Krishna reached the court! | Udyoga Parva - Section 94 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –23)
பதிவின் சுருக்கம் : விதுரனின் இல்லத்தில் இருந்து கிருஷ்ணனை அழைத்துப் போகத் துரியோதனனும், சகுனியும் வந்தது; கிருஷ்ணன் கௌரவச் சபையை அடைந்தது; கிருஷ்ணனுக்குக் கொடுக்கப்பட்ட மரியாதை; வானில் முனிவர்கள் நிற்பதை கிருஷ்ணன் பீஷ்மருக்குச் சொன்னது; பீஷ்மர் முனிவர்களை அழைத்து இருக்கையில் அமர வைத்தது; அனைவரும் அமர்ந்தது அங்கே முற்றான அமைதி நிலவியது....
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெரும் புத்திக்கூர்மை கொண்டவர்களும், புகழ்பெற்றவர்களுமான அந்த இரண்டு நபர்களுக்கு {கிருஷ்ணன், விதுரன் ஆகியோருக்கு} இடையில் நடைபெற்ற இத்தகு உரையாடலில், பிரகாசமான நட்சத்திரங்களால் ஆன அந்த இரவு கடந்து சென்றது.
உண்மையில், அறம், பொருள், இன்பம் ஆகியன நிறைந்தவையும், மகிழ்ச்சிகரமான வார்த்தைகள் மற்றும் ஏற்புடைய வகையைச் சார்ந்த எழுத்துகளைக் {சொற்களைக்} கொண்டவையுமான கிருஷ்ணனின் பல்வேறு உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த ஒப்பற்ற விதுரனின் விருப்பத்திற்கு எதிராகவே அந்த இரவு கடந்து சென்றது.
அளவிலா ஆற்றல் கொண்ட கிருஷ்ணனும் அதற்கு நிகரான பாணி மற்றும் எழுத்துகளைக் கொண்ட சொற்பொழிவுகளை {அன்று இரவு} கேட்டுக் கொண்டேயிருந்தான்.
பிறகு, அதிகாலையில், இனிய குரலைக் கொடையாகக் கொண்ட சூதர்களும், பாணர்களும், கேசவனை {கிருஷ்ணனை}, இனிய ஒலி கொண்ட சங்குகள் மற்றும் துந்துபி முழக்கங்களுடன் எழுப்பினர். படுக்கையில் இருந்து எழுந்த தாசார்ஹ குலத்தவனும், சாத்வதர்கள் அனைவரில் காளையுமான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, காலைக்குரிய அனைத்து வழக்கமான செயல்களையும் செய்தான். நீராடல் மூலம் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு, புனித மந்திரங்களை ஓதி, தெளிந்த நெய்யிலானான நீர்க்காணிக்கைகளை வேள்வித்தீயில் ஊற்றினான். தன்னை அலங்கரித்துக் கொண்ட மாதவன் {கிருஷ்ணன்}, உதயசூரியனை வணங்கத் தொடங்கினான்.
தாசார்ஹ குலத்தின் வீழ்த்தப்படாத கிருஷ்ணன், தனது காலை துதியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே, துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும் அங்கே அவனிடம் {கிருஷ்ணனிடம்} வந்து, "பீஷ்மரின் தலைமையிலான அனைத்து குருக்களுடனும், பூமியின் அனைத்து மன்னர்களுடனும் திருதராஷ்டிரர் தனது அவையில் அமர்ந்திருக்கிறார். தெய்வலோகத்தில் சக்ரனின் {இந்திரனின்} இருப்பை விரும்பும் தேவர்களைப் போல, அவர்கள் அனைவரும் உனது இருப்பை வேண்டுகின்றனர்" என்றனர்.
இப்படிச் சொல்லப்பட்ட கோவிந்தன் {கிருஷ்ணன்}, அவர்கள் இருவரையும் இனிமையாகவும் மரியாதையாகவும் விசாரித்தான். சூரியன் சிறிது உயர எழுந்த போது, எதிரிகளைத் தண்டிப்பவனான ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, எண்ணற்ற அந்தணர்களை அழைத்து, அவர்களுக்கு, தங்கம், ஆடைகள், பசுக்கள் மற்றும் குதிரைகளைப் பரிசாகக் கொடுத்தான்.
அதிகச் செல்வத்தைத் தானமளித்த அவன் {கிருஷ்ணன்}, தனது இருக்கையில் வந்து அமர்ந்த பிறகு, அங்கே வந்த அவனது தேரோட்டி (தாருகன்), தாசார்ஹ குலத்தின் அந்த வீழாவீரனை {கிருஷ்ணனை} வணங்கினான். பிறகு, கிண்கிணி மணிகளால் வரிசையாக அலங்கரிக்கப்பட்டதும், சுடர்மிக்கதுமான தனது தலைவனின் {கிருஷ்ணனின்} பெரிய தேரில், அற்புதக் குதிரைகளைப் பூட்டி அங்கே விரைவாகத் திரும்பி வந்தான் தாருகன். தனது அழகிய தேர், அனைத்து ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, பலமிக்க மேகத்திரளின் இரைச்சலைப் போல ஆழ்ந்த சடசடப்பொலியை எழுப்பத் தயாராக இருப்பதை உணர்ந்தவனும், யாதவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை உண்டாக்குபவனுமான உயர் ஆன்ம ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, புனித நெருப்பையும், அந்தணர்கள் குழுவையும் வலம் வந்து, கௌஸ்துப மணியைப் பூண்டு கொண்டு, அழகில் சுடர்விட்டபடி, குருக்களால் சூழப்பட்டு, விருஷ்ணிகளால் நன்கு பாதுகாக்கப்பட்டுத் தேரில் ஏறினான் {கிருஷ்ணன்}.
அறத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் அறிந்த விதுரன், உயிர்வாழும் அனைத்து உயிரினங்களிலும் முதன்மையானவனும், அறிவைக் கொடையாகக் கொண்ட அனைத்து நபர்களில் முதல்வனுமான அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்தை {கிருஷ்ணனை}, தனது சொந்தத் தேரில் பின்தொடர்ந்து சென்றான் {விதுரன்}. துரியோதனனும், சுபலனின் மகனான சகுனியும், எதிரிகளைத் தண்டிப்பவனான கிருஷ்ணனை {வேறு} ஒரு தேரில் பின்தொடர்ந்து சென்றார்கள். சாத்யகி, கிருதவர்மன் மற்றும் பிற பலமிக்க விருஷ்ணி குலத்துத் தேர்வீரர்கள் ஆகிய அனைவரும் தேர்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் கிருஷ்ணனுக்குப் பின்னால் சென்றனர்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், அற்புத குதிரைகளால் இழுக்கப்பட்டவையுமான அந்த வீரர்களின் அழகிய தேர்கள் ஒவ்வொன்றும் உரத்த சடசடப்பொலியை எழுப்பிபடியும், பிரகாசித்துக் கொண்டும் முன்னேறி நகர்ந்து சென்றன.
முன்கூட்டியே தூற்றப்பட்டு, நீர்தெளிக்கப்பட்டிருந்ததும், உயர்ந்த மன்னர்கள் மட்டுமே பயன்படுத்த தகுந்ததுமான அகலமான ஒரு தெருவுக்கு, அழகுடன் பெரும் புத்திக்கூர்மை கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} வந்தான். அந்தத் தாசார்ஹ குலத்துக் கொழுந்து {கிருஷ்ணன்} புறப்பட்டபோது, எக்கங்கள் {கைத்தாளங்கள் = ஜால்ரா போன்ற பெரிய இசைக்கருவி} இசைக்கப்பட்டன, சங்குகள் முழங்கத் தொடங்கின, இன்னும் பிற கருவிகள் தங்கள் இசையைப் பொழிந்தன.
வீரத்திற்காக இவ்வுலகில் முதன்மையானவர்களாக இருப்பவர்களும், சிங்கம்போன்ற ஆற்றலைக் கொண்டவர்களுமான இளமை நிறைந்த வீரர்கள், சௌரியின் {கிருஷ்ணனின்} தேரைச் சூழ்ந்து கொண்டு, பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து சென்றனர். பல்வேறு நிறங்களில் உடுத்தியிருந்த பல்லாயிரக்கணக்கான வீரர்கள், வாள்கள், ஈட்டிகள், போர்க்கோடரிகளுடன் கேசவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு அணிவகுத்து சென்றனர். அந்த வீழ்த்தப்படமுடியாத தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} முன்னேறிச் சென்று கொண்டிருந்த போது, ஐநூறு {500} யானைகளும், ஆயிரக்கணக்கான தேர்களும், அவனை {கிருஷ்ணனைப்} பின்தொடர்ந்து சென்றன.
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, அனைத்து வயதிலான ஆண்களும் பெண்களுமான அந்தத் தலைநகரத்தின் {ஹஸ்தினாபுரத்தின்} குடிமக்கள் அனைவரும் ஜனார்த்தனனைக் {கிருஷ்ணனைக்} காண விரும்பி வெளியே தெருக்களுக்கு வந்தனர். வீடுகளின் மாடிகள் மற்றும் மேல்மாடங்களில் திரண்டிருந்த பெண்களின் பாரத்தைத் தாங்க முடியாமல், அவை {அந்த வீடுகள்} விழும் நிலையில் இருந்தன. குருக்களால் {கௌரவர்களால்} வழிபடப்பட்டு, பல்வேறு இனிய பேச்சுகளைக் கேட்டு, தகுந்தவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் திரும்பச் சொல்லி, அனைவரின் மீதும் கண்களைச் செலுத்தியபடியே கேசவன் {கிருஷ்ணன்} அந்தத் தெருவில் சென்று கொண்டிருந்தான்.
கடைசியாக, கேசவன் {கிருஷ்ணன்}, குருக்களின் சபையை அடைந்த போது, அவனது பணியாட்கள், தங்கள் சங்குகளையும், எக்காளங்களையும் உரக்க முழங்கி, ஆகாயத்தை அந்த முழக்கத்தால் நிறைத்தனர். அதன்பேரில், அளவிலா ஆற்றல் படைத்த மன்னர்களின் அந்தச் சபை, விரைவில் தங்கள் கண்களைக் கிருஷ்ணன் மீது செலுத்தப்போகும் எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியுடன் நடுங்கினர். மழைநிறைந்த மேகங்கள் உருள்வதைப் போன்ற சடசடப்பை எழுப்பிய தேரின் ஒலியைக் கேட்ட அந்த ஏகாதிபதிகள், கிருஷ்ணன் அருகில் வந்துவிட்டதை உணர்ந்து, மகிழ்ச்சியால் தங்கள் உடல்களின் மயிர்ச்சிலிர்த்து நின்றனர். அந்தச் சபையின் வாயிலை அடைந்த சாத்வதர்களில் காளையான சௌரி {கிருஷ்ணன்}, கயிலாய மலையைப் போன்ற தனது தேரில் இருந்து இறங்கி, புதிதாய் எழுந்த மேகத் திரள் போல இருப்பதும், அழகால் சுடர்விடுவதும், பெரும் இந்திரனின் வசிப்பிடத்தைப் பிரதிபலிப்பதுமான அந்தச் சபைக்குள் நுழைந்தான்.
இருபுறத்திலும் விதுரன் மற்றும் சாத்யகியைத் தோளோடு தோள் சேர்த்தபடியும், ஆகாயத்தில் இருக்கும் சிறு ஒளிகளின் பிரகாசத்தை மூழ்கடிக்கும் சூரியனைப் போல, குருக்கள் அனைவரின் பிரகாசத்தையும் தனது சொந்த பிரகாசத்தால் மூழ்கடித்தபடியும், அந்த ஒப்பற்ற வீரன் {கிருஷ்ணன்}, அந்தச் சபைக்குள் நுழைந்தான். வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} முன்பு கர்ணனும், துரியோதனனும் அமர்ந்தனர், அவனுக்குப் {கிருஷ்ணனுக்குப்} பின்பு, கிருதவர்மனோடு கூடிய விருஷ்ணிகள் அமர்ந்தனர்.
ஜனார்த்தனனுக்கு {கிருஷ்ணனுக்கு} மரியாதை செலுத்தும் விதமாக, பீஷ்மர், துரோணர் மற்றும் திருதராஷ்டிரனோடு கூடிய பிறர் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுவதற்குத் தயார் நிலையில் இருந்தனர். உண்மையில், அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} வந்ததும், ஒப்பற்றவனும் பார்வையற்றவனுமான அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, துரோணர், பீஷ்மர் மற்றும் அனைவரும் தங்கள் இருக்கைகளில் இருந்து எழுந்தனர். வலிமைமிக்கவனும், மனிதர்களின் ஆட்சியாளனுமான மன்னன் திருதராஷ்டிரன் தனது இருக்கையில் இருந்து எழுந்ததும், அவனை {திருதராஷ்டிரனை} சுற்றி இருந்த ஆயிரக்கணக்கான மன்னர்களும் எழுந்தனர்.
திருதராஷ்டிரனின் கட்டளையின் பேரில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுச் சுற்றிலும் அழகானதாக இருந்த ஓர் இருக்கை, கிருஷ்ணனுக்காக அங்கே வைக்கப்பட்டிருந்தது.
அந்த இருக்கையில் மாதவன் {கிருஷ்ணன்} அமர்ந்ததும், மன்னன் {திருதராஷ்டிரன்}, பீஷ்மர், துரோணர் மற்றும் பிற ஆட்சியாளர்கள் அனைவருக்கும், அவரவர் வயதுக்குத் தகுந்தபடி புன்னகையுடன் தனது வாழ்த்துகளை அவன் {கிருஷ்ணன்} தெரிவித்தான். அந்தச் சபைக்கு வந்த கேசவனைக் {கிருஷ்ணனைக்} கண்டதும், பூமியின் மன்னர்கள் அனைவரும் மற்றும் குருக்கள் அனைவரும் அவனை {கிருஷ்ணனை} முறையாக வழிபட்டனர்.
எதிரிகளைத் தண்டிப்பவனும், பகை நகரங்களை வீழ்த்துபவனுமான அந்தத் தாசார்ஹ குலத்து வீரன் {கிருஷ்ணன்} அங்கே அமர்ந்திருந்த போது, ஹஸ்தினாபுரத்தை நோக்கி வந்துகொண்டிருக்கையில் தான் கண்ட முனிவர்கள், ஆகாயத்தில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான். நாரதரின் தலைமையில் நின்று கொண்டிருந்த முனிவர்களைக் கண்ட அந்தத் தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்}, சந்தனுவின் மகனான பீஷ்மரிடம் மெதுவாக, "ஓ! மன்னா {பீஷ்மரே}, நம்முடைய இந்தப் பூலோக சபையைக் {கூட்டத்தைக்} காண முனிவர்கள் வந்திருக்கின்றனர். இருக்கைகள் மற்றும் ஏராளமான மரியாதைகளுடன் அவர்களை அழைப்பீராக. ஏனெனில், அவர்கள் {அந்த முனிவர்கள்} அமராதாபோது, இங்கே யாரும் தன் இருக்கையில் அமரக்கூடாது. எனவே, தங்கள் ஆன்மாக்களை முறையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அந்த முனிவர்களுக்கு, முறையான வழிபாட்டை விரைந்து அளிப்பீராக" என்றான் {கிருஷ்ணன்}.
பிறகு அந்த முனிவர்களை அரண்மனையின் வாயிலில் கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, அவர்களுக்கான {அந்த முனிவர்களுக்கான} இருக்கைகளை விரைந்து கொண்டுவருமாறு பணியாட்களுக்கு உத்தரவிட்டார். அவர்களும் விரைவில், தங்கத்தாலும், ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்த அழகிய பெரிய இருக்கைகளை அங்கே கொண்டு வந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த முனிவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆர்க்கியாக்களை ஏற்றதும், கிருஷ்ணன் தனது இருக்கையில் அமர்ந்தான்; அவ்வாறே மன்னர்கள் அனைவரும் அமர்ந்தனர். சாத்யகிக்கு அருமையான ஓர் இருக்கையை துச்சாசனன் அளித்தான், அதே வேளையில், விவிம்சதி, தங்கத்தாலான இருக்கையைக் கிருதவர்மனுக்குக் கொடுத்தான்.
ஒப்பற்றவர்களும், கோபம் நிறைந்தவர்களுமான கர்ணனும் துரியோதனனும் கிருஷ்ணனுக்கு அருகிலேயே ஒரே இருக்கையில் இணைந்து அமர்ந்தனர். தன் நாட்டுத் தலைவர்கள் சூழ இருந்த காந்தார மன்னன் சகுனியும், ஓ மன்னா {ஜனமேஜயா}, தனது மகனுடன் சேர்ந்து அவனுக்கு {கிருஷ்ணனுக்கு} அருகே அமர்ந்தான். உயர் ஆன்மா கொண்ட விதுரன், கிருஷ்ணனின் இருக்கையைத் தொட்டுக் கொண்டிருந்ததும், வெள்ளை மான்தோல் விரிக்கப்பட்டிருந்ததுமான மணிக்கல் பதித்த இருக்கையில் அமர்ந்தான்.
அந்தச்சபையின் மன்னர்கள் அனைவரும், தாசார்ஹ குலத்து ஜனார்த்தனையே {கிருஷ்ணனையே} நீண்ட நேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாலும், அமிர்தத்தை அடுத்து அடுத்துக் குடித்தாலும், எப்போதும் மனநிறைவு கொள்ளாதவர்களைப் போல, நிறைவு காணவில்லை. காயாம்பூ {Atasi flower} நிறத்திலான மஞ்சள் ஆடைகளை உடுத்தியிருந்த ஜனார்த்தனன் {கிருஷ்ணன்}, தங்கத்தில் பதிக்கப்பட்ட நீலக்கல் {Sapphire} போல, அந்தச் சபையின் மத்தியில் அமர்ந்திருந்தான். கோவிந்தன் {கிருஷ்ணன்} தனது இருக்கையில் அமர்ந்ததும், யாரும் ஒரு வார்த்தையும் பேசாததால் அங்கே முற்றான அமைதி நிலவியது" என்றார் {வைசம்பாயனர்}.