Cherish the Pandavas! | Udyoga Parva - Section 65 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 25) {யானசந்தி பர்வம் - 19}
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பாண்டவர்களின் சக்தியையும், பீமன், அர்ஜுனன், திருஷ்டத்யும்னன், சாத்யகி, கிருஷ்ணன் ஆகியோரின் பலங்களையும் எடுத்துரைப்பது; கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு நண்பனாக இருப்பதால் பாண்டவர்களை வெல்ல முடியாது என்று சொல்வது; பாண்டவர்களைத் தனது சகோதரர்களாக ஏற்று அவர்களுக்குரிய பங்கை துரியோதனன் கொடுக்க வேண்டும் என்றும் திருதராஷ்டிரன் சொன்னது...
திருதராஷ்டிரன் {துரியோதனனிடம்} சொன்னான், “ஓ! துரியோதனா, ஓ! அன்பு மகனே, நான் சொல்வதைக் கருதிப் பார். அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும் அடங்கிய அண்டத்தை நுட்பமான உருவில் தாங்கும் ஐம்பூதங்களைப் போலவே இருக்கும் பாண்டுவின் மகன்கள் ஐவரின் சக்தியை நீ திருட விரும்புவதால், அறியாமையில் இருக்கும் ஒரு பயணியைப் போலவே, தவறான பாதையைச் சரியென நீ நினைக்கிறாய்.
நிச்சயம், உனது உயிரை தியாகம் செய்யாமல், உலகத்தின் அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையான குந்தியின் மகன் யுதிஷ்டிரனை உன்னால் வெல்லமுடியாது. ஐயோ, பெரும் புயலை மீறி நிற்கும் ஒரு மரத்தைப் போல, போர்க்களத்தில் யமனுக்கு நிகரானவனும், (மனிதர்களுக்கு மத்தியில்) வல்லமையில் தனக்கு நிகரில்லாதவனுமான பீமசேனனை நீ உரசுகிறாயே. மலைகளில் மேருவைப் போன்றவனும், ஆயுதம் தாங்குபவர்களில் முதன்மையானவனும், காண்டீவத்தைத் தாங்குபவனுமான ஒருவனிடம் {அர்ஜுனிடம்} புத்தியுள்ள எவன் போர்க்களத்தில் மோதுவான்?
வஜ்ரத்தை வீசும் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல, எதிரிகளுக்கு மத்தியில் தனது கணைகளை அடிக்கும் பாஞ்சால இளவரசன் திருஷ்டத்யும்னனால் வீழ்த்த முடியாத எந்த மனிதன் இருக்கிறான்? அந்தகர்கள் மற்றும் விருஷ்ணிகளுக்கு மத்தியில் மதிக்கப்படும் வீரனும், பாண்டவர்களின் நன்மையில் எப்போதும் ஈடுபடுபவனுமான தடுக்கப்படமுடியாத சாத்யகியும் உனது கூட்டத்தைப் {படையைப்} படுகொலை செய்வான்.
மூவுலகங்களையும் விஞ்சும் சக்தியும் பலமும் கொண்ட தாமரைக் கண் கிருஷ்ணனுடன் புத்தியுள்ள எந்த மனிதன் மோதுவான்? கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவனது {கிருஷ்ணனது} மனைவியர், சம்பந்திகள், உறவினர்கள், தன் ஆன்மா, இந்த முழு உலகம் ஆகியவற்றை ஒரு தட்டில் வைத்தால், அதற்கு மறுதட்டில் உள்ள தனஞ்சயனின் {அர்ஜுனனின்} எடைக்கு அவை அனைத்தும் சமமாக இருக்கும். அர்ஜுனனால் நம்பப்படும் அந்த வாசுதேவன் {கிருஷ்ணன்} தடுக்கப்பட முடியாதவனாவான். அந்தக் கேசவன் {கிருஷ்ணன்} இருக்கும் படையும் எங்கும் தடுக்கப்பட முடியாததாகவே இருக்கும்.
எனவே, ஓ! குழந்தாய் {துரியோதனா}, உனது நன்மைக்கான வார்த்தைகளையே எப்போதும் பேசும் உனது நலன் விரும்பிகளின் ஆலோசனைகளுக்குச் செவிகொடு. முதிர்ந்தவரும் உனது பாட்டனுமான, சந்தனுவின் மகன் பீஷ்மரை உனது வழிகாட்டியாக ஏற்றுக் கொள். நான் உனக்குச் சொல்வதையும், குருக்களின் {கௌரவர்களின்} நலன்விரும்பிகளான துரோணர், கிருபர், விகர்ணன், மன்னன் பாஹ்லீகன் ஆகியோர் சொல்வதையும் கேள். அவர்கள் அனைவரும் என்னைப் போன்றோரே. ஓ! பாரதா {துரியோதனா}, நான் உன்னிடம் பாசம் கொண்டிருப்பதைப் போலவே, அறநெறி அறிந்த இவர்கள் அனைவரும் உன்னிடம் பாசம் கொண்டிருக்கிறார்கள் என்பதால், நீ என்னை எப்படி மதிக்கிறாயோ அப்படியே அவர்களையும் மதிக்க வேண்டும்.
விராட நகரத்தில் உன் கண் எதிரிலேயே, உன் தம்பிகளுடன் கூடிய உனது துருப்புகள் பீதியும் படுதோல்வியும் அடைந்தன என்பதும், அதுவும் மன்னன் சரணடைந்த பின்னர் இது நடந்தது [1] என்பதும், உண்மையில், அந்நகரத்தில் தனி ஒருவனுக்கும் பலருக்கும் இடையில் நடந்த மோதல் குறித்துக் கேள்விப்படும் அந்த அற்புதக் கதையுமே போதுமான சாட்சிகளாகும் (நான் சொல்வது அறிவுப்பூர்வமானது என்பதற்கு அது சாட்சியாகும்). இவை அனைத்தையும் அர்ஜுனனால் தனியாகவே சாதிக்க முடியுமென்றால், ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வரும் பாண்டவர்களால் அடைய முடியாததுதான் என்ன? அவர்களை உனது சகோதரர்களாக ஏற்று, அவர்களது கரங்களைப் பற்றுவாயாக. இந்தபேரரசின் ஒரு பங்கை கொடுத்து அவர்களை அரவணைப்பாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}
[1] உத்தரன் ஓடியதைத் திருதராஷ்டிரன் சொல்வதாக நினைக்கிறேன்