"Do you fear Bhima?" asked Krishna! | Udyoga Parva - Section 75 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –4)
பதிவின் சுருக்கம் : பீமனின் மென்மையான பேச்சை எதிர்பாராத கிருஷ்ணன், பீமனை ஏளனம் செய்வது; முன்பெல்லாம் போரை விரும்பிய பீமன் இப்போது ஏன் அமைதியை விரும்புகிறான் எனக் கேட்டது; இதயத்தை அச்சம் பீடிக்கிறதா எனக் கேட்டது; முன்பு கோபத்தில் பீமன் கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக இருந்து செய்த செயல்களையெல்லாம் கிருஷ்ணன் சுட்டிக் காட்டுவது; பீமனின் வீரத்தை நினைவூட்டியது; அப்படிப்பட்ட பீமன் இப்படிப் பேடியாக இருக்கலாமா என்று கேட்டது; பீமனுக்கு உற்சாகம் தரும் வார்த்தைகளைக் கிருஷ்ணன் பேசுவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மலைகள் தங்கள் எடையை இழந்தது போலவும், நெருப்புக் குளுமையானதாக ஆனது போலவும் எதிர்பாராதவகையில் இத்தகு மென்மை நிறைந்த பீமனின் வார்த்தைகளைக் கேட்டவனும், சாரங்கம் எனும் வில்லைத் தாங்குபவனும், வலிய கரங்களைக் கொண்டவனும், ராமனின் {பலராமனின்} தம்பியுமான சூர குலத்துக் கேசவன் {கிருஷ்ணன்}, நெருப்பைத் தூண்டும் காற்று போலப் பீமனைத் தனது வார்த்தைகளால் தூண்டும்படி உரக்கச் சிரித்து, கருணையின் உந்துவிசையில் மூழ்கியிருந்த அவனிடம் {பீமனிடம்}, "ஓ! பீமசேனரே, மற்ற பிற நேரங்களில், பிறரை அழித்து மகிழ்ந்து, திருதராஷ்டிரரின் தீய மகன்களை நசுக்க விரும்பிய நீர் போரை மட்டுமே மெச்சினீர். ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, முகம் கீழ்நோக்கி அமர்ந்தபடி, {அப்போதெல்லாம்} முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தீரே. உமது இதயத்துக்குள் வீசும் புயலைக் குறிக்கும் வகையில் பயங்கரக் கோபத்தை அடிக்கடி வெளிக்காட்டினீரே.
ஓ! பீமரே, உமது கோபமெனும் நெருப்பால் தூண்டப்பட்டு, பெருமூச்சு விட்டபடியும் அமைதியற்ற இதயத்துடனும், புகையோடு கலந்த நெருப்புச் சுடராய் இருந்தீரே. பெரும் சுமையால் அழுத்தப்பட்ட பலவீனமான மனிதன் ஒருவன் போல, கூட்டத்தில் இருந்து விலகி, கீழே படுத்தபடி சூடான பெருமூச்சுகளை விட்டுக் கொண்டிருந்தீரே. இதற்கான காரணத்தை அறியாதோர், உம்மைப் பைத்தியம் என்றே கருதினர் {தெரியுமா?}. வேரோடு பிடுங்கப்பட்டுத் தரையில் கிடக்கும் மரங்களைத் தூள் தூளாக நொறுக்கி, காலில் போட்டு அவற்றை மிதித்துக் கொண்டு, ஆத்திரத்தில் உறுமும் யானையைப் போல, ஆழ்ந்த பெருமூச்சுகளை விட்டபடி, உமது பாதச்சுவடுகளால் உலகத்தைக் குலுக்கியபடி நீர் ஓடிக் கொண்டிருந்தீரே.
இங்கே இந்தப் பகுதியில் கூடக் கூட்டத்துடன் இருப்பதில் மகிழாமல், உமது நேரத்தைத் தனிமையிலேயே கழிக்கிறீர். இரவோ, பகலோ, தனிமையைத் தவிர வேறு எதுவும் உமக்கு மகிழ்ச்சியூட்டுவதில்லை. தனியாக அமர்ந்திருக்கும் நீர், திடீரென உரக்கச் சிரிப்பீர். சில வேளைகளில், உமது கால் முட்டிகள் இரண்டுக்குமிடையில் தலையை வைத்துக் கொண்டு, கண்கள் மூடிக் கொண்டு, அதே நிலையிலேயே தொடர்ந்து நீண்ட நேரம் இருப்பீர்.
இன்னும் சில நேரங்களில், ஓ! பீமரே, அடிக்கடி உமது புருவங்களைச் சுருக்கி, உதடுகளைக் கடித்தபடி, கடுமையாக வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பீர். இவை யாவும் கோபத்தின் குறியீடுகளே. ஒரு சமயத்தில், உமது சகோதரர்களுக்கு மத்தியில் கதாயுதத்தைப் பற்றிக் கொண்டு, இந்த உறுதிமொழியை உரைத்தீர், "தனது காந்தியை வெளிப்படுத்திக் கொண்டு சூரியன் கிழக்கில் உதித்து, மேருவைச் சுற்றிப் பயணித்து மேற்கில் மறைவதைப் பார்ப்பது போல {சூரியன் உதித்து மறைவது எப்படி உறுதியானதோ அதைப் போல}, ஆணவமிக்கத் துரியோதனனை, எனது இந்தக் கதாயுதம் கொண்டு கொல்வேன் என்று உறுதி ஏற்கிறேன். இந்த உறுதிமொழி பொய்க்காது" என்றீர்.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே, அதே இதயத்தைக் கொண்டிருக்கும் நீர், இப்போது சமாதானத்துக்கான ஆலோசனைகளை எப்படிப் பின்பற்றுவீர்? ஐயோ, உண்மையில் போர் உடனடியாக வரும் எனும்போது, இதயத்தில் அச்சம் நுழைந்துவிட்டால், ஓ! பீமரே, {முன்பு} போரை விரும்பியவர்கள் இதயமெல்லாம் வருத்தமடையும்.
ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமரே}, உறங்கும்போதோ, விழித்திருக்கும்போதோ, மங்கலமற்ற சகுனங்களையே நீர் காண்கிறீர். உண்மையில், அதன் காரணமாகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர். ஐயோ, அலியைப் போல ஆண்மைக்குரிய எந்த அறிகுறிகளையும் நீர் வெளிக்காட்டவில்லையே. பயத்தால் நீர் பீடிக்கப்பட்டிருக்கிறீர். அதன் காரணமாகவே உமது இதயம் வருத்தமடைகிறது. இதயம் நடுங்குகிறது, உமது மனமோ துயரத்தில் மூழ்கி இருக்கிறது. உமது தொடைகள் நடுங்குகின்றன. அதற்காகவே நீர் சமாதானத்தை விரும்புகிறீர்.
ஓ! பார்த்தரே {பீமரே}, காற்றின் விசைக்கு வெளிப்பட்டு நிற்கும் இலவங்காய் விதையின் நெற்றுகள் {காய்ந்த பருப்புகள்} [Pods of Salmali seed} போல, மனிதர்களின் இதயங்கள் நிலையற்றவை என்பது நிச்சயம். உமது இந்த மனநிலை, அறிவூட்டப்பட்ட பசுக்களின் பேச்சு போல விசித்திரமாக இருக்கிறது. தங்களைக் காக்க ஒரு படகின்றிக் கடலில் நீந்துபவர்களைப் போல, உண்மையில், உமது சகோதரர்களின் இதயங்கள் அனைத்தும் துன்பக் கடலில் மூழ்கப் போகின்றன.
ஓ! பீமசேனரே, நீர் இத்தகு எதிர்பாராத வார்த்தைகளைப் பேசுவது, மலையே நகர்ந்து விட்டது போன்று விசித்திரமாக இருக்கிறது. ஓ! பாரதரே {பீமரே}, உமது சாதனைகளையும், நீர் பிறந்திருக்கும் குலத்தையும் நினைத்துப் பார்த்து எழுந்திரும். ஓ! வீரரே {பீமரே}, துன்பத்துக்கு உம்மைக் கொடுக்காமல் உறுதியாக இருப்பீராக. ஓ! எதிரிகளை ஒடுக்குபவரே {பீமரே}, இத்தகு தளர்வு உமக்குத் தகுந்ததல்ல. ஏனெனில், தனது வீரத்தால் அடையப்படாத எதிலும் ஒரு க்ஷத்திரியன் மகிழ மாட்டான்" என்றான் {கிருஷ்ணன்}.