Arjuna fell down! | Aswamedha-Parva-Section-79 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 64)
பதிவின் சுருக்கம் : மணிபுரம் வந்த அர்ஜுனன்; மதிப்புடன் வரவேற்ற பப்ருவாஹனன்; கோபித்துக் கொண்ட அர்ஜுனன்; உலூபியின் தூண்டலால் கணை ஏவிய பப்ருவாஹனன்; அர்ஜுனன் வீழ்ந்தது; மயங்கி விழுந்த பப்ருவாஹனன்; நடுங்கியவாறு போர்க்களம் வந்த சித்திராங்கதை...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "மணிப்புரத்தின் ஆட்சியாளனான பப்ருவாஹனன், தன் தந்தையான அர்ஜுனன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலான பிராமணர்கள் மற்றும் செல்வத்தை முன்னணியில் கொண்டு பணிவுடன் {அர்ஜுனனை வரவேற்பதற்காக} வெளியே புறப்பட்டுச் சென்றான்.(1) எனினும், க்ஷத்திரியக் கடமைகளை நினைவுகூர்ந்தவனும், பெரும் நுண்ணறிவைக் கொண்டவனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்}, இவ்வாறு வந்த மணிப்புர ஆட்சியாளனைக் கண்டு, அதை அங்கீகரிக்காமல் இருந்தான்.(2) நீதிமிக்க ஆன்மா கொண்ட பல்குனன் {அர்ஜுனன்}, கோபத்துடன், "இவ்வொழுக்கம் உனக்குத் தகாது. நீ நிச்சயம் க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து விழுந்துவிட்டாய்.(3) யுதிஷ்டிரருடைய வேள்விக் குதிரையின் பாதுகாவலனாக நான் இங்கே வந்துள்ளேன். ஓ! மகனே, உன் நாட்டுக்குள் நான் வந்திருப்பதைக் கண்டும் என்னுடன் ஏன் நீ போரிடாமல் இருக்கிறாய்?(4) ஓ! மூடப் புத்தி கொண்டவனே, உனக்கு ஐயோ!, க்ஷத்திரியக் கடமைகளில் இருந்து வீழ்ந்துவிட்ட உனக்கு ஐயோ!. உன்னுடன் போர்புரிவதற்காக நான் இங்கு வந்திருந்தாலும், அமைதிநிறைந்தவனாக என்னை வரவேற்கும் உனக்கு ஐயோ!(5) இவ்வாறு அமைதிநிறைந்தவனாக வரவேற்பதன் மூலம் நீ ஒரு பெண்ணைப் போலச் செயல்படுகிறாய். ஓ! இழிந்த புத்தி கொண்டவனே, நான் என் ஆயுதங்களைக் கைவிட்டு வந்திருந்தால்,(6) ஓ! மனிதர்களில் இழிந்தவனே, அப்போது உன்னுடைய இந்த நடத்தை தகுந்ததாக இருந்திருக்கும்" என்றான்.
பாம்பு மன்னனின் மகளான உலூபி, தன் கணவனால் {அர்ஜுனனால்} இவ்வாறு சொல்லப்பட்ட சொற்களை அறிந்து, அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பூமியைத் துளைத்துக் கொண்டு அந்த இடத்திற்கு வந்தாள்.[1] அவள், தலையைத் தொங்கப்போட்டவாறு, முற்றிலும் உற்சாகம் இழந்தவனாக அங்கே நின்று கொண்டிருக்கும் தன் மகனைக் {பப்ருவாஹனனைக்} கண்டாள்.(7,8) ஓ! ஏகாதிபதி, உண்மையில் அந்த இளவரசன், தன்னுடன் போரிட விரும்பும் தன் தந்தையால் மீண்டும் மீண்டும் நிந்திக்கப்பட்டான். அழகான அங்கங்களைக் கொண்டவளும்,(9) பாம்பின் மகளுமான உலூபி, அறம் மற்றும் கடமையை அறிந்த அந்த இளவரசனிடம், அறம் மற்றும் கடமைகளுக்கு இணக்கமான இச்சொற்களில், "பாம்பின் மகளான நான் உனது அன்னையான உலூபி என்பதை அறிவாயாக.(10) ஓ! மகனே, நான் சொல்வதைச் செய்தால், நீ பெரும் தகுதியை {புண்ணியத்தை} ஈட்டுவாய். குரு குலத்தில் முதன்மையானவரும், போரில் தடுக்கப்பட முடியாத வீரருமான உன் தந்தையுடன் போரிடுவாயாக.(11) அப்போது அவன் நிச்சயம் உன்னிடம் நிறைவடைவார்" என்றாள்.
[1] "உலூபி, அர்ஜுனனின் மனைவியருள் ஒருத்தியாவாள். எனவே, அவள் பப்ருவாகனனின் மாற்றாந்தாய் ஆவாள்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
இவ்வாறு மன்னன் பப்ருவாஹனன், தன் (மாற்றந்) தாயால் {உலூபியால்}, தன் தந்தைக்கு எதிராகத் தூண்டப்பட்டான்.(12) இறுதியாக, ஓ! பாரதர்களின் தலைவா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட அவன், தனஞ்சயனுடன் போரிடுவதற்குத் தன் மனத்தைத் தயார் செய்து கொண்டான். பிரகாசமான தன் கவசத்தையும், ஒளிமிக்கத் தன் தலைக்கவசத்தையும் பூட்டிக் கொண்ட அவன்,(13) நூற்றுக்கணக்கான அம்பறாத்தூணிகள் ஆயத்தமாக இருந்த ஒரு சிறந்த தேரில் ஏறினான். அந்தத் தேரானது, போருக்குத் தேவையானவற்றுடனும், மனோவேகம் கொண்ட குதிரைகள் பூட்டப்பட்டும் இருந்தது.(14) அது சிறந்த சக்கரங்களுடனும், பலமிக்க உபஷ்கரங்களுடனும் இருந்தது. அனைத்து வகைப் பொன்னாபரணங்களாலும் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. அழகிய இளவரசனான பப்ருவாஹனன், பொன்னாலான தங்கச் சின்னம் பொறிக்கப்பட்டதும்[2], மிக அழகிய வடிவில் அலங்கரிக்கப்பட்டிருந்ததுமான தன் கொடிக்கம்பத்தை உயத்திக் கொண்டு, தன் தந்தையை எதிர்த்துப் போரிடச் சென்றான்.(15)
[2] கும்பகோணம் பதிப்பில், "அழகு பொருந்தின பப்ருவாஹனனென்னும் அந்த அரசன் பொற்கவசத்தையும், ஒளியுள்ள தலைப்பாகையையும் அணிந்து அநேக பாணப் பெட்டிகள் நிறைந்ததும், எல்லா ஸாமக்ரிகளுமுள்ளதும் மனம் போன்ற வேகமுள்ள குதிரைகள் பூட்டியதும், சக்ரமுதலான அங்கங்களுள்ளதும், பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான ரதத்திலேறி, மிகவும் பூஜிக்கப்பட்டதும், ஸுவர்ணமயமுமான அன்னக் கொடியை உயர்த்தி நிறுத்தி அர்ஜுனனை நோக்கிச் சென்றான்" என்றிருக்கிறது. அன்னக் கொடி என்பதன் அடிக்குறிப்பில், "சிங்கக் கொடி என்பது வேறு பாடம்" என்றிருக்கிறது.
அந்த வீர இளவரசன் {பப்ருவாஹனன்}, பார்த்தனால் பாதுகாக்கப்படும் வேள்விக் குதிரையிடம் வந்து, குதிரை சாத்திரத்தை நன்கறிந்த மனிதர்களால் அதைக் கைப்பற்றச் செய்தான்.(16) குதிரை கைப்பற்றப்பட்டதைக் கண்ட தனஞ்சயன் மகிழ்ச்சியால் நிறைந்தான். பூமியில் நின்று கொண்டிருந்த அந்த வீரன், தேரில் முன்னேறி வரும் தன் மகனைத் தடுக்கத் தொடங்கினான்.(17) அந்த மன்னன் {பப்ருவாகனன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பானவையும், கூர்த்தீட்டப்பட்ட முனைகளைக் கொண்டவையுமான கணைகளை அந்த வீரன் {அர்ஜுனன்} மீது மீண்டும் மீண்டும் மழையாகப் பொழிந்தான்.(18) தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடந்த போர் ஒப்பற்றதாக இருந்தது. பழங்காலத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் நடந்த போருக்கு ஒப்பானதாக அஃது இருந்தது. அவர்களில் ஒவ்வொருவனும், மற்றவனை எதிராளியாக அடைந்ததில் நிறைவடைந்தான்.(19) பப்ருவாஹனன், சிரித்துக் கொண்டே, மனிதர்களில் முதன்மையானவனும், கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவனுமான அர்ஜுனனின் தோளை {தோள்பூட்டில்} நேரான ஒரு கணையால் {பதிவான கணுக்களுள்ள பாணத்தால்} துளைத்தான்.(20)
இறகுகளுடன் கூடிய அந்தக் கணை, எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்பைப் போல அர்ஜுனனின் உடலுக்குள் ஊடுருவியது. குந்தியின் மகனைத் {அர்ஜுனனைத்} துளைத்துச் சென்ற அக்கணை பூமிக்குள் ஆழமாகச் சென்றது.(21) கடும் வலியை உணர்ந்த நுண்ணறிவுமிக்கத் தனஞ்சயன், தன் சிறந்த வில்லால் தன்னைத் தாங்கிக் கொண்டு சற்றே ஓய்வெடுத்தான். தன் தெய்வீக சக்தியைப் பயன்படுத்தி நின்று கொண்டிருந்த அவன், வெளிப்புறத் தோற்றத்தில் உயிரிழந்த ஒருவனைப் போலத் தெரிந்தான்[3].(22) நினைவு மீண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவன், தன் மகனை உயர்வாகப் புகழ்ந்தான். பெருங்காந்தி கொண்டவனான அந்தச் சக்ரனின் மகன் {அர்ஜுனன்},(23) "ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, நன்று, ஓ! சித்ராங்கதையின் மைந்தனே, நன்று. ஓ! மகனே, உனக்குத் தகுந்த இந்த அருஞ்செயலைக் கண்டு நான் உயர்வான நிறைவடைகிறேன்.(24) ஓ! மகனே, நான் இப்போது உன் மீது இக்கணைகளை ஏவப் போகிறேன். (ஓடாமல்) போரிட நிற்பாயாக" என்றான். பகைவரைக் கொல்பவனான அவன், இச்சொற்களைச் சொல்லிவிட்டு, அந்த இளவரசன் மீது கணைமாரியைப் பொழிந்தான்.(25)
[3] கும்பகோணம் பதிப்பில், "மிக்க வேதனையுள்ளவனும், புத்திசாலியுமான அந்த அர்ஜுனன் உத்தமமான வில்லைப் பிடித்துக் கொண்டு திவ்யமான தேஜஸில் பிரவேசித்து மரித்தவன் போலிருந்தான்" என்றிருக்கிறது. திவ்யமான தேஜஸ் என்பதன் அடிக்குறிப்பில், "ஆத்மா உள்ளே அடங்கியிருந்ததென்பது" என்றிருக்கிறது.
எனினும், மன்னன் பப்ருவாகனன், {அர்ஜுனனின்} காண்டீவத்தில் இருந்து ஏவப்பட்டவையும், காந்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையுமான அந்த நாராசங்கள் அனைத்தையும் தன் பல்லங்களைக் கொண்டு இரண்டாகவும், மூன்றாகவும் வெட்டி வீழ்த்தினான்.(26) அப்போது தங்கப் பனை மரத்திற்கு ஒப்பாகவும் பொன்மயமாகவும் அந்த மன்னனின் தேரில் இருந்த கொடிமரமானது, சிறந்த கணைகள் சிலவற்றைக் கொண்டு பார்த்தனால் வெட்டி வீழ்த்தப்பட்டது.(27) சிரித்துக் கொண்டே இருந்த பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, அடுத்ததாக, பெரிய அளவைக் கொண்டவையும், பெரும் வேகம் கொண்டவையுமான மன்னனின் {பப்ருவாகனனின்} குதிரைகளை கொன்றான்.(28) இதனால் சினத்தால் தூண்டப்பட்ட மன்னன், தன் தேரில் இருந்து இறங்கி, தன் தந்தையுடன் தரையில் நின்று போரிட்டான்.(29) பிருதையின் மகன்களில் முதன்மையானவனும், வஜ்ரதாரியின் மகனுமான அவன் {அர்ஜுனன்}, தன் மகனின் ஆற்றலில் நிறைவடைந்தவனாக அவனைப் பெரிதும் பீடிக்கத் தொடங்கினான்[4].(30)
[4] கும்பகோணம் பதிப்பில், "பார்த்தர்களுள் சிறந்தவனும், இந்திரனுடைய குமாரனுமான அர்ஜுனன், புத்திரனுடைய பராக்கிரமத்தால் மிகமகிழ்ந்து புத்திரனை அதிகமாகத் துன்பப்படுத்தவில்லை" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "பாண்டவர்களில் காளையானவன் தன் மகனின் வீரத்தில் மகிழ்ச்சியடைந்தான். அந்த வஜ்ரதாரியின் மகன், தன் மகனை அதிகம் துன்புறுத்த விரும்பவில்லை" என்றிருக்கிறது.
வலிமைமிக்கப் பப்ருவாஹனன், தன் தந்தையால் இதற்கு மேலும் தன்னை எதிர் கொள்ள முடியாது என்று நினைத்துக் கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான கணைகள் பலவற்றால் அவனை மீண்டும் பீடித்தான்[5].(31) மேலும் அவன், தன் சிறுபிள்ளைத்தனத்தால் கூராக்கப்பட்டதும், சிறந்த சிறகுகளைக் கொண்டதுமான ஒரு கணையைக் கொண்டு தனது தந்தையின் மார்பில் மிகத் திடமாகத் துளைத்தான்.(32) ஓ! மன்னா, பாண்டு மகனின் உடலுக்குள் ஊடுருவிய அந்தக் கணை, அவனது உயிர்நிலையை அடைந்து அவனுக்குப் பெரும் வலியை உண்டாக்கியது. குருக்களைத் திளைக்கச் செய்பவனான தனஞ்சயன், தன் மகனால் ஆழத் துளைக்கப்பட்டு,(33) ஓ மன்னா {ஜனமேஜயா}, மயக்கமடைந்து பூமியில் விழுந்தான்.
[5] கும்பகோணம் பதிப்பில், "அடிக்கப்படுகின்றவனும், பலமுள்ளவனுமான அந்தப் பப்ருவாஹனன் மறுபடியும் ஸர்ப்பம் போன்ற வடிவமுள்ள பாணங்களால் பிதாவான அர்ஜுனனை எதிர்முகமாக அடித்தான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், " எனினும், பப்ருவாகனன் தன் தந்தை அதற்குமேலும் போரிட விரும்பவில்லை என்று நினைத்தான். அந்தப் பலமிக்கவன், கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்ற தன் கணைகளால் மீண்டும் அவனைத் தாக்கினான்" என்றிருக்கிறது.
குருக்களின் சுமைகளைச் சுமப்பவனான அந்த வீரன் {அர்ஜுனன்} விழுந்தபோது, சித்ராங்கதையின் மகனும் {பப்ருவாஹனனும்} தன் உணர்வுகளை இழந்தான். போரில் பெரும் முயற்சிகளைச் செய்ததாலும், தன் தந்தை கொல்லப்பட்டதைக் கண்ட துயரத்தாலும் அவன் மயங்கி விழுந்தான்.(34,35) அவனும் அர்ஜுனனின் கணை மேகங்களால் ஆழத் துளைக்கப்பட்டிருந்தான். எனவே, அவன் போரின் முன்னணியில் பூமியைத் தழுவியபடி கீழே விழுந்து கிடந்தான்.(36) கணவன் கொல்லப்பட்டான் என்றும் தன் மகன் பூமியில் விழுந்து கிடக்கிறான் என்பதையும் கேள்விப்பட்ட சித்ராங்கதை, மனத்தில் பெருங்கலக்கத்துடன் போர்க்களத்திற்கு வந்தாள்.(37) கவலையில் எரியும் இதயத்துடன் மிகப் பரிதாபகரமாக அழுது கொண்டும், நடுங்கியவாறும் வந்த மணிப்புர ஆட்சியாளனின் {பப்ருவாகனனின்} அன்னை {சித்ராங்கதை}, தன் கணவன் {அர்ஜுனன்} கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்டாள்" {என்றார் வைசம்பாயனர்}.(38)
அஸ்வமேதபர்வம் பகுதி – 79ல் உள்ள சுலோகங்கள் : 38
ஆங்கிலத்தில் | In English |