தியில், நோன்புகளை நோற்காத எவரும், உபாத்யாயராக இல்லாத எவரும், இயங்கியல் சர்ச்சைகளை நன்கறியாத எவரும் இல்லை.(26) ஓ! பாரதக் குலத்தின் தலைவா, வேள்வித் தூணை {யூபத்தை} நிறுவதற்கான வேளை வந்தபோது, வில்வத்தாலான {பில்வத்தாலான} ஆறு வேள்வித் தூண்களும், காதிரத்தாலான {செங்கருங்காலியாலான} ஆறும், சர்வவர்ணினாலான {பலாசத்தாலான / புரசாலான} ஆறும் அமைக்கப்பட்டன.(27) குரு மன்னனின் {யுதிஷ்டிரனின்} அந்த வேள்வியில் தேவதாருவாலான இரண்டு வேள்வித்தூண்களும் {யூபங்களும்}, சிலேஷ்மாதகத்தாலான {இலுப்பையாலான} ஒன்றும் புரோகிதர்களால் அமைக்கப்பட்டன.(28) மன்னனின் ஆணையின் பேரில், தங்கத்தாலான வேள்வித்தூண்கள் சில அழகின் நிமித்தமாக மட்டுமே பீமனால் அமைக்கப்பட்டன.(29) அந்த அரசமுனியால் கொடுக்கப்பட்ட அழகிய துணிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த வேள்வித் தூண்கள் ஒவ்வொன்றும், தேவர்களும், தெய்வீக முனிவர்கள் எழுவரும் சூழ்ந்த நிற்க சொர்க்கத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்திரனைப் போலிருந்தன.(30)
அங்கே சயனத்தைக் கட்டுவதற்காக எண்ணற்ற தங்கக் கற்கள் உண்டாக்கப்பட்டன. அந்தச் சயனமும் உயிரினங்களின் தலைவனான தக்ஷனுக்காக (அவன் தன் பெரு வேள்வியைச் செய்து கொண்டிருந்த போது) அமைக்கப்பட்ட சயனத்திற்கு ஒப்பான அழகுடன் திகழ்ந்தது.(31) பதினெட்டு முழம் அளவு கொண்ட அந்தச் சயனம் நான்கு அறைகள் அல்லது குகைகளைக் கொண்டிருந்தது. அப்போது {அந்த அறைகளில்} முக்கோணங்களில் கருடனின் வடிவிலான தங்கப் பறவை ஒன்று அமைக்கப்பட்டது[7].(32) சாத்திர விதிகளைப் பின்பற்றியவர்களும், பெரும் கல்வியாளர்களுமான புரோகிதர்கள், அந்த {இருபத்தோரு} வேள்வித்தூண்களில் {யூபங்களில்} விலங்குகள் மற்றும் பறவைகளைக் கட்டி அவற்றில் ஒவ்வொன்றையும் ஒரு குறிப்பிட்ட தேவனுக்கென ஒதுக்கினர்[8].(33) வேள்வி நெருப்புத் தொடர்பான சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, சாத்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட காளைகளும், நீர்வாழ் விலங்கினங்களும் அந்த வேள்வித்தூண்களில் {யூபங்களில்} முறையாகக் கட்டப்பட்டன.(34) உயர் ஆன்மக் குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனின்} வேள்வியில், அந்த முதன்மையான குதிரை {வேள்விக் குதிரை} உட்பட முன்னூறு விலங்குகள் அந்த வேள்வித்தூண்களில் கட்டப்பட்டன[9].(35)
[7] "இந்தக் கட்டமைப்புகள் அல்லது வடிவங்கள் என்னென்ன என்பதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. ஒருவேளை இவை வேள்விப்பீடத்தில் பொன்மணலால் வரையப்படும் வடிவங்களாக இருக்கலாம். தற்காலத்தில், சிவப்பு, மஞ்சள், நீலம் முதலிய வண்ணங்களிலான அரிசிப்பொடி பயன்படுத்தப்படுகிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "அந்த யாகத்திற்குப் பதினெட்டு முழம் நீளமுள்ளவைகளும், ஸுவர்ணமயமான இறகுள்ளவைகளும், மூன்று கோணங்களுள்ளவைகளும், கருடன் போன்ற வடிவமுள்ளவைகளுமான நான்கு சயனங்கள் அமைக்கப்படிருந்தன" என்றிருக்கிறது. சயனம் என்பதன் அடிக்குறிப்பில், "சயனம் என்றால் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்தச் சொல்லுக்குத் திரள் அல்லது குவியல் என்ற பொருளும் உண்டு. இஃது ஒருவகையான கட்டமைப்பு என்பது வெளிப்படையானது" என்றிருக்கிறது.[8] "ஒவ்வொரு விலங்கும் ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[9] சுலோகம் எண்கள் 27 -28ல் 6+6+6+2+1 என இருபத்தோரு வேள்வித்தூண்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இவற்றில் இறுதியாகச் சொல்லப்பட்ட இலுப்பையாலான வேள்வி மரத்தில் வேள்விக் குதிரைக் கட்டப்பட்டிருந்தால், மற்ற முன்னூறு விலங்குகளும் எஞ்சியிருந்த இருபது தூண்களில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அஃதாவது, ஒரு தூணில் பதினைந்து விலங்குகள் கட்டப்பட்டிருக்கலாம். தங்கத் தூண்கள் வேறு சிலவும் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை அழகுக்கு மட்டுமே நிர்மாணிக்கப்பட்ட என்பது 29ம் ஸ்லோகத்தில் காணக்கிடைக்கிறது.
தெய்வீக முனிவர்களுடனும், பாடிக்கொண்டிருக்கும் கந்தர்வர்கள் மற்றும் இன்பத்தில் ஆடிக் கொண்டிக்கும் அப்ரசரஸ்களின் பல்வேறு இனக்குழுவினருடனும் இருப்பது போல அந்த வேள்வி மிக அழகானதாகத் தெரிந்தது.(36) அங்கே கிம்புருஷர்களும் நிறைந்திருந்தனர், கின்னரர்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதை {அந்த வேள்விச் சாலையைச்} சுற்றிலும் தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்ட பிராமணர்களின் வசிப்பிடங்கள் இருந்தன.(37) மறுபிறப்பார்களில் முதன்மையானவர்களும், கல்வியின் அனைத்துக் கிளைகளையும் தொகுப்பவர்களும், வேள்விச் சடங்குகளை நன்கு அறிந்தவர்களுமான வியாசரின் சீடர்கள் அங்கே தினமும் காணப்பட்டனர்.(38) அங்கே நாரதரும், பெருங்காந்தி கொண்ட தும்புருவும் இருந்தனர். இசையில் திறம்பெற்றவர்களான விஸ்வாவசு, சித்திரசேனன் மற்றும் பிறரும் அங்கே இருந்தனர்.(39) வேள்விச் சடங்குகளின் இடைவேளைகளில், இசையில் திறம் பெற்றவர்களும், நடனத்தை நன்கறிந்தவரகளுமான அந்தக் கந்தர்வர்கள், வேள்வியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பிராமணர்களுக்கு மகிழ்வூட்டினர்" {என்றார் வைசம்பாயனர்}.(40)
அஸ்வமேதபர்வம் பகுதி – 88ல் உள்ள சுலோகங்கள் : 40
ஆங்கிலத்தில் | In English |