The long journey! | Mahaprasthanika-Parva-Section-1 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : பரிக்ஷித்துக்கு முடிசூட்டி, யுயுத்சுவிடம் நாட்டை ஒப்படைத்த யுதிஷ்டிரன்; நகரவாசிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தம்பியருடனும், திரௌபதியுடனும் புறப்பட்டது; அக்னியின் சொற்படி காண்டீவத்தையும், அம்பறாதூணியையும் கடலில் போட்ட அர்ஜுனன்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்}.
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "விருஷ்ணி மற்றும் அந்தகக் குல வீரர்களுக்கிடையில் இரும்பு உலக்கைகளை {முசலங்களைக்} கொண்டு நடந்த மோதலைக் கேட்டும், கிருஷ்ணன் சொர்க்கத்திற்கு உயர்ந்ததை அறிந்து கொண்டும் பாண்டவர்கள் என்ன செய்தனர்?" என்று கேட்டான்.(1)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "விருஷ்ணிகளின் பெரும் படுகொலையைக் குறித்துக் கேட்ட கௌரவ மன்னன் {யுதிஷ்டிரன்} உலகை விட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவன் அர்ஜுனனிடம்,(2) "ஓ! பெரும் நுண்ணறிவைக் கொண்டவனே, காலன் (தன் கொதிகலனில்) அனைத்து உயிரினங்களையும் சமைக்கிறான். (எது நம் அனைவரையும் கட்டுகிறதோ அந்தக்) காலப் பாசத்தினாலேயே {கயிறுகளாலேயே} இது நடந்திருக்கிறது என நான் நினைக்கிறேன். இதைக் காண்பதே உனக்கும் தகும்" என்றான்.(3)
அண்ணனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்ட குந்தியின் மகன் {அர்ஜுனன்}, "காலன், காலன்" என்ற சொல்லை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லி, பெரும் நுண்ணறிவைக் கொண்ட தன் அண்ணனின் கருத்தை முழுமையாக ஏற்றான்.(4) அர்ஜுனனின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட பீமசேனனும், இரட்டையர்களும் {நகுல சகாதேவர்களும்}, அர்ஜுனன் சொன்ன சொற்களை முழுமையாக ஏற்றுக் கொண்டனர்.(5) தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவதற்காக இவ்வுலகில் இருந்து ஓயத் தீர்மானித்த அவர்கள் யுயுத்சுவைத் தங்கள் முன் கொண்டு வந்தனர். யுதிஷ்டிரன் தன் பெரியதந்தைக்கு {திருதராஷ்டிரனுக்கு} அவரது வைசிய மனைவியின் மூலம் பிறந்த மகனிடம் {யுயுத்சுவிடம்} நாட்டை ஒப்படைத்தான்.(6)
பரிக்ஷித்தை அரியணையில் நிறுவியவனும், பாண்டவர்களில் மூத்த சகோதரனுமான மன்னன் {யுதிஷ்டிரன்}, கவலையால் நிறைந்தவனாக, சுபத்திரையிடம்,(7) "உன்னுடைய மகனின் மகனான இவனே குருக்களின் மன்னனாக இருப்பான்.(8) பரிக்ஷித் ஹஸ்தினாபுரத்தை ஆள்வான், அதே வேளையில் யாதவ இளவரசனான வஜ்ரன் சக்ரப்ரஸ்தத்தை ஆள்வான். இவன் உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும். ஒருபோதும் அநீதியில் உன் இதயத்தை நிலைக்கச் செய்துவிடாதே {அதர்மத்தில் மனத்தைச் செலுத்தாதே}" என்றான்.(9)
நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, தன் சகோதரர்களுடன் சேர்ந்து, பெரும் நுண்ணறிவைக் கொண்ட வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, முதியவரான தங்கள் தாய்மாமனுக்கும் {வசுதேவருக்கும்}, ராமருக்கும் {பலராமருக்கும்}, பிறருக்கும் முறையாக ஆகுதிகளைக் காணிக்கையாக்கினான். பிறகு அவன் இறந்து போன தன் உற்றார் உறவினர் அனைவருக்கும் முறையாகச் சிராத்தங்களைச் செய்தான்.(10,11)
மன்னன், ஹரியைக் கௌரவிப்பதற்காக அவனுடைய பெயரை மீண்டும் மீண்டும் சொல்லி, தீவில் பிறந்தவரான வியாசர், நாரதர், தவச் செல்வத்தைக் கொண்ட மார்க்கண்டேயர், பரத்வாஜ குலத்தின் யாஜ்ஞவல்கியர் ஆகியோருக்கு இனிய உணவு வகைகளைப் படைத்தான்.(12) கிருஷ்ணனைக் கௌரவிப்பதற்காக அவன் பல ரத்தினங்களையும், ஆடைகளையும், துணிமணிகளையும், கிராமங்களையும், குதிரைகளையும், தேர்களையும்,(13) பெண் பணியாட்களையும் நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் பிராமணர்களில் முதன்மையானோருக்குக் கொடையளித்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா, குடிமக்களை அழைத்து, கிருபரை ஆசானாக நிறுவி, பரிக்ஷித் அவரது சீடனாக்கப்பட்டான். பிறகு மீண்டும் யுதிஷ்டிரன் தன் குடிமக்களை அழைத்தான்.(14,15) அந்த அரசமுனி தன் நோக்கங்களை அவர்களுக்குத் தெரிவித்தான். குடிமக்களும், மாகாணவாசிகளும் மன்னனின் சொற்களைக் கேட்டு,(16) கவலையால் நிறைந்தவர்களாக அவற்றை அங்கீகரிக்காமல் இருந்தனர். "ஒருபோதும் இது நடக்காது" என்று அவர்கள் மன்னனிடம் சொன்னார்கள்.(17)
காலம் கொண்டுவரும் மாற்றங்களை நன்கறிந்தவனான அந்த ஏகாதிபதி {யுதிஷ்டிரன்} அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்கவில்லை. அற ஆன்மா கொண்ட அவன் தன் கருத்துகளை அங்கீகரிக்குமாறு மக்களை ஏற்கச் செய்தான்.(18) பிறகு அவன் உலகத்தைவிட்டுச் செல்வதில் தன் இதயத்தை நிலைநிறுத்தினான். அவனது சகோதரர்களும் அதே தீர்மானத்தையே எடுத்திருந்தனர். பிறகு, தர்மனின் மகனும், குருக்களின் மன்னனுமான யுதிஷ்டிரன்,(19) தன் ஆபரணங்களை அகற்றி, மரவுரிகளைத் தரித்தான். பீமன், அர்ஜுனன், இரட்டையர் மற்றும் பெரும்புகழைக் கொண்ட திரௌபதி ஆகியோரும்,(20) ஓ! மன்னா {ஜனமேஜயா}, அதே போலவே மரவுரிகளையே உடுத்திக் கொண்டனர்.
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அருளை வழங்கவல்ல தொடக்க அறச் சடங்குகளைச் செய்த அந்த முதன்மையான மனிதர்கள் தங்கள் புனித நெருப்புகளை நீருக்குள் விட்டனர். அந்த இளவரசர்களை அந்தத் தோற்றத்தில் கண்ட பெண்கள் உரக்க அழுதனர்.(21,22) முற்காலத்தில் திரௌபதியுடன் சேர்ந்து அறுவராகி, பகடையாட்டத்தில் வீழ்த்தப்பட்டுத் தலைநகரைவிட்டுப் புறப்பட்ட கோலத்திலேயே இப்போதும் அவர்கள் தெரிந்தனர். எனினும், அந்தச் சகோதரர்கள் அனைவரும் ஓய்வில் பெரும் உற்சாகம் கொண்டனர்.(23) யுதிஷ்டிரனின் நோக்கங்களை உறுதி செய்து கொண்டவர்களும், விருஷ்ணிகளின் அழிவைக் கண்டவர்களுமான அவர்களை வேறு எந்தச் செயல்பாட்டாலும் நிறைவடையச் செய்ய இயலாது. ஐந்து சகோதரர்களும், ஆறாவதாகத் திரௌபதியும், ஏழாவதாக ஒரு நாயும் சேர்ந்து(24) தங்கள் பயணத்திற்குப் புறப்பட்டனர். உண்மையில், இவ்வாறே, ஏழு பேர் அடங்கிய அந்தத் தரப்புக்குத் தலைமை தாங்கிய மன்னன் யுதிஷ்டிரன், யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தில் இருந்து சென்றான். குடிமக்களும், அரச குடும்பத்துப் பெண்களும் சிறிது தொலைவுக்கு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர்.(25) எனினும், அவர்களில் எவருக்கும், மன்னனை அவனுடைய கருத்தில் இருந்து பின்வாங்கும்படி கேட்கும் துணிவில்லை. அந்த நகரவாசிகள் திரும்பிவந்தனர்.(26)
கிருபரும், பிறரும் தங்களுக்கு நடுவில் இருந்து யுயுத்சுவைச் சூழ்ந்து நின்றனர். ஓ! குரு குலத்தோனே {ஜனமேஜயனே}, நாகத் தலைவனின் மகளான உலூபி, கங்கையின் நீருக்குள் நுழைந்தாள்[1].(27) இளவரசி சித்திராங்கதை மணிப்புரத்தின் தலைநகருக்குப் புறப்பட்டுச் சென்றாள். பரிக்ஷித்தின் பாட்டிகளான வேறு பெண்கள் அவனைச் சூழ்ந்திருந்தனர்.(28) அதே வேளையில், ஓ! குரு குலத்தோனே அந்த உயர் ஆன்ம பாண்டவர்களும், பெரும்புகழைக் கொண்ட திரௌபதியும், தொடக்க உண்ணாநோன்பை நோற்று, கிழக்கு நோக்கிய முகங்களைக் கொண்டு புறப்பட்டுச் சென்றனர்.(29) யோகத்தில் தங்களை நிறுவி கொண்ட அந்த உயர் ஆன்மாக்கள் துறவறம் நோற்கத் தீர்மானித்து, பல்வேறு நாடுகளைக் கடந்து பல்வேறு ஆறுகளையும், கடல்களையும் அடைந்தனர்.(30) யுதிஷ்டிரன் முன்னே சென்றான், அவனுக்குப் பின்னால் பீமன்; அடுத்து அர்ஜுனன்; அவனுக்கு அடுத்துப் பிறப்பின் வரிசையில் இரட்டையர்கள்;(31) ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே, அவர்கள் அனைவருக்கும் பின்னால் பெண்களில் முதன்மையானவளும், பேரழகைக் கொண்டவளும், கரிய நிறத்தவளும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களைக் கொண்டவளுமான திரௌபதி சென்றாள்.(32)
[1] "உலூபி நீரில் மூழ்கினாள் என்று கொள்ள முடியாது. அவள் நாகலோகத்திற்கு ஓய்ந்து சென்றாள் என்றே இங்குச் சொல்லப்படுகிறது. ஆதிபர்வத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் அர்ஜுனன் கங்கையில் நீராடிக் கொண்டிருந்தபோது, நீருக்குள் இருந்த தன் அரண்மனைக்கு உலூபி அவனைத் தூக்கிச் சென்று அவனை மணந்து கொண்டாள் என்று சொல்லப்படுகிறது. நாகர்கள் பாதித் தேவர்களாவர், அவர்களால் காற்றிலும், நீரிலும் நகரவும், விரும்பியபோது சொர்க்கத்திற்கு உயரவும், பாதாளத்தில் தங்கள் இல்லத்தைக் கொள்ளவும் முடியும். இவர்களை ஆரியரல்லாத இனமாகக் கொள்வது வங்கக் கவிஞர்களின் புதுப்பாங்காக இருக்கிறது. இது கவி உரிமம் வழங்கும் முட்டாள்தனத்தின் உச்சமாகும். எனினும், இந்த எழுத்தாளர்களில் ஒருவரும் ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்களல்ல; அதுவே அவர்களுக்கான சிறந்த சாக்காகவும் இருக்கிறது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். ஆரிய, திராவிட வேறுபாடு இட்டுக்கட்டப்பட்டபோதே கங்குலி அதற்குப் பதில் கூறியிருப்பதை இங்கே நாம் காண்கிறோம்.
பாண்டவர்கள் காட்டுக்குப் புறப்பட்ட போது, ஒரு நாயும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றது. தொடர்ந்து சென்ற அவ்வீரர்கள் செந்நீர் கொண்ட கடலை அடைந்தனர்.(33) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தனஞ்சயன் {அர்ஜுனன்}, பெரும் மதிப்பு மிக்கப் பொருட்களில் ஒருவனுக்குள்ள பேராசையின் மூலம் இயக்கப்பட்டவனாகத் தன்னுடைய தெய்வீக வில்லான காண்டீவத்தையும், வற்றாதவையான தன்னிரு அம்பறாத்தூணிகளையும் கைவிடாமல் இருந்தான்.(34) நெருப்பின் தேவன் தங்களுக்கு முன்னால் ஒரு மலையென நிற்பதைப் பாண்டவர்கள் கண்டனர். அவர்களுடைய வழியை அடைத்த அந்தத் தேவன் உடல் கொண்ட வடிவத்துடன் அங்கே நின்று கொண்டிருந்தான். ஏழு தழல்களைக் கொண்ட அந்தத் தேவன் {நெருப்பின் தேவன்} பாண்டவர்களிடம், "பாண்டுவின் வீர மகன்களே, என்னை நெருப்பின் தேவனாக {அக்னி தேவனாக} அறிவீராக.(36) ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, ஓ! பகைவரை எரிப்பவனான பீமசேனா, ஓ! அர்ஜுனா, ஓ! பெருந்துணிவுமிக்க இரட்டையர்களே, நான் சொல்வதைக் கேட்பீராக.(37) குரு குலத்தின் முதன்மையானவர்களே, நானே நெருப்பின் தேவன். அர்ஜுனன் மற்றும் நாராயணனின் பலத்தாலும், என்னாலும் காண்டவக் காடு எரிக்கப்பட்டது.(38) உன் தம்பியான பல்குனன் {அர்ஜுனன்}, உயர்ந்த ஆயுதமான காண்டீவத்தைக் கைவிட்ட பிறகு காட்டுக்குச் செல்லட்டும். இவனுக்கு இனியும் இதற்கான தேவை ஏதும் இல்லை.(39) உயர் ஆன்மக் கிருஷ்ணனுடைய மதிப்புமிக்கச் சக்கரம் (உலகில் இருந்து) மறைந்து போனது. மீண்டும் வேளை வரும்போது அஃது அவனது கைகளுக்குத் திரும்பும்.(40) விற்களில் முதன்மையான இந்தக் காண்டீவம், பார்த்தனின் பயன்பாட்டுக்காக வருணனிடம் இருந்து என்னால் அடையப்பட்டதாகும். அதை நான் வருணனுக்கே கொடுக்க வேண்டும்" என்றான் {அக்னி தேவன்}.(41)
இதன்பேரில், அந்தத் தேவன் சொல்வதைச் செய்யுமாறு சகோதரர்கள் அனைவரும் அர்ஜுனனைத் தூண்டினர். அப்போது அவன் {அர்ஜுனன்} வில்லையும் {காண்டீவத்தையும்}, வற்றாதவையான இரு அம்பறாத்தூணிகளையும் (கடலின்) நீருக்குள் வீசினான்.(42) அதன் பிறகு, ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, நெருப்பின் தேவன் அங்கேயே அப்போதே மறைந்து போனான். பாண்டுவின் வீர மகன்கள் அதன் பிறகு, தெற்கு நோக்கித் தங்கள் முகங்களைத் திருப்பியவர்களாகச் சென்றனர்.(43) அதன் பிறகு, அந்தப் பாரத இளவரசர்கள் உப்புக் கடலின் வடக்குக் கரையில் தென் மேற்காகச் சென்றனர்.(44) பிறகு மேற்கு நோக்கித் திரும்பிய அவர்கள், பெருங்கடலால் மறைக்கப்பட்ட துவாரகா நகரத்தைக் கண்டனர்.(45) அடுத்ததாக அந்த முதன்மையானவர்கள் வடக்கு நோக்கிச் சென்றனர். யோகம் நோற்றுக் கொண்டிருந்த அவர்கள், மொத்த பூமியையும் வலம் வர விரும்பினர்" {என்றார் வைசம்பாயனர்}.(46)
மஹாப்ரஸ்தானிகபர்வம் பகுதி – 1ல் உள்ள சுலோகங்கள் : 46
ஆங்கிலத்தில் | In English |