Hastinapur protected by Yuyutsu! | Asramavasika-Parva-Section-23 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 23)
பதிவின் சுருக்கம் : ஹஸ்தினாபுரத்தைப் பாதுகாக்க யுயுத்சுவும், தௌமியரும்; திருதராஷ்டிரன், காந்தாரி, குந்தி மற்றும் விதுரனைக் காணப் புறப்பட்ட பாண்டவக்கூட்டம் சென்ற வகை; காட்டுக்குள் நுழைந்து சதயூபனின் ஆசிரமத்தைத் தொலைவிலேயே அவர்கள் கண்டது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பாரதக் குலத்தில் முதன்மையான அவன் {யுதிஷ்டிரன்}, அர்ஜுனன் தலைமையிலானவர்களும், அண்டத்தைக் காப்பவர்களுக்கு {லோகபாலர்களுக்கு} ஒப்பானவர்களுமான வீரர்களால் பாதுகாக்கப்பட்டவையுமான தன் துருப்புகளைப் புறப்படுமாறு ஆணையிட்டான்.(1) உடனடியாக, குதிரைகளை ஆயத்தம் செய்து அணிவகுக்கச் செய்வதில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குதிரை வீரர்களுக்கு மத்தியில், "ஆயத்தமாவீர், ஆயத்தமாவீர்" என்ற சொற்கள் அடங்கிய பேராரவாரம் எழுந்தது.(2) சிலர் பல்லக்குகளிலும் {யானங்களிலும்}, சிலர் வாகனங்களிலும், சிலர் பெருவேகம் கொண்ட குதிரைகளிலும், சிலர் சுடர்மிக்க நெருப்பின் காந்தியுடன் கூடியவையும் தங்கத்தாலமைந்தவையுமான தேர்களிலும் சென்றனர்.(3) சிலர் பெரும் யானைகளிலும், ஓ! மன்னா, சிலர் ஒட்டகங்களிலும் சென்றனர். சிலர் புலிநகங்களோடு கூடிய போராளி வகையினுக்குரிய முறையில் கால்நடையாகவே சென்றனர்[1].(4)
[1] "'நகரப்ராஸ-யோதிந' என்பது இரும்பாலமைந்த புலி நகங்களைப் போன்ற ஆயுதங்களை இடுப்பில் கட்டிக் கொண்ட போராளிகள் என நீலகண்டர் விளக்குகிறார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "நகரங்களாலும், பிராஸங்களாலும் போர்புரிகின்றவர்களான மற்றவர்கள் காலாட்களாகச் சென்றார்கள்" என்றிருக்கிறது. நகரங்கள் என்பதன் அடிக்குறிப்பில், "புலிநகம்" என்றிருக்கிறது.
திருதராஷ்டிரனைக் காண விரும்பிய குடிமக்கள், மாகாணவாசிகள் ஆகியோர் பல்வேறு வகை வண்டிவாகனங்களில் மன்னனைப் பின்தொடர்ந்து சென்றனர்.(5) கோதம {கௌதமர்} குலத்தைச் சார்ந்தவரும், படைகளின் பெருந்தலைவரும், ஆசானுமான கிருபரும், மன்னனின் ஆணையின் பேரில் படைகளை அழைத்துக் கொண்டு அந்த முதிய ஏகாதிபதியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்றார்.(6) குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனான குரு மன்னன் யுதிஷ்டிரன், பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் சூழ, சூதர்கள், மாகாதர்கள் மற்றும் வந்திகளின் பெருங்கூட்டம் அவனுடைய புகழைப் பாடிக் கொண்டுவர, தலைக்கு மேல் வெண்குடையுடனும், தன்னைச் சுற்றிலும் பெரும் எண்ணிக்கையிலான தேர்களுடனும் பயணம் புறப்பட்டான்.(7,8)
காற்று தேவனின் மகனான விருகோதரன் {பீமன்}, நாண்பூட்டப்பட்ட வில்லுடனும், இயந்திரங்களுடனும், தாக்குதல் மற்றும் தடுத்தலுக்குரிய ஆயுதங்களுடனும் மலைபோன்ற ஒரு பெரிய யானையில் சென்று கொண்டிருந்தான்.(9) மாத்ரியின் இரட்டை மகன்கள் {நகுல சகாதேவன்}, கவசம்பூண்டு, நன்கு பாதுகாக்கப்பட்டவர்களாகவும், பதாகைகள் தரித்தவர்களாகவும் வேகமாகச் செல்லும் இரு குதிரைகளில் சென்றனர்.(10) வலிமையும், சக்தியும் கொண்டவனும், புலன்களைக் கட்டுப்பாட்டில் கொண்டவனுமான அர்ஜுனன், சிறந்த வெண்குதிரைகள் பூட்டப்பட்டதும், சூரியப் பிரகாசத்துடன் கூடியதுமான ஒரு சிறந்த தேரில் சென்றான்.(11) திரௌபதியின் தலைமையிலான அரச குடும்பத்துப் பெண்கள், பெண்களைக் கண்காணிப்பவர்களால் பாதுகாக்கப்பட்டவர்களாக, மூடப்பட்ட பல்லக்குகளில் சென்றனர். அவ்வாறு அவர்கள் சென்ற போது அபரிமிதமான செல்வமாரியைப் பொழிந்தனர்.(12)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தேர்கள், யானைகள், குதிரைகள் நிறைந்ததும், எக்காள முழக்கம் மற்றும் வீணைகளின் இசையை எதிரொலித்ததுமான அந்தப் பாண்டவக் கூட்டம் பேரழகுடன் சுடர்விட்டது.(13) ஓ! ஏகாதிபதி, அந்தக் குருகுலத் தலைவர்கள், இனிமைமிக்க ஆறுகள் மற்றும் தடாகங்களின் கரைகளில் ஓய்ந்திருந்து, மெதுவாகச் சென்றனர்.(14) வலிமையும், சக்தியும் கொண்ட யுயுத்சுவும், புரோகிதரான தௌமியரும், யுதிஷ்டிரனின் ஆணையின் பேரில் நகரத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர்.(15)
மெதுவாக அணிவகுத்துச் சென்ற மன்னன் யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரத்தை அடைந்த பிறகு, உயர்ந்ததும், புனிதமானதுமான யமுனையாற்றைக் கடந்து,(16) ஓ! குரு குலத்தோனே, பெரும் ஞானம் கொண்ட அரச முனி {சதயூபன்} மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோருடைய ஆசிரமத்தைத் தொலைவிலிருந்தே கண்டான்.(17) அப்போது, ஓ! பாரதக் குலத்தின் தலைவா, மகிழ்ச்சியில் நிறைந்த மனிதர்கள் அனைவரும், தங்கள் மகிழ்வொலிகளால் காட்டை நிறைத்தபடியே அதனுள் விரைவாக நுழைந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(18)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 18
ஆங்கிலத்தில் | In English |