Ganga flows, dividing herself into seven streams! | Bhishma-Parva-Section-006b | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 6)
பதிவின் சுருக்கம் : கந்தமாதன மலைகள், அங்கே வாழும் மக்களின் தன்மை ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது; ஏழு வர்ஷங்களின் பெயர்கள், அவை அமைந்திருக்கும் பகுதிகள் ஆகியவற்றைச் சொல்வது; கைலாசம், பிந்துசரஸ் பற்றிய குறிப்பு, கங்கையின் மூன்று ஊற்றுகள், கங்கையின் ஏழு ஓடைகள் பற்றிய குறிப்பு ; சரஸ்வதி நதி பற்றிய குறிப்பு, ஒவ்வொரு மலைகளிலும் யார் யார் வசிக்கிறார்கள் என்ற குறிப்பு, தென்னகத்தின் மலய மலை பற்றிய குறிப்பு ஆகியவற்றைச் சஞ்சயன் சொல்வது...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, "கந்தமாதனச் சிகரத்தில், குஹ்யர்களின் தலைவனான குபேரன், பல ராட்சசர்களுடனும், அப்சரசுகளின் கூட்டத்துடனும் தனது நேரத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கிறான். கந்தமாதனத்தைத் தவிர்த்து அங்கே பல மலைகளும், குன்றுகளும் இருக்கின்றன. மனித வாழ்வின் கால அளவு அங்கே {கந்தமாதன மலையில்} பதினோராயிரம் {11,000} வருடங்களாகும். அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மனிதர்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் பெரும் சக்தியுடனும், பெரும் பலத்துடனும் இருக்கிறார்கள் [1]. அங்கே இருக்கும் பெண்கள் அனைவரும் தாமரை நிறத்துடனும் உயர்ந்த அழகுடனும் இருக்கிறார்கள்.
[1] வேறு ஒரு பதிப்பில் மேலும் ஒரு குறிப்பாக அங்கே இருக்கும் மனிதர்கள் கறுத்த நிறம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று இருக்கிறது.
நீலத்தை {நீலமலையைத்} தாண்டி ஸ்வேதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. சுவேதத்தைத் தாண்டி ஹைரண்யகம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. ஹைரண்யகத்தைத் தாண்டி நாடுகளால் சூழப்பட்ட ஐராவதம் (என்றழைக்கப்படும் வர்ஷம்) இருக்கிறது. இறுதியான வர்ஷம் {ஐராவதம்}, வடக்கில் (எல்லையில்) இருக்கிறது, பாரத வர்ஷமோ தெற்கில் (எல்லையில்) இருக்கிறது. இவையிரண்டும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வில்லின் வடிவத்தில் இருக்கின்றன [2].
[2] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, "நீல மலைக்கு வடபுறத்தில் சுவேதம் எனும் வர்ஷமிருக்கிறது. சுவேத வர்ஷத்தைக் காட்டிலும் அப்புறத்தில் ஹைரண்யக வர்ஷம் இருக்கிறது. அதற்கு வட எல்லையான சிருங்கவத மலைக்கு வடபுறத்தில் பற்பல நாடுகளால் சூழப்பட்ட ஐராவதமெனும் வர்ஷம் இருக்கிறது. தெற்கில் உள்ள பாரதம், வடக்கில் உள்ள ஐராவதம் என்ற இரண்டு வர்ஷங்களும் நன்றாக வளைத்து ஒன்று சேர்க்கப்பட்டிருக்கிற வில்லின் இரண்டு நுனிகளைப் போலச் சேர்ந்திருக்கின்றன" என்று சொல்லப்பட்டுள்ளது.
(ஸ்வேதம், ஹைரண்யகம், இளாவிருதம், ஹரிவர்ஷம், ஹைமாவத வர்ஷம் ஆகிய) ஐந்து வர்ஷங்கள் மத்தியில் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் மத்தியில் இளாவிருதம் இருக்கிறது. (ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள ஐந்துடன் சேர்த்து, ஐராவதம் மற்றும் பாரதம் ஆகியவற்றைச் சேர்த்து உள்ள) இந்த ஏழு வர்ஷங்களில், வடக்கில் உள்ளவை {வர்ஷங்கள்}, அதன் உடனடித் தெற்கில் உள்ளவற்றை {வர்ஷங்களை} விட, வாழ்நாளின் காலம், உடற்கட்டு, உடல்நலம், நீதி, இன்பம் மற்றும் பொருள் ஆகிய பண்புகளில் விஞ்சி நிற்கின்றன.
இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இந்தப் பூமி மலைகளால் நிரம்பியிருக்கிறது. ஹேமகூடத்தின் பெரும் மலைகள் கைலாசம் என்றும் அழைக்கப்படுகின்றன. {ஹேமகூடத்தின் பெரும் மலைகளில் ஒன்றுதான் கைலாசம் என்றிருக்கலாம்}. அங்கே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வைஸ்ரவணன் {குபேரன்} தனது நேரத்தைக் குஹ்யர்களுடன் இன்பமாகக் கழிக்கிறேன். கைலாசத்திற்கு உடனடி வடக்கில், மைநாக மலைகளுக்கு அருகில், பெரியதும், தங்கச் சிகரங்களைக் கொண்டதுமான மணிமயம் {ஹரண்யசிருங்கம்} என்று அழைக்கப்படும் அழகிய மலை இருக்கிறது. இந்த மலையைத் தவிர அங்கே, பெரிதானதும், அழகானதும், படிகம் போன்றதும், (தன் கரையில்) தங்க மணல்களைக் கொண்டதுமான பிந்துசரஸ் என்கிற இனிய தடாகம் இருக்கிறது. மன்னன் பகீரதன், தன் பெயரால் {பாகீரதி என்று} அழைக்கப்படும் கங்கையைக் பார்த்தபடி பல வருடங்களாக அங்கேதான் தங்கியிருந்தான். அங்கே எண்ணிலடங்காதவையும், ரத்தினங்களாலானவையுமான வேள்விக் குச்சிகளையும் {யூபங்களையும்}, தங்கத்தாலான சைத்திய மரங்களையும் {வேள்வி மேடைகளையும்} காணலாம். ஆயிரங்கண் கொண்டவன் {இந்திரன்} அங்கேதான் வேள்விகளைச் செய்து (தவ) வெற்றியை அடைந்தான். அங்கேதான் அனைத்துயிரினங்களின் தலைவனும், உயர்ந்த சக்தியைக் கொண்டவனுமான அனைத்து உலகங்களின் நித்திய படைப்பாளன் {சிவன்}, தனது பேய்த்தொண்டர்களால் சூழப்பட்ட படி துதிக்கப்படுகிறான்.
அங்கேதான் நரன் மற்றும் நாராயணன், பிரம்மன், மனு, ஐந்தாவதாக ஸ்தாணுவும் (எப்போதும்) இருக்கின்றனர். அங்கேதான் மூன்று ஊற்றுகளைக் கொண்ட [3] தெய்வீக ஓடையான கங்கை, பிரம்மலோகத்தில் இருந்து முதலில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, வஸ்வோகஸாரை, நளினி, பாவத்தைத் தூய்மைசெய்யும் சரஸ்வதி, ஜம்பூநதி, சீதை, கங்கை, ஏழாவதாகச் சிந்து என ஏழு ஓடைகளாகத் [4] தன்னைப் பிரித்துக் கொள்கிறாள். உயர்ந்த தலைவன் {சிவன்} (தானே) அந்தத் தெய்வீக ஓடையைப் பார்க்க முடியாததாக ஏற்பாடு செய்திருக்கிறான். யுக முடிவிற்குப் பிறகு (படைப்புகள் தொடங்கும் முன்) ஆயிரம் சந்தர்ப்பங்களில், அங்கேதான், (தேவர்களாலும், முனிவர்களாலும்) வேள்விகள் செய்யப்பட்டன. சரஸ்வதியைப் பொறுத்தவரை, (அவளது வழியில்) சில இடங்களில் அவள் {சரஸ்வதி} கண்ணுக்குப் புலப்படுபவளாகவும், சில இடங்களில் புலப்படாதவளாகவும் இருக்கிறாள். இந்த ஏழு அடுக்குக் கொண்ட கங்கை மூன்று உலகங்களிலும் பரந்து அறியப்படுகிறது.
[3] புனித ஓடையான கங்கை மூன்று ஊற்றுகளைக் கொண்டிருக்கிறாள் என்று நம்பப்படுகிறது. சொர்க்கத்தில் அந்த ஊற்று மந்தாகினி என்றும், பூமியில் கங்கை என்றும், பாதாள உலகில் போகவதி என்று அழைக்கப்படுகிறாள் என்று சொல்கிறார் கங்குலி.[4] "இதே ஏழு ஓடைகள், ராமாயணத்தில், "ஹ்லாதினி, பாவனி, நளினி, சுசக்ஷுஸ், சீதை, சிந்து, பாகீரதி" என்று சொல்லப்படுகின்றன. ராமாயணம், பாலகாண்டம், 43வது சர்க்கம், 11 ஸ்லோகம்" என்று வேறொரு பதிப்பில் மேற்கோள் உள்ளது.
ராட்சசர்கள் இமயத்திலும், குஹ்யர்கள் ஹேமகூடத்திலும், பாம்புகளும், நாகர்கள் நிஷதத்திலும், தவசிகள் கோகர்ணத்திலும் வசிக்கின்றனர். ஸ்வேத மலைகள், தேவர்கள் மற்றும் அசுரர்களின் வசிப்பிடமாகச் சொல்லப்படுகிறது. கந்தர்வர்கள் எப்போதும் நிஷதங்களிலும் {நிஷத மலைகளிலும்}, மறுபிறப்பாள {பிராமண} முனிவர்கள் நீலத்திலும் {நீல மலைகளிலும்} வசிக்கின்றனர். சிருங்கவத {சிருங்கவான்} மலைகள் எப்போதும் தேவர்களின் ஓய்விடமாகக் கருதப்படுகிறது.
ஓ! பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, உலகத்தின் ஏழு வர்ஷங்களான இவை இப்படியே பிரிந்திருக்கின்றன. அசையும் மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் இவற்றிலேயே நிலைபெற்று இருக்கின்றன. தேவ மற்றும் மனித செழிப்பு ஆகிய இரண்டின் பல்வேறு வகைகள் அவற்றில் காணப்படுகின்றன. அவை எண்ண முடியாதனவாகவும் இருக்கின்றன. எனினும், நான் உம்மிடம் சொன்னதும், முயலின் வடிவத்தைக் கொண்டதுமான மகிழ்ச்சி நிறைந்த பகுதியைக் குறித்த (இவை அனைத்தையும்) தங்கள் சொந்த நன்மையில் விருப்பம் கொண்டோர் நம்புகின்றனர். நன்மையை அடைய விருப்பமுள்ளவனால் அவசியம் நம்பத்தக்கது. இந்தப் பகுதியின் எல்லைகளில், வடக்கில் ஒன்றும் {ஐராவதம்}, தெற்கில் மற்றொன்றும் {பாரதம்} என இரு வர்ஷங்கள் இருக்கின்றன. அவை இரண்டும் உமக்கு இப்போது சொல்லப்பட்டன. மேலும் நாகத்வீபம் என்றும் காசியபத்வீபம் என்று இரு தீவுகள், முயல் வடிவப் பகுதியின் இரு காதுகளாக இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தாமிரத் தட்டுகளைப் [5] போன்ற பாறைகளைக் கொண்டவையான அழகிய மலய மலைகள், முயல் வடிவத்தை ஒத்திருக்கும் ஜம்பூத்வீபத்தின் மற்றொரு (முக்கிய) பகுதியாக இருக்கிறது" என்றான் {சஞ்சயன்}.
[5] வேறு பதிப்பில் இந்தப் பத்தி, "தாமிரபரணி நதியின் தோற்றுவாயும், செழிப்புமிக்கதுமான மலய மலையானது இந்தத் த்வீபத்திற்கு முயல்வடிவம் போன்ற இரண்டாவது த்வீபமாகக் காணப்படுகிறது" என்று இருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |