Mandala and Vajra vyuhas! | Bhishma-Parva-Section-082 | Mahabharata In Tamil
(பீஷ்மவத பர்வம் – 40)
பதிவின் சுருக்கம் : துரியோதனனுக்கு உறுதியளித்த பீஷ்மர்; துரியோதனனின் காயங்களுக்கு மூலிகை கொடுத்த பீஷ்மர்; பீஷ்மர் அமைத்த மண்டல வியூகம்; மண்டல வியூகத்தின் அமைப்பு; யுதிஷ்டிரன் அமைத்த வஜ்ர வியூகம்; ஏழாம் நாள் போரில் நேருக்கு நேர் மோதிய வீரர்களின் பெயர்கள்; அர்ஜுனன் ஏவிய ஐந்திர ஆயுதம்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! பாரதர்களின் தலைவரே {திருதராஷ்டிரரே}, சிந்தனையில் ஆழ்ந்திருந்த உமது மகனிடம் மீண்டும் பேசிய கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, அவனிடம் {துரியோதனனிடம்}, "நான், துரோணர், சல்லியன், சத்வத குலத்தின் கிருதவர்மன், அஸ்வத்தாமன், விகர்ணன், பகதத்தன், சுபலனின் மகன் {சகுனி}, அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், பாஹ்லீகர்களின் பாஹ்லீகன், திரிகர்த்தர்களின் வலிமைமிக்க மன்னன் {சுசர்மன்}, மகதர்களின் ஒப்பற்ற ஆட்சியாளன் {ஜெயத்சேனன்}, கோசலர்களின் மன்னன் பிருஹத்பலன், சித்திரசேனன், விவிம்சதி, நெடிய கொடிமரங்களால் அருளப்பட்ட தேர்வீரர்கள் பல்லாயிரக்கணக்கானோர், சிறந்த குதிரைவீரர்கள் அமர்ந்திருந்த பெரும் எண்ணிக்கையிலான நாட்டுக் குதிரைகள், அடங்கா மதம் கொண்டவையும், மதப்பெருக்குக் கொண்ட கன்னங்களையும், வாய்களையும் கொண்டவையுமான சிறந்த யானைகள், பல்வேறு இடங்களில் பிறந்து, பல்வேறு ஆயுதங்களைத் தரித்திருக்கும் துணிவுமிக்கக் காலாட்படை வீரர்கள் பலர் ஆகியோர் அனைவரும் உனக்காகப் போரிடத் தயாராக இருக்கிறார்கள். உனக்காகத் தங்கள் உயிரையே விடச் சித்தமாக இருக்கும் இவர்களாலும், இன்னும் பலராலும் தேவர்களையே கூடப் போரில் வீழ்த்திவிட முடியும் என நான் நினைக்கிறேன்.
எனினும், ஓ! மன்னா {துரியோதனா}, உனக்கு நன்மையானது எது என்பதையே நான் உனக்கு எப்போதும் சொல்ல வேண்டும். வாசவனுடன் {இந்திரனுடன்} சேர்ந்த தேவர்களாலேயே கூடப் பாண்டவர்களை வீழ்த்த முடியாது. வாசுதேவனைக் {கிருஷ்ணனைக்} கூட்டாளியாகக் கொண்ட அவர்கள் {பாண்டவர்கள்}, ஆற்றலில் மகேந்திரனுக்கு இணையானவர்களாக இருக்கிறார்கள். எனினும், என்னைப் பொறுத்தவரை, நான் எப்போதும் நீ சொல்வதைச் செய்வேன். ஒன்று நான் போரில் பாண்டவர்களை வீழ்த்துவேன், அல்லது அவர்கள் என்னை வீழ்த்துவார்கள்" என்றார் {பீஷ்மர்}.
இவ்வார்த்தைகளைச் சொன்ன பாட்டன் {பீஷ்மர்}, அவனது {துரியோதனனின்} காயங்களுக்காகப் பெரும் திறங்கொண்ட அற்புத மூலிகையொன்றை அவனிடம் கொடுத்தார் [1]. அதைக் கொண்டு உமது மகன் {துரியோதனன்} தனது காயங்களை ஆற்றிக் கொண்டான். அதிகாலையில் வானம் தெளிவாக இருந்த போது, அணிவகுப்பு வகைகள் அனைத்தையும் நன்கு அறிந்தவர்களில் முதன்மையானவரும், வீரமிக்கவருமான பீஷ்மர், அடர்த்தியான ஆயுதங்களால் நெருங்கியதும், மண்டலம் என்று அழைக்கப்படுவதுமான வியூகத்தில் [2] தனது துருப்புகளை அணிவகுத்தார்.
[1] வீரியத்துடன் கூடிய விசல்யகரணி என்கிற மூலிகையைக் கொடுத்தார் என்று வேறு பதிப்பில் காணக்கிடைக்கிறது.
வீரர்களில் முதன்மையானோர், யானைகள் மற்றும் காலாட்படை வீரர்களால் அது {அந்த மண்டல வியூகம்} நிறைந்திருந்தது. மேலும் அது, பல்லாயிரக்கணக்கான தேர்கள், வாள்கள் மற்றும் வேல்கள் தரித்த குதிரை வீரர்களின் பெரும்படை ஆகியவற்றால் அனைத்துப் புறங்களிலும் சூழப்பட்டிருந்தது, ஒவ்வொரு யானைக்கு அருகிலும் ஏழு தேர்கள் அமர்த்தப்பட்டன, மேலும் ஒவ்வொரு தேருக்கு அருகிலும் ஏழு குதிரைவீரர்கள் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு குதிரைவீரனுக்குப் பின்பு ஏழு வில்லாளிகள் அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு வில்லாளிக்குப் பின்பும் கேடயங்களுடன் கூடிய ஏழு போராளிகள் அமர்த்தப்பட்டனர். இப்படியே, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரர்களால் அணிவகுக்கப்பட்டும், பீஷ்மரால் பாதுகாக்கப்பட்டும் இருந்த உமது படை கடும்போருக்காகக் காத்திருந்தது.
பத்தாயிரம் குதிரைகளும், அதே அளவு {பத்தாயிரம்} யானைகளும், பத்தாயிரம் தேர்களும், சித்திரசேனனுடன் சேர்ந்த கவசம் தரித்த உமது மகன்களும் பாட்டனால் {பீஷ்மரால்} பாதுகாக்கப்பட்டார்கள். மேலும், அந்தத் துணிவுமிக்க வீரர்களாலும், கவசம் தரித்த பெரும்பலமுடைய அந்த இளவரசர்களாலும் (பதிலுக்குப்) பீஷ்மர் பாதுகாக்கப்பட்டார். அருள் அனைத்தும் கொண்டவனும், கவசம் தரித்தவனும், களத்தில் தன் தேரில் அமர்ந்திருந்தவனுமான துரியோதனன், சொர்க்கத்தில் உள்ள சக்ரனைப் {இந்திரனைப்} போல ஒளிர்ந்தான்.
அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தேர்களின் சடசடப்பொலி மற்றும் இசைக்கருவிகளின் ஆரவாரம் ஆகியவற்றைக் கேட்கவிடாமல் செவிடாக்கும் பேரொலியாக உமது மகன்களின் முழக்கங்கள் இருந்தன. எதிரிகளைக் கொல்பவர்களான தார்தராஷ்டிரர்களின் மண்டலம் என்று அழைக்கப்பட்ட வலிமைமிக்க, ஊடுருவப்பட முடியாத வியூகம் பீஷ்மரால் அணிவகுக்கப்பட்டு, மேற்கு முகமாக {மேற்கு நோக்கி} செல்லத் தொடங்கியது. எதிரிகளால் வீழ்த்தப்பட முடியாத அஃது, அனைத்து இடங்களிலும் அழகாகத் தெரிந்தது. மண்டலம் என்று அழைக்கப்பட்ட மிகக் கடுமையான அந்த வியூகத்தைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், வஜ்ரம் என்று அழைக்கப்பட்ட வியூகத்தில் தனது துருப்புகளை அணிவகுத்தான் [2].
[2] வில்லிபாரதத்தில் பாண்டவர்கள் பாம்பு {சர்ப்ப} வியூகமும், கௌரவர்கள் சகட வியூகமும் அமைத்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு
மாசுண வியூகமும்,
தரணி காவலன்தன் பிதாமகன் சகட வியூகமும்
தான் வகுக்கவே. {வில்லி பாரதம் 3:ஏ.போ.ச.2
படைப்பிரிவுகள் இப்படி அணிவகுக்கப்பட்டதும், முறையான இடங்களில் நின்று கொண்டிருந்த தேர்வீர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் சிங்க முழக்கமிட்டனர். தங்களுக்குரிய படைகளின் துணையோடு, துணிவுமிக்கவர்களும், தாக்குவதை நன்கறிந்தவர்களும், போரை எதிர்பார்த்திருந்தவர்களுமான இருபடையின் வீரர்களும், தங்கள் ஒவ்வொருவரின் வியூகத்தையும் பிளக்க விரும்பி முன்னேறிச் சென்றனர்.
பரத்வாஜரின் மகன் {துரோணர்} மத்ஸ்ய மன்னனை {விராடனை} எதிர்த்தும்,
அவரது மகன் (அஸ்வத்தாமன்) சிகண்டியை எதிர்த்தும் சென்றனர்.
மன்னன் துரியோதனன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்துத் தானே சென்றான்.
நகுலனும், சகாதேவனும் மத்ரர்களின் மன்னனை {சல்லியனை} எதிர்த்துச் சென்றனர்.
அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், இராவத்தை {இராவானை [அ] அரவானை எதிர்த்துச் சென்றனர்.
பல மன்னர்கள் கூடி தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட்டனர்.
விடா முயற்சி கொண்ட பீமசேனன், போரில் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} எதிர்த்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட அர்ஜுனனின் மகன் (அபிமன்யு), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன், விகர்ணன் மற்றும் துர்மர்ஷணன் ஆகிய உமது மகன்களுடன் போரிட்டான்.
அவரது மகன் (அஸ்வத்தாமன்) சிகண்டியை எதிர்த்தும் சென்றனர்.
மன்னன் துரியோதனன், பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} எதிர்த்துத் தானே சென்றான்.
நகுலனும், சகாதேவனும் மத்ரர்களின் மன்னனை {சல்லியனை} எதிர்த்துச் சென்றனர்.
அவந்தியின் விந்தனும், அனுவிந்தனும், இராவத்தை {இராவானை [அ] அரவானை எதிர்த்துச் சென்றனர்.
பல மன்னர்கள் கூடி தனஞ்சயனுடன் {அர்ஜுனனுடன்} போரிட்டனர்.
விடா முயற்சி கொண்ட பீமசேனன், போரில் ஹிருதிகன் மகனை {கிருதவர்மனை} எதிர்த்தான்.
பெரும் ஆற்றலைக் கொண்ட அர்ஜுனனின் மகன் (அபிமன்யு), ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சித்திரசேனன், விகர்ணன் மற்றும் துர்மர்ஷணன் ஆகிய உமது மகன்களுடன் போரிட்டான்.
ஹிடிம்பையின் மகனான அந்த ராட்சசர்களின் இளவரசன் {கடோத்கசன்}, மதங்கொண்ட யானையை எதிர்த்து விரையும் மற்றொரு மதங்கொண்ட யானையைப் போல, பிராக்ஜோதிஷதர்களின் ஆட்சியாளனை {பகதத்தனை} எதிர்த்து விரைந்தான்.
சினத்தால் தூண்டப்பட்ட ராட்சசன் அலம்புசன், தன் தொண்டர்களுக்கு மத்தியில் இருந்த ஒப்பற்ற சாத்யகியை எதிர்த்துப் போரிட்டான்.
பெரிதும் முயற்சி செய்பவனான பூரிஸ்ரவஸ், {சேதி நாட்டு மன்னன்} திருஷ்டகேதுவை எதிர்த்துப் போரிட்டான்.
தர்மனின் மகனான யுதிஷ்டிரன், {அம்பஷ்டர்களின்} மன்னன் சுருதாயுஷை எதிர்த்து முன்னேறினான்.
{விருஷ்ணி குலத்தின்} சேகிதானன் அந்தப் போரில் கிருபரை எதிர்த்துப் போரிட்டான். பலத்துடன் முயற்சித்த (குரு வீரர்களில்) பிறர், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனை [2] எதிர்த்து முன்னேறினர். மேலும் ஆயிரக்கணக்கான (பிற) மன்னர்கள், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, கணைகள் {நாராசங்கள்}, கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதிக்கப்பட்ட தண்டங்கள்} ஆகியவற்றைக் கையில் கொண்டு தனஞ்சயனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.
சினத்தால் தூண்டப்பட்ட ராட்சசன் அலம்புசன், தன் தொண்டர்களுக்கு மத்தியில் இருந்த ஒப்பற்ற சாத்யகியை எதிர்த்துப் போரிட்டான்.
பெரிதும் முயற்சி செய்பவனான பூரிஸ்ரவஸ், {சேதி நாட்டு மன்னன்} திருஷ்டகேதுவை எதிர்த்துப் போரிட்டான்.
தர்மனின் மகனான யுதிஷ்டிரன், {அம்பஷ்டர்களின்} மன்னன் சுருதாயுஷை எதிர்த்து முன்னேறினான்.
{விருஷ்ணி குலத்தின்} சேகிதானன் அந்தப் போரில் கிருபரை எதிர்த்துப் போரிட்டான். பலத்துடன் முயற்சித்த (குரு வீரர்களில்) பிறர், வலிமைமிக்கத் தேர்வீரனான பீமனை [2] எதிர்த்து முன்னேறினர். மேலும் ஆயிரக்கணக்கான (பிற) மன்னர்கள், ஈட்டிகள் {சக்திகள்}, வேல்கள் {தோமரங்கள்}, கணைகள் {நாராசங்கள்}, கதாயுதங்கள், பரிகங்கள் {முள் பதிக்கப்பட்ட தண்டங்கள்} ஆகியவற்றைக் கையில் கொண்டு தனஞ்சயனைச் {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர்.
[2] வேறொரு பதிப்பில் இங்கே பீஷ்மர் என்றிருக்கிறது. பாண்டவ வீரர்கள் பீஷ்மருடன் மோதுவது என்பதே சரி என்றும் படுகிறது. ஏனெனில் இதற்கு முன்பே பீமன் கிருதவர்மனுடன் மோதும் குறிப்பு வருகிறது. கங்குலியில் இந்த இடத்தில் கௌரவர்களுடன் மோதும் பீமன் என்றே இருக்கிறது. இங்கே கங்குலியையே நானும் பின்பற்றியிருக்கிறேன்.
அப்போது, பெருங்கோபத்தால் தூண்டப்பட்டவனான அர்ஜுனன், விருஷ்ணி குலத்தோனிடம் {கிருஷ்ணனிடம்}, "ஓ! மாதவா {கிருஷ்ணா}, அனைத்து வகை வியூகங்களையும் அறிந்தவரும், உயர் ஆன்மா கொண்டவருமான கங்கையின் மைந்தரால் {பீஷ்மரால்} போருக்காக அணிவகுக்கப்பட்டிருக்கும் தார்தராஷ்டிரத் துருப்புகளைப் பார். ஓ! மாதவா {கிருஷ்ணா}, (என்னுடன்) போர் புரிய விரும்புபவர்களும், துணிவுமிக்கவர்களுமான எண்ணிலா வீரர்களைப் பார். ஓ! கேசவா {கிருஷ்ணா}, தன் சகோதரர்களுடன் கூடிய திரிகர்த்தர்களின் ஆட்சியாளனைப் பார். ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, போர்க்களத்தில் (என்னுடனான) போரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இவர்கள் அனைவரையும், ஓ! யதுக்களில் முதன்மையானவனே {கிருஷ்ணா}, இன்றே, உன் கண்களுக்கு எதிரிலேயே நான் கொல்லப்போகிறேன்" என்றான் {அர்ஜுனன்}.
இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தக் குந்தியின் மகன் {அர்ஜுனன்}, தனது வில்லின் நாணைத் தேய்த்து, எண்ணற்ற அந்த மன்னர்களின் மேல் தனது கணைகளை மழையாகப் பொழிந்தான். அந்தப் பெரும் வில்லாளிகளும், மழைக்காலத்தில் நீரால் தடாகத்தை நிரப்பும் மேகங்களைப் போல, அடர்த்தியான கணைமாரியை அவன் {அர்ஜுனன்} மீது பொழிந்தார்கள். அந்த இரு கிருஷ்ணர்களையும் {இரு கருப்பர்களான - அர்ஜுனனையும், கிருஷ்ணனையும்} அந்நிலையில் கண்ட தேவர்கள், தெய்வீக முனிவர்கள், கந்தர்வர்கள், உரகர்கள் பெரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர்.
அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கோபத்தால் தூண்டப்பட்ட அர்ஜுனன் ஐந்திர ஆயுதத்தை அழைத்தெழுப்பினான். பிறகு, அந்தப் போரில் தன் எதிரிகளால் ஏவப்படும் ஆயுத மழையைத் தன் கணைகளின் கூட்டத்தால் தடுத்த விஜயனின் {அர்ஜுனனின்} அற்புதப் பேராற்றலை நாங்கள் கண்டோம். ஆங்கே இருந்த ஆயிரக்கணக்கான மன்னர்கள், குதிரைகள், யானைகளுக்கு மத்தியில், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, காயம்படாதவர்கள் என எவரும் இல்லை. ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, இரண்டு கணைகளாலும், மூன்று கணைகளாலும் அந்தப் பிருதையின் மகன் {அர்ஜுனன்} பிறரையும் தாக்கினான்.
இப்படிப் பார்த்தனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட அவர்கள் சந்தனுவின் மகனான பீஷ்மரின் பாதுகாப்பை நாடினார்கள். அப்போது, அடியற்ற ஆழத்தில் {கடலில்} மூழ்கும் மனிதர்களைப் போன்ற அவ்வீரர்களின் {படகு போன்ற} மீட்பரானார் பீஷ்மர். இப்படிச் சிதறி ஓடும் அந்தப் போர்வீரர்கள், உமது துருப்புகளில் கலந்ததன் விளைவாக உடைந்த உமது படையணிகள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, புயலால் கொந்தளிக்கும் பெருங்கடலைப் போலக் கொந்தளித்தன" {என்றான் சஞ்சயன்}.
ஆங்கிலத்தில் | In English |