Persuasion of Vyasa! | Asramavasika-Parva-Section-04 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 04)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் தீர்மானத்தை ஏற்கும்படி யுதிஷ்டிரனிடம் சொன்ன வியாசர்; யுதிஷ்டிரன் ஏற்றுக் கொண்டது...
வியாஸர், "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட யுதிஷ்டிரா, குரு குலத்தின் திருதராஷ்டிரன் சொல்வதைத் தயங்காமல் செய்வாயாக.(1) இந்த மன்னன் முதியவன். மேலும் அவன் மகனற்றவனாக ஆக்கப்பட்டவன். அவனால் தன் துயரை அதிகக் காலம் தாங்க இயலும் என நான் நினைக்கவில்லை.(2) பெரும் ஞானம், அன்பான பேச்சு மற்றும் உயர்ந்த அருளைக் கொண்ட காந்தாரி, தன் மகன்களின் இழப்பால் உண்டான அதீத துயரத்தை தன் மனவுரத்தால் பொறுத்துக் கொள்கிறாள்.(3) (முதிர்ந்த மன்னன் சொல்வதையே) நானும் சொல்கிறேன். என் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவாயாக. முதிய மன்னன் உன் அனுமதியைப் பெறட்டும். அவன் வீட்டில் மகிமையற்ற முறையில் இறக்க வேண்டாம்.(4) பழங்கால அரச முனிகள் அனைவரும் சென்ற பாதையையே இம்மன்னனும் பின்பற்றட்டும். உண்மையில் அரச முனிகள் அனைவரும் இறுதியாகக் காடுகளுக்குள்ளே தான் ஓய்வார்கள்" என்றார் {வியாசர்}".(5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அற்புதச் செயல்களைச் செய்யும் வியாசரால் அந்நேரத்தில் இவ்வாறு சொல்லப்பட்ட போது, வலிமையும், சக்தியும் படைத்தவனும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், அந்தப் பெருந்தவசியிடம் இச்சொற்களில்,(6) "புனிதரான உம்மிடம் நாங்கள் உயர்ந்த மதிப்பைக் கொண்டிருக்கிறோம். நீர் மட்டுமே எங்கள் ஆசானாயிருக்கிறீர். நீர் மட்டுமே எங்கள் நாட்டுக்கும், எங்கள் குலத்திற்கும் புகலிடமாக இருக்கிறீர்.(7) நான் உமது மகன். ஓ! புனிதமானவரே, நீர் என் தந்தை. நீர் எங்கள் மன்னன், நீர் எங்கள் ஆசான். கடமைகள் அனைத்திற்கும் ஏற்புடைய வகையில் ஒரு மகன் எப்போதும் தன் தந்தையின் ஆணைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}".(8)
வைசம்பாயனர் தொடர்ந்தார், "மன்னனால் இவ்வாறு சொல்லப்பட்டவரும், வேதங்களை அறிந்தவர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், புலவர்களில் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், யுதிஷ்டிரனிடம் இச்சொற்களைச் சொன்னார்,(9) {வியாசர்}, "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, இஃது இவ்வாறே இருக்கிறது. ஓ! பாரதா, இது நீ சொல்வது போலத்தான் இருக்கிறது. இந்த மன்னன் முதிய வயதை எட்டியிருக்கிறான். மேலும் இப்போது இவன் தன் வாழ்வின் இறுதி நிலையில் இருக்கிறான்.(10) பூமியின் தலைவனான இவன், என்னாலும், உன்னாலும் அனுமதிக்கப்பட்டுத் தன் காரியங்களைச் செய்து கொள்ளட்டும். அவனது வழியில் நீ தடையாக நிற்காதே.(11) ஓ! யுதிஷ்டிரா, அரச முனிகளின் உயர்ந்த கடமை இதுவேயாகும். அவர்கள் போர்க்களத்தில் மரணம் அடைய வேண்டும், அல்லது சாத்திரங்களுக்கு ஏற்புடைய வகையில் காடுகளில் மரணம் அடைய வேண்டும்.(12)
ஓ! மன்னர்களின் மன்னா, உன்னுடைய அரசத் தந்தை பாண்டு, தன் ஆசானை மதிக்கும் ஒரு சீடனைப் போல இந்த முதிர்ந்த மன்னனை மதித்தான்.(13) (அந்தக் காலத்தில்) இவன் செல்வங்கள் மற்றும், ரத்தினங்களின் மலைகளுடன் கூடிய அபரிமிதமான கொடைகளுடன் பெரும் வேள்விகள் பலவற்றில் தேவர்களைத் துதித்து, தன் குடிமக்களை நல்ல முறையில் பாதுகாத்துப் பூமியை ஆண்டு வந்தான்.(14) பெரும் சந்ததியையும், பெருகும் நாட்டையும் அடைந்த இவன் {திருதராஷ்டிரன்}, நீங்கள் நாடுகடத்தப்பட்டிருந்த பதிமூன்று வருடங்கள் பெருஞ்செல்வாக்கை அனுபவித்து, பெருஞ்செல்வத்தைக் கொடையாக அளித்தான்.(15) ஓ! மனிதர்களின் தலைவா, ஓ! பாவமற்றவனே, நீயும், உன் பணியாட்களும், ஆசானிடம் சீடன் தயாராகக் கீழ்ப்படிவதைப் போலவே இந்த மன்னன் மற்றும் புகழ்பெற்ற காந்தாரியைத் துதித்துக் கொண்டிருந்தீர்கள்.(16) நீ உன் தந்தைக்கு அனுமதி கொடுப்பாயாக. அவன் தவம் பயில்வதற்கான காலம் வந்துவிட்டது. ஓ! யுதிஷ்டிரா, அவன் உனக்கெதிரான சிறு கோபத்தையும் வளர்த்தவனில்லை" என்றார் {வியாசர்}".(17)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இச்சொற்களைச் சொல்லி அந்த முதிர்ந்த மன்னனை வியாசர் தேற்றினார். அப்போது யுதிஷ்டிரன், "அப்படியே ஆகட்டும்" என்று பதிலளித்தான். பிறகு அந்தப் பெருந்தவசி அந்த அரண்மனையை விட்டுக் காட்டை நோக்கிச் சென்றார்.(18)
புனிதரான வியாசர் சென்ற பிறகு, பாண்டுவின் அரச மகன் {யுதிஷ்டிரன்}, முதியவனான தன் தந்தையைப் பணிந்து வணங்கி,(19) "புனித வியாசர் சொன்னதையும், உமது காரியத்தையும் பெரும் வில்லாளியான கிருபர் சொன்னதையும், விதுரர் வெளிப்படுத்தியதையும்,(20) யுயுத்சு மற்றும் சஞ்சயர் ஆகியோர் கேட்டுக் கொண்டதையும் விரைவாக நான் நிறைவேற்றுவேன். இவர்கள் அனைவரும் நம் குலத்தின் நலம்விரும்பிகள் என்பதால் என் மதிப்புக்குத் தகுந்தவர்களாக இருக்கின்றனர்.(21) எனினும், ஓ!மன்னா, நான் தலைவணங்கி உம்மிடம் இதை இரந்து கேட்கிறேன். முதலில் உண்பீராக. பின்பு உமது காட்டு ஆசிரமத்திற்குச் செல்வீராக" என்றான்{யுதிஷ்டிரன்}.(22)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 04ல் உள்ள சுலோகங்கள் : 22
ஆங்கிலத்தில் | In English |