Monday, May 09, 2016

சாத்யகியிடம் இருந்து மீட்கப்பட்ட கர்ணன்! - துரோண பர்வம் பகுதி – 030

Karna rescued from Satyaki! | Drona-Parva-Section-030 | Mahabharata In Tamil

(சம்சப்தகவத பர்வம் – 14)

பதிவின் சுருக்கம் : கௌரவர்களோடு போராடிய பீமன்; பீமனுக்குக் கிடைத்த உதவி; சம்சப்தகர்களைக் கொன்றுவிட்டுத் திரும்பி, கர்ணனின் தம்பிகளான சத்ருஞ்சயன் விபாடன் ஆகியோரைக் கொன்ற அர்ஜுனன்; கர்ணனை ஆதரித்த போராளிகளைக் கொன்ற பீமன்; சர்மவர்மன் மற்றும் பிருஹத்க்ஷத்ரன் ஆகியோரைக் கொன்ற திருஷ்டத்யும்னன்; கர்ணனின் வில்லை அறுத்த சாத்யகி; சாத்யகியிடம் இருந்து காக்கப்பட்ட கர்ணன்; கௌரவர்களிடம் இருந்து காக்கப்பட்ட சாத்யகி; பனிரெண்டாம் நாள் போர் முடிவு...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "எனினும், தன் படை கொல்லப்படுவதை விருகோதரனால் {பீமனால்} பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் {பீமன்}, பாஹ்லீகனை அறுபது {60} கணைகளாலும், கர்ணனைப் பத்தாலும் {10} தாக்கினான். பிறகு துரோணர், பீமனைக் கொல்ல விரும்பி, கூர்முனை கொண்ட நேரான கணைகள் பலவற்றால் பின்னவனை {பீமனை} அவனது உயிர் நிலைகளில் தாக்கினார். நேரத்தை மேலும் கொடுக்க விரும்பாத அவர் {துரோணர்}, தீயின் தீண்டலுக்கு ஒப்பானவையும், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையுமான இருபத்தாறு {26} கணைகளால் அவனை {பீமனை} மீண்டும் தாக்கினார். பிறகு, கர்ணன் பனிரெண்டு {12} கணைகளாலும் அஸ்வத்தாமன் ஏழாலும் {7}, மன்னன் துரியோதனன் ஆறாலும் {6} அவனைத் {பீமனைத்} துளைத்தனர். வலிமைமிக்கப் பீமசேனனும் பதிலுக்கு அவர்கள் அனைவரையும் துளைத்தான். அவன் {பீமன்}, துரோணரை ஐம்பது {50} கணைகளாலும், கர்ணனைப் பத்தாலும் {10} தாக்கினான். துரியோதனனைப் பனிரெண்டு {12} கணைகளாலும், துரோணரை எட்டாலும் {8} துளைத்த அவன் {பீமன்}, உரக்க முழங்கியபடியே அந்தப்போரில் ஈடுபட்டான்.


தங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் வீரர்கள் எதில் போரிட்டார்களோ, மரணம் என்பது அடைவதற்கு எளிதானதாக எதில் இருந்ததோ, அந்த மோதலில், அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்}, பீமனைக் காக்கத் தூண்டி பல வீரர்களை அனுப்பினான். அவளவிலா சக்தி கொண்ட வீரர்களான மாத்ரி மற்றும் பாண்டுவின் மகன்கள் இருவரும் {நகுலனும், சகாதேவனும்}, யுயுதானன் தலைமையிலான பிறரும், பீமசேனனின் பக்கத்தை விரைவாக அடைந்தனர். சினத்தால் நிறைந்து ஒன்றாகச் சேர்ந்த அந்த மனிதர்களில் காளையர், வில்லாளிகளில் முதன்மையானோர் பலரால் பாதுகாக்கப்பட்ட துரோணரின் படையைப் பிளக்க விரும்பி போருக்கு முன்னேறினர். உண்மையில், வலிமைமிக்க சக்தி கொண்ட அந்தப் பெரும் தேர்வீரர்களான பீமனும், பிறரும், துரோணரின் படை மீது மூர்க்கமாகப் பாய்ந்தனர்.

எனினும், தேர்வீரர்களில் முதன்மையான துரோணரோ, போரில் சாதித்தவர்களும், பெரும்பலங்கொண்ட வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான அந்த வீரர்கள் அனைவரையும் எந்தக் கவலையுமின்றி வரவேற்றார் {எதிர்த்தார்}. தங்கள் நாடுகளைக் கருதிப் பாராமல், மரணத்தைக் குறித்த அச்சங்களை அனைத்தையும் கைவிட்ட உமது படையின் வீரர்களும் பாண்டவர்களை எதிர்த்து முன்னேறினர். குதிரைவீரர்கள் குதிரைவீரர்களுடன் மோதினர், தேர்வீரர்கள் தேர்வீரர்களுடன் மோதினர். அந்தப் போரில் ஈட்டிகளுக்கு எதிராக ஈட்டிகளும், வாள்களுக்கு எதிராக வாள்களும், கோடரிகளுக்கு எதிராகக் கோடரிகளும் மோதின. வாள்களுக்கு இடையில் அங்கே நடைபெற்ற கடும் மோதல் பயங்கரப் படுகொலைகளை {பேரழிகளை} உண்டாக்கியது. யானைகளோடு யானைகள் மோதியதன் விளைவாக அந்தப் போரானது மிகவும் உக்கிரமடைந்தது.

சிலர் யானைகளின் முதுகுகளில் இருந்து விழுந்தனர், சிலர் குதிரைகளின் முதுகுகளில் இருந்து தலை குப்புற விழுந்தனர். கணைகளால் துளைக்கப்பட்ட வேறு சிலர், தேர்களில் இருந்து கீழே விழுந்தனர். அந்தக் கடும் மோதலில், கவசமிழந்த ஒருவன் கீழே விழுகையில், யானையொன்று அவனது மார்பில் தாக்குவதையோ, அவனது தலையை நசுக்குவதையோ காண முடிந்தது. களத்தில் விழும் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் யானைகளால் நசுக்கப்படுவது களமெங்கும் காணப்பட்டது. பல யானைகள் (தாங்கள் விழுகையில்) தங்கள் தந்தங்களால் பூமியைத் துளைத்த போது, பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் அதனால் கிழிக்கப்படுவதும் காணப்பட்டது. கணைகளால் தங்கள் துதிக்கைகள் தாக்கப்பட்ட பல யானைகள், நூற்றுக்கணக்கான மனிதர்களைக் கிழித்துக் கொண்டும், நசுக்கிக் கொண்டும் களமெங்கும் திரிந்தன. சில யானைகள், கீழே விழுந்த வீரர்கள், குதிரைகள், கருப்பு இரும்புக் கவசங்களால் மறைக்கப்பட்ட யானைகள் ஆகியவற்றை, ஏதோ அவை அடர்த்தியான கோரைப்புற்கள் மட்டுமே என்பதைப் போல நசுக்குவதும் காணப்பட்டது.

பணிவால் அலங்கரிக்கப்பட்ட மன்னர்கள் பலர், தங்கள் காலம் வந்ததும், கழுகின் இறகுகளை மேல்விரிப்பாகக் கொண்ட வலிநிறைந்த படுக்கைகளில் (இறுதி உறக்கத்திற்காகத்) தங்களைக் கிடத்திக் கொண்டனர். போருக்குத் தன் தேரில் முன்னேறிய தந்தை தன் மகனைக் கொன்றான்; மகனும், வெறியால் மரியாதை அனைத்தையும் இழந்து போரில் தன் தந்தையை அணுகினான். தேர்களின் சக்கரங்கள் உடைக்கப்பட்டன; கொடிகள் கிழிக்கப்பட்டன; குடைகள் கீழே பூமியில் விழுந்தன. உடைந்த ஏர்க்கால்களை இழுத்துக் கொண்டே குதிரைகள் ஓடின. வாள்களைப் பிடித்த கரங்களும், குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட தலைகளும் கீழே விழுந்தன. வலிமைமிக்க யானைகளால் இழுத்துச் செல்லப்பட்ட தேர்கள் தரையில் வீசி எறியப்பட்டுத் தூள்தூளாக மாறின. யானைகளால் கடுமையாகக் காயம் பட்ட குதிரைகள் தங்கள் சாரதிகளுடன் விழுந்தன. எவனும் எவனுக்கும் எந்த மரியாதையையும் காட்டாதபடியே அந்தக் கடும்போர் தொடர்ந்தது.

“ஓ! தந்தையே!..., ஓ! மகனே!.... நண்பா நீ எங்கிருக்கிறாய்?... நில்!..... நீ எங்கே செல்கிறாய்?.... தாக்குவாயாக!.... கொண்டுவா… இவனைக் கொல்வாயாக” இவ்விதமானவையும், பலவிதமானவையுமான அலறல்கள், சிரிப்போடும், கூச்சலோடும், முழக்கங்களோடும் அங்கே கேட்கப்பட்டன. மனிதர்கள், குதிரைகள், யானைகள் ஆகியோரின் இரத்தங்கள் ஒன்று கலந்தன. {அதனால்} பூமியின் புழுதி மறைந்தது. மருண்டோர் அனைவரின் இதயங்களும் உற்சாகமிழந்தன {அச்சம் கொண்டோர் மயக்கமடைந்தனர்}.

இங்கே ஒரு வீரன் தன் தேர்ச்சக்கரத்தை மற்றொரு வீரரனின் தேர்ச்சக்கரத்தோடு சிக்கச் செய்து, மற்ற ஆயுதங்களைப் பயன்படுத்த முடியாத வகையில் மிக அருகில் சென்று, தன் கதாயுதத்தின் மூலமாக அடுத்தவனின் தலையைச் நொறுக்கினான். பாதுகாப்பற்ற இடத்தில் பாதுகாப்பை விரும்பிய துணிச்சல்மிக்கப் போராளிகளோ, ஒருவரையொருவர் மயிர் பிடித்திழுத்து, கைமுட்டிகள், பற்கள் மற்றும் நகங்களால் மூர்க்கமாகப் போரிட்டனர். இங்கே வாளை உயர்த்திப் பிடித்த ஒரு வீரனின் கரம் வெட்டப்பட்டது, அங்கே வில் அல்லது கணை, அல்லது அங்குசத்தைப் பிடித்திருந்த மற்றொரு வீரனின் கரம் வெட்டப்பட்டது. இங்கே ஒருவன் மற்றொருவனை உரக்க அழைத்தான். அங்கே மற்றொருவன் களத்திற்குத் தன் புறம் காட்டினான். இங்கே ஒருவன் தன் அருகில் மற்றவனை வர வைத்து அவனது உடலில் இருந்த தலையை வெட்டினான். அங்கே மற்றொருவன் எதிரியை நோக்கி உரத்த கூச்சலிட்டபடி விரைந்தான். இங்கே ஒருவன் மற்றவனின் முழக்கத்தால் அச்சத்தால் நிறைந்தான். அங்கே மற்றொருவன் நண்பனையோ, எதிரியையோ கூரிய கணைகளால் கொன்றான். இங்கே மலை போன்ற பெரிய யானை ஒன்று, நாராசத்தால் கொல்லப்பட்டுக் கோடை காலத்தில் நதியில் இருக்கும் சமமான தீவொன்றைப் போலக் களத்தில் விழுந்து கிடந்தது. அங்கே யானை ஒன்று, தன் சாரலில் சிற்றோடை பாயும் மலை ஒன்றைப் போலத் தன் மேனியில் வியர்வை வழிய குதிரைகள் மற்றும் தேரோட்டியுடன் கூடிய தேர்விரனைக் களத்தில் மிதித்து நசுக்கியது.

ஆயுதங்களில் சாதித்த துணிச்சல்மிக்க வீரர்கள் இரத்தத்தால் நனைந்த படி ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வதைக் கண்டு, மருண்டவர்களும், பலவீனமான இதயங்களைக் கொண்டவர்களும் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். உண்மையில் அனைவரும் உற்சாகம் இழந்தனர். அதற்கு மேலும் எதையும் வேறுபடுத்திக் காண முடியவில்லை. துருப்புகளால் எழுப்பப்பட்ட புழுதியில் மூழ்கி அந்தப் போர் உக்கிரமடைந்தது.

அப்போது, பாண்டவப்படைகளின் தலைவன் {திருஷ்டத்யும்னன்}, “இதுவே நேரம்” என்று சொல்லி, எப்போதும் பெரும் சுறுசுறுப்புடைய அந்த வீரர்களிடம் பாண்டவர்களை {பாண்டவ வீரர்களை} விரைவாக வழிநடத்திச் சென்றான். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டவர்கள் அவனது கட்டளைகளுக்குப் பணிந்து, (கௌரவப் படையை) அடித்தபடியே, தடாகத்தை நோக்கிச் செல்லும் அன்னங்களைப் போலத் துரோணரின் தேரை நோக்கிச் சென்றனர். “அவரைப் பிடிப்பீராக”, “ஓடாதீர்”, “அஞ்சாதீர்”, “துண்டுகளாக வெட்டுவீராக” என்று ஆர்ப்பரித்த குரல்களே துரோணரின் தேர் அருகில் கேட்கப்பட்டன. துரோணர், கிருபர், கர்ணன், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, மன்னன் ஜெயத்ரதன், அவந்தியின் விந்தன் மற்றும் அனுவிந்தன், சல்லியன் ஆகியோர் அந்த வீரர்களை {எதிர்த்தனர்} வரவேற்றனர். எனினும், தடுக்கப்பட, வெல்லப்பட முடியாத வீரர்களும், உன்னதமான உணர்வுகளால் ஈர்க்கப்பட்டவர்களுமான {அறப்போரில் நாட்டம் கொண்டவர்களுமான} பாஞ்சாலர்களும், பாண்டவர்களும், கணைகளால் பீடிக்கப்பட்டாலும் கூட, துரோணரைத் தவிர்க்காதிருந்தனர் {துரோணரை விடவில்லை}. அப்போது, சினத்தால் தூண்டப்பட்ட துரோணர், நூற்றுக்கணக்கான கணைகளை ஏவி, சேதிகள், பாஞ்சாலர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு மத்தியில் ஒரு பெரும் அழிவை உண்டாக்கினார். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, அவரது நாணொலியும், அவரது உள்ளங்கை தட்டல் ஒலிகளும் அனைத்துப் பக்கங்களிலும் கேட்கப்பட்டன. இடியின் முழக்கத்திற்கு ஒப்பாக இருந்த அவை அனைவரின் இதயங்களையும் அச்சத்தால் பீடித்தன.

அதேவேளையில், பெரும் எண்ணிக்கையிலான சம்சப்தகர்களை வீழ்த்திய ஜிஷ்ணு {அர்ஜுனன்}, துரோணர் எங்கே பாண்டவத் துருப்புகளைக் கலங்கடித்துக் கொண்டிருந்தாரோ அந்த இடத்திற்கு விரைவாக வந்தான். சம்சப்தகர்களைக் கொன்ற பல்குனன் {அர்ஜுனன்}, குருதியையே நீராகவும், கணைகளையே சுழல்களாகவும் அலைகளாகவும் கொண்ட பெரும் தடாகங்களைக் கடந்தபடியே அங்கே வந்தான். சூரியனுக்கு ஒப்பான காந்தியைக் கொண்ட அர்ஜுனனின் அடையாளமும், பிரகாசத்தால் சுடர்விடுவதுமான அவனது குரங்குக் கொடியை நாங்கள் கண்டோம். யுகத்தின் முடிவில் எழும் சூரியனைப் போலவே, தன் ஆயுதங்கள் எனும் கதிர்களின் மூலம் சம்சப்தகர்கள் எனும் கடலை வற்ற செய்த அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, பிறகு குருக்களையும் {கௌரவர்களையும்} தகர்த்தான். உண்மையில், யுகமுடிவில் தோன்றி அனைத்து உயிர்களையும் எரிக்கும் நெருப்பைப் போலவே தன் ஆயுதங்களால் குருக்கள் அனைவரையும் அர்ஜுனன் எரித்தான்.

ஆயிரக்கணக்கான கணைகளின் மூலம் அவனால் {அர்ஜுனனால்} தாக்கப்பட்ட யானை வீரர்கள், குதிரைவீரர்கள், தேர்வீரர்கள் ஆகியோர் கலைந்த கேசங்களுடன் கீழே பூமியில் விழுந்தனர். அந்தக் கணை மாரியால் அதீதமாகப் பீடிக்கப்பட்ட சிலர் துன்பக் குரலை வெளியிட்டனர். வேறு சிலர் பெருமுழக்கம் செய்தனர். பார்த்தனின் கணைகளால் தாக்கப்பட்ட சிலரோ உயிரையிழந்து கீழே விழுந்தனர். (நல்ல வீரர்களின் நடத்தைகளை) நினைவில் கொண்ட அர்ஜுனன், எதிரிகளில் கீழே விழுந்த போராளியையோ, பின்வாங்குபவரையோ {புறமுதுகிடுபவரையோ}, போரிட விரும்பாதவரையோ தாக்காதிருந்தான். தங்கள் தேர்களை இழந்து ஆச்சரியத்தில் நிறைந்த கௌரவர்களில் கிட்டத்தட்ட அனைவரும், களத்தில் இருந்து பின்வாங்கி, “ஓ” என்றும், “ஐயோ” என்றும் அலறிக்கொண்டு, (பாதுகாப்புக்காகக்) கர்ணனை அழைத்தனர்.

குருக்களால் உண்டாக்கப்பட்ட அந்த ஆரவாரத்தைக் கேட்டு {அவர்களைப்} பாதுகாக்க விரும்பிய அதிரதன் மகன் (கர்ணன்), “அஞ்சாதீர்” என்ற வார்த்தைகளை உரக்கச் சொல்லித் துருப்புகளுக்கு உறுதிகூறியபடி அர்ஜுனனை எதிர்கொள்ளச் சென்றான். பிறகு, பாரதர்கள் அனைவரையும் மகிழ்விப்பவனும், பாரதத் தேர்வீரர்களிலும், ஆயுதங்களை அறிந்தோர் அனைவரிலும் முதன்மையானவனுமான அவன் (கர்ணன்), ஆக்னேய ஆயுதத்தை இருப்புக்கு அழைத்தான் {மந்திரத்தால் தூண்டினான்}. எனினும் அர்ஜுனன், தன் கணை மழையின் மூலமாக, சுடர்மிக்க வில்லையும், பிரகாசமான கணைகளையும் கொண்ட வீரனான ராதையின் மகன் {கர்ணன்} ஏவிய கணைகளின் கூட்டத்தைக் கலங்கடித்தான் [1]. அதேபோல, அதிரதனின் மகனும் {கர்ணனும்}, உயர்ந்த சக்தியைக் கொண்ட அர்ஜுனனின் கணைகளைக் கலங்கடித்தான். இப்படி, அர்ஜுனனின் ஆயுதங்களைத் தன் ஆயுதங்களால் தடுத்த கர்ணன், பெருமுழக்கங்கள் செய்தபடியே தன் எதிராளியின் {அர்ஜுனனின்} மீது கணைகள் பலவற்றை ஏவினான்.

[1] வேறொரு பதிப்பில் இந்த வரி, “பிரகாசிக்கும் பாணசமூகத்தை உடையவனும், ஜொலிக்கும் வில்லைக் கையிற்பிடித்தவனுமான அந்தக் கர்ணனுடைய அக்நேயாஸ்திரத்தை அர்ஜுனன் வருணாஸ்திரத்தினால் நிலைகுலையும்படி செய்த பிறகு, அவனுடைய {கர்ணனுடைய} பாணச் சமூகங்களைத் தன் பாணச் சமூகத்தால் நாசஞ்செய்தான்” என்றிருக்கிறது. கங்குலியில் “கர்ணனின் அக்நேய அஸ்திரத்தை, அர்ஜுனன் வருணாஸ்திரத்தால் கலங்கடித்தான்” என்ற வரி இல்லை”. அது விடுபட்டிருக்க வேண்டும்.

அப்போது, திருஷ்டத்யும்னன், பீமன், வலிமைமிக்கத் தேர்வீரனான சாத்யகி ஆகியோர் அனைவரும் கர்ணனை அணுகி, மூன்று {மூன்று மூன்று} நேரான கணைகளால் அவர்கள் ஒவ்வொருவரும் {கர்ணனைத்} துளைத்தனர். எனினும், ராதையின் மகன் {கர்ணன்}, தன் கணை மழையால் அர்ஜுனனின் ஆயுதங்களைத் தடுத்துவிட்டு, மூன்று கூரிய கணைகளால் அந்த மூன்று வீரர்களின் {திருஷ்டத்யும்னன், பீமன் மற்றும் சாத்யகி ஆகியோரின்} விற்களை அறுத்தான். தங்கள் விற்கள் அறுபட்ட அவர்கள் நஞ்சற்ற பாம்புகளைப் போலத் தெரிந்தனர். தங்கள் தங்கள் தேர்களில் இருந்து எதிரியை நோக்கி ஈட்டிகளை வீசிய அவர்கள் {மூவரும்} சிங்க முழக்கமிட்டனர். பெரும் காந்தியும், மூர்க்கமும் கொண்டவையும், பாம்புகளைப் போலத் தெரிந்தவையுமான அந்தக் கடும் ஈட்டிகள், அவர்களின் வலிய கரங்களால் வீசப்பட்டு, கர்ணனின் தேரை நோக்கி மூர்க்கமாகச் சென்றன. மூன்று நேரான கணைகளால் அந்த ஈட்டிகள் ஒவ்வொன்றையும் வெட்டிய அந்த வலிமைமிக்கக் கர்ணன், அதே நேரத்தில் பார்த்தனின் {அர்ஜுனனின்} மீதும் பல கணைகளை விரைந்து ஏவி உரத்த முழக்கத்தைச் செய்தான்.

அப்போது அர்ஜுனன், ஏழு கணைகளால் கர்ணனைத் துளைத்துத் தன் கூரிய கணைகளால் பின்னவனின் {கர்ணனின்} தம்பியைக் கொன்றான். இப்படியே, ஆறு கணைகளால் சத்ருஞ்சயனைக் கொன்ற பார்த்தன் {அர்ஜுனன்}, மேலும் ஒரு பல்லத்தினால், தன் தேரில் நின்று கொண்டிருந்த விபாடனின் தலையை வெட்டினான். திருதராஷ்டிரர்களும், சூதனின் மகனும் {கர்ணனும்} பார்த்துக் கொண்டிருந்தபோதே, எவருடைய உதவியும் இல்லாத {தனி ஒருவனான} அர்ஜுனனால் பின்னவனின் {கர்ணனின்} தம்பிகள் மூவர் [2] கொல்லப்பட்டனர்.

[2] இருவர் பெயர்தான் குறிப்பிடப்படுகிறது. ஆனால் பின்போ மூவர் என்று சொல்லப்படுகிறது. மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இப்படியே இருக்கிறது.

அப்போது, இரண்டாவது கருடனைப் போலத் தன் தேரில் இருந்து குதித்த பீமன், கர்ணனை ஆதரித்தோரில் பதினைந்து போராளிகளைத் தன் சிறந்த வாளால் கொன்றான். மீண்டும் தன் தேரில் ஏறிக் கொண்டு வேறு வில்லை எடுத்த பீமன், பத்து {10} கணைகளால் கர்ணனையும் ஐந்தால் அவனது தேரோட்டியையும் குதிரைகளையும் துளைத்தான்.

திருஷ்டத்யும்னனும் ஒரு வாளையும், பிரகாசமான ஒரு கேடயத்தையும் எடுத்துக் கொண்டு, சர்மவர்மனையும் [3], நிஷாதர்களின் ஆட்சியாளனான பிருஹத்க்ஷத்ரனையும் கொன்றான். பிறகு, தன் தேரில் ஏறிய அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} வேறு வில்லை எடுத்துக் கொண்டு எழுபத்து மூன்று {73} கணைகளால் கர்ணனைத் துளைத்து உரக்க முழங்கினான்.

[3] வேறொருபதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்தப் பெயர் சந்திரவர்மன் என்று இருக்கிறது.

இந்திரனுக்கு இணையான சிநியின் பேரனும் {சாத்யகியும்}, வேறு வில்லை எடுத்துக் கொண்டு அறுபத்துநான்கு {64} கணைகளால் சூதனின் மகனை {கர்ணனைத்} துளைத்து சிங்கம்போலக் கர்ஜித்தான். மேலும், நன்கு ஏவப்பட்ட இரண்டு கணைகளால் கர்ணனின் வில்லை அறுத்த அவன் {சாத்யகி}, மீண்டும் மூன்று கணைகளால் கர்ணனின் கரங்களையும் மார்பையும் துளைத்தான். மன்னன் துரியோதனன், துரோணர் மற்றும் ஜெயத்ரதன் ஆகியோர், சாத்யகி எனும் பெருங்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த கர்ணனைக் காப்பாற்றினர். எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கானவர்களும், அடிப்பதில் சாதித்தவர்களுமான உமது படையின் காலாட்படை வீரர்கள், குதிரைகள், தேர்கள், யானைகள் ஆகிய அனைத்தும், (தன்னைத் தாக்குபவர்களை) கர்ணன் அச்சுறுத்திக் கொண்டிருந்த இடத்திற்கு விரைந்தனர் [4]. பிறகு, திருஷ்டத்யும்னன், பீமன், சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அந்தப் போரில் சாத்யகியைக் காக்கத் தொடங்கினர்.

[4] வேறொரு பதிப்பில் இந்த வரி, “எதிரிகளை அடிப்பவர்களான உம்மைச் சேர்ந்த காலாட்படைகளும், குதிரைகளும், தேர்களும், யானைகளும் நூற்றுக்கணக்கான மற்றவர்களும் பயமடையும்படி செய்யப்படுகிறவர்களாகிக் கர்ணனை நோக்கியே ஓடினார்கள்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், “அடிப்பதில் சாதித்தவர்களான நூற்றுக்கணக்கான காலாட்படை வீரர்கள், யானைவீரர்கள், தேர்வீரர்கள் அனைவரும், எதிரியின் இதயங்களில் அச்சத்தைத் தூண்டும் வகையில் கர்ணனைப் பாதுகாக்க விரைந்தனர்” என்றிருக்கிறது. இதில் மன்மதநாததத்தரின் பதிப்பு தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது.

உமது படை, எதிரியின் படை ஆகியவற்றைச் சேர்ந்த வில்லாளிகளின் அழிவுக்கான அந்தக் கடும்போர் இப்படியே நடந்தது. போராளிகள் அனைவரும் தங்கள் உயிரைக் குறித்த கவலையில்லாமல் போரிட்டனர். காலாட்படை, தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியன தேர்களுடனும், காலாட்படையுடனும் போரிட்டன. தேர்வீரர்கள், யானைகளோடும், காலாட்படைவீரர்களோடும், குதிரைகளோடும், தேர்களோடும் போரிட்டனர், காலாட்படை வீரர்களோ தேர்களோடும் யானைகளோடும் போரிட்டனர். மேலும் குதிரைகள் குதிரைகளோடும், யானைகள் யானைகளோடும், காலாட்படை வீரர்கள், காலாட்படைவீரர்களோடும் போரிடுவதும் காணப்பட்டது [5]. இப்படியே, மனித ஊனுண்ணிகள் மற்றும் இறைச்சியுண்ணும் விலங்குகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் வகையில், ஒருவரையொருவர் அச்சமற்ற வகையில் எதிர்த்த உயர் ஆன்ம மனிதர்களுக்கு இடையில் பெரும் குழப்பத்தால் குறிக்கப்பட்ட அந்தப் போர் நடைபெற்றது. உண்மையில் அது யமனின் ஆட்சிப்பகுதியில் உள்ளோர் எண்ணிக்கையைப் பெருக்கிற்று.

[5] வேறொரு பதிப்பில் இந்த இரண்டு வரிககளும், “காலாட்களும் தேர்களும் யானைகளும் குதிரைகளும், யானைகளோடும், குதிரைகளோடும், தேர்களோடும், காலாட்களோடும் எதிர்த்தன; தேராளிகள் யானைகளோடும் காலாட்களோடும், குதிரைகளோடும் எதிர்த்தார்கள். ரதங்கள் ரதங்களோடும், காலாட்கள் யானைகளோடும், குதிரைகள் குதிரைகளோடும், யானைகள் யானைகளோடும், தேராளிகள் தேராளிகளோடும், காலாட்கள் காலாட்களோடும் எதிர்த்ததாகக் காணப்பட்டார்கள்” என்று இருக்கிறது.

பெரும் எண்ணிக்கையிலான யானைகள், தேர்கள், காலாட்படை வீரர்கள் குதிரைகள் ஆகியன, மனிதர்கள், தேர்கள், குதிரைகள், யானைகள் ஆகியவற்றால் அழிக்கப்பட்டன. யானைகள் யானைகளால் கொல்லப்பட்டன, தேர் வீரர்கள், உயர்த்தப்பட்ட ஆயுதங்களைக் கொண்ட தேர்வீரர்களாலும், குதிரைகள் குதிரைகளாலும், பெரும் எண்ணிக்கையிலான காலாட்படைவீரர்களாலும் கொல்லப்பட்டனர். யானைகள் தேர்களாலும், பெரும் குதிரைகள் பெரும் யானைகளாலும், மனிதர்கள் குதிரைகளாலும், குதிரைகள் தேர்வீரர்களில் முதன்மையானோராலும் கொல்லப்பட்டன. நாக்குகள் வெளியே தள்ளியபடியும், பற்களும், கண்களும் தங்கள் இடங்களில் இருந்து பெயர்ந்த நிலையிலும், கவசங்களும், ஆபரணங்களும் தூசியாக நசுக்கப்பட்ட நிலையிலும் கொல்லப்பட்ட உயிரினங்கள் கீழே களத்தில் விழுந்தன. மேலும், பயங்கர முகத்தோற்றம் கொண்ட சிலர், பல்வேறு சிறந்த ஆயுதங்களைக் கொண்ட வேறு சிலரால் தாக்கபட்டும், பூமியில் வீசப்பட்டும், குதிரைகள் மற்றும் யானைகளின் மிதியால் பூமியில் அழுத்தப்பட்டும், கனமான தேர்கள் மற்றும் தேர்ச்சக்கரங்களால் சிதைக்கப்பட்டும் சித்திரவதையை அடைந்தனர்.

இரைதேடும் விலங்குகள், இறைச்சியுண்ணும் பறவைகள், மனித ஊணுண்ணிகள் ஆகியோருக்கு மகிழ்வதைத் தரும் அந்தக் கடும் பேரழிவு நடந்து கொண்டிருந்த போது, கோபத்தால் நிறைந்த வலிமைமிக்கப் போராளிகள், தங்கள் சக்தி அனைத்தையும் வெளிப்படுத்தியபடியும், ஒருவரையொருவர் கொன்றபடியும் களமெங்கும் திரிந்தனர். பிறகு, அந்த இரண்டு படைகளும் பிளக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டதும், குருதியில் நனைந்த போர்வீரர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். மேற்கு {அஸ்த} மலைகளில் உள்ள தன் அறைகளுக்குச் சூரியன் சென்ற அதே வேளையில், ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அந்தப் படைகள் இரண்டும் தங்களுக்குரிய பாசறைகளில் ஓய மெதுவாகச் சென்றனர்” {என்றான் சஞ்சயன்}.

பனிரெண்டாம் நாள் போர் முற்றிற்று

சம்சப்தகவத பர்வம் முற்றிற்று


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்