Where did the Gandiva go? | Udyoga Parva - Section 161d | Mahabharata In Tamil
(உலூகதூதாகமன பர்வம் – 1)
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் துரியோதனன் சொன்ன வார்த்தைகள்; பாண்டவர்களின் பலத்தைத் தான் அறிந்திருப்பதாகவும், இருப்பினும் நாட்டைத் தன்னால் கொடுக்க முடியாது என்றும் துரியோதனன் சொன்னது; தனது படையைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டு, தனது தளபதிகளை அதிலிருக்கும் உயிரினங்களாக ஒப்பிட்டுச் சொன்ன துரியோதனன்...
{அர்ஜுனனிடம் சொல்லுமாறு உலூகனிடம் தொடர்ந்த துரியோதனன்}, "ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, கொக்கரிப்புகளின் விளைவால், செயல்கள் இவ்வுலகில் வெல்லும் என்றால், அனைவரும் தங்கள் நோக்கங்களில் வெற்றி அடைந்துவிடுவர். ஏனெனில், தற்பெருமை பேசும் திறனில்லாதவன் எவன் இருக்கிறான்? நீ உனது கூட்டாளியாக வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன். உனது காண்டீவத்தின் அளவு முழுமையாக ஆறு {6} முழம் என்பதை அறிவேன். உனக்கு நிகரான போர்வீரன் எவனும் இல்லை என்பதை நான் அறிவேன். இவை யாவையும் அறிந்தும், நான் இன்னும் நாட்டைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறேன். பரம்பரைப் பண்புகளின் விளைவாக ஒரு மனிதன் வெற்றியை அடைவதில்லை. தலைமை ஆணையாளர் {பிரம்மா} மட்டுமே, தனது ஆணையால், காரியங்களை (பகைமையை) நட்பால் தாழச் செய்ய {அடக்க} முடியும்.
இந்தப் பதிமூன்று {13} ஆண்டுகளாக நீ அழுது புலம்பிக் கொண்டிருக்கையில் நான் அரசுரிமையை அனுபவித்தேன். *உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன். பந்தயத்தில் அடிமையாக வெல்லப்பட்டபோது, உனது காண்டீவம் எங்கே போயிற்று? ஓ! பல்குனா {அர்ஜுனா}, பீமனின் வலிமை எங்கே போயிற்று?
கதாயுதம் தரித்த பீமசேனனாலோ, காண்டீவம் தரித்த உன்னாலோ நீங்கள் விடுதலை அடையவில்லை, ஆனால் களங்கமற்ற கிருஷ்ணையால் {திரௌபதியால்} அடைந்தீர்கள். அடிமைத்தளையில் மூழ்கி, இழிந்தோர் மட்டுமே செய்யத்தகுந்த தொழில்களில் ஈடுபட்டு, அடிமைகளாய் பணி செய்ய வேண்டிய உங்களை அந்தப் பிரஷதனின் {துருபதனின்} வீட்டு மகளே {திரௌபதியே} விடுவித்தாள். எள்ளுப்பதர்களாகவே நான் உங்கள் அனைவரையும் வகைப்படுத்தினேன். அஃது உண்மையே.
ஏனெனில், விராடனின் நகரத்தில் வாழ்ந்த போதும் பார்த்தன் (சில காலத்திற்கு) பின்னலைத் தரிக்கவில்லையா? விராடனின் மடைப்பள்ளியில் {சமையலறையில்}, சமையற்காரனாக வேலை செய்தே பீமசேனன் களைத்துப் போனான். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, {உங்களையெல்லாம் இப்படிச் செய்த} இதுவும் எனது ஆண்மையே (ஆண்மையின் சாட்சியே)! இடைகள், பின்னல்கள் மற்றும் இடைக்கச்சைகளுடன் மோதலில் இருந்து ஓடி, உனது கூந்தலைக் கட்டிக் கொண்டு, நீ {அர்ஜுனா} பெண்களுக்கு அடற்கலை கற்றுத் தந்தாய் அல்லவா?
க்ஷத்திரியர்கள் எப்போதும் க்ஷத்திரியர்களுக்கு இப்படித்தான் தண்டனை வழங்குவார்கள். வாசுதேவன் {கிருஷ்ணன்} மீது அச்சங்கொண்டோ, உன்னைக் கண்டு அஞ்சியோ, ஓ! பல்குனா {அர்ஜுனா}, நான் நாட்டைக் கொடுக்க மாட்டேன். கேசவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்டு போரிடுவாயாக! வஞ்சகமோ, மாயத் தந்திரங்களோ, செப்பிடுவித்தைகளோ ஆயுதம் தரித்த மனிதனை அச்சுறுத்தாது. மாறாக அஃது அவனது கோபத்தையே தூண்டிவிடும்.
வீணாகாத ஆயுதங்களையும், கரங்களையும் கொண்ட என்னை, ஆயிரம் {1000} வாசுதேவர்கள் {கிருஷ்ணன்கள்}, நூறு {100} பல்குனர்கள் {அர்ஜுனர்கள்} அணுகினாலும், அவர்கள் அனைத்துத் திசைகளிலும் சிதறி ஓடிப்போகப் போவது உறுதி. போரில் பீஷ்மருடன் மோதுவதும், மலையைத் தலையால் மோதுவதும், பரந்து ஆழ்ந்திருக்கும் பெருங்கடலை இரு கரங்களின் உதவியால் கடப்பதும் ஒன்றே.
என் படையைப் பொறுத்தவரை, அது கண்கூடான ஒரு பெரும் கடலாகும். சரத்வானின் மகனை {கிருபரை} அதன் பெரும் மீனாகவும், விவிம்சதியை அதன் பெரும்பாம்பாகவும், பீஷ்மரை அதன் அளவிலா வலிமை கொண்ட நீரூற்றாகவும், துரோணரை அதன் வெல்லப்படமுடியாத முதலையாகவும், கர்ணன், சால்வன், சல்லியன் ஆகியோரை அதன் மீன்களாகவும், நீர்ச்சுழிகளாகவும், காம்போஜர்களின் ஆட்சியாளனை நெருப்பு உமிழும் குதிரையின் தலையாகவும், பிருஹத்பலனை அதன் கடுமையான அலைகளாகவும், சோமதத்தன் மகனை அதன் திமிங்கலமாகவும், யுயுத்சு மற்றும் துர்முகன் ஆகியோரை அதன் நீராகவும், பகதத்தனை அதன் புயலாகவும், ஸ்ரூதயுஸ், ஹிருதிகனின் மகன் ஆகியோரை அதன் வளைகுடா மற்றும் விரிகுடாக்களாகவும், துச்சாசனனை அதன் ஊற்றாகவும், சுசேஷ்ணன் மற்றும் சித்ராயு ஆகியோரை அதன் நீர் யானைகளாகவும், முதலையாகவும், ஜெயத்ரதனை அதன் (நீருக்கடியில் உள்ள) பாறையாகவும், புருமித்ரனை அதன் ஆழமாகவும், சகுனியை அதன் கரைகளாகவும் {எனது படை எனும்} அந்தப் பெருங்கடல் கொண்டுள்ளது.
ஆயுதங்களை வற்றாத அலைகளாகக் கொண்டிருக்கும் {எனது படை எனும்} இந்த ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் மூழ்கிக் களைப்பால் உணர்வை இழக்கும் உனக்கு, உனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் கொல்லப்பட்ட பிறகே, வருத்தம் உனது இதயத்தைப் பீடிக்கும். அதன் பிறகே, தூய்மையற்ற செயல்களைச் செய்யும் ஒரு மனிதனின் இதயம் சொர்க்கத்திடம் (உள்ள நம்பிக்கையில்) இருந்து திரும்புவது போல, உனது இதயமும் பூமியை ஆளும் சிந்தனையில் இருந்தும் விலகும். உண்மையில், தவத்தகுதியற்ற ஒருவனால் சொர்க்கத்தை அடைவது இயலாதது போல, நாட்டை வெல்வதும் உனக்குச் சாத்தியமாகாது" என்றான் {துரியோதனன்}.
*உன்னையும் உனது சொந்தங்களையும் கொன்று, அதே வழியில் தொடர்ந்து ஆளுவேன்.
திருக்குறள்/ பால்: பொருட்பால்/ இயல்: குடியியல்/ அதிகாரம்: குடிசெயல்வகை/ குறள்:1026நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்தஇல்லாண்மை ஆக்கிக் கொளல்.விளக்கவுரை- சாலமன் பாப்பையா உரை:ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதே.