Policies of Dhritarashtra! | Asramavasika-Parva-Section-05 | Mahabharata In Tamil
(ஆஸ்ரமவாஸ பர்வம் - 05) (திருதராஷ்டிர நீதி - 1)
பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரனுக்கு ராஜநீதிகளை உரைத்த திருதராஷ்டிரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மன்னனின் {யுதிஷ்டிரனின்} அனுமதியைப் பெற்றவனும், பெருஞ்சக்தி கொண்டவனுமான திருதராஷ்டிரன் அப்போது காந்தாரியால் பின்தொடரப்பட்டுத் தன் அரண்மனைக்குச் சென்றான்.(1) பலம் குறைந்தவனும், மெதுவாக நகர்பவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான அந்த மன்னன் {திருதராஷ்டிரன்}, ஒரு யானைக் கூட்டத்தின் வயது முதிர்ந்த தலைவனைப் போலப் பெருஞ்சிரமத்துடன் நடந்தான்.(2) பெரும் கல்விமானான விதுரன், தேரோட்டியான சஞ்சயன், சரத்வானின் மகனும், பெரும் வில்லாளியுமான கிருபர் ஆகியோரால் அவன் பின்தொடரப்பட்டான்.(3) ஓ! மன்னா {ஜனமேஜயா}, தன் மாளிகைக்குள் நுழைந்த அவன் காலைச் சடங்குகளைச் செய்து, முதன்மையான பிராமணர்கள் பலரை நிறைவடையச் செய்த பிறகு, சிறிது உணவு உண்டான்.(4) ஓ! பாரதா, அனைத்துக் கடமைகளையும் அறிந்தவளான காந்தாரியும், பெரும் நுண்ணறிவு கொண்ட குந்தியும், பல்வேறு பொருட்களைக் கொண்டு தங்கள் மருமகள்களால் வழிபடப்பட்ட பிறகு, சிறிதளவு உணவை உண்டனர்.(5) திருதராஷ்டிரன் உண்ட பிறகு, விதுரனும், பிறரும் அதையே செய்தனர், பாண்டவர்களும் தங்கள் உணவை முடித்துக் கொண்டு அங்கே வந்து அந்த முதிய மன்னனைச் சூழ்ந்து அமர்ந்தனர்.(6)
அப்போது, ஓ! ஏகாதிபதி, அம்பிகையின் மகன் {திருதராஷ்டிரன்}, தன் அருகில் அமர்ந்திருந்த குந்தியின் மகனுடைய {யுதிஷ்டிரனுடைய} முதுகைத் தன் கையால் தொட்டு,(7) "ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, ஓ! ஆட்சியாளர்களில் முதன்மையானவனே, எட்டு அங்கங்களைக் கொண்ட உன் நாட்டுடன் தொடர்புடைய அனைத்திலும், நீதிமான்களின் கேள்விகளை {அறத்தை / தர்மத்தை} முதன்மையானவையாகக் கொண்டு, எப்போதும் கவனக்குறைவின்றி நீ செயல்பட வேண்டும்[1].(8) ஓ! குந்தியின் மகனே, நீ புத்திமானாகவும், கல்விமானகவும் இருக்கிறாய். ஓ! மன்னா, ஓ! பாண்டுவின் மகனே, நாட்டை நீதியுடன் பாதுகாக்கக்கூடிய வழிமுறைகளை நான் உனக்குச் சொல்கிறேன் கேட்பாயாக.(9) ஓ! யுதிஷ்டிரா, கல்வியில் முதிர்ந்தவர்களாக இருப்போரை {கற்றறிந்த பெரியோரை} நீ எப்போதும் கௌரவிக்க வேண்டும். அவர்கள் சொல்வதைக் கேட்டு, எந்த ஐயுணர்வுமின்றி அதன்படியே நீ செயல்பட வேண்டும்.(10) ஓ! மன்னா, விடியலில் எழுந்து முறையான சடங்குகளுடன் அவர்களை வழிபட்டு, செயற்பாட்டுக்குரிய காலம் வரும்போது உன் செயல்களை (நீ நினைத்திருக்கும் செயல்களைக்) குறித்து அவர்களோடு ஆலோசிக்க வேண்டும்.(11) ஓ! மகனே, ஓ! பாரதா, உன் நடவடிக்கைகளால் உனக்கு என்ன நன்மை கிட்டும் என்பதை நீ அறிய விரும்பும்போது நீ அவர்களைக் கௌரவித்தால், அவர்கள் எப்போதும் உனக்கான நன்மையை அறிவிப்பார்கள்.(12)
[1] "சட்டம், நீதிபதி, வரிவிதிப்பவர், எழுத்தர், கணியர் {சோதிடர்}, தங்கம், நெருப்பு மற்றும் நீர் ஆகியவையே நாட்டின் எட்டு அங்கங்களாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "தலைவன், அமைச்சன், தேசம், கோட்டை, பொக்கசம், துணைவர், படை, நகரவரிசை ஆகிய எட்டும் என்பது" என்கிறது.
நீ உன் குதிரைகளைப் பாதுகாப்பதைப் போலவே உன் புலன்களையும் எப்போதும் பாதுகாப்பாயாக. அப்போது வீணாகாத செல்வம் போல அவை உனக்கு நன்மைபயக்கும்.(13) நேர்மைக்கான சோதனைகளில் தேர்ச்சியடைந்தவர்களையும் (பற்றுறுதி {விசுவாசம்}, அக்கறையின்மை, தன்னடக்கம், துணிவு ஆகியவற்றைக் கொண்டவர்களும்) பரம்பரை பரம்பரையாக நாட்டின் அதிகாரிகளாக இருப்பவர்களும், தூய ஒழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களும், தொழிலில் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துபவர்களும், அறவொழுக்கம் கொண்டவர்களுமான மனிதர்களையே நீ அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.(14) பல்வேறு வேடங்களில் இருப்பவர்களும், நம்பிக்கை சோதனைக்கு உட்பட்டவர்களும், உன் நாட்டைச் சேர்ந்தவர்களும், பகைவரால் அறியப்படாதவர்களுமான ஒற்றர்கள் மூலம் நீ எப்போதும் தகவல்களைத் திரட்ட வேண்டும்.(15) உன் கோட்டையானது, வலுவான சுவர்கள், வளைவுகளைக் கொண்ட வாயில்கள் மூலம் முறையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். சுவர்களின் அனைத்துப் பக்கங்களிலும், ஒன்றுக்கொன்று நெருக்கமாக உள்ள கண்காணிப்புக் கோபுரங்களின் மேல் பக்கத்துக்குப் பக்கம் நடந்து கொண்டிருக்கும் அறுவரை நீ நியமிக்க வேண்டும்[2].(16) வாயில்கள் போதுமான அளவுக்குப் பெரியதாகவும், வலிமையானதாகவும் இருக்க வேண்டும். சரியான இடங்களில் நிறுவப்படும் அந்த வாயில்களை மிகக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும்[3].(17) எந்த மனிதர்களின் குடும்பங்கள் மற்றும் ஒழுக்கம் நன்கறியப்பட்டிருக்கிறதோ, அவர்களையே நீ உன் காரியங்களில் நியமிப்பாயாக. ஓ! பாரதா, உண்ணும் உணவு, அணியும் மாலைகள், கிடக்கும் படுக்கைகள் தொடர்பான காரியங்களிலும், விளையாடும் மற்றும் உண்ணும் நேரங்களிலும் நீ எப்போதும் மிகக் கவனமாக உன் மேனியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
[2] "இங்கே சொல்லப்படும் அட்டா என்பது படைவீரர்கள் நடப்பதற்கான வழி என நீலகண்டரால் விளக்கப்படுகிறது. கும்பகோணம் பதிப்பில், "உறுதியான பிரகாரங்களும், வெளிவாயில்களுமுள்ளதும் அட்டங்களாலும், அட்டாலகங்களாலும் நிறைந்ததும் ஆறு ஸ்தானங்களுள்ளதுமான பட்டணமானது உன்னால் எல்லாத் திசைகளிலும் ரக்ஷிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது. அட்டங்கள் என்பதற்கான அடிக்குறிப்பில், "துர்க்கத்திற்கு மேற்பிரதேசத்திலுள்ள ஸஞ்சரிக்கத்தக்க இடங்கள் என்பது பழைய உரை" என்றும், அட்டாலகங்கள் என்பதன் அடிக்குறிப்பில், "மேல்மெத்தைவீடுகள்" என்றும், ஆறு ஸ்தானங்கள் என்பதன் அடிக்குறிப்பில், "’ஷட்பதம்’ என்பது மூலம், ‘எவரும் வரக்கூடிய ஆறிடங்களுள்ளதென்றதால் ஏழு மதில்களுள்ளனவென்பதும் இவற்றில் ஏழாவது மதிலினுள் அந்தப்புரமிருத்தலால் எவரும் செல்லலாகாதென்பது’ பழைய உரையின் கருத்து" என்றும் இருக்கின்றன.[3] கும்பகோணம் பதிப்பில், "அந்தப் பட்டணத்திற்குப் போதுமானவைகளும், பெரியவைகளுமான எல்லா வாயில்களும், எங்கும் நன்கு அமைக்கப்பட்டவையும், யந்திரங்களால் எங்கும் ரக்ஷிக்கப்பட்டவைகளுமாக இருக்க வேண்டும்" என்றிருக்கிறது.
ஓ! யுதிஷ்டிரா, உன் குடும்பத்துப் பெண்மணிகள், நன்னடத்தைக் கொண்டவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், கல்விமான்களும், முதியவர்களும், நம்பிக்கைகுரியவர்களுமான ஊழியர்களால் கவனிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட வேண்டும்.(18,19) கல்விமான்களும், பணிவுள்ளவர்களும், நற்குடியில் பிறந்தவர்களும், அறம்பொருள் அறிந்தவர்களும், எளிமையான நடத்தையால் அலங்கரிக்கப்பட்டவர்களுமான பிராமணர்களை நீ அமைச்சர்களாக்கிக் கொள்ள வேண்டும்.(20) நீ அவர்களுடன் ஆலோசனைகளைச் செய்ய வேண்டும். எனினும், நீ பலருடன் ஆலோசிக்கக்கூடாது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில், உன் மொத்த அவையினரோடோ, பகுதி பேருடனோ ஆலோசிக்கலாம். (ஊடுருவல்காரர்களிடம் இருந்து) நன்கு பாதுகாக்கப்பட்ட ஓர் அறை அல்லது இடத்திற்குள் {மந்திரகிரஹத்தில்} நீ உன் ஆலோசனைக்கூட்டங்களை நடத்த வேண்டும். புல்லற்ற காட்டிலும் நீ ஆலோசனைக்கூட்டம் நடத்தலாம். நீ ஒருபோதும் இரவு வேளையில் ஆலோசிக்கக்கூடாது[4].(22) மனிதர்கள் செய்வதைச் செய்து காட்டும் {சொல்வதைச் சொல்லிக் காட்டும்} குரங்குகள், பறவைகள் மற்றும் பிற விலங்குகள் ஆகியனவும், மூடர்கள் முடவர்கள் மற்றும் வாத நோயாளிகள் ஆகியோரும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் அறையில் விலக்கப்பட வேண்டும்.(23) மன்னர்களின் ஆலோசனைகள் வெளிப்படுவதால் உண்டாகும் தீமைககள் தீர்க்கப்பட முடியாதவை என்று நான் நினைக்கிறேன்.(24) ஓ! பகைவரைத் தண்டிப்பவனே, ஆலோசனைகள் வெளிப்படுவதால் எழும் தீமைகளையும், அவற்றை முறையாகப் பாதுகாப்பதால் உண்டாகும் நன்மைகளையும் உன் அமைச்சர்களுக்கு மத்தியில் நீ மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டும்.(25)
[4] "புற்கள் பகைவரின் ஒற்றர்களை மறைக்கும். இரவின் இருளும் அதையே செய்யும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய நகரம் மற்றும் மாகாணங்களில் வசிப்போரின் நற்செயல்களையும், குற்றங்களையும் அறிந்து கொள்ளும் வகையில் நீ செயல்பட வேண்டும்.(26) ஓ! மன்னா, உன் சட்டங்கள் அதற்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளவர்களும், மனநிறைவுடையவர்களும், நன்னடத்தைக் கொண்டவர்களுமான நம்பிக்கைக்குரிய நீதிபதிகளால் நிர்வகிக்கப்பட வேண்டும். அவர்களுடைய செயல்களும் ஒற்றர்கள் மூலம் உன்னால் கண்டறியப்பட வேண்டும்.(27) ஓ! யுதிஷ்டிரா, நீதித்துறையைச் சார்ந்த உன்னுடைய அதிகாரிகள், குற்றங்களின் ஆழத்தைக் கவனமாக உறுதி செய்த பிறகு, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனைகளை வழங்க வேண்டும்[5].[28) கையூட்டு {பரிதானம் / லஞ்சம்} பெறும் மனநிலை கொண்டவர்கள், பிறர் மனைவியரின் கற்புக்குக் களங்கம் விளைவிப்பவர்கள், கடுந்தண்டனைகளைக் கொடுப்பவர்கள், பொய் {போலிநியாயம்} பேசுவபவர்கள், தூற்றுபவர்கள் {வைபவர்கள்}, பேராசையால் களங்கமடைந்தவர்கள் {களவு செய்பவர்கள்}, கொலைகாரர்கள், முரட்டுச் செயல்களைச் செய்பவர்கள்,(29) சபைகளுக்கும், பிறரின் விளையாட்டுகளுக்கும் {இன்பத் தேடல்களுக்குத்} தொந்தரவு கொடுப்பவர்கள், வர்ணக் குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் ஆகியோரை இடம் மற்றும் காலத்தைக் கருத்தில் கொண்டு அபராதங்களாலோ, மரணத்தாலோ தண்டிக்க வேண்டும்[6][7].(30)
[5] கும்பகோணம் பதிப்பில், "உன்னுடைய அதிகாரிகள் குற்றம், தண்டனை இவற்றினுடைய அளவை அறிந்து தண்டிக்கத்தக்கவர்களுக்குத் தண்டனையை விதிக்க வேண்டும்" என்றிருக்கிறது.[6] "’ ஆதாநருசி’ என்பது ஊழல் அதிகாரிகள் மற்றும் கள்வர்களைக் குறிக்கும் மிக நாகரிகமான வழியாகும். கடுந்தண்டனைகளை வழங்குபவர்கள் கொல்லப்படத்தகுந்த கொடுங்கோலர்களாகக் கருதப்பட்டனர். ஒரு காலத்தில் இங்கிலாந்தில் கடும் அபராதங்கள் தடைசெய்யப்பட்டன. இந்திய தண்டனைச் சட்டத்தின் சொற்களைப் பயன்படுத்தவதாக இருந்தால், ‘ஸாஹஸப்ரியா’ என்பது, is a dooer of rash deeds, such as culpable homicide not amounting to murder {கொலை அளவுக்கு இல்லாத கொலை போன்ற மோசமான முரட்டுச் செயல்களைச் செய்பவனாவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[7] கும்பகோணம் பதிப்பில் இதற்கு மேலும், "அந்தப்புர ப்ரதேசத்தில் வேலைக்காரர்களுடன் பானம் செய்யக்கூடாது. அவர்கள் மதம்பிடித்து வைவார்கள்; மனைவியையும் பிடிப்பார்கள். மறைந்திருந்து ஆயுதத்தால் கொல்லவும் விரும்புவார்கள்; மதம்பிடித்துக் கூத்தாடுவார்கள்; பலவித நிந்தைகளைச் சொல்லுவார்கள்; சேரத்தக்கதையும், சேரத்தகாததையும் அறிய மாட்டார்கள்; அரசனானாலும் அதிகமாகப் பானம் செய்தால் எல்லாப் பொக்கசத்தையும் அழித்துவிடுவான்; பாடகர்களுக்கு வீணாகத் தனக்குவியலையும் கொடுப்பான்; தனக்கு நிந்தையையும் தோஷங்களையும் அடைவான்; ஆகையால், மிக்கப் பராக்ரமம் விருத்தியடைவதற்காகப் பத்தினியுடன் தனித்துப் பானம் செய்ய வேண்டும். (ஆனாலும்) அதுவும் குறிப்பினால் வெளிப்பட்டுவிடுகிறது" என்றிருக்கிறது. இந்தப் பகுதி கங்குலி, மன்மதநாததத்தர் மற்றும் பிபேக்திப்ராயின் பதிப்புகளில் இல்லை.
காலையில், நீ வழங்க வேண்டியவற்றைக் கொடுப்பதில் {உனக்குப் பிரியமானதைச் செய்வதில்} ஈடுபடுபவர்களை நீ காண வேண்டும். அதன்பிறகே நீ காலைக் கடன்களையும், அதற்கும்பிறகு உன் உணவையும் பார்க்க வேண்டும்.(31) அதன்பிறகு நீ உன் படைகளை மேற்பார்வையிட்டு ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் அவர்களை மகிழ்விக்க வேண்டும். உன்னுடைய மாலைப் பொழுதுகள் தூதர்களுக்காகவும், ஒற்றர்களுக்காகவும் ஒதுக்கப்பட வேண்டும்.(32) பகலில் செய்யப்பட வேண்டிய செயல்களைத் தீர்மானிக்கப் பின்னிரவை நீ அர்ப்பணிக்க வேண்டும். நள்ளிரவுகளும், நடுப்பகல்களும் உனது கேளிக்கைகளுக்கும், விளையாட்டுகளுக்கும் அர்ப்பணிக்கப்பட வேண்டும். எனினும், அனைத்துக் காலங்களிலும் நீ உன் காரியங்களை நிறைவேற்றக்கூடிய வழிமுறைகளேயே நினைக்க வேண்டும்.(33) உரிய காலத்தில் உன் மேனியை அலங்கரித்துக் கொண்டு, அபரிமிதமாகக் கொடையளிப்பதற்காக நீ அமர வேண்டும். ஓ! மகனே, பல்வேறு செயல்களின் சுழற்சி, சக்கரங்களைப் போல நிற்காமல் சுழன்று கொண்டிருக்கிறது.(34) நீ நியாயமான வழிமுறைகளின் மூலம் பல்வேறு வகைச் செல்வங்களைக் கொண்டு உன் கருவூலத்தை நிறைக்க எப்போதும் முயற்சிக்க வேண்டும். முடிவில் நியாயமற்ற வழிமுறைகள் அனைத்தையும் நீ புறக்கணிக்க வேண்டும்.(35)
உன்னுடைய தாமதங்களைக் காண விரும்பும் உன் பகைவர்களை உன் ஒற்றர்கள் மூலம் கண்டறிந்து, நம்பிக்கைக்குரிய நபர்களைக் கொண்டு தொலைவில் இருந்தே அவர்களை அழிக்க வேண்டும்.(36) ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒழுக்கத்தை ஆய்வு செய்த பிறகே உன் பணியாட்கள் நியமிக்கப்பட வேண்டும். உரிய காரியத்திற்கு நியமிக்கப்பட்ட பணியாட்களைக் கொண்டோ, அவற்றுக்காக நியமிக்கப்படாத பணியாட்களைக் கொண்டோ நீ உன் செயல்கள் அனைத்தையும் செய்வாயாக[8].(37) உன் படைத்தலைவன், ஒழுக்கத்தில் உறுதியுள்ளவனாகவும், துணிவுமிக்கவனாகவும், கடினமான சூழ்நிலைகளைப் பொறுத்துக் கொள்ளக்கூடியவனாகவும், பற்றுறுதி {விசுவாசம்} கொண்டவனாகவும், உன் நன்மையில் அர்ப்பணிப்பு உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.(38) ஓ! பாண்டுவின் மகனே, உன் மாகாணங்களில் வசிக்கும் தொழிலாளர்கள் மற்றும் கைவினைஞர்கள் பசுக்களையும், கழுதைகளையும் போல உன் செயல்களை எப்போதும் செய்ய வேண்டும்[9].(39) ஓ! யுதிஷ்டிரா, உன்னுடைய காரிய தாமதங்களையும் {ரந்திரங்கள் / பலவீனங்களையும்}, பகைவர்களின் காரிய தாமதங்களையும் நீ கவனமாக உறுதி செய்து கொள்ள வேண்டும். உன்னுடையவர்களின் காரிய தாமதங்களையும், பகைவருடையவர்களின் காரிய தாமதங்களையும் நீ உறுதி செய்து கொள்ள வேண்டும்.(4) தங்கள் தங்கள் தொழில்களில் திறம்பெற்றவர்களும், உனது நன்மையில் அர்ப்பணிப்புள்ளவர்களுமான உன் நாட்டைச் சேர்ந்தவர்கள், போதுமான வாழ்வாதாரங்களின் மூலம் உன்னால் ஆதரிக்கப்பட வேண்டும்.(41) ஓ! மனிதர்களின் ஆட்சியாளா, ஞானமுள்ள மன்னன் ஒருவன், சாதித்திருக்கும் தன் குடிமக்களின் சாதனைகள் பாதுகாக்கப்படுவதை எப்போதும் கண்காணிக்க வேண்டும். அப்போது அவர்கள், தங்கள் திறனில் இருந்து வீழாதிருப்பதைக் கண்டு உன்னிடம் உறுதியான அர்ப்பணிப்புடன் திகழ்வார்கள்[10]" {என்றான் திருதராஷ்டிரன்}.(42)
[8] கும்பகோணம் பதிப்பில், "காரியத்தையும் அகாரியத்தையும் அறிந்த வேலைக்காரர்களைக் கொண்டு காரியங்களைச் செய்து கொள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு நீ சிறந்த பணியாட்களை நியமிப்பாயாக. குறிப்பிட்ட பணிக்காக அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், படாதிருந்தாலும் அந்தப் பணிகளை நிறைவேற்ற நீ அவர்களைப் பயன்படுத்துவாயாக" என்றிருக்கிறது.[9] "அஃதாவது, அவர்கள் தங்கள் உணவை மட்டுமே பெற்றுக் கொண்டு மனநிறைவுடன் பணி செய்ய வேண்டும். அவர்களுடைய கூலி, அவர்கள் உண்பதற்குத் தேவையானதைவிட அதிகமாக இருக்கக் கூடாது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். கும்பகோணம் பதிப்பில், "தேசத்திலுள்ள தொழிலாளிகளான எல்லாரும் காளை போலவும், கழுதை போலவும் (போஷிக்கப்பட்டால்) உன்னுடைய காரியங்களைச் செய்வார்கள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நாட்டுப்புறத்திலும், நகரத்திலும் வசிக்கும் உன்னதமானோர் அனைவரும் கால்நடைகளைப் போல வாழ்வாதாரங்களைப் பெறுவதை உறுதி செய்வது உன் பணியாகும்" என்றிருக்கிறது. மூலத்தில் "ஸர்வே ஜனபதாஸ்சைவ தவக் கர்மாணி பாண்டவ கோவத்ராஸபவச்சைவ குர்யுர்யே வ்யவஹாரிண" என்றிருக்கிறது.[10] கும்பகோணம் பதிப்பில், "அறிஞனானவன் (தனக்கு) நன்மையை விரும்புகிறவர்களுக்கு நன்மையைச் செய்ய வேண்டும். உனக்கு அவர்கள் எப்பொழுதும் மலைகள் போல் ஆராயத்தகாதவர்களாயிருப்பார்கள்" என்றிருக்கிறது.
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 05ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |