Falling down one by one! | Mahaprasthanika-Parva-Section-2 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : வரிசையாகச் செல்லும்போது திரௌபதியும் பாண்டவர்களும் ஒவ்வொருவராக விழுவது; அவர்கள் விழக் காரணம் கேட்ட பீமனுக்குப் பதில் சொல்லி வந்த யுதிஷ்டிரன்; நாய் மட்டும் தொடர்ந்து சென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாக்களைக் கொண்டவர்களும், யோகத்திற்குத் தங்களை அர்ப்பணித்திருந்தவர்களுமான அந்த இளவரசர்கள் {பாண்டவர்கள்} வடக்கு நோக்கிச் சென்று மிகப் பெரும் மலையான ஹிமவானை {இமயத்தைக்} கண்டனர்.(1) ஹிமவானைக் கடந்த அவர்கள், மணல் நிறைந்த ஒரு பெரிய பாலைவனத்தைக் கண்டனர். பிறகு அவர்கள், உயர்ந்த சிகரங்கள் கொண்ட மலைகளில் முதன்மையான மேரு மலையைக் கண்டனர்.(2) யோகத்தில் குவிந்திருந்த அந்த வலிமைமிக்கவர்கள் அனைவரும் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, யாஜ்ஞசேனி {திரௌபதி} யோகத்தில் இருந்து வீழ்ந்து பூமியில் விழுந்தாள்.(3)
பெரும்பலம் கொண்ட பீமசேனன் அவளது வீழ்ச்சியைக் கண்டு நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(4) "ஓ! பகைவரை எரிப்பவரே, இந்த இளவரசி எந்தப் பாவச் செயலையும் செய்யவில்லை. இந்தக் கிருஷ்ணை பூமியில் விழுந்ததற்கான காரணத்தை எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(5)
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "தனஞ்சயனுக்கு {அர்ஜுனனுக்குத்} தனிச்சிறப்பளிக்கும் பெரும்பாகுபாடு இவளிடம் {திரௌபதியிடம்} உண்டு. ஓ! மனிதர்களில் சிறந்தவனே, அவ்வொழுக்கத்தின் கனியை {பலனை} அவள் இன்று அடைந்திருக்கிறாள்" என்றான்".(6)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பாரதக் குலத்தில் முதன்மையான அவன், இதைச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து சென்றான். அற ஆன்மாவையும், பெரும் நுண்ணறிவையும் கொண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், மனத்தில் மனத்தையே கொண்டு தொடர்ந்து சென்றான்.(7) அப்போது, பெரும் கல்வி கற்றவனான சகாதேவன் பூமியில் விழுந்தான். அவன் கீழே விழுவதைக் கண்ட பீமன் மன்னனிடம்,(8) "ஐயோ, பெரும் பணிவுடன் நம் அனைவருக்கும் தொண்டு செய்துவந்த மாத்ராவதியின் மகன் {சகாதேவன்}, ஏன் பூமியில் விழுந்தான்?" என்று கேட்டான்.(9)
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "அவன் {சகாதேவன்}, ஒருபோதும் ஞானத்தில் தனக்கு இணையானவரென ஒருவரையும் கருதவில்லை. அந்தக் குற்றத்தின் காரணமாகவே இந்த இளவரசன் {சகாதேவன்} விழுந்தான்" என்றான்".(10)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன மன்னன், சகாதேவனை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றான். உண்மையில், குந்தியின் மகனான யுதிஷ்டிரன், தன் சகோதரர்களுடனும், நாயுடனும் தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.(11) உற்றார் உறவினரிடம் பேரன்பு கொண்டவனும், துணிச்சல்மிக்கவனுமான நகுலன், கிருஷ்ணை {திரௌபதி} மற்றும் பாண்டவனான சகாதேவன் ஆகிய இருவரும் விழுவதைக் கண்டு கீழே விழுந்தான்.(12) பெரும் மேனியெழில் கொண்ட வீர நகுலன் விழுந்ததும், பீமன் மீண்டும் மன்னனிடம்,(13) "முழுமையான அறவோனும், நம் ஆணைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிந்தவனும், அழகில் ஒப்பற்றவனுமான இந்த நகுலன் கீழே விழுந்துவிட்டான்" என்றான்.(14)
பீமசேனனால் இவ்வாறு கேட்கப்பட்ட யுதிஷ்டிரன், நகுலனைக் குறித்து இந்தச் சொற்களைச் சொன்னான்: "அவன் அற ஆன்மா கொண்டவனாகவும், நுண்ணறிவு மிக்க மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவனாகவும் இருந்தான்.(15) எனினும், மேனியெழில் தனக்கு நிகராக எவரும் இல்லையென அவன் {நகுலன்} நினைத்தான். உண்மையில், அந்த வகையில் அவன் தன்னை அனைவரிலும் மேன்மையானவனாகக் கருதினான்.(16) அதன் காரணமாகவே நகுலன் விழுந்தான். ஓ! விருகோதரா {பீமா}, இதை அறிவாயாக. ஓ! வீரா, ஒரு மனிதனுக்காக விதிக்கப்பட்டதை அவன் அனுபவிக்கவே வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.(17)
வெண்குதிரைகளைக் கொண்டவனும், பகைவீரர்களைக் கொல்பவனும், பாண்டுவின் மகனுமான அர்ஜுனன், நகுலனும், பிறரும் விழுவதைக் கொண்டு, இதயத்தில் பெரும் துயருடன் கீழே விழுந்தான்.(18) மனிதர்களில் முதன்மையானவனும், சக்ரனின் சக்தியைக் கொண்டவனுமான அவன் {அர்ஜுனன்} கீழே விழுந்தபோது, உண்மையில், வெல்லப்பட முடியாதவனான அந்த வீரன் மரணத் தருவாயில் இருந்தபோது, பீமன் மன்னனிடம் {யுதிஷ்டிரனிடம்},(19) "இந்த உயர் ஆன்மா எந்தப் பொய்யையும் சொன்னதாக எனக்கு நினைவில்லை. உண்மையில், கேலிக்காகக் கூட இவன் பொய்யேதும் பேசியவனல்ல. எந்தத் தீய விளைவின் காரணமாக இவன் பூமியில் விழுந்தான்?" என்று கேட்டான்.(20)
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "அர்ஜுனன், நம் பகைவர்கள் அனைவரையும் ஒரே நாளில் எரித்துவிடுவேன் என்று சொன்னான். தன் வீரத்தில் செருக்குக் கொண்டவனாக இருப்பினும், அதை அவன் {அர்ஜுனன்} நிறைவேற்றவில்லை. அதனால் அவன் வீழ்ந்தான்.(21) இந்தப் பல்குனன், வில்லாளிகள் அனைவரையும் அலட்சியமாகக் கருதினான். செழிப்பில் விருப்பம் இருக்கும் ஒருவன் ஒருபோதும் இத்தகைய மிகையுணர்வுகளில் ஈடுபடக்கூடாது" என்றான்".(22)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச்சொல்லிவிட்டு மன்னன் தொடர்ந்து சென்றான். பிறகு பீமன் விழுந்தான். கீழே விழுந்த பீமன், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம்,(23) "ஓ! மன்னா, பார்ப்பீராக. உமக்கு அன்பான நான் விழுந்துவிட்டேன். என்ன காரணத்தினால் நான் விழுந்தேன்? அதை நீர் அறிந்தால் எனக்குச் சொல்வீராக" என்றான்.(24)
யுதிஷ்டிரன் {பீமனிடம்}, "நீ அதிகம் உண்டாய், உன் பலம் குறித்துத் தற்பெருமை பேசினாய். ஓ! பார்த்தா {பீமா}, உண்ணும்போது, நீ பிறரின் தேவையை ஒருபோதும் கவனிக்கவில்லை. ஓ! பீமா, அதற்காகவே நீ விழுந்தாய்" என்றான்.(25)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, திரும்பிப் பார்க்காமல் தொடர்ந்து சென்றான். அவன், நான் மீண்டும் மீண்டும் உன்னிடம் சொன்ன அந்த நாய் மட்டுமே ஒரே துணையாக அவனை {யுதிஷ்டிரனைப்} பின்தொடர்ந்து சென்றது" {என்றார் வைசம்பாயனர்}.(26)
மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 2ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English |