Duryodhana derisive speech! | Udyoga Parva - Section 161b | Mahabharata In Tamil
(உலூகதூதாகமன பர்வம் – 1)
பதிவின் சுருக்கம் : பாண்டவர்களின் சினத்தைத் தூண்டுமாறு யுதிஷ்டிரன், கிருஷ்ணன், பீமன், நகுலன், சகாதேவன், விராடன், துருபதன், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோர் ஒவ்வொருவரிடமும் தான் சொல்லியனுப்பும் வார்த்தைகளைச் சொல்லுமாறு துரியோதனன் உலூகனிடம் சொன்னது...
{யுதிஷ்டிரனிடம் சொல்ல வேண்டியவற்றை உலூகனிடம் துரியோதனன் தொடர்ந்து சொன்னான்.} {யுதிஷ்டிரனிடம் துரியோதனன்}, "ஓ! தீய ஆன்மா கொண்டவனே {யுதிஷ்டிரா}, நீ கூட அத்தகைய பூனை நடத்தை கொண்டவனே. (கதையில் வந்த அந்தப்) பூனை எலிகளிடம் நடந்து கொண்டதைப் போலத்தான், நீயும் உனது சொந்தங்களிடம் நடந்து கொள்கிறாய். உனது பேச்சு ஒரு வகையில் இருக்கிறது, உனது நடத்தையோ வேறு வகையில் இருக்கிறது. உனது சாத்திரமும் ({சாத்திர} பக்தியும்), அமைதி நிறைந்த உனது நடத்தையும் மனிதர்களுக்கு முன்னிலையில் காட்சிப்படுத்த மட்டுமே உன்னால் செய்யப்படுகின்றன. இந்தப் பாசாங்கையெல்லாம் கைவிட்டு, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, க்ஷத்திரிய நடைமுறைகளைப் பின்பற்றி, ஒருவன் என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வாயாக. ஓ! மனிதர்களில் காளையே {யுதிஷ்டிரா}, நீ அறம்சார்ந்தவன் இல்லையா?
ஓ! பாரதர்களில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, உனது கரங்களின் ஆற்றல் மூலம் இந்தப் பூமியை அடைந்து, அந்தணர்களுக்குக் கொடையையும், இறந்து போன தனது மூதாதையருக்கு ஒருவன் செய்ய வேண்டியவற்றையும் அளிப்பாயாக. ஆண்டாண்டுகளாகத் தொடர்ச்சியாகத் துயரத்தில் பீடிக்கப்பட்டுள்ள உனது தாயாருக்கு {குந்திக்கு} நல்லதைச் செய்ய முனைவாயாக. அவளது கண்ணீரை வற்ற செய்வாயாக. போரில் (உனது எதிரிகளை) வீழ்த்தி அவளுக்கான மரியாதைகளைச் செய்வாயாக. மிகவும் பரிதாபகரமாக வெறும் ஐந்து கிராமங்களை மட்டுமே நீ கேட்டாய். அதுவும் கூட எங்களால் நிராகரிக்கப்பட்டது. ஏனெனில், "பாண்டவர்களைக் கோபமூட்டுவதில் நாம் வெற்றி காண்பது எப்படி? போரை நாம் நிலைநாட்டுவது எப்படி?" என்பனவற்றை மட்டுமே நாங்கள் முயன்று கொண்டிருந்தோம்.
உன் நிமித்தமாகவே தீய விதுரன் (எங்களால்) விரட்டப்பட்டான், அரக்கு வீட்டில் வைத்து உங்கள் அனைவரையும் எரிக்க முயன்றவர்கள் நாங்களே என்பதை நினைவுகூர்ந்து இப்போது ஆண்மையை அடைவாயாக; (உபப்லாவ்யத்தில் இருந்து) கிருஷ்ணன் குருக்களின் {கௌரவர்களின்} சபைக்குப் புறப்பட்ட போது, அவன் {கிருஷ்ணன்} மூலமாக, "ஓ! மன்னா {துரியோதனா}, கேள். போருக்கோ, அமைதிக்கோ நான் தயாராக இருக்கிறேன்" என்ற செய்தியை நீ (எங்களுக்குச்) சொன்னாய். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, போருக்கான அந்த நேரம் வந்து விட்டது என்பதை அறிவாயாக.
ஓ! யுதிஷ்டிரா, அந்த நோக்கில் நான் இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவிட்டேன். போரை விட மதிக்கத்தக்க உயர்வாக (நற்பேறாக) ஒரு க்ஷத்திரியன் வேறு எதைக் கருதுவான்? நீ க்ஷத்திரிய வகையில் பிறந்தவனாவாய். அப்படியே இந்த உலகத்தில் நீ அறியப்படுகிறாய். துரோணர், கிருபர் ஆகியோரிடம் ஆயுதங்களை அடைந்த நீ, ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, உன்னைப் போன்ற அதே வகைக்குச் சொந்தமானவனும், பலத்தில் உன்னைவிட உயர்வில்லாதவனுமான வாசுதேவனை {கிருஷ்ணனை} ஏன் நம்புகிறாய்?" என்று {யுதிஷ்டிரனிடம்} கேட்பாயாக.
பாண்டவர்களின் முன்னிலையில் வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} நீ இந்த {பின்வரும்} வார்த்தைகளைச் சொல்ல வேண்டும், "உன் நிமித்தமாகவும், பாண்டவர்கள் நிமித்தமாகவும் உனது சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் நீ என்னைத் தாக்குப்பிடி {பார்ப்போம்}. குருக்களின் சபை மத்தியில் நீ எற்ற வடிவத்தை {விஸ்வரூபத்தை}, மீண்டும் ஒருமுறை ஏற்று, அர்ஜுனனுடன் சேர்ந்து (போர்க்களத்தில்) என்னை நோக்கி விரைவாயாக.
ஒரு மாயக்காரனின் தந்திரங்கள் அல்லது மாயைகள் (சில சமயங்களில்) அச்சத்தைத் தோற்றுவிக்கக்கூடும். ஆனால், போருக்காக ஆயுதம் தாங்கி நிற்பவனைப் பொறுத்தவரை, இத்தகு மோசடிகள் (போருக்கு எழுச்சியூட்டுவதைவிட) கோபத்தை மட்டுமே {அவனிடம்} தூண்டுகின்றன. *எங்களது மாய சக்திகளால், சொர்க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும்! பெரும் ஆணையாளன் {பிரம்மன்}, (அத்தகைய மாயக்காரனின் தந்திரங்களால்) ஒருபோதும் உயிரினங்கள் அனைத்தையும் அடக்க வில்லை. அவனது {பிரம்மனின்} சுய விருப்பத்தின் பேரிலேயே அஃது அடக்கப்படுகிறது.
ஓ! விருஷ்ணி குலத்தோனே {கிருஷ்ணா}, "திருதராஷ்டிரர் மகன்களைப் போரில் கொல்லச் செய்து, எதிர்ப்பில்லாத அரசுரிமையைப் பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு {பாண்டவர்களுக்கு} நான் வழங்குவேன்" என்று எப்போதும் நீ சொல்லும் வார்த்தைகளைச் சஞ்சயன் என்னிடம் கொண்டு வந்தான். "கௌரவர்களே, என்னை இரண்டாவதாக {தனக்கு அடுத்தவனாகக்} கொண்டிருக்கும் அர்ஜுனனிடம் நீங்கள் பகைமையைத் தூண்டுகிறீர்கள் என்பதை அறிவீர்களாக", என்றும் நீ சொல்லி இருக்கிறாய். அந்த {உனது} உறுதிமொழியைக் கடைப்பிடித்து, பாண்டவர்களுக்காக உனது சக்தியைச் செலுத்தி, உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக!
{கிருஷ்ணா!} நீ ஆண்மையுள்ளவன் என்பதை எங்களுக்குக் காட்டுவாயாக! `உண்மையான ஆண்மையை நாடுவதால், பகைவர்களுக்குத் துயரத்தை ஏற்படுத்த உறுதி செய்பவனே உண்மையில் உயிரோடு இருப்பவனாகச் சொல்லப்படுகிறான்`. ஓ! கிருஷ்ணா, எக்காரணமும் இன்றி உனது புகழ் இவ்வுலகில் பெரிதாகப் பரவி இருக்கிறது! எனினும், {மீசை முதலிய} ஆண்மையின் குறிகளைத் தன்னிடம் கொண்டும், உண்மையில் அலிகளாக இருப்போர் இவ்வுலகில் பலர் இருக்கின்றனர் என்பது இப்போது அறியப்படும். குறிப்பாக நீ கம்சனின் அடிமையாவாய். உனக்கு எதிராக ஏகாதிபதியான நான் கவசம் தரித்து என்னை மறைத்துக்கொள்ளக்கூடாது!" என்று {கிருஷ்ணனிடம்} சொல்வாயாக.
(அடுத்ததாக), ஓ! உலூகா, மதிகெட்டவனும், அறியாமை நிறைந்தவனும், பெருந்தீனிக்காரனும், கொம்புகள் அகற்றப்பட்ட காளையைப் போன்றவனுமான பீமசேனனிடம் இவ்வார்த்தைகளை மீண்டும் மீண்டும் சொல்வாயாக. அவனிடம் {பீமனிடம்} "ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே பீமா}, விராடனின் நகரத்தில், வல்லவன் {வல்லன்} என்ற பெயரில் அறியப்பட்ட சமையற்காரனாக இருந்தவன் நீ! இவை அனைத்தும் உனது ஆண்மையின் சாட்சிகளாகும்! குருக்களின் சபைக்கு மத்தியில் நீ செய்த சூளுரை {சபதம்} பொய்க்காதிருக்கட்டும்! உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தம் குடிக்கப்படட்டும்! {உன்னால் முடிந்தால் துச்சாசனனின் இரத்தத்தைக் குடி பார்ப்போம்}.
ஓ! குந்தியின் மகனே {பீமா}, "போரில் நான் திருதராஷ்டிரரின் மகன்களை விரைந்து கொல்வேன்!" என்று நீ அடிக்கடி சொல்லியிருக்கிறாய். அதைச் சாதிப்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. ஓ! பாரதா {பீமா}, சமையற்கலையில் வெகுமதி பெற நீ தகுந்தவனே! எனினும், உடை, உணவு மற்றும் போர் ஆகியவற்றுக்குள் பெரும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இப்போது போரிடுவாயாக. ஆண்மையுடனிருப்பாயாக! உண்மையில், ஓ! பாரதா {பீமா}, உனது கதாயுதத்தை வாரி அணைத்துக் கொள்ளும் நீ பூமியில் உயிரற்று விழுந்து கிடக்க வேண்டியிருக்கும். ஓ! விருகோதரா {பீமா}, உனது சபைக்கு மத்தியில் தற்பெருமை பேசுவதில் நீ ஈடுபட்டதெல்லாம் வீணாகப் போகிறது!" என்று {பீமனிடம்} சொல்வாயாக.
ஓ! உலூகா, நகுலனிடம், நான் சொல்லும் இவ்வார்த்தைகளைச் சொல்வாயாக. {அந்த நகுலனிடம்}, "ஓ! பாரதா {நகுலா}, அமைதியாகப் போரிடுவாயாக! ஓ! பாரதா {நகுலா}, உனது ஆண்மையையும், யுதிஷ்டிரன் மேல் நீ வைத்திருக்கும் மரியாதையையும், என்னிடம் நீ கொண்டுள்ள வெறுப்பையும் நாங்கள் காண விரும்புகிறோம். கிருஷ்ணை {திரௌபதி} பட்ட துயரங்கள் அனைத்தையும் உனது மனதில் நினைவு கூர்வாயாக", என்று {நகுலனிடம்} சொல்வாயாக.
அடுத்ததாக, (கூடியிருக்கும்) ஏகாதிபதிகளுக்கு முன்னிலையில் இந்த எனது வார்த்தைகளைச் சகாதேவனிடம் சொல்வாயாக. அவனிடம் {சகாதேவனிடம்}, "உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்தி, போர்க்களத்தில் இப்போது போரிடுவாயாக! உங்கள் துன்பங்கள் அனைத்தையும் நினைவுகூர்வாயாக" என்று சொல்வாயாக.
அடுத்து, விராடன் மற்றும் துருபதனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவர்களிடம், "படைப்பின் ஆரம்பத்தில் இருந்தே, பெரும் காரியங்களைச் செய்யக்கூடிய அடிமைகள் கூடத் தங்கள் முதலாளிகளை {எஜமானர்களை} முழுமையாகப் புரிந்து கொண்டதில்லை. அதே போல, செழிப்பான அரசர்களாலும் தங்கள் அடிமைகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. இந்த மன்னன் {யுதிஷ்டிரன்} புகழத்தக்கவனல்ல. இத்தகு நம்பிக்கையிலேயே நீங்கள் எனக்கு எதிராக வந்திருக்கிறீர்கள். எனவே, ஒன்றுகூடி எனக்கெதிராகப் போரிட்டு, என்னைக் கொன்று, பாண்டவர்களும் நீங்களும், உங்கள் கருத்தில் கொண்டுள்ள நோக்கங்களைச் சாதிப்பீராக" என்று சொல்வாயாக.
பாஞ்சாலர்களின் இளவரசனான திருஷ்டத்யும்னனிடம் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், "{இதோ} உனக்கான நேரம் வந்துவிட்டது, நீயும் உனது நேரத்தின் காரணமாகவே {இங்கு} வந்திருக்கிறாய்! போரில் துரோணரை அணுகி, உனக்குச் சிறந்தது எது என்பதை அறிந்து கொள்வாய்! உனது நண்பனின் காரியத்தைச் சாதிப்பாயாக" என்று சொல்வாயாக.
ஓ! உலூகா, அடுத்ததாக, சிகண்டியிடம் மீண்டும் மீண்டும் இந்த எனது வார்த்தைகளைச் சொல்வாயாக. அவனிடம், "வலிய கரங்களைக் கொண்ட கௌரவரும், வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவருமான கங்கையின் மகன் (பீஷ்மர்), பெண் என்று மட்டுமே உன்னை அறிவதால், உன்னை அவர் கொல்லமாட்டார்! {எனவே}, இப்போது அச்சமில்லாமல் போரிடுவாயாக! உனது பலத்தில் சிறந்ததைப் பயன்படுத்திப் போரில் சாதிப்பாயாக! நாங்கள் உனது ஆற்றலைக் காண விரும்புகிறோம்" என்று சொல்வாயாக." {என்று உலூகனிடம் சொன்னான் துரியோதனன்}.
********************************************************************************
********************************************************************************
*{துரியோதனன் கிருஷ்ணனிடம் கூறும்படி உலூகனிடம் சொன்னது}, “எங்களது மாய சக்திகளால், சொர்க்கம், அல்லது, வானத்திற்கு உயர்வதற்கோ, பாதாள உலகம், அல்லது இந்திரனின் நகரத்திற்குள் ஊடுறுவுவதற்கோ நாங்களும் திறன் பெற்றவர்களாகவே இருக்கிறோம். எங்கள் உடலில் பல்வேறு உருவங்களை எங்களாலும் காட்சிப்படுத்த இயலும்!”திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.தமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.