The heir of Jarasandha! | Aswamedha-Parva-Section-82 | Mahabharata In Tamil
(அநுகீதா பர்வம் - 67)
பதிவின் சுருக்கம் : ஜராசந்தன் பேரனும், சகாதேவன் மகனுமான மேகசந்தியை அர்ஜுனன் வென்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "பெருங்கடலால் சூழப்பட்ட மொத்த பூமியிலும் திரிந்த அந்த (வேள்விக்) குதிரை, நின்று, யானையின் பெயரால் அழைக்கப்படும் நகரத்தை {ஹஸ்தினாபுரத்தை} நோக்கித் தன் முகத்தைத் திருப்பியது. அந்தக் குதிரையைப் பின்தொடர்ந்து சென்ற கிரீடம் தரித்த அர்ஜுனனும், குரு தலைநகரத்தை நோக்கித் தன் முகத்தைத் திருப்பினான். விருப்பப்படி திரும்பிய அந்தக் குதிரை ராஜகிருஹ நகருக்கு வந்தது.(2) ஓ! ஏகாதிபதி, அவன் தன் நாட்டுக்குள் வந்திருப்பதைக் கண்டவனும் க்ஷத்திரியக் கடமைகளை நோற்பவனுமான சகாதேவன் மகன் {ஜராசந்தனின் பேரனான மேகசந்தி}அவனைப் போருக்கு அறைகூவி அழைத்தான்.(3) தன் தேரில் ஏறி, வில் மற்றும் கணைகளையும், தோலாலான கையுறையும் தரித்துக் கொண்டு தன் நகரத்தைவிட்டு வெளியே வந்த மேகசந்தி, தரையில் நின்று கொண்டிருந்த தனஞ்சயனை நோக்கி விரைந்தான்.(4)
ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெருஞ்சக்தி கொண்ட மேகசந்தி, தனஞ்சயனை அணுகி, எந்தத் திறனும் இல்லாத சிறுபிள்ளைத்தனத்தின் மூலம் இந்தச் சொற்களைச் சொன்னான்.(5) {மேகசந்தி அர்ஜுனனிடம்}, "ஓ! பாரதா, உம்முடைய குதிரை பெண்களால் மட்டுமே பாதுகாக்கப்பட்டுச் செல்வதைப் போலத் தெரிகிறது. நான் இந்தக் குதிரையை அபகரித்துச் செல்வேன். அதை விடுவிக்க நீர் முனைவீராக.(6) என் தந்தைமார் உமக்குப் போரில் விருந்தோம்பல் கடமைகளைப் போதிக்க வில்லையெனினும் நான் அவற்றை உமக்குக் கற்பிப்பேன். நான் உம்மைத் தாக்குவேன், நீர் என்னைத் தாக்குவீராக" என்றான்.(7)
இவ்வாறு சொல்லப்பட்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, சிரித்துக் கொண்டே அவனிடம், "எனக்கு இடையூறு செய்பவனைத் தடுக்க வேண்டும் என்ற நோன்பை என் அண்ணன் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறார். ஓ! மன்னா, இதை நீ நிச்சயம் அறிவாய். உன் சக்திக்குச் சிறந்த வகையில் என்னைத் தாக்குவாயாக. எனக்குக் கோபமேதும் இல்லை" என்றான்.(8,9)
இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, ஆயிரங்கண் இந்திரன் கனத்த மழையைப் பொழிவதைப் போலத் தன் கணைகளைப் பொழிந்து பாண்டுவின் மகனை முதலில் தாக்கினான்.(10) ஓ! பாரதக் குலத் தலைவா {ஜனமேஜயா}, அப்போது வீரனான காண்டீவதாரி, தன் சிறந்த வில்லில் இருந்து ஏவப்பட்ட கணைகளைக் கொண்டு, தன் எதிராளியால் கவனமாக ஏவப்பட்ட கணைகள் அனைத்தையும் கலங்கடித்தான்.(11) இவ்வாறு அந்தக் கணை மேகங்களைக் கலங்கடித்தவனும், குரங்குக் கொடியைக் கொண்டவனுமான அந்த வீரன், நெருப்பு வாயுடன் கூடிய பாம்புகளுக்கு ஒப்பான சுடமிக்கக் கணைகள் எண்ணற்றவற்றைத் தன் எதிரியின் மீது ஏவினான்.(12) அவன் {அர்ஜுனன்} தன் எதிரி மற்றும் அவனது தேரோட்டியின் உடலை மட்டும் விட்டுவிட்டு அவனுடைய கொடி, கொடிக்கம்பம், தேர், துருவங்கள், நுகம் மற்றும் குதிரைகளின் மீது இந்தக் கணைகளை ஏவினான்.(13) இடது கையாலும் (வலது கையாலும்) வில்லைப் பயன்படுத்தவல்ல பார்த்தன், மகத இளவரசனின் உடலைத் துளைக்காமல் விட்டதால், அவன் தன் ஆற்றலின் மூலமே தன் உடல் பாதுகாக்கப்படுவதாகக் கருதி, பார்த்தன் மீது கணைகள் பலவற்றை ஏவினான்.(14)
மகத இளவரசனால் ஆழத் துளைக்கப்பட்ட காண்டீவதாரி, வசந்த காலத்தில் மலரும் பலாசத்தை {புரசு மரத்தைப்} போல ஒளிர்ந்தான்.(15) அர்ஜுனனுக்கு மகத இளவரசனைக் கொல்லும் விருப்பமேதும் இல்லை. அவன் பாண்டுவின் மகனைத் தாக்கினாலும், இதன் காரணமாகவே அந்த முதன்மையான வீரனின் முன்னால் எஞ்சியிருப்பதில் அவனால் வெல்ல முடிந்தது.(16) கோபமடைந்த தனஞ்சயன் பெரும் பலத்துடன் தன் வில்லை வளைத்துத் தன் எதிராளியின் குதிரைகளைக் கொன்று அவனுடைய தேரோட்டியின் தலையையும் கொய்தான்.(17) அவன் ஒரு க்ஷுரத்தைக் கொண்டு, அழகானதும், பெரியதுமான மேகசந்தியின் வில்லையும், அவனுடைய தோல் கையுறையையும் வெட்டி வீழ்த்தினான். அதன் பிறகு அவனது கொடியையும், கொடிக்கம்பத்தையும் வெட்டி வீழ்த்தி, அவற்றை விழச்செய்தான்.(18) பெரிதும் பீடிக்கப்பட்ட அந்த மகத இளவரசன், தன் குதிரைகள், வில் மற்றும் சாரதியை இழந்து, ஒரு கதாயுதத்தை எடுத்துக் கொண்டு, குந்தியின் மகனை நோக்கிப் பெரும் வேகத்துடன் விரைந்தான்.(19) அப்போது அர்ஜுனன், பிரகாசமான பொன்னலானதும், முன்னேறிவரும் தன் பகைவனுக்குரியதுமான அந்தக் கதாயுதத்தைக் கழுகின் இறகுகளுடன் கூடிய கணைகள் பலவற்றைக் கொண்டு துண்டுகளாக வெட்டினான்.(20) இவ்வாறு துண்டுகளாக வெட்டப்பட்டதும், ரத்தினப்பூட்டுகள் சிதறியதுமான அந்தக் கதாயுதம், யாரோ ஒருவனால் வீசியெறியப்பட்ட ஆதரவற்ற பெண் பாம்பைப் போலப் பூமியில் விழுந்தது.(21)
தன் பகைவன், தனது தேர், வில், கதாயுதம் ஆகியவற்றை இழந்தபோது, நுண்ணறிவுமிக்கவனும், போர்வீரர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அவனைத் தாக்க விரும்பவில்லை.(22) குரங்குக் கொடி கொண்ட அந்த வீரன், உற்சாகமிழந்திருந்தவனும், க்ஷத்திரியக் கடமைகளைப் பின்பற்றியவனுமான தன் பகைவனிடம், இந்தச் சொற்களில்,(23) "ஓ! மகனே, க்ஷத்திரியக் கடமைகளில் போதுமான பற்றை நீ வெளிப்படுத்தினாய். இப்போது செல்வாயாக. ஓ! மன்னா, வயதால் மிக இளையவனாக இருப்பினும் போரில் நீ சாதித்த அருஞ்செயல்கள் பெரியனவாகும்.(24) என்னை எதிர்க்கும் மன்னர்கள் கொல்லப்படக்கூடாது என்பது நான் யுதிஷ்டிரரிடம் இருந்து பெற்ற ஆணையாகும். ஓ! ஏகாதிபதி, போரில் நீ எனக்குக் குற்றமிழைத்திருந்தாலும் அதன் காரணமாகவே நீ இன்னும் உயிரோடு இருக்கிறாய்" என்றான்.(25)
இவ்வாறு சொல்லப்பட்ட மகத ஆட்சியாளன் {மேகசந்தி}, வெல்லப்பட்டவானகவும், தப்பவிடப்பட்டவனாகவும் தன்னைக் கருதினான். அர்ஜுனனை வழிபடுவது கடமையென நினைத்த அவன், கூப்பிய கரங்களுடன் முறையாக அவனை அணுகி வழிபட்டான். மேலும் அவன், "நான் உன்னால் வெல்லப்பட்டேன். நீ அருளப்பட்டிருப்பாயாக. நான் போரைத் தொடரத் துணியேன். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக. நீ கேட்பது ஏற்கனவே நிறைவேறிவிட்டதாகக் கருதுவாயாக" என்றான்.(27)
அவனை மீண்டும் தேற்றி அர்ஜுனன், மீண்டும் அவனிடம், "சைத்ரமாத முழு நிலவில் நடைபெற இருக்கும் எங்கள் மன்னனின் குதிரை வேள்விக்கு நீ வர வேண்டும்" என்றான்.(28) அவனால் இவ்வாறு சொல்லப்பட்ட சகாதேவன் மகன் {ஜராசந்தன் பேரனான மேகசந்தி}, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி, அந்தக் குதிரையையும், போர்வீரர்களில் முதன்மையான பல்குனனையும் முறையாக வழிபட்டான்.(29) அழகிய பிடரியுடன் கூடிய அந்த வேள்விக் குதிரை, கடற்கரையோரமாகவே சென்று, வங்கர்கள், புண்ட்ரர்கள் மற்றும் கோசலர்களின் நாட்டுகளுக்குச் சென்றது.(30) அந்த நாடுகளில், தனஞ்சயன் தன் காண்டீவத்தைக் கொண்டு எண்ணற்ற மிலேச்ச படைகளை ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்தினான்" {என்றார் வைசம்பாயனர்}.(31)
அஸ்வமேதபர்வம் பகுதி – 82ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |