The plead of elders to Duryodhana! | Udyoga Parva - Section 125 | Mahabharata In Tamil
(பகவத்யாந பர்வம் –54)
பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்குப் பீஷ்மர் நல்வார்த்தைகளைச் சொல்வது; பீஷ்மரைத் தொடர்ந்து துரோணரும் சொல்வது; துரியோதனனுக்காக வருந்தவில்லை, காந்தாரிக்காகவும் திருதராஷ்டிரனுக்காகவுமே தான் வருந்துவதாக விதுரன் சொன்னது; இறுதியாகத் திருதராஷ்டிரன், துரியோதனனிடம் கிருஷ்ணனின் வார்த்தைகளை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடுவது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயா}, கேசவனின் {கிருஷ்ணனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சந்தனுவின் மகனான பீஷ்மர், பழியுணர்ச்சியுடைய துரியோதனனிடம், "சொந்தங்களுக்குள் சமாதானத்தைக் கொண்டு வரவே கிருஷ்ணன் உன்னிடம் பேசியிருக்கிறான். ஓ! ஐயா, அந்த ஆலோசனைகளைப் பின்பற்றுவாயாக, கோபத்தின் ஆளுகைக்கு ஆட்படாதே. ஓ! ஐயா, உயர் ஆன்ம கேசவனின் {கிருஷ்ணனின்} வார்த்தைகளின்படி நீ செயல்படவில்லை என்றால் உனக்கு நன்மையைக் கொடுக்கும் செழிப்பையோ, மகிழ்ச்சியையோ எப்போதும் நீ அடைய மாட்டாய். ஓ! ஐயா, அறம் மற்றும் பொருளுக்கு இசைவானதையே வலிய கரங்களைக் கொண்ட கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்னான். அந்த நோக்கத்தை நீ ஏற்பாயாக.
ஓ! மன்னா {துரியோதனா}, உலகத்தில் வாழும் மக்களை அழித்துவிடாதே. ஓ! பாரதக் குலத்தில் முதன்மையானவனே {துரியோதனா}, கேசவன் {கிருஷ்ணன்}, உனது தந்தை {திருதராஷ்டிரன்}, ஞானம் கொண்ட விதுரன் ஆகியோரால் சொல்லப்பட்டவையும், உனக்கு நன்மை நிறைந்தவையும், சத்தியத்துக்கு இசைவானவையுமான வார்த்தைகளை நீ மீறுவாயெனில், அந்த உனது துர்க்குணத்தால், பூமியின் மன்னர்கள் அனைவருக்கும் மத்தியில் பிரகாசமாக இருக்கும் இந்தப் பாரதர்களின் செழிப்பை, திருதராஷ்டிரனின் வாழ்நாளிலேயே நீ அழித்துவிடுவாய். இந்த ஆணவ மனநிலையுடனேயே நீ இருந்தால், உனது ஆலோசகர்கள் {அமைச்சர்கள்}, மகன்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் உயிரையும் நீ பறித்துவிடுவாய். உனது குலத்தை அழிப்பவனாக ஆகிவிடாதே! பொல்லாதவனாக இராதே; உனது இதயம் பாவம் நிறைந்ததாக இருக்க வேண்டாம்; நீதியற்றவர்களின் பாதையில் நடக்காதே. உனது தந்தை மற்றும் தாயைத் துன்பக்கடலில் மூழ்கச் செய்யாதே" என்றார் {பீஷ்மர்}.
பீஷ்மர் முடித்த பின்னர், துரோணரும், கோபம் நிறைந்து பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்த துரியோதனனிடம், "ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} உன்னிடம் சொன்ன வார்த்தைகள் அறம் மற்றும் பொருள் நிறைந்தவையாகும். சந்தனுவின் மகனான பீஷ்மரும் இதையேதான் சொன்னார். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அவ்வார்த்தைகளை ஏற்பாயாக.
அவர்கள் இருவரும் {கிருஷ்ணனும், பீஷ்மரும்} ஞானிகளும், பெரும் புத்திக்கூர்மையுள்ளவர்களும், ஆன்மாக்களைக் கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், உனது நன்மைக்கானவற்றைச் செய்ய விரும்புபவர்களும், பெரும் கல்வி கற்றவர்களும் ஆவர். எது நன்மையோ அதையே அவர்கள் சொன்னார்கள். ஓ! மன்னா, ஓ! பெரும் ஞானம் கொண்டவனே {துரியோதனா}, கிருஷ்ணன், பீஷ்மர் ஆகிய இருவரின் வார்த்தைகளை ஏற்று, அவர்கள் சொன்னது போலச் செயல்படுவாயாக. ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {துரியோதனா}, புரிதலில் உண்டாகும் மாயையினால் மாதவனை {கிருஷ்ணனை} அலட்சியம் செய்யாதே.
உன்னை எப்போதும் ஊக்குவித்து வருபவர்கள், வெற்றியைக் கொடுக்கவல்லவர்களல்ல. போர்க்காலத்தில் அவர்கள் வெறுப்பின் சுமையைத் தூக்கி மற்றவர்கள் கழுத்தில் வீசுவார்கள் [1]. பூமியில் வாழும் மக்களைப் படுகொலை செய்யாதே. உனது மகன்களையும், சகோதரர்களையும் கொன்றுவிடாதே. வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் எந்தப் படைக்கு மத்தியில் இருக்கிறார்களோ, அந்தப் படையை யாராலும் வெல்ல முடியாது. ஓ! பாரதா {துரியோதனா}, உனது நண்பர்கள், கிருஷ்ணன் மற்றும் பீஷ்மர் ஆகியோரின் உண்மைநிறைந்த வார்த்தைகளை நீ ஏற்கவில்லையென்றால், ஓ! ஐயா, நீ நிச்சயம் வருந்த வேண்டியிருக்கும்.
[1] தாங்கள் செய்ய வேண்டியதைப் பிறர் செய்யும்படி விட்டுவிடுவார்கள்.
ஜமதக்னியின் மகன் {பரசுராமர்} சொன்னதைவிட அர்ஜுனன் இன்னும் பெரியவனாவான். தேவகியின் மகனான கிருஷ்ணனைப் பொறுத்தவரை, அவன் தேவர்களாலும் எதிர்க்க இயலாதவன் ஆவான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, இன்பத்தையும், நன்மையையும் உண்மையில் அளிப்பனவற்றை உனக்குச் சொல்வதால் என்ன பயன்? அனைத்தும் இப்போது உனக்குச் சொல்லப்பட்டுவிட்டது. நீ விரும்பியதைச் செய்வாயாக. ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மேலும் எதையும் உனக்குச் சொல்ல நான் விரும்பவில்லை" என்றார் {துரோணர்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "துரோணர் நிறுத்தியதும், க்ஷத்ரி {க்ஷத்தா} என்றும் அழைக்கப்படும் விதுரன், துரியோதனன் மீது கண்களைச் செலுத்தி, பழியுணர்ச்சி கொண்ட அந்தத் திருதராஷ்டிரரின் மகனிடம் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, ஓ! பாரத்குலத்தின் காளையே, நான் உனக்காக வருந்தவில்லை. எனினும், காந்தாரி மற்றும் உனது தந்தை {திருதராஷ்டிரர்} ஆகிய இந்த முதிய இணைக்காக நான் வருந்துகிறேன். (யாரை விரைவில் இழக்கப் போகிறார்களோ, அந்தத்) தீய ஆன்மா கொண்ட உன்னைத் தங்கள் பாதுகாவலனாகக் கொண்ட அவர்கள் {காந்தாரியும் திருதராஷ்டிரரும்}, தங்கள் நண்பர்களையும் ஆலோசகர்களையும் இழந்து, சிறகிழந்த பறவை இணை ஒன்றைப் போலத் தங்களைப் பார்த்துக்கொள்ள எவனுடனும் திரிவார்களே. தன் குலத்தை அழித்துக் கொள்பவனான தீய மகனைப் பெற்றதால், ஐயோ, இவர்கள் இருவரும் கவலையுடன் பூமியெங்கும் பிச்சைக்காரர்களாகத் திரியப் போகிறார்களே" என்றான் {விதுரன்}.
அதன்பிறகு, மன்னர்கள் சூழ தனது தம்பிகளுக்கு மத்தியில் அமர்ந்திருந்த துரியோதனனிடம் பேசிய மன்னன் திருதராஷ்டிரன், "ஓ! துரியோதனா, உயர் ஆன்ம சௌரி {கிருஷ்ணன்} சொன்னவற்றைக் கேள். நித்தியமானவையும், மிகுந்த பயனுள்ளவையும், உயர்ந்த நன்மைக்கு உகந்தவையுமான அந்த வார்த்தைகளை ஏற்பாயாக. களங்கமற்ற செயல்களையுடைய கிருஷ்ணனின் துணையுடன், மன்னர்கள் அனைவரின் மத்தியிலும், நாம் அனைவரும் நமது நோக்கங்கள் நிறைவேறியவர்கள் ஆவோம்.
ஓ! ஐயா, கேசவன் {கிருஷ்ணன்} மூலமாக உறுதியாக இணைந்து யுதிஷ்டிரனிடம் சமரசம் செய்து கொள்வாயாக. அமைதிக்கான ஆடி விழாவைப் போல { like unto an august ceremony of propitiation = மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய பிரம்மாண்டமான நிவர்த்தி [சமாதான] விழாவைப் போலப்} பாரதர்களுக்கான பெரும் நன்மையை நாடுவாயாக. வாசுதேவனை {கிருஷ்ணனை} உபாயமாகக் கொண்டு பாண்டவர்களுடன் நெருக்கமாகப் பிணைவாயாக. அதற்கான நேரம் வந்துவிட்டதாகவே நான் நினைக்கிறேன். இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாதே. எனினும், நன்மையை அடைய வேண்டிய உன்னிடம் சமாதானத்தை வேண்டும் கேசவனை {கிருஷ்ணனை} நீ அலட்சியம் செய்வாயெனில், எப்போதுமே வெற்றி உனதாகாது." என்றான் {திருதராஷ்டிரன்}.