King Gaya! | Drona-Parva-Section-066 | Mahabharata In Tamil
(அபிமன்யுவத பர்வம் – 36)
பதிவின் சுருக்கம் : மன்னன் கயனின் கதையைச் சொன்ன நாரதர்; அவன் செய்த வேள்விகள்; அவன் அளித்த கொடைகள்; அவனது மரணம்…
நாரதர் {சிருஞ்சயனிடம்} சொன்னார், "ஓ! சிருஞ்சயா, அமார்த்தரயசின் {Amartarayas} [1] மகன் கயனும் [2] மரணத்துக்கு இரையானதாகவே நாம் கேட்டிருக்கிறோம். அந்த மன்னன் {கயன்}, வேள்வி நெருப்பில் காணிக்கையாக ஊற்றப்படும் தெளிந்த நெய்யில் எஞ்சுவதைத் தவிர வேறு எதையும் நூறு ஆண்டுகள் உண்ணாதிருந்தான். (அவனது பெரும் அர்ப்பணிப்பின் சான்றால் மனம் நிறைந்த) அக்னி அவனுக்கு ஒரு வரத்தை அளிக்க முன்வந்தான்.
[1] வேறொரு பதிப்பில் இவனது பெயர் அதூர்த்தரஜஸ் என்று குறிக்கப்பட்டுள்ளது. மன்மதநாததத்தரின் பதிப்பில் இவன் பெயர் அமூர்த்தரஜஸ் {Amurtarajas} என்று இருக்கிறது. Puranic Encyclopedia புத்தகத்தில் இவன் பெயர் அமூர்த்தரயஸ் {AmUrtarayas} என்றிருக்கிறது.[2] வனபர்வம் பகுதி 95லும், பகுதி 121லும் கயன் செய்த வேள்விகள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன.
கயன், "தவத்துறவுகளாலும், பிரம்மச்சரியம் பயில்வதன் மூலமும், நோன்புகள், விதிகள் மற்றும் எனக்கு மேன்மையானவர்களின் அருளின் மூலமும் வேதங்களைக் குறித்த முற்றான அறிவை நான் அடைய விரும்புகிறேன் [3]. என் வகைக்குரிய {க்ஷத்திரியக்} கடமைகளைச் செய்து, பிறருக்கு எந்தத் தீங்கையும் செய்யாமல் வற்றாத செல்வத்தை அடைய விரும்புகிறேன். பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் எப்போதும் பரிசளிக்கவும் விரும்புகிறேன். என் வகையைச் சேர்ந்த {க்ஷத்திரிய} மனைவியரிடமே நான் மகன்களைப் பெற வேண்டுமே அன்றி வேறெவரிடமும் வேண்டாம். அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} உணவைத் தானமளிக்க என்னால் இயல வேண்டும். என் இதயம் எப்போதும் அறத்திலேயே {நீதியிலேயே} மகிழ்வடைய வேண்டும். ஓ! உயர்வான தூய்மையாளனே (அக்னியே), அறத்தகுதியை {புண்ணியங்களை} ஈட்ட நான் செயல்களில் ஈடுபடும்போது எந்த இடையூறும் என்னை அணுகாதிருக்கட்டும்" என்று கேட்டான் {கயன்}. "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன அக்னி அங்கேயே அப்போதே மறைந்தான்.
[3] வேத அறிவை அடைய அவன் விரும்பிய வழிமுறைகள் இவை என இங்கே விளக்குகிறார் கங்குலி.
தான் கேட்ட அனைத்தையும் அடைந்த கயன், நியாயமான போரில் தன் எதிரிகளை அடக்கினான். பிறகு மன்னன் கயன், முழுமையாக நூறு வருடங்களுக்கு, பிராமணர்களுக்கு அபரிமிதமான பரிசுகளுடனும், சாதுர்மாஸ்யங்கள் என்று அழைக்கப்படும் நோன்புகளுடனும் இன்னும் பிறவற்றுடனும் பல்வேறு வகைகளிளான வேள்விகளைச் செய்தான்.
ஒரு நூற்றாண்டில் ஒவ்வொரு வருடமும், அந்த மன்னன் {கயன்} (தன் வேள்விகளின் முடிவில்) எழுந்து (பிராமணர்களுக்கு) நூற்று அறுபதாயிரம் {1,60,000 ஒரு லட்சத்து அறுபதாயிரம்} பசுக்களையும், பத்தாயிரம் குதிரைகளையும், ஒரு கோடி தங்கத்தையும் (நிஷ்கங்களையும்) கொடுத்தான். ஒவ்வொரு நட்சத்திரத்தின் போதும் அவன் {கயன்} அந்தச் சந்தர்ப்பத்திற்கு விதிக்கப்பட்ட பரிசுகளைத் தானமளித்தான். உண்மையில் அந்த மன்னன் {கயன்} மற்றொரு சோமனைப் போலவோ, மற்றுமொரு அங்கீரசைப் போலவோ பல்வேறு வேள்விகளைச் செய்தான்.
மன்னன் கயன், அவனது பெரும் குதிரை வேள்வியில் ஒரு தங்கப் பூமியை உண்டாக்கி அவளை {அந்தப் பூமியைப்} பிராமணர்களுக்குத் தானமளித்தான். அவ்வேள்வியில் மன்னன் கயனின் வேள்விக்கம்புகள் {யூபஸ்தூபங்கள்} அனைத்தும் தங்கத்தாலானவையாக, மிகுந்த விலைமதிப்புள்ளனவையாக, அனைத்து உயிர்களுக்கும் இன்பமளிக்கும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவையாக இருந்தன. அனைத்து ஆசைகளையும் கொல்ல {அழிக்க} இயன்ற கயன், மனம் நிறைந்திருந்த பிராமணர்களுக்கும், பிற மக்களுக்கும் அந்த வேள்விக்கம்புகளை {யூபஸ்தம்பங்களைக்} கொடுத்தான்.
பெருங்கடல், காடுகள், தீவுகள், ஆறுகள், நீர்நிலைகள், நகரங்கள், மாகாணங்கள், சொர்க்கம் ஆகியவற்றில் வசித்த ஆண் மற்றும் பெண் உயிரினங்களில் பல்வேறு வர்க்கங்களைச் சார்ந்தவர் அனைவரும் கயனின் வேள்விகளில் விநியோகிக்கப்பட்ட செல்வத்தாலும் உணவாலும் மிகவும் மனம்நிறைந்தனர். அவர்கள் அனைவரும், "கயனின் இந்த வேள்வியைப் போல வேறு எந்த வேள்வியும் கிடையாது" என்றனர். கயனின் வேள்விப்பீடமானது முப்பது யோஜனைகள் நீளமும், இருபத்தாறு யோஜனைகள் அகலமும், இருபது யோஜனைகள் உயரமும் கொண்டதாக இருந்தது. மேலும் அது முற்றிலும் தங்கத்தாலானதாகவும், முத்துகள், வைரங்கள் மற்றும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் இருந்தது. அவன் {கயன்} இந்த வேள்விப்பீடத்தையும், ஆடைகளையும், ஆபரணங்களையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான்.
அந்த மகத்தான ஏகாதிபதி {கயன்} (சாத்திரங்களில்) சொல்லப்பட்டுள்ள பிறவகைப் பரிசுகளையும் பிராமணர்களுக்குத் தானமளித்தான். அந்த வேள்வியின் முடிவில், ஆடைகளையும், ஆபரணங்களையும் தவிர, இருபத்தைந்து உணவு மலைகளும், பல தடாகங்களும், சுவைமிக்கச் சாறுகள் கொண்ட பானகங்களால் அழகாகப் பாய்ந்து கொண்டிருந்த பல ஓடைகளும் தொடப்படாமல் எஞ்சின. அந்த வேள்வியின் புண்ணியத்தின் விளைவாக, மூவுலகிலும் கயன் நன்றாக அறியப்பட்டான். அந்த வேள்வியின் காரணமாகவே நித்தியமான ஆலமரமும், புனிதமான பிரம்மசரசும் இருக்கின்றன.
ஓ! சிருஞ்சயா, நான்கு முக்கிய அறங்களை {தவத்துறவுகள், உண்மை, கருணை, ஈகை ஆகியவற்றைப்} பொறுத்தவரை, உனக்கு மேம்பட்டவனும், உன் மகனுக்கு {சுவர்ணஷ்டீவினுக்கு} மிகவும் மேம்பட்டவனுமான அவனே {கயனே} இறந்தான் எனும்போது, எந்த வேள்வியையும் செய்யாத, வேள்விக் கொடை எதையும் அளிக்காத உன் மகனுக்காக {சுவர்ணஷ்டீவினுக்காக}, “ஓ! சுவைதியா, ஓ! சுவைதியா {சுவித்யனின் பேரனே}” என்று சொல்லி நீ வருந்தலாகாது” {என்றார் நாரதர்}.
ஆங்கிலத்தில் | In English |