Duryodhana reproached Arjuna! | Udyoga Parva - Section 161c | Mahabharata In Tamil
(உலூகதூதாகமன பர்வம் – 1)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; அர்ஜுனன், திரௌபதி மற்றும் பாண்டவர்கள் அனுபவித்த துயரங்களைச் சொல்லி துரியோதனன் அர்ஜுனனைச் சீண்டுவது; ஆண்மையுடன் நடந்து கொள்ளுமாறு அர்ஜுனனுக்குச் சொல்லி அனுப்பிய துரியோதனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்}தொடர்ந்தார், "{உலூகனிடம்} இதைச் சொன்ன மன்னன் துரியோதனன் உரக்கச் சிரித்தான். பிறகு மீண்டும் உலூகனிடம் பேசிய அவன் {துரியோதனன்}, "வாசுதேவன் {கிருஷ்ணன்} கேட்டுக் கொண்டிருக்கையில் மீண்டும் ஒருமுறை தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்} இந்த வார்த்தைகளைச் சொல்வாயாக. "ஓ! வீரா {அர்ஜுனா}, எங்களை வீழ்த்தி இந்த உலகை ஆண்டுகொள், அல்லது எங்களால் வீழ்த்தப்பட்டு (உயிரிழந்து) களத்தில் விழுவாயாக! நாட்டில் இருந்து நீங்கள் துரத்தப்பட்டது, காட்டில் நீங்கள் அனுபவித்த துயரங்கள், கிருஷ்ணையின் {திரௌபதியின்} துன்பம் ஆகிய உங்கள் பாடுகளை நினைவுகூர்ந்து, ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா} உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக! க்ஷத்திரியப் பெண் ஒருத்தி மகனைப் பெற்றெடுக்கும் காரணத்திற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. எனவே, உனது பலம், சக்தி, வீரம், ஆண்மை, ஆயுதங்களின் திறம் மற்றும் வேகம் ஆகியவற்றைப் போரில் வெளிப்படுத்தி, உனது சினத்தைத் தணித்துக் கொள்வாயாக!
துயரால் பாதிப்படைந்து, உற்சாகமிழந்து, (வீட்டில் இருந்து) நீண்ட நாட்களுக்குத் துரத்தப்பட்டு, தன் நாட்டில் இருந்தும் கடத்தப்பட்ட எவனது இதயம்தான் உடையாதிருக்கும்? நற்பிறப்பு, வீரம், பிறரின் செல்வத்தில் பேராசையின்மை கொண்ட எவன் தான், தலைமுறை தலைமுறையாக ஆண்டு வரும் தனது நாடு தாக்கப்படும்போது கோபப்பட மாட்டான்? நீ சொன்ன அந்த உயர்ந்த வார்த்தைகளைச் செயலில் காட்டுவாயாக.
எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர். எதிரிகளின் உடைமையாக இருக்கும் உனது பொருட்களையும், உனது நாட்டையும் மீட்பாயாக! போரை விரும்பும் மனிதனின் நோக்கம் இந்த இரு காரணங்களையே கொண்டிருக்கும். எனவே, உனது ஆண்மையை வெளிப்படுத்துவாயாக! பகடையில் நீ (அடிமையாக) வெல்லப்பட்டாய்! கிருஷ்ணை {திரௌபதி} எங்களால் சபைக்கு இழுத்து வரப்பட்டாள். ஆண்மையுள்ளவனாகத் தன்னைக் கருதும் மனிதன், நிச்சயம் இதற்குத் தனது கோபத்தை வெளிப்படுத்த வேண்டும்!
பனிரெண்டு {12} நீண்ட வருடங்களாக வீட்டில் இருந்து துரத்தப்பட்ட நீங்கள் காட்டில் வசித்தீர்கள்; ஒரு முழு வருடத்தை விராடனின் சேவையில் கழித்தீர்கள். நாட்டை விட்டுத் துரத்தப்பட்டதையும், காடுகளில் சில காலம் வாழ நேர்ந்ததையும், கிருஷ்ணை {திரௌபதி} அடைந்த துயரத்தையும் உங்கள் வேதனைகள் அனைத்தையும் நினைத்துப் பார்த்து ஆண்மையுடன் இருப்பாயாக. உன்னிடமும், உனது சகோதரர்களிடமும் மீண்டும் மீண்டும் {எங்களால்} சொல்லப்பட்ட கடுமொழிகளுக்கான உனது கோபத்தை வெளிப்படுத்துவாயாக. உண்மையில், கோபம் (போன்றவை) ஆண்மையுள்ளவனிடமே இருக்கும்.
உனது கோபம், வலிமை, ஆற்றல், அறிவு, ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் உள்ள உனது கரங்களின் வேகம் ஆகியவற்றை வெளிப்படுத்துவாயாக. ஓ! பிருதையின் {குந்தியின்} மகனே {அர்ஜுனா}, போரிட்டு ஆண்மையுள்ளவனாக உன்னை நிரூபிப்பாயாக. உனது ஆயுதங்கள் அனைத்துக்கான மந்திர வழிபாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. குருக்ஷேத்திரக்களம் புழுதியற்று இருக்கிறது. உனது குதிரைகளும் உடல்நலத்துடன் வலுவாக உள்ளன. உனது போர்வீரர்கள் தங்கள் கூலியைப் பெற்றுவிட்டனர். எனவே, கேசவனை {கிருஷ்ணனை} (உனக்கு) அடுத்தவனாகக் கொண்டு (எங்களுடன்) போரிடுவாயாக! பீஷ்மருடன் இன்னும் மோதாமல், இத்தகு தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய்? கந்தமாதன மலைகளில் ஏறாமல், (தான் செய்யப்போகும் செயலைக் குறித்து) தற்புகழ்ச்சி பேசும் மூடனைப் போலப் பிதற்றி வரும் நீ, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} ஆண்மையுள்ளவனாக இருக்கக் கடவாய்!
சூதகுலத்தானான ஒப்பற்ற கர்ணனையோ, மனிதர்களில் முதன்மையான சல்லியனையோ, வலிமைமிக்கப் போர்வீரர்களில் முதன்மையானவரும், போரில் சச்சியின் கணவனுக்கு {இந்திரனுக்கு} நிகரானவருமான துரோணரையோ போரில் வீழ்த்தாமல், ஓ! பார்த்தா {அர்ஜுனா}, உன்னால் உனது நாட்டை எப்படி மீட்க முடியும்? ஓ! பார்த்தா {அர்ஜுனா}, வேத கல்வியிலும், விற்கலையிலும் ஆசானாக இருப்பவரும், கல்வியின் அந்த இரு கிளைகளையும் கடந்தவரும், போரில் முதன்மையானவரும், (கோபுரம் போல) அமைதியானவரும், வலிமையில் எந்தக் குறைவையும் அறியாதவரும், படைகளின் தளபதியும், பெரும் பிரகாசம் கொண்டவருமான துரோணரையல்லவா நீ வெல்ல விரும்புகிறாய்.
காற்றால் சுமேருவின் சிகரம் நொறுக்கப்பட்டதாக நாம் கேள்விப்பட முடியாது. எனினும், நீ சொல்வது {வெல்வது} உண்மையானால், காற்று சுமேருவைச் சுமந்து சென்றுவிடும்; வானமே பூமியில் விழுந்துவிடும்; யுகங்களே கூடத் தங்கள் முறைமைகளை மாற்றிக் கொள்ளும். பார்த்தனோ {அர்ஜுனனோ}, வேறு எவனோ, எதிரிகளைக் கலங்கடிக்கும் அவரை {துரோணரை} அணுகிய பிறகு, உயிரை விரும்பும் எவன் தான் நல்ல உடலுடன் வீட்டுக்குத் திரும்ப முடியும்? தன் கால்களால் பூமியில் நடக்கும் எவன் தான், துரோணர் மற்றும் பீஷ்மரிடம் மோதி, அவர்களின் கணைகளால் அடிக்கப்பட்டு, போரில் இருந்து உயிருடன் தப்ப முடியும்?
வெல்லப்பட முடியாததும், தேவர்களின் படையைப் போன்றே தெரிவதும், தேவர்களால் காக்கப்படும் தெய்வீகப் படையைப் போன்றதும், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு திசைகளின் மன்னர்களாலும், காம்போஜர்கள், சகர்கள், கசர்கள், சால்வர்கள், மத்ஸ்யர்கள் {மச்ச நாட்டவர்}, நடுநாட்டின் குருக்கள், மிலேச்சர்கள், புளிந்தர்கள், திராவிடர்கள், ஆந்திரர்கள், காஞ்சிகள் {காஞ்சி நாட்டவர்} ஆகியோராலும், மனிதர்களின் தலைவர்களாலும் பாதுகாக்கப்படுவதும், போருக்குத் தயாராக இருப்பதும், கடக்க முடியாத கங்கையின் ஊற்று போல இருப்பதுமான இந்தப் பல நாட்டுப் படைகளின் வலிமையைக் கிணற்றில் வசிக்கும் தவளையைப் போல, நீ ஏன் உணர மறுக்கிறாய்?
ஓ! சிறுமதி கொண்டவனே, ஓ! மூடனே, எனது யானைப்படைக்கு மத்தியில் நின்று கொண்டு, என்னுடன் மோத எப்படி நீ துணிவாய்? ஓ! பார்த்தா, ஓ! பாரதா {அர்ஜுனா}, வற்றாத உனது அம்பறாத்தூணிகள், அக்னியால் உனக்குக் கொடுக்கப்பட்ட உனது தேர், உனது தெய்வீகக் கொடி ஆகியன அனைத்தும் இந்தப் போரில் எங்களால் சோதனைக்குள்ளாக்கப்படும். ஓ! அர்ஜுனா, பிதற்றாமல் போரிடுவாயாக! அதீத தற்புகழ்ச்சியில் ஏன் நீ ஈடுபடுகிறாய்? போரில் வெற்றி என்பது போரிடும் முறையால் விளைவதாகும். ஒரு போரைப் பிதற்றலால் வெல்ல முடியாது".
*********************************************************************************
*எதையும் செய்யும் திறனற்றுத் தற்பெருமை மட்டுமே பேசிக் கொண்டிருப்பவனை இழிந்த மனிதனாகவே நல்லோர் கருதுகின்றனர்.திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்:குடியியல் / அதிகாரம்: பெருமை/ குறள்: 978.பணியுமாம் என்றும் பெருமை சிறுமைஅணியுமாம் தன்னை வியந்து.தமிழ் விளக்கவுரை- சாலமன் பாப்பையா :பெருமை உடையவர் செருக்கு இல்லாமல் பணிவுடன் இருப்பர்; சிறுமை உடையவரோ செருக்குடன் தம்மைத் தாமே வியந்து பாராட்டுவர்.{தற்பெருமை பேசுவர்}.