The lamentation of Sahadeva! | Asramavasika-Parva-Section-22 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 22)
பதிவின் சுருக்கம் : குந்தியைக் காண்பதற்காகப் புலம்பிய சகாதேவன் மற்றும் திரௌபதி; திருதராஷ்டிரன் முதலியோரைக் காண தம்பிமாருடனும், நகரமக்களுடனும் காட்டுக்குச் சென்ற யுதிஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மனிதர்களில் முதன்மையானவர்களும், தங்கள் தாயை மகிழ்ச்சியடையச் செய்பவர்களுமான வீரப் பாண்டவர்கள் துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்தனர்.(1) முன்பு எப்போதும் அரச அலுவல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அவர்கள், அந்நேரத்தில் தங்கள் தலைநகரத்தில் எந்தச் செயல்களையும் கவனிக்காமல் இருந்தனர்.(2) துன்பத்தால் பெரிதும் பீடிக்கப்பட்டிருந்த அவர்கள், எதனிலிருந்தும் இன்பத்தை ஈட்டத் தவறினார்கள். அவர்களிடம் யாரும் எதுவும் கேட்டாலும் எந்தப் பதிலையும் அவர்கள் சொல்லவில்லை.(3) தடுக்கப்பட முடியாதவர்களான அந்த வீரர்கள் பெருங்கடலைப் போன்ற ஆழமான ஈர்ப்பைக் கொண்டவர்களாக இருந்தாலும், துன்பத்தால் தாங்கள் தங்கள் ஞானத்தையும், புலன் உணர்வுகளையும் இழந்துவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள்.(4)
பாண்டுவின் மகன்கள், தங்கள் தாய் அந்த முதிர்ந்த தம்பதியருக்குத் தொண்டாற்றி எவ்வளவு மெலிந்திருப்பாள் என்பதை நினைத்துக் கவலையில் நிறைந்தார்கள்.(5) {அவர்கள்}, "உண்மையில், மகன்கள் அனைவரும் கொல்லப்பட்டவரும், எந்தப் புகலிடமும் இல்லாதவருமான அந்த மன்னர் {திருதராஷ்டிரர்}, இரைதேடும் விலங்குகள் நடமாடும் காட்டுக்குள், தமது மனைவியுடன் மட்டும் எவ்வாறு தனியாக வாழ்கிறார்?(6) ஐயோ, உயர்வாக அருளப்பட்டவளும், தன் அன்புக்குரிய அனைவரும் கொல்லப்பட்டவளுமான ராணி காந்தாரி அந்தத் தனிமையான காட்டில் எவ்வாறு தன் குருட்டுத் தலைவனைப் பின்தொடர்ந்து செல்வாள்?" {என்று கேட்டனர்}.(7) பாண்டவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது வெளிப்பட்ட கவலைகள் இவ்வாறே இருந்தன. பிறகு அவர்கள், மன்னனை {திருதராஷ்டிரனை} அவனுடைய காட்டு ஆசிரமத்தில் காண்பதில் தங்கள் இதயங்களை நிலைக்கச் செய்தனர்.(8)
அப்போது, சகாதேவன் மன்னனை {யுதிஷ்டிரனை} வணங்கி, "நம் தந்தையை {பெரியப்பாவான திருதராஷ்டிரரைக்} காண்பதில் உமது இதயம் நிலைத்திருக்கிறது என்பதை நான் அறிவேன்.(9) எனினும், நான் உம்மீது கொண்டிருக்கும் மதிப்பின் காரணமாக, நாம் காட்டுக்குப் புறப்படும் காரியத்தில் என்னால் விரைவாக வாயைத் திறக்க முடியவில்லை. அந்தப் பயணத்திற்கான காலம் இப்போது வந்துவிட்டது.(10) குச {தர்ப்பை} மற்றும் காச {நாணல்} புற்களில் உறங்கி மெலிந்தவளும், கடுந்தவங்களைப் பயில்பவளும், தலையில் சடாமுடி தரித்தவளும், தவங்களை நோற்று வாழ்பவளுமான குந்தியை நற்பேற்றினால் நான் காணப் போகிறேன்.(11) அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் வளர்க்கப்பட்ட அவள், அனைத்து வகை வசதிகள் மற்றும் ஆடம்பரத்துடன் பராமரிக்கப்பட்டவளாவாள். ஐயோ, களைத்தவளும், பெரும் துயரில் மூழ்கியவளுமான என் அன்னையை நான் எப்போது காணப் போகிறேன்?(12) ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, பிறப்பால் இளவரசியான குந்தி, இப்போது காட்டில் துன்பத்தில் வாழ்ந்து வருவதால், மனிதர்களில் கதி பெரிதும் நிலையற்றதென்பதில் ஐயமில்லை" என்றான் {சகாதேவன்}.(13)
சகாதேவனின் இந்தச் சொற்களைக் கேட்டவளும், பெண்கள் அனைவரிலும் முதன்மையானவளுமான ராணி திரௌபதி, உரிய முறையில் மன்னனை வணங்கி மதித்து,(14) "ஐயோ, ராணி பிருதையை {குந்தியை} நான் எப்போது காணப் போகிறேன்? உண்மையில், அவள் இன்னும் உயிரோடு இருப்பாளா? ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, இன்னும் ஒருமுறை அவளைக் காண்பதில் நான் வென்றால் என் வாழ்வு வீணாகக் கழிக்கப்படவில்லை என்று நான் கருதிக் கொள்வேன்.(15) இந்த வகையிலான புத்தி எப்போதும் உம்மில் நிலைத்திருக்கட்டும். ஓ! மன்னர்களின் மன்னா, எங்களுக்கு உயர்ந்த வரத்தை அளிக்க விரும்பும் இத்தகைய அறம் செய்வதில் உம்முடைய மனம் எப்போதும் இன்புறட்டும்.(16) ஓ! மன்னா, உமது இல்லத்துப் பெண்மணிகளான இவர்கள் அனைவரும், குந்தி, காந்தாரி மற்றும் என் மாமனாரை {திருதராஷ்டிரரைக்} காண விரும்பி செல்லும் பயணத்திற்காகத் தங்கள் பாதங்களை உயர்த்திக் காத்திருக்கின்றனர் என்று அறிவீராக" என்றாள்.(17)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, "ராணியான திரௌபதியால் இவ்வாறு சொல்லப்பட்ட மன்னன் {யுதிஷ்சிரன்}, தன் படைத்தலைவர்கள் அனைவரையும் தன் முன்னிலைக்கு அழைத்து அவர்களிடம்,(18) "தேர்களும், யானைகளும் நிறைந்த என் படையை அணிவகுக்கச் செய்யுங்கள். இப்போது காட்டில் வாழ்ந்துவரும் மன்னர் திருதராஷ்டிரரை நான் காணப் போகிறேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.(19)
மேலும் அந்த மன்னன் {யுதிஷ்டிரன்}, பெண்களின் காரியங்களைக் கண்காணிப்போரிடம் {அந்தப்புரக் காவலர்களிடம்}, "பல்வேறு வகை வாகனங்களும், ஆயிரக்கணக்கில் இருக்கும் என்னுடைய பல்லக்குகளும் ஆயதம் செய்யப்படட்டும்.(20) வண்டிகள், பொருள் களஞ்சியங்கள், உடையலமாரிகள், கருவூலங்கள் ஆகியவையும், கைவினைசர்களும் ஆயத்தமாகி, வெளியே வரட்டும், கைவினைஞர்களும் வெளியே வரட்டும். கருவூல அதிகாரிகள், குருக்ஷேத்திரத்தில் உள்ள தவசியின் {சதயூபனின்} ஆசிரமத்திற்குச் செல்லும் பாதையில் செல்லட்டும்.(21) குடிமக்களில் மன்னனைக் காண விரும்பும் எவரும் எத்தடையும் இன்றி அனுமதிக்கப்படுவார்கள். அவன் {அத்தகையவன்} முறையான பாதுகாப்புடன் செல்லட்டும்.(22) சமையற்காரர்கள், சமையலறை கண்காணிப்பாளர்கள் {பௌரோகவர்கள்} ஆகியோரும், சமையலுக்கான மொத்த அமைப்பு, பல்வேறு வகை உணவு மற்றும் பான வகைகள் ஆகியவையும் வண்டிகள் மற்றும் வாகனங்களில் கொண்டு செல்லப்படட்டும்.(23) நாம் நாளை புறப்படுகிறோம் என்பது அறிவிக்கப்படட்டும். உண்மையில், (இந்த ஏற்பாடுகளைச் செய்வதில்) காலதாமதமேதும் நேரவேண்டாம். வழியில் பல்வேறு வகை அரங்குகளும், ஓய்வில்லங்களும் அமைக்கப்படட்டும்" என்று ஆணையிட்டான் {யுதிஷ்டிரன்}.(24)
தம்பிகளுடன் கூடியவனான பாண்டுவின் மூத்த மகன் இட்ட ஆணைகள் இவையே. ஓ! ஏகாதிபதி, காலை வந்ததும், மன்னன் {யுதிஷ்டிரன்} பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்கிய பெரிய பரிவாரத்துடன் புறப்பட்டான்.(25) தன் நகரைவிட்டு வெளியே வந்த மன்னன் யுதிஷ்டிரன், குடிமக்கள் தன்னோடு வருவதற்கு ஏதுவாக ஐந்து நாட்கள் காத்திருந்து, அதன் பிறகு காட்டை நோக்கிச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(26)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 22ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |