Bhishma took away the daughters of the Kasi king! | Udyoga Parva - Section 174 | Mahabharata In Tamil
(அம்போபாக்யான பர்வம் – 1)
பதிவின் சுருக்கம் : பாஞ்சாலர்களைக் கொல்வதாகத் தனக்கு உறுதியளித்துவிட்டு, சிகண்டியுடன் போரிடமாட்டேன் என்று பீஷ்மர் சொல்வதன் காரணம் என்ன என்று துரியோதனன் கேட்பது; அதற்கான பதிலாகப் பழைய நிகழ்வொன்றை பீஷ்மர் சொல்வது; சுயம்வரத்திற்குக் காத்திருந்த காசி மன்னனின் மகள்களைப் பீஷ்மர் கடத்துவது; அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவருடனும் போரிட்டு அவர்களை வீழ்த்துவது; ஹஸ்தினாபுரம் திரும்பிய பீஷ்மர், காசி மன்னன் மகள்களைச் சத்தியவதியிடம் ஒப்படைப்பது...
துரியோதனன் {பீஷ்மரிடம்}, "ஓ! பாரதர்களின் தலைவரே {பீஷ்மரே}, ஆயுதங்களை உயர்த்திக் கொண்டு எதிரியாகச் சிகண்டி உம்மை அணுகிவருவதைக் கண்டாலும் அவனைக் கொல்ல மாட்டீரா? ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, "நான் சோமகர்களுடன் கூடிய பாஞ்சாலர்களைக் கொல்வேன்" என்று என்னிடம் முன்பு சொன்னீரே. ஓ! கங்கையின் மைந்தரே {பீஷ்மரே}, ஓ! பாட்டா, (தற்போதைய உமது மாற்றத்துக்கான காரணத்தை) எனக்குச் சொல்லும்" என்றான்.
பீஷ்மர் {துரியோதனனிடம்}, "ஓ! துரியோதனா, போர்க்களத்தில் சிகண்டியைக் கண்டாலும், நான் ஏன் அவனைக் கொல்ல மாட்டேன் என்பதை இந்தப் பூமியின் தலைவர்கள் அனைவருடன் சேர்ந்து நீயும் கேட்பாயாக!
ஓ! மன்னா {துரியோதனா}, எனது தந்தை சந்தனு உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வந்தார். ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, அந்த அறம் சார்ந்த மன்னன் {சந்தனு}, உரிய நேரத்தில் இயற்கையின் கடனைத் தீர்த்தார் {இயற்கை ஏய்தினார்}. எனது உறுதி மொழியை நோற்ற நான், ஓ! பாரதர்களின் தலைவா {துரியோதனா}, எனது தம்பியான சித்திராங்கதனை, குருக்களின் பரந்த நாட்டின் அரியணையில் நிறுவினேன்.
சித்திராங்கதனின் மறைவுக்குப் பின், சத்தியவதியின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்தும், விதியின் படியும் விசித்திரவீரியனை மன்னனாக நிறுவினேன். வயதில் இளையவனாக இருப்பினும் என்னால் முறையாக நிறுவப்பட்ட அந்த அறம்சார்ந்த விசித்திரவீரியன், ஓ! ஏகாதிபதி அனைத்திலும் என்னையே எதிர்பார்த்திருந்தான். அவனுக்கு {விசித்திரவீரியனுக்கு} திருமணம் செய்ய விரும்பிய நான், தகுந்த குடும்பத்தில் இருந்து மகள்களை {மருமகள்களை} அடையவதில் எனது இதயத்தை நிலைநிறுத்தினேன்.
(அந்த நேரத்தில்), ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, காசி ஆட்சியாளனின் மகள்களும், ஒப்பற்ற அழகுடையவர்களுமான அம்பை, அம்பிகை மற்றும் அம்பாலிகை ஆகிய மூன்று கன்னிகைகள் தங்கள் கணவர்களைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்றும், ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, பூமியின் மன்னர்கள் அனைவரும் அதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று நான் கேள்விப்பட்டேன்.
ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்தக் கன்னிகையரில் அம்பை மூத்தவளாகவும், அம்பிகை இரண்டாவதாகவும், அம்பாலிகை இளையவளாகவும் இருந்தனர். காசியின் ஆட்சியாளனின் நகரத்திற்கு {வாராணசிக்கு} நானே தனித்தேரில் சென்று, ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {துரியோதனா}, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த மூன்று கன்னிகையரையும், அந்த நிகழ்வுக்காக அங்கே அழைக்கப்பட்டிருந்த பூமியின் மன்னர்கள் அனைவரையும் கண்டேன்.
பிறகு, ஓ! பாரதக் குலத்தின் காளையே {துரியோதனா}, மோதலுக்குத் தயாராயிருந்த மன்னர்கள் அனைவரையும் போருக்கு அறைகூவி, அந்தக் கன்னிகையரை எனது தேரில் ஏற்றிக்கொண்டு, அங்குக் கூடியிருந்த மன்னர்கள் அனைவரிடமும் மீண்டும் மீண்டும், "சந்தனுவின் மகனான பீஷ்மன் இந்த மங்கையரைப் பலவந்தமாகத் தூக்கிச் செல்கிறான். மன்னர்களே, உங்கள் சக்தியில் சிறந்ததைப் பயன்படுத்தி இவர்களை மீட்க முயற்சிப்பீராக! மனிதர்களில் காளைகளே, எனது செயல்பாட்டால் உங்கள் அனைவரையும் பார்வையாளர்களாக்கிவிட்டு, பலவந்தமாகவே நான் இவர்களைத் தூக்கிச் செல்கிறேன்," என்று சொன்னேன்.
இந்த எனது வார்த்தைகளைக் கேட்டவர்களும், பூமியின் ஆட்சியாளர்களுமான அவர்கள் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு எழுந்தார்கள். பிறகு கோபத்துடன் தங்கள் தேரோட்டிகளிடம் அவர்கள், "தேரைத் தயார் செய்யுங்கள். தேரைத் தயார் செய்யுங்கள்" என்றனர். அப்படி மீட்க எழுந்த அந்த ஏகாதிபதிகளில், தேர்வீரர்கள் மேகத் திரள் போன்ற தங்கள் தேர்களிலும், யானையில் இருந்து போரிடுபவர்கள் தங்கள் யானைகளிலும், பிறர் தங்கள் பருத்த குதிரைகளிலும் ஏறினார்கள்.
பிறகு, ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, அந்த மன்னர்கள் அனைவரும் எண்ணிக்கையில் பலவாக இருந்த தேர்களில் ஏறி அனைத்துப் புறத்திலும் இருந்து என்னைச் சூழ்ந்தார்கள். தானவர்கள் கூட்டத்தை வீழ்த்தும் தேவர்களின் தலைவனைப் போல நான், அனைத்துப் புறங்களிலும் இருந்து விரைந்து வந்த அவர்களை எனது கணைமாரியால் தடுத்தேன்.
ஓ! பாரதக் குலத்தின் காளையே, சிரித்துக் கொண்டே, நான், முன்னேறி வந்த அந்த மன்னர்களுடையதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும் பல்வேறு நிறங்களிலானதுமான கொடிக்கம்பங்களை வெட்டினேன். அந்த மோதலில், குதிரைகள், யானைகள், தேரோட்டிகள் ஆகிய ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கணையால் வீழ்த்தினேன். எனது (கர) வேகத்தைக் கண்ட அவர்கள் (போரில் இருந்து) விலகி ஓடினர். பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரையும் வீழ்த்திய நான் ஹஸ்தினாபுரம் திரும்பி, எனது தம்பிக்காகக் {விசித்திரவீரியனுக்காகக்} கொண்டு சென்றிருந்த அந்தக் கன்னிகையரை சத்தியவதியிடம் ஒப்படைத்து, நான் செய்தவை அத்தனையையும் அவளிடம் {சத்தியவதியிடம்} தெரிவித்தேன்" என்றார் {பீஷ்மர்}.