Varunaloka that matali saw! | Udyoga Parva - Section 98 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –27)
பதிவின் சுருக்கம் : இந்திரனின் தேரோட்டி மாதலி தனது மகள் குணகேசிக்கு மணமகன் தேட நாகலோகம் சென்றுகொண்டிருந்த போது, மாதலியை நாரதர் வருணனிடம் அழைத்துச் செல்வது; மாதலிக்கு நாரதர் வருணலோகத்தைச் சுற்றிக் காட்டி விளக்குவது; காண்டீவத்தின் முன்னோடியான ஒரு வில்லை நாரதர் மாதலிக்குக் காட்டியது...
{முனிவர்} கண்வர் {துரியோதனனிடம்} சொன்னார், "மாதலி தனது வழியில் சென்று கொண்டிருந்தபோது, வருணனை (நீர் நிலைகளின் தேவனைச்) சந்திக்கச் சென்று கொண்டிருந்த பெரும் முனிவரான நாரதரைக் கண்டான். மாதலியைக் கண்ட நாரதர், "எங்கே செல்கிறாய்? ஓ! தேரோட்டி {சூதா} {மாதலி}, சொந்த காரியமாகச் செல்கிறாயா? அல்லது இந்த உனது பயணம் சதக்கிரதுவின் {இந்திரனின்} கட்டளையா?" என்று கேட்டார்.
தன் {தான் விரும்பும்} இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாரதரால், வழியில் இப்படிக் கேட்கப்பட்ட மாதலி, தனது பயண நோக்கத்தை அவரிடம் {நாரதரிடம்} முறையாகச் சொன்னான். அனைத்தையும் அறிந்து கொண்ட அந்த முனிவர் {நாரதர்}, மாதலியிடம், "நாம் இருவரும் சேர்ந்தே செல்லலாம். என்னைப் பொறுத்தவரை, விண்ணுலகில் இருந்து வந்த நான் நீர்நிலைகளின் தலைவனை {வருணனைத்} தேடி பாதாள உலகத்திற்குச் செல்கிறேன். நான் உனக்கு அனைத்தையும் சொல்கிறேன். ஓ! மாதலி, நன்கு தேடிய பிறகு, நாம் மணமகனைத் தேர்ந்தெடுக்கலாம்" என்றார்.
பிறகு பாதாள உலகத்திற்குள் நுழைந்த ஒப்பற்ற இணையான மாதலியும், நாரதரும், அங்கே லோகபாலகனான நீர்நிலைகளின் தலைவனைக் {வருணனைக்} கண்டனர். அங்கே தெய்வீக முனிவருக்குரிய வழிபாட்டை நாரதர் பெற்றார், பெரும் இந்திரனுக்கு நிகரான வழிபாட்டை மாதலி பெற்றான். காரியத்தில் நிபுணர்களான அந்த இருவரும், தாங்கள் வந்த நோக்கத்தைத் தெரிவித்து, அவனிடம் {வருணனிடம்} விடைபெற்றுக் கொண்டு, நாகர்களின் உலகத்தினுள் உலவத் தொடங்கினர். பாதாள உலகத்தில் வசிப்பவர்கள் அனைவரையும் அறிந்த நாரதர், தன் தோழனுக்கு {மாதலிக்கு} நாகலோகவாசிகள் குறித்து விரிவாக விளக்கிச் சொல்லத் தொடங்கினார்.
நாரதர் {மாதலியிடம்}, "ஓ! தேரோட்டி {சூதா} {மாதலி}, மகன்களாலும், பேரப்பிள்ளைகளாலும் சூழப்பட்டிருந்த வருணனை நீ கண்டாய். நீர்நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} ஆட்சிக்குட்பட்ட பகுதிகளைப் பார். இது சுற்றிலும், இனிமை நிறைந்ததாக, செல்வங்கள் நிறைந்ததாக இருக்கிறது. கடலின் தலைவனான வருணனின் மகன் புஷ்கரன், தனது நடத்தையாலும், மனநிலையாலும், புனிதத்தாலும் தனித்துவமானவன் ஆவான். தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய அந்தப் புஷ்கரன் {வருணனின் மகன்}, வருணனின் பெரும் விருப்பத்திற்குரிய மகனும், பெரும் அழகுடையவனும், காண்பதற்கு இனிமையானவனும் ஆவான்.
சோமனின் மகள் {சந்திரனின்மகள்} அவனையே தனது கணவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஸ்ரீக்கு {லட்சுமிக்கு} இணையான அழகுடையவளும், இரண்டாவது ஸ்ரீயைப் போன்றவளுமான சோமனின் அந்த மகள், ஜோதஸ்நாகாலி {ஜ்யோதஸ்நாகாலி} என்ற பெயரால் அறியப்படுகிறாள். உண்மையில், முன்னர் ஒரு முறை அவள் {ஜோதஸ்நாகாலி}, அதிதியின் மகன்களில் முதன்மையானவனான அவர்களில் மூத்தவனைத் {தத்ரி} [1] தனது தலைவனாகத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தேவர்கள் தலைவனின் தோழா {மாதலியே}, வருணி [2] என்றழைக்கப்படும் மது நிறைந்ததும், முழுக்க முழுக்கத் தங்கத்தாலானதுமான இந்த வசிப்பிடத்தைப் பார். உண்மையில் அந்த மதுவை அடைந்த பிறகுதான், தேவர்கள் தங்கள் தெய்வத்தன்மையை அடைந்தனர்.
[1] http://mahabharatham.arasan.info/2013/03/Mahabharatha-Adiparva-Section65.html
[2] வருணி அல்லது வருணனி என்பது வருணனின் மனைவியாவாள், அமுதத்துக்காகப் பாற்கடல் கடையப்படுகையில் வெளிவந்த இவளை வருணன் பெற்றுக் கொண்டான். இவள் அமுதத்தைப் பிரதிபலிக்கிறாள். எல்லை கடந்த ஞானத்தைச் செயல்படுத்துபவள் இவள் {வருணி} என்றும் கூறப்படுகிறது. இவள் மதம் என்றும் சுரா என்றும் அழைக்கப்படுகிறாள்.
நீ காணும் பல வகைகளிலான இந்தச் சுடர்மிகும் ஆயுதங்கள் அனைத்தும், ஓ! மாதலி, தங்கள் அரசுரிமையை இழந்த தைத்தியர்களுக்குச் சொந்தமானதே. இந்த ஆயுதங்கள் சிதைவடையாதனவும், எதிரியின் மீது ஏவப்பபட்டால் மீண்டும் ஏவியவர் கரங்களுக்கே எப்போதும் திரும்புவனவுமாகும். போரில் தேவர்களுக்குக் கிடைத்த செல்வங்களான இவற்றை, எதிரிகள் மீது பயன்படுத்த கணிசமான மன ஆற்றல் தேவை. பழங்காலத்தில் பல்வேறு வகைகளிலான தெய்வீக ஆயுதங்களைக் கொண்ட ராட்சசர்கள் மற்றும் தைத்தியர்கள் ஆகியோரின் {அசுரர்களின்} பல குலங்கள் இங்கே வசித்திருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தேவர்களால் வீழ்த்தப்பட்டனர். அங்கே, சுடர்மிகும் தழல்களைக் கொண்ட அந்த நெருப்பையும் {அக்னியையும்}, கடும்வெப்பத்தால் உண்டான பளபளக்கும் பிரகாசத்தால் சூழப்பட்டிருக்கும் *விஷ்ணுவின் சக்கரத்தையும் பார்.
உலகத்தின் அழிவுக்காக உருவாக்கப்பட்டதும், சிக்கலான முடிச்சுகள் நிறைந்ததுமான வில் [2] அங்கே கிடப்பதைப் பார். எப்போதும் தேவர்களின் பெரிய கண்காணிப்பினால் அது {அந்த வில்} பாதுகாக்கப்படுகிறது. அர்ஜுனன் தாங்கியிருக்கும் வில்லின் பெயர் {காண்டீவம் என்ற பெயர்} இதில் இருந்தே பெறப்பட்டது. நூறாயிரம் {ஒரு லட்சம்} விற்களின் பலத்தைக் கொண்ட அது, போர்க்காலத்தில் வகிக்கும் சக்தி, வர்ணிக்க இயலாத பெருமை உடையதாகும். தண்டிக்கத்தகுந்த அனைத்துத் தீயவர்களையும், ராட்சச இயல்பு கொண்ட மன்னர்களையும் அது தண்டிக்கும். இந்தக் கடுமையான *வில் {காண்டீவம்} வேதங்களை உச்சரிப்பவரான பிரம்மனால் முதலில் படைக்கப்பட்டது. பெரும் ஆசானான சுக்ரன் {சுக்ராச்சாரியார்}, மன்னர்கள் அனைவருக்கும் இது பயங்கரமானதாகும் என்று சொல்லியிருக்கிறார். பெரும் சக்தியுடைய இது {காண்டீவம்}, நீர் நிலைகளின் தலைவனுடைய {வருணனின்} மகன்களால் தாங்கப்படுகிறது.
[2] காண்டீ என்கிற கடக மிருகத்தின் கொம்பினால் செய்யப்பட்ட வில் என்று ஒரு பதிப்புக் கூறுகிறது.
வருணனின் குடை அந்தக் குடை அறைக்குள் இருப்பதை அங்கே பார். அது மேகங்களைப் போன்ற புத்துணர்வூட்டும் நீரைப் பொழிந்து கொண்டிருக்கிறது. அந்தக் குடையில் இருந்து விழும் நீர், சந்திரனைப் போலத் தூய்மையாக இருந்தாலும், யாரும் காணமுடியாத அளவுக்கு இருளால் மறைக்கப்பட்டிருக்கிறது. ஓ! மாதலி, இந்த இடங்களில், எண்ணிலடங்கா அற்புதங்களைக் காணலாம். எனினும், இங்கே மேலும் காலத்தைச் செலவிட்டால், உன் காரியத்துக்குப் பாதிப்பேற்படும். எனவே, நாம் இந்த இடைத்தை விட்டு விரைந்து செல்வோம்" என்றார் {நாரதர்}.
..........................................................................................................................................................
*விஷ்ணுவின் சக்கரத்தையும்; *வில் {காண்டீவம்}
மேலும் விபரங்களுக்கு:
ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226
கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227
..........................................................................................................................................................
*விஷ்ணுவின் சக்கரத்தையும்; *வில் {காண்டீவம்}
மேலும் விபரங்களுக்கு:
ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 226
கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம் - ஆதிபர்வம் பகுதி 227