Dhritarashtra dissuades Kunti! | Asramavasika-Parva-Section-18 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 18)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் வருத்தத்துடன் திரும்பியது; திருதராஷ்டிரன் முதலியோர் கங்கைக் கரையில் மாலைக் கடன்களைச் செய்து இரவைக் கழித்தது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! மன்னர்களில் சிறந்தவனே, பாவமற்ற பாண்டவர்கள், குந்தியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு வெட்கமடைந்தனர். எனவே, அவர்களும், பாஞ்சால இளவரசியும் {திரௌபதியும்} அவளைப் பின்தொடர்வதை நிறுத்தினர்[1].(1) குந்தி காட்டுக்குச் செல்வதில் உறுதியாக இருப்பதைக் கண்ட பாண்டவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் உரக்கக் கதறினர்.(2) பிறகு, பாண்டவர்கள் மன்னனை {திருதராஷ்டிரனை} வலம் வந்து அவனை முறையாக வணங்கினர். அதன்பிறகு, திரும்பி வருவதற்குப் பிருதையை {குந்தியைச்} சம்மதிக்க வைக்கத் தவறிய அவர்கள் மேலும் பின்தொடர்வதை நிறுத்திக் கொண்டனர்.(3)
[1] "குந்தி சொன்ன சொற்கள் நீதிமிக்கவையாக இருந்தன. அவளுடைய மகன்களின் தரப்பால் அறிவுக்குப் பொருத்தமான எதிர் கருத்துகளை வைக்க முடியவில்லை. எனவே, வெட்கமடைந்தனர்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
அப்போது, பெரும் சக்தி கொண்டவனும், அம்பிகையின் மகனும், காந்தாரி மற்றும் விதுரனால் தாங்கப்பட்டவனுமான திருதராஷ்டிரன், அவர்களிடம்,(4) "யுதிஷ்டிரனின் அரசத்தாய் நம்மோடு வர வேண்டாம். யுதிஷ்டிரன் சொன்ன அனைத்தும் உண்மையே.(5) மகன்களின் பெருஞ்செழிப்பைக் கைவிட்டு, தன்னுடையவையாகக்கூடிய உயர்ந்த பயன்களையும் கைவிட்டு, புத்தியற்ற ஒருத்தியைப் போலத் தன் பிள்ளைகளை விட்டுவிட்டு அடைதற்கரிதான காட்டுக்குள் இவள் ஏன் செல்ல வேண்டும்?(6) இவள் அரசுரிமையை அனுபவித்துக் கொண்டே, தவங்களைப் பயின்று, கொடைகளின் உயர்ந்த நோன்புகளை நோற்று வாழ இயன்றவளே.(7) ஓ! காந்தாரி, என்னுடைய மருமகளான இவளுடைய {குந்தியினுடைய} தொண்டில் நான் மிகவும் நிறைவடைந்திருக்கிறேன். கடமைகள் அனைத்தையும் அறிந்தவளான உனக்கு அவளைத் திரும்பிச் செல்லுமாறு ஆணையிடுவதே தகும்" என்றான்.(8)
இவ்வாறு தன் தலைவனால் சொல்லப்பட்ட சுபலனின் மகள் {காந்தாரி}, ஆழ்ந்த பொருளுள்ள தன் சொற்களையும் சேர்த்து முதிர்ந்த மன்னனின் அந்தச் சொற்கள் அனைத்தையும் குந்தியிடம் மீண்டும் சொன்னாள்.(9) எனினும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்திருந்தவளும், கற்புடைய பெண்ணுமான குந்தி காட்டைத் தன் வசிப்பிடமாகக் கொள்வதில் உறுதியாகத் தன் இதயத்தை நிலைக்கச் செய்திருந்ததால் அவளைத் தடுப்பதில் அவள் தவறினாள்.(10) காட்டுக்கு ஓய்ந்து செல்வதில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருந்த அவளைப் புரிந்து கொண்ட குரு பெண்மணிகள், குரு குலத்தின் முதன்மையானவர்கள் (தங்கள் கணவர்கள்) அவளைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்திவிட்டதைக் கண்டு, உரக்க ஓலமிட்டு அழுதனர்.(11) பிருதையின் {குந்தியின்} மகன்கள் அனைவரும், பெண்மணிகள் அனைவரும் தங்கள் சுவடுகளைப் பின்பற்றிச் சென்ற பிறகும் பெரும் ஞானம் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன் காடுகளை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.(12)
பெரிதும் உற்சாகமற்றிருந்த பாண்டவர்கள், துயரிலும், கவலையிலும் பீடிக்கப்பட்டவர்களாகத் தங்கள் மனைவியருடன் தங்கள் தேர்களில் நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர்.(13) முதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட மொத்த மக்களுடன் கூடிய ஹஸ்தினாபுர நகரம் அந்நேரத்தில் உற்சாகமற்றதாகவும், கவலையில் மூழ்கியதாகவும் இருந்தது.(14) துயரால் பீடிக்கப்பட்டிருந்த பாண்டவர்கள் சக்தியேதுமற்றவர்களாக இருந்தனர். குந்தியால் கைவிடப்பட்ட அவர்கள் தாயற்ற கன்றுகளைப் போல ஆழ்ந்த துயரில் பீடிக்கப்பட்டிருந்தனர்.(15)
அதே நாளில் திருதராஷ்டிரன் அந்நகரத்தில் இருந்து அகன்று ஓரிடத்தை அடைந்தான். பலமிக்கவனான அந்த ஏகாதிபதி இறுதியாகப் பாகீரதி ஆற்றின் கரையை அடைந்து இரவில் அங்கேயே ஓய்ந்திருந்தான்.(16) வேதங்களை அறிந்த பிராமணர்கள், அந்தத் தவசிகளின் ஆசிரமத்தில் புனித நெருப்புகளை மூட்டினர். அந்த முதன்மையான பிராமணர்களால் சூழப்பட்டிருந்த அந்தப் புனித நெருப்புகள் அழகில் சுடர்விட்டெரிந்தன. அந்த முதிய மன்னனின் {திருதராஷ்டிரனின்} புனித நெருப்பும் மூட்டப்பட்டது.(17) தன்னுடைய நெருப்பின் அருகில் அமர்ந்த அவன், உரிய சடங்குகளின் படி அதில் ஆகுதிகளை ஊற்றி, ஆயிரங்கதிர்களைக் கொண்ட சூரியன் மறையும் வேளையில் அவனை வழிபட்டான்.(18)
விதுரனும், சஞ்சயனும் குசப்புற்கள் சிலவற்றைப் பரப்பி மன்னனுக்குப் படுக்கையை அமைத்தனர். அந்தக் குரு வீரனின் படுக்கைக்கு அருகிலேயே காந்தாரிக்கும் மற்றொன்றை அமைத்தனர்.(19) சிறந்த நோன்புகளை நோற்பவளும், யுதிஷ்டிரனின் தாயுமான குந்தி, காந்தாரிக்கு மிக அருகிலேயே மகிழ்ச்சியாகப் படுத்துக் கொண்டாள்.(20) கேட்கும் தொலைவில் விதுரனும், பிறரும் உறங்கினர். யாஜக பிராமணர்களும், மன்னனைப் பின்தொடர்ந்து வந்த பிறரும், தங்கள் தங்களுக்குரிய படுக்கைகளில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(21)
அங்கே இருந்த முதன்மையான பிராமணர்கள் பலர் புனித மந்திரங்களை உரக்கச் சொன்னார்கள். வேள்வி நெருப்புகள் சுற்றிலும் சுடர்விட்டுக் கொண்டிருந்தன. எனவே, அந்த இரவு பிராம்மீ இரவைப் போல அவர்களுக்கு இனிமையாகத் தெரிந்தது[2].(22) அந்த இரவு கடந்ததும், அவர்கள் அனைவரும் தங்கள் படுக்கைகளில் இருந்து எழுந்து, தங்களுக்குரிய காலைச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். அதன் பிறகு புனித நெருப்பில் ஆகுதிகளை ஊற்றி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.(23) குரு நாட்டின் மாகாணங்களிலும், நகரங்களிலும் வசிப்பவர்களால் வருத்தமடைந்தவர்களும், துக்கமடைந்த இதயங்களைக் கொண்டவர்களுமான அவர்களுக்கு, காட்டில் முதல் நாள் அனுபவம் துன்பம் நிறைந்ததாக இருந்தது" {என்றார் வைசம்பாயனர்}.(24)
[2] "பிராம்மி இரவு என்பது புனித மந்திரங்கள் பாடப்படும் இரவைக் குறிப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், ப்ராம்மீ என்பதன் அடிக்குறிப்பில், "வேதகோஷம் செய்யப்படுகிற ஓர் இரவு என்பது இங்கிலீஷ் மொழிபெயர்ப்பிலுள்ள குறிப்பு" என்றிருக்கிறது.
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 18ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |