BharataVarsha and mountain Meru! | Bhishma-Parva-Section-006a | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 6)
பதிவின் சுருக்கம் : சுதர்சனத் தீவின் முயல் போன்ற பகுதியை விபரிக்குமாறு திருதராஷ்டிரன் சஞ்சனைத் தூண்டுவது; அந்தப் பகுதியில் உள்ள மலைகளைக் குறித்துச் சஞ்சயன் விபரிப்பது; பாரதவர்ஷம் மற்றும் பிற வர்ஷங்கள் இருக்கும் இடங்களைக் குறித்துச் சொல்வது; மேரு மலை குறித்த வர்ணனை...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, புத்திசாலியாகவும், (அனைத்தையும் குறித்த) உண்மையை அறிந்தவனாகவும் நீ இருக்கிறாய். அந்தத் தீவை {சுதர்சனத் தீவைக்} குறித்த சுருக்கமான விளக்கத்தை நீ முறையாகச் சொல்லிவிட்டாய். இப்போது அந்தத் தீவை {சுதர்சனத் தீவைக்} குறித்து எங்களுக்கு விரிவாகச் சொல்வாயாக. ஒரு முயலைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட பகுதியில் இருக்கும் நிலப்பரப்பின் பரிமாணங்களை இப்போது எங்களுக்குச் சொல்வாயாக. அரச மரத்தைப் போல இருக்கும் பகுதியைக் குறித்துப் பிறகு நீ பேசலாம்" என்றான் {திருதராஷ்டிரன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னனால் {திருதராஷ்டிரனால்}, இப்படிக் கேட்கப்பட்ட சஞ்சயன் பேச ஆரம்பித்தான்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கிழக்கில் இருந்து மேற்காக நீண்டபடி, கிழக்குக் கடலில் இருந்து மேற்கு கடல் வரை, சமமான அளவில் இருக்கும் [1] இந்த ஆறு மலைகள் இருக்கின்றன. அவை இமயம், ஹேமகூடம், நிஷதம் என்று அழைக்கப்படும் சிறந்த மலை, வைடூரியக் கற்கள் நிறைந்த நீலம், சந்திரனைப் போன்று வெண்மையான ஸ்வேதம், அனைத்து வகை உலோகங்களும் அடங்கிய [2] சிருங்காவன் ஆகியவை ஆகும். ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, சித்தர்கள் மற்றும் சாரணர்களின் வசிப்பிடங்களாக எப்போதும் இருப்பவை இந்த ஆறு மலைகளாகும்.
[1] "பம்பாய் உரை parvatas samas {சமமான மலைகள்} என்பதற்குப் பதில் Varsha parvatas {கண்டத்தின் மலைகள்} என்று கூறுகிறது" என்கிறார் கங்குலி.[2] வங்காள உரைகளில் Pinaddha {கட்டப்பட்ட, மூடப்பட்ட} என்று இருப்பதைப் பம்பாய்ப் பதிப்பு Vichitra {வெற்றிபெற்ற} என்று கூறுகிறது" என்கிறார் கங்குலி
இவை ஒவ்வொன்றுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி {பல} ஆயிரம் யோஜனைகள் ஆகும். அவற்றில் மகிழ்ச்சிகரமான பல நாடுகள் உள்ளன. ஓ! பாரதா {திருதராஷ்டிரரே}, இந்தப் பகுதிகளே வர்ஷங்கள் [3] என்று அழைக்கப்படுகின்றன. அந்த நாடுகள் அனைத்திலும் பல்வேறு இனவகைகளைச் சேர்ந்த உயிரினங்கள் வசிக்கின்றன. (நாம் இருக்கும் நிலமான) இது பரதனின் பெயரால் அழைக்கப்படும் வர்ஷத்தில் {கண்டத்தில்} இருக்கிறது [4]. இதற்கு அடுத்ததாக (வடக்கில்) இமயத்தின் பெயரால் அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது [5]. ஹேமகூடத்துக்கு {ஹேமகூட மலைக்கு} அப்பால் இருப்பது ஹரிவர்ஷம் என்று அழைக்கப்படுகிறது. நீல மலையின் வரம்புக்குத் தெற்கே, நிஷத மலைக்கு வடக்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கிழக்கில் இருந்து மேற்காக நீண்டிருக்கும் மால்யவதம் {மால்யவான்} என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. மால்யவதத்திற்கு அப்பால் வடக்கே கந்தமாதனம் என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது.
[3] உயிரினங்களுக்குச் செல்வங்களையும், தானியங்களையும், உடல் நலத்தையும் என அனைத்தையும் கொடுப்பதால் இவற்றிற்கு வர்ஷங்கள் என்ற பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது.[4] நாம் இருக்கும் இந்தக் கண்டம் பாரதவர்ஷமாகும்.[5] அந்தக் கண்டத்தின் பெயர் ஹைமவதமாகும். அது கிம்புருஷாவாசமென்றும் சொல்லப்படுகிறது.
இவை இரண்டிற்கும் (மால்யவதம் மற்றும் கந்தமாதனம் ஆகியவற்றிற்கு) இடையே தங்கத்தால் ஆன, கோள உருவிலான மேரு என்று அழைக்கப்படும் மலை இருக்கிறது. காலைக் கதிரவனைப் போல் பிரகாசிக்கும் அது, புகையற்ற நெருப்பு போன்று இருக்கிறது. அஃது எண்பத்துநான்காயிரம் {84,000} யோஜனைகள் உயரம் கொண்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் ஆழமோ எண்பத்துநான்கு யோஜனைகள் கொண்டதாக இருக்கிறது [6]. இது, மேலே, கீழே மற்றும் குறுக்கே இருக்கும் உலகங்களைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது.
[6] வேறு பதிப்பில் இந்தப்பகுதி, "அந்த மேரு, பூமியின் கீழே பதினாலாயிரம் {14,000} யோஜனை ஆழ்ந்ததென்றும், மேலே எண்பத்துநாலாயிரம் {84,000} யோஜனை உயர்ந்ததென்றும், சிகரத்தில் முப்பத்திரண்டாயிரம் {32,000} யோஜனை அகன்றதென்றும் எண்ணப்பட்டிருக்கிறது. ஓ! மன்னா, அதன் தாழ்வரை எண்பத்துநாலாயிரம் {84,000} யோஜனை பரப்புள்ளது" என்று இருக்கிறது.
மேருவைத் தவிர, பதராஸ்வம், கேதுமாலம், பாரதம் என்றும் அழைக்கப்படும் ஜம்பூத்வீபம், நீதியின் தகுதியை அடைந்தவர்களின் வசிப்பிடமான உத்தர-குரு என்ற நான்கு தீவுகளும் அமைந்துள்ளன.
சுபர்ணனின் {கருடனின்} மகனான சுமுகன் என்ற பறவையானவன், மேருவில் இருக்கும் அனைத்துப் பறவைகளும் தங்க நிறத்தில் இருப்பதைக் கண்டு, நல்ல, மத்திம, தீய பறவைகளின் வேறுபாடுகளை அறியமுடியாததால் அந்த மலையைவிட்டு தான் சென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். ஒளிமண்டலங்களுள் முதன்மையான சூரியன், மேருவை எப்போதும் சுற்றி வருகிறான். நட்சத்திரங்களைத் {தனது} தொண்டர்களாகக் கொண்ட சந்திரனும் அப்படியே சுற்றி வருகிறான். மேலும் வாயுத்தேவனும் அப்படியே {மேருவைச்} சுற்றி வருகிறான்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த மலை {மேரு}, தெய்வீகக் கனிகளையும் மலர்களையும் கொண்டிருக்கிறது. தங்கத்தாலான மாளிகைகளால் அது முழுவதும் மூடப்பட்டிருக்கிறது. அந்த மலையில் ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தேவர்கள், கந்தர்வர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோர் அப்சரஸ் இனக்குழுவினருடன் எப்போதும் விளையாடுகின்றனர். பிரம்மன், ருத்திரன், தேவர்களின் தலைவனான சக்ரன் {இந்திரன்} ஆகியோர் கூடி, அபரிமிதமான தானங்களுடன் பல்வேறு வகைகளிலான வேள்விகளை அங்கேதான் செய்தனர். தும்புரு, நாரதர், விஸ்வாவசு, ஹாஹா, ஹூஹூ ஆகியோர் அங்கே சென்று பல்வேறு பாடல்களால் தேவர்களில் முதன்மையானோரைத் துதிக்கின்றனர். உயர்ஆன்மா கொண்ட ஏழு முனிவர்களும், உயிரினங்களின் தலைவரான காசியபரும், அனைத்து பர்வ நாட்களிலும் [7] {ஒவ்வொரு பர்வகாலத்திலும்} அங்கே செல்கின்றனர். உமக்கு மங்களம் உண்டாகட்டும். அந்த மலையில் சிகரத்தில் கவி என்றும் அழைக்கப்படும் உசனஸ் {சுக்கிரன்}, (தன் சீடர்களான) தைத்தியர்களுடன் இருக்கிறார் [8].
[7] "பௌர்ணமி மற்றும் அமாவாசைகளில்" என்கிறார் கங்குலி.[8] பர்துவான் உரைகளைத் தவிர மற்ற வங்காள உரைகளில் Daityas {தைத்தியர்கள்} என்பதற்கு பதில் {திவி} என்றிருக்கிறது. ஆனால் தைத்தியர்கள் என்பதே சரியானது ஆகும் என்கிறார் கங்குலி.
(நாம் காணும்) நகைகள், ரத்தினங்கள் ஆகியவும், விலையுயர்ந்த கற்கள் நிறைந்த அனைத்து மலைகளும் மேருவிலேயே இருக்கின்றன. அங்கிருப்பதில் நான்கில் ஒரு பங்கு புனிதமான குபேரனால் அனுபவிக்கப்படுகிறது. அதில் பதினாறில் ஒரு பங்கையே அவன் {குபேரன்} மனிதர்களுக்குக் கொடுக்கிறான். மேருவின் வடக்குப் பக்கத்தில் அனைத்துக் காலங்களில் பூக்கும் மலர்களால் நிரம்பியதும், இனிமையானதும், அற்புதமானதுமான கோங்குக் காடு ஒரு மலைத்தொடரை முழுவதும் ஆக்கிரமித்தபடி [9] இருக்கிறது. தெய்வீகத் தொண்டர்களால் {கணங்களால் = பூதங்களால்} சூழப்பட்டவனும், உமையைத் {பார்வதியைத்} துணையாகக் கொண்டவனும், அனைத்தையும் படைத்தவனும், பாதம் வரை தொங்கும் அளவுக்குக் கொன்றை மலர்களைக் {கோங்கு மலர்களைச்} சரமாக (தனது கழுத்தில்) அணிந்து கொண்டவனும், உதித்தெழுந்த மூன்று சூரியன்களைப் போன்ற பிரகாசமான முக்கண்களைக் கொண்டவனும், ஒப்பற்றவனுமான பசுபதி {சிவன்} அங்கேதான் {மேருவில்தான்} விளையாடிக் கொண்டிருக்கிறான். பேச்சில் உண்மை நிறைந்தவர்களும், அற்புத நோன்புகள் மற்றும் தவத்துறவுகளைக் கொண்டவர்களுமான சித்தர்கள் அவனைக் {சிவனைக்} காண்கிறார்கள். உண்மையில், தீய நடத்தை கொண்டோர் அந்த மஹேஸ்வரனை {சிவனைக்} காணும் திறனற்றவர்களாவர்.
[9] வங்காள உரைகளில் Sarvata {சுற்றிலும்} என்று இருப்பது பம்பாய் உரைகளில் Sarvatas {முழுவதும்} என்று இருக்கிறது. பின்னதே சிறப்பு என்கிறார் கங்குலி.
அந்த மலையின் சிகரத்தில் இருந்துதான், ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, பாகீரதி என்றும் அழைக்கப்படும் புனிதமான மங்கலக் கங்கை, நீதிமிக்கவர்களால் துதிக்கப்பட்டு, அளக்க முடியாத தனது தெய்வீக வடிவில், பயங்கர ஒலியுடன், சந்திரனின் இனிய தடாகத்தில் சக்திமிக்க வேகத்துடன் பாலோடையைப் போல விழுந்து கொண்டிருக்கிறாள். உண்மையில் கடலைப் போன்ற அந்தப் புனித மடுவை அந்தக் கங்கையே உண்டாக்கினாள். (மலைகளில் இருந்து பாயும்போது) மலைகளால்கூடத் தாங்க முடியாத கங்கையானவள், பினகை தாங்கியின் {சிவனின்} தலையில் நூறாயிரம் {ஒரு லட்சம்- 1,00,000} வருடங்கள் பிடித்து வைக்கப்பட்டாள் [10].
[10] "சிவன் கங்கையைத் தலையில் பிடித்து வைத்த மரபை நினைவுப்படுத்தும் வகையில் அந்தப் பெரும் தேவன் சில நேரங்களில் கங்காதரன் என்றும் அழைக்கப்படுகிறான்" என்கிறார் கங்குலி
மேருவின் மேற்குப் பக்கத்தில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேதுமாலம் [11] இருக்கிறது, அங்கேயும் ஜம்பூகண்டம் இருக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவ்விரண்டும் மனிதகுலத்தின் மாபெரும் இருக்கைகளாக இருக்கின்றன. அங்கே, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, மனிதர்களுடைய வாழ்நாளின் அளவு பத்தாயிரம் வருடங்களாகும். மனிதர்கள் அனைவரும் அங்கே தங்க நிறத்தில் இருக்கின்றனர், பெண்கள் அனைவரும் அப்சரசுகளைப் போல இருக்கின்றனர். அங்கே வசிப்போர் அனைவரும் நோய், கவலை ஆகியவை இன்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அங்கே பிறக்கும் மனிதர்கள் உருக்கிய தங்கத்தின் பிரகாசத்துடன் இருக்கிறார்கள்" {என்றான் சஞ்சயன்}.
[11] குடகடற்குக் கீழ் கேதுமாலமெனக் குறித்திடுக (சிவதரு மோத்திரம். கோபுர.53).
அனுமானம் : சுதர்சனத் தீவு என்று அழைக்கப்படுவது ஐரோப்பாவும், ஆசியாவும் சேர்ந்த நிலப்பகுதியைக் குறிக்கலாம். இது குறித்து http://ancientvoice.wikidot.com/article:sanjaya-s-world என்ற பக்கத்தில் ஊகங்கள் இருக்கின்றன.
ஆங்கிலத்தில் | In English |