Arjuna rose up! | Aswamedha-Parva-Section-80 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 65)
பதிவின் சுருக்கம் : கணவனும், தனயனும் விழுந்து கிடப்பதைக் கண்டு புலம்பி, மயங்கி விழுந்து, தெளிந்து உலூபியை நிந்தித்த சித்ராங்கதை; நினைவு திரும்பி நொந்து பிராயோபவேசம் செய்த பப்ருவாஹனன்; ஸஞ்சீவன மணியைக் கொண்டு அர்ஜுனனை எழுப்பிய உலூபி; சித்ராங்கதை களத்திற்கு வந்த காரணத்தைக் கேட்ட அர்ஜுனன்; உலூபியைக் கேட்கச் சொன்ன பப்ருவாகனன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட அந்தப் பெண் {சித்ராங்கதை}, துயரில் எரிபவளாக ஒப்பாரியில் ஈடுபட்டு, இறுதியாகத் தன் உணர்வுகளை இழந்து பூமியில் விழுந்தாள்.(1)
தெய்வீக அழகுடைய ராணி சித்ராங்கதை, தன் நினைவு திரும்பியதும், பாம்புத் தலைவனின் மகளான உலூபியைக் கண்டு, அவளிடம் இந்தச் சொற்களில்,(2) "ஓ! உலூபி, எப்போதும் வெற்றியடைபவரான நம் கணவர் {அர்ஜுனர்}, இளம் வயதைக் கொண்ட என் மகனால் {பப்ருவாஹனனால்} உன் மூலம் போரில் கொல்லப்பட்டதைப் பார்.(3) நீ {பெரியோரின தர்மத்தை,} மதிக்கத்தக்க நடைமுறைகளை அறிந்தவளில்லையா? நீ உன் தலைவருக்கு அர்ப்பணிப்புள்ள மனைவியில்லையா {பதிவிரதையில்லையா}? உன் கணவர் {அர்ஜுனர்} உன் செயலாலேயே போரில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார்.(4) தனஞ்சயர் {அர்ஜுனர்} எவ்வகையிலாவது உனக்குக் குற்றமிழைத்திருந்தால் இவரை மன்னிப்பாயாக {இவர் உனக்கு என்ன தீங்கு செய்தார்? அப்படி இருந்தால் இவரை மன்னிப்பாயாக}. இந்த வீரரின் உயிரை மீட்குமாறு {ஜீவிக்கும்படி செய் என} நான் உன்னிடம் வேண்டுகிறேன்.(5) ஓ! அறம் சார்ந்த பெண்ணே {தர்மத்தை அறிந்தவளே}, நீ பக்தியை அறிந்தவள். ஓ! அருளப்பட்டவளே, (உன் நற்குணங்களுக்காக) நீ மூவுலகங்களிலும் அறியப்பட்டவள். உன் மகனைக் கொண்டு உன் கணவரைக் கொல்லச் செய்தும் நீ துயரில் ஈடுபடாமல் இருப்பது எவ்வாறு?(6) ஓ! பாம்புத் தலைவனின் மகளே {உலூபியே}, நான் கொல்லப்பட்ட என் கணவனுக்காக வருந்தவில்லை. என் மகனால் இவ்வாறான விருந்தோம்பலுடன் வரவேற்கப்பட்ட என் கணவருக்காகவே துன்புறுகிறேன்" என்றாள் {சித்ராங்கதை}.(7)
சிறப்புமிக்கவளான சித்ராங்கதை, பாம்புத் தலைவனின் மகளும், ராணியைப் போன்றவளுமான {தேவியுமான} உலூபியிடம் இச்சொற்களைச் சொல்லிவிட்டு, பூமியில் கிடக்கும் தன் கணவனிடம் {அர்ஜுனனிடம்} சென்று, அவனிடம்,(8) "ஓ! அன்புத் தலைவா, எழுவீராக. குரு மன்னரின் (யுதிஷ்டிரரின்) அன்புக்குரியவர்களில் முதன்மையான இடத்தில் நீரே இருக்கிறீர். உமது குதிரை இங்கே இருக்கிறது. அஃது என்னால் சுதந்திரமாக விடப்படுகிறது.(9) உண்மையில், ஓ! பலமிக்கவரே, நீதிமானான மன்னர் யுதிஷ்டிரரின் இந்த வேள்விக் குதிரை உம்மால் பின்தொடரப்பட வேண்டுமே. நீர் ஏன் இன்னும் பூமியில் கிடக்கிறீர்?(10) குருக்களைத் திளைக்கச் செய்பவரே, என் உயிர் மூச்சு உம்மையே சார்ந்திருக்கிறது. மற்றவர்களுக்கு உயிரைக் கொடுப்பரான நீர் இன்று என்ன காரணத்தால் உயிரை விட்டீர்?(11)
ஓ! உலூபி, தரையில் நெடுஞ்சாண் கிடையாக உன் கணவர் கிடக்கும் காட்சியை நன்றாகப் பார். சொற்களால் தூண்டி உன் மகன் மூலமாக அவரைக் {அர்ஜுனரைக்} கொல்லச் செய்தும் நீ துயருறாமல் இருப்பது எவ்வாறு?(12) இந்தச் சிறுவன் மரணத்தின் ஆதிக்கத்திற்கு அடங்கித் தன் தந்தையின் அருகில் தரையில் கிடப்பது தகும். ஓ...! சிவந்த கண்களைக் கொண்ட வீரரும், குடாகேசர் என்று அழைக்கப்படுபவருமான இந்த விஜயர் {அர்ஜுனர்} உயிர் திரும்பட்டும்.(13) ஓ!அருளப்பட்ட பெண்ணே, பல மனைவிகளைக் கொள்வது ஆடவரின் குற்றமில்லை. ஒரு கணவருக்கு மேல் கொள்ளும் பெண்களே குற்றமிழைப்பவர்களாவர். எனவே, (பழி வாங்கும்) இத்தகைய எண்ணங்களுக்கு இடமளிக்காதே.(14) இந்த உறவு {இந்தக் காதல்} விதிசமைக்கும் பரமனால் விதிக்கப்பட்டதாகும். அதைத் தவிர, அது நித்தியமானதும், மாற்றமில்லாததுமாகும். அந்த உறவைக் கவனிப்பாயாக. (தனஞ்சயருடனான) உன் உறவு உண்மையானதாகட்டும்[1].(15) உன் மகனைக் கொண்டு, உன் கணவரைக் கொல்லச் செய்த நீ, இன்று என் கண்களுக்கு முன்பாக இவரைப் பிழைக்கச் செய்யவில்லையெனில், நான் இப்போதே என் உயிர் மூச்சைக் கைவிடுவேன்.(16) ஓ! மதிப்புக்குரிய பெண்ணே {தேவி}, கணவர் மற்றும் மகன் ஆகிய இருவரையும் இழந்து துயரடைந்திருக்கும் நான், இன்று நீ பார்த்துக் கொண்டிருக்கும்போதே இங்கேயே பிராயத்தில் அமர்வேன் {பிராயோபவேசம் செய்யப் போகிறேன்}. இதில் ஐயமில்லை" என்றாள் {சித்ராங்கதை}.(17) {சித்ரவாஹனனின் மகளான} இளவரசி சைத்ரவாஹினி {சித்ராங்கதை}, அர்ஜுனனுடனான {அர்ஜுனனின் மனைவியான} தனக்குச் சக்களத்தியான {ஸபத்னியான} பாம்புத் தலைவனின் மகளிடம் {உலூபியிடம்} இவ்வாறு சொல்லிவிட்டு, பேச்சை அடக்கிப் பிராயத்தில் அமர்ந்தாள்[2]".(18)
[1] கும்பகோணம் பதிப்பில், "புருஷர்களுக்கு அநேக மனைவிகளிருப்பதால் தோஷமில்லை. இது பெண்களுக்குக் குற்றமாகும். உனக்கு இவ்விதமான புத்தி உண்டாக வேண்டாம். (ஸ்த்ரீ புருஷர்களுக்கு) இந்த ஸ்நேஹமானது பிரம்மாவினால் இடைவிடாததும், அழிவற்றதுமாகவே செய்யப்பட்டது. (இந்த) ஸ்நேஹத்தை நன்றாகத் தெரிந்து கொள். உன்னுடைய ஸ்நேஹம் உண்மையாக இருக்கட்டும்" என்றிருக்கிறது.[2] பிராயத்தில் அமர்வது என்பது, ஒருவன் தன் உயிர்மூச்சைக் கைவிடும் நோக்கில் உணவு, நீர் ஆகியவற்றைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்திருப்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "உற்சாகமிழந்த அந்த ராணி {சித்ராங்கதை}, புலம்புவதை நிறுத்தி, தன் கணவனை மடியில் கிடத்திக் கொண்டு, பெருமூச்சு விட்டபடியும், தன் மகனின் உயிரை மீட்க விரும்பியும் அங்கே அமர்ந்திருந்தாள்[3].(19)
[3] கும்பகோணம் பதிப்பில், "அவள் புலம்பி ஓய்ந்த பின், பர்த்தாவினுடைய பாதங்களைப் பிடித்துக் கொண்டும், புத்திரனைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் கொண்டும் தைன்யத்துடன் உட்கார்ந்திருந்தாள்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அழுதுபுலம்புவதை நிறுத்தி அவள் தன் கணவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டாள். அந்த ராணி கீழே அமர்ந்து கொண்டு தன் மகனை நோக்கிப் பார்த்தாள்" என்றிருக்கிறது.
நினைவு மீண்ட மன்னன் பப்ருவாஹனன், போர்க்களத்தில் அக்கோலத்தில் அமர்ந்திருக்கும் தன் தாயை {சித்ராங்காதையைக்} கண்டு, அவளிடம்,(20) "ஆடம்பரமாக வளர்க்கப்பட்ட என் அன்னை, தரையில் நெடுஞ்சாண் கிடைகாயாகக் கிடக்கும் தன் வீரக் கணவரின் அருகில் வெறுந்தரையில் அமர்ந்திருப்பதைக் காண்பதைவிடத் துன்பம் தரக்கூடிய காட்சி வேறென்ன இருக்க முடியும்?(21) ஐயோ, பகைவர் அனைவரையும் கொல்பவரும், ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவருமான இவர் போரில் என்னால் கொல்லப்பட்டார். மனிதர்கள் தங்கள் வேளை வரும் வரை இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது[4].(22) வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரும், அகன்ற மார்பைக் கொண்டவருமான தன் கணவர் இறந்து தரையில் கிடப்பதைக் கண்டும், இந்த இளவரசியின் இதயம் பிளக்காமல் இருப்பதால் அது மிகக் கடினமானதாகத் தெரிகிறது.(23) நானோ, என் தாயோ (இத்தகைய காட்சியைக் கண்ட பிறகும்) உயிரை இழக்காமல் இருப்பதால், ஒருவனுக்கு வேளை வரும் வரை அவன் இறப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.(24)
[4] "இதன் பொருள் யாதெனில்: ’கவலையானது ஒருபோதும் ஒருவரைக் கொல்வதில்லை; ஒருவன் தன் வேளை வரும் வரை இறப்பதில்லை. இது வேறு வகையில் இருந்தால், இவ்வளவு துன்பச் சுமையுடன் கூடிய நான் இறந்திருப்பேன்’ என்பதாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஐயோ, ஐயோ, மகனான என்னால் தெரிந்தே கொல்லப்பட்டுக் கிடக்கும் இந்த முதன்மையான வீரரின் பொற்கவசம், அவரது உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுத் தரையில் கிடக்கிறதே[5].(25) ஐயோ, பிராமணர்களே, மகனால் கொல்லப்பட்டு, வீரர்களின் படுக்கையில் பூமியில் நெடுஞ்சாண்கிடையாகக் கிடக்கும் என் வீரத்தந்தையைப் பார்ப்பீராக.(26) குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் என்னால் கொல்லப்பட்டவருமான இவர் குதிரையைப் பின்தொடர்வதில் ஈடுபடுத்தப்பட்ட போது, இந்த வீரரைக் கவனிக்க நியமிக்கப்பட்ட பிராமணர்களால் இவருக்கு என்ன நன்மை நேர்ந்தது?(27) போரில் தன் தந்தையையே கொன்ற இழிந்தவனும், பாவம் நிறைந்தவனும், கொடூரனுமான என்னால் செய்யப்பட வேண்டிய பரிகாரச் சடங்குகளைப் பிராமணர்கள் சொல்லட்டும்.(28) என் தந்தையைக் கொன்ற கொடூரனான நான், அவருடைய தோலால் {அர்ஜுனனின் தோலால்} என்னை மறைத்துக் கொண்டு, அனைத்து வகைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இந்தப் பூமியில் திரிய வேண்டும்.(29) தந்தையைக் கொன்றதற்கு எனக்குப் பரிகாரமேதும் கிடையாது என்பதால் இன்று என்னிடம் என் தந்தையுடைய தலையின் இரு பகுதிகளைக் கொடுங்கள் (அந்தக் காலம் {பனிரெண்டு ஆண்டுகள்} வரை அதைக் கொண்டு {பிச்சையெடுத்த உணவை அதில் கொண்டு உண்டு} இந்த உலகில் திரிவேன்)[6].(30)
[5] கும்பகோணம் பதிப்பில், "ஆ! ஆ! (எங்களை) நிந்திக்க வேண்டும். புத்திரனான என்னால் இப்பொழுது கொல்லப்பட்டிருக்கும் கௌரவ வீரரான அர்ஜுனருடைய ஸுவர்ணகிரீடமானது பூமியில் புரண்டு கிடப்பதைப் பாருங்கள்" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில், "ஐயோ, இந்தத் துணிவுமிக்கவரின் பொற்கவசம் தரையில் கிடக்கிறதே. பாருங்கள். அவருடைய மகனால் அது துளைக்கப்பட்டிருக்கிறது. அவரும் கொல்லப்பட்டிருக்கிறார்" என்றிருக்கிறது.[6] கும்பகோணம் பதிப்பில், "இப்பொழுது பிதாவைக் கொன்றவனும், மிகக் கொடியவனுமான எனக்கு, என் பிதாவான இவருடைய தோலை உடுத்து உவருடைய மண்டையோட்டிலேயே போஜனம் செய்து கொண்டு பன்னிரண்டு வருஷம் கஷ்டப்பட்டு ஸஞ்சரிப்பது, இது விஷயத்தில், இப்பொழுது பிராயச்சித்தமாகும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "நான், போர்க்களத்தில் என் தந்தையைக் கொன்று, மிகக்கொடும்பாவத்தை இழைத்திருக்கிறேன். என் தந்தையைக் கொன்ற நான், பனிரெண்டு வருடங்கள் மிகக் கடும் தவத்தைச் செய்து கொண்டு, என் முகத்தை மறைத்தபடியே திரிய வேண்டும். என் தலையில் என் தந்தையின் மண்டையோட்டைப் பொருத்திக் கொண்டு நான் திரியப் போகிறேன்" என்றிருக்கிறது.
ஓ! பாம்புகளில் முதன்மையானவரின் மகளே {உலூபியே}, என்னால் கொல்லப்பட்டுக் கிடக்கும் உன் கணவரைப் பார். உண்மையில், போரில் அர்ஜுனரைக் கொன்றதன் மூலம் உனக்கு ஏற்புடையதையே நான் நிறைவேற்றியிருக்கிறேன்.(31) நான் இன்று என் தந்தை சென்ற பாதையைப் பின்பற்றப் போகிறேன். ஓ! அருளப்பட்டவளே {கல்யாணி}, என்னால் என்னைத் தேற்றிக் கொள்ள முடியவில்லை.(32) ஓ! தாயே, நானும், காண்டீவதாரியும் என இருவரும் இன்று மரணத்தைத் தழுவுவதைக் கண்டு நீ மகிழ்ச்சியடைவாயாக. (என் உயிர்மூச்சைக் கைவிடுவேன் என்று) வாய்மையின் மீது ஆணையாக நான் உறுதியேற்கிறேன்" என்றான் {பப்ருவாஹனன்}.(33)
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, இச்சொற்களைச் சொன்ன மன்னன் {பப்ருவாஹனன்}, துன்பத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டு, நீரைத் தொட்டுக் கவலையுடன்,(34) "அசையும், மற்றும் அசையாத உயிரினங்கள் அனைத்தும் நான் சொல்வதைக் கேட்கட்டும். ஓ! தாயே, நீயும் நான் சொல்வதைக் கேட்பாயாக. ஓ! பாம்புகளின் மகள்கள் அனைவரிலும் சிறந்தவளே {உலூபியே}, நான் உண்மையைச் சொல்கிறேன்.(35) மனிதர்களில் சிறந்தவரும், என் தந்தையுமான இந்த ஜயர் {அர்ஜுனன்} எழவில்லையெனில், போர்க்களத்தில் அமர்ந்தவாறே நான் என் உடலை மெலியச் செய்வேன்.(36) தந்தையைக் கொன்றவனான எனக்கு (அந்தக் கொடும் பாவத்தில் இருந்து) தப்பிக்கும் வழியேதும் கிடையாது. தந்தையைக் கொன்ற பாவத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் நான், நிச்சயம் நரகத்திலேயே மூழ்குவேன்.(37) வீர க்ஷத்திரியனைக் கொன்ற ஒருவன், நூறு பசுக்களைக் கொடையளிப்பதன் மூலம் தூய்மையடைவான். எனினும் தந்தையைக் கொன்றதன் மூலம் உண்டான கொடும்பாவத்தில் இருந்து நான் தப்பித்தல் சாத்தியமேயில்லை.(38) பாண்டுவின் மகனான இந்தத் தனஞ்சயர், வலிமையும், சக்தியும் நிறைந்த ஒரே வீரராவார். அற ஆன்மாவைக் கொண்ட அவரே, என் ஆசிரியருமாவார். அவரைக் கொன்ற என்னை எவ்வாறு காத்துக் கொள்ள இயலும்?" என்றான் {பப்ருவாஹனன்}.(39) இவ்வாறு புலம்பியவனும், தனஞ்சயனின் உயர் ஆன்ம மகனுமான மன்னன் பப்ருவாஹனன், நீரைத் தீண்டி, மரணம் வரை பட்டினி கிடப்பதாக உறுதியேற்று அமைதியடைந்தான்".(40)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பகைவரைத் தண்டிப்பவனான மணிப்புர மன்னன் {பப்ருவாகனன்}, துன்பத்தால் பீடிக்கப்பட்டவனாகத் தன் தாயுடன் சேர்ந்து மரணம் வரை பட்டினி இருக்க அமர்ந்த போது,(41) இறந்த மனிதனின் உயிரை மீட்கும் திறன் கொண்ட ஒரு ரத்தினத்தை {ஸஞ்சீவனம் எனும் மணியைக்} குறித்து உலூபி நினைத்தாள். பாம்புகளின பெரும்புகலிடமான அந்த ரத்தினம், இவ்வாறு நினைக்கப்பட்ட உடனேயே அங்கே வந்தது.(42) பாம்புகளின் இளவரசனுடைய மகள் {உலூபி} அதை எடுத்துக் கொண்டு, போர்க்களத்தில் நின்ற போராளிகளுக்கு உயர்ந்த மகிழ்ச்சியை அளிக்கும் இச்சொற்களைச் சொன்னாள்.(43)
{உலூபி}, "ஓ! மகனே {பப்ருவாஹனா}, எழுவாயாக. வருந்தாதே. ஜிஷ்ணு உன்னால் வீழ்த்தப்படவில்லை {கொல்லப்படவில்லை}. இந்த வீரர், மனிதர்களாலும், வாசவனைத் தலைமையில் கொண்ட தேவரகளாலும் வீழ்த்தப்பட முடியாதவராவார்.(44) மனிதர்களில் முதன்மையானவரும், சிறப்புமிக்கவருமான உன் தந்தையின் நன்மைக்காக, உன் புலன்களை வஞ்சிக்கும் {மோஹினி எனும்} இந்த மாயையை நான் வெளிக்காட்டினேன்.(45) ஓ! குரு குலத்தோனே, ஓ! மன்னா, பகைவீரர்களைக் கொல்பவரான இவர், தன் மகனான உன்னுடைய ஆற்றலை உறுதிசெய்து கொள்ள விரும்பியே உன்னுடன் போரிட இங்கே வந்தார்.(46) ஓ! மகனே, அதன் காரணமாகவே போரிடும்படி என்னால் நீ தூண்டப்பட்டாய். ஓ! பலமிக்க மன்னா, ஓ! மகனே, இந்த அறைகூவலை ஏற்றதன் மூலம், அணுவளவு பாவத்தையேனும் இழைத்துவிட்டாய் என ஐயுறாதே.(47) அவர் நித்தியமான, அழிவற்ற பெரும் ஆன்மாவைக் கொண்ட ஒரு முனிவராவார். ஓ! அன்பு மகனே, போரில் இவரை வீழ்த்த சக்ரனாலேயே முடியாது.(48) ஓ! மன்னா, இந்தத் தெய்வீக ரத்தினத்தை நான் வரவழைத்திருக்கிறேன். இஃது எப்போதும் பாம்புகள் இறக்க, இறக்கப் பிழைக்கச் செய்கிறது.(49) ஓ! பலமிக்க மன்னா, {ஸஞ்சீவனம் என்ற} இந்த ரத்தினத்தை உன் தந்தையின் மார்பில் வைப்பாயாக. பாண்டுவின் மகன் உயிர்பெறுவதை நீ காண்பாய்" என்றாள் {உலூபி}.(50)
இவ்வாறு சொல்லப்பட்டவனும், பாவமேதும் இழைக்காதவனுமான அந்த இளவரசன், தன் தந்தையின் மீது கொண்ட அன்பினால், அளவிலா சக்தி கொண்ட பிருதையின் மைந்தனுடைய மார்பில் அந்த {ஸஞ்சீவன} ரத்தினத்தை வைத்தான்.(51) மார்பில் ரத்தினம் வைக்கப்பட்டதும், வீரனும், பலமிக்கவனுமான ஜிஷ்ணு உயிர்பெற்றான். நீண்ட காலம் உறங்கிய ஒருவனைப் போலச் சிவந்திருந்த கண்களைத் திறந்து அவன் எழுந்தான்.(52) பெருஞ்சக்தி கொண்ட வீரனான தன் தந்தை நினைவு திரும்பி சுகமாக இருப்பதைக் கண்ட பப்ருவாஹனன் அவனை மதிப்புடன் வழிபட்டான்.(53) ஓ! பலமிக்கவனே, அந்த மனிதர்களில் புலி, வாழ்வின் மங்கலக் குறிகளுடன், மரண உறக்கத்தில் இருந்து எழுந்தபோது, பகனைத் தண்டித்தவன் {இந்திரன்} தெய்வீக மலர்களைப் பொழிந்தான்.(54) யாராலும் அடிக்கப்படாமலேயே, துந்துபிகள், மேகங்களைப் போன்ற முழக்கத்துடன் கூடிய ஆழ்ந்த இசையை உண்டாக்கின. "நல்லது, நல்லது" என்ற சொற்கள் அடங்கிய ஒரு பெருமுழக்கம் ஆகாயத்தில் கேட்டது.(55)
நல்ல சுகத்துடன் எழுந்திருந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான தனஞ்சயன், பப்ருவாகஹனனைத் தழுவிக் கொண்டு, அவனது தலையை முகர்ந்தான்.(56) துயரால் பீடிக்கப்பட்டிருந்த தன் மகனின் அன்னை {சித்ராங்கதை}, தன் மகனிடம் இருந்து தொலைவாக உலூபியுடன் அமர்ந்திருப்பதை அவன் கண்டான். தனஞ்சயன்,(57) "போர்க்களத்தில் உள்ள யாவரும், ஏன் துயரம், ஆச்சரியம் மற்றும் இன்பத்தின் குறியீடுகளைச் சுமந்தபடி இருக்கின்றனர்? ஓ! பகைவரைக் கொல்பவனே, காரணத்தை நீ அறிந்திருந்தால், அதை எனக்குச் சொல்வாயாக.(58) போர்க்களத்திற்கு உன் அன்னை ஏன் வந்தாள்? பாம்புகளின் இளவரசருடைய மகளான உலூபியும் ஏன் இங்கே வந்தாள்?(59) என் ஆணையின் பேரில் நீ என்னுடன் போரிட்டாய் என்பதை நான் அறிவேன். பெண்கள இங்கே வந்த காரணம் யாது என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்றான் {அர்ஜுனன்}.(60)
மணிப்புரத்தின் நுண்ணறிவுமிக்க மன்னன் {பப்ருவாஹனன்}, தனஞ்சயனால் இவ்வாறு கேட்கப்பட்ட போது, மதிப்புடன் தலைவணங்கி அவனை நிறைவடையச் செய்த பிறகு, "உலூபியிடம் கேட்பீராக" என்றான் {பப்ருவாஹனன்}.(61)
அஸ்வமேதபர்வம் பகுதி – 80ல் உள்ள சுலோகங்கள் : 61
ஆங்கிலத்தில் | In English |