Reconcilation! | Asramavasika-Parva-Section-33 | Mahabharata In Tamil
(புத்ரதர்சன பர்வம் - 5)
பதிவின் சுருக்கம் : போரில் இறந்தவர்களும், உயிரோடு இருந்தவர்களும் ஒருவரையொருவர் சந்தித்து அந்த இரவு முழுவதையும் விளையாட்டாகக் கழித்தது; இந்தப் பர்வத்தைக் கேட்பதாலும், சொல்வதாலும் உண்டாகும் பலன்கள்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அப்போது மனிதர்களில் முதன்மையானவர்களும், கோபமும், பொறாமையும் அற்றவர்களும், பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மையடைந்தவர்களுமான அவர்கள், மறுபிறப்பாள முனிவர்களால் விதிக்கப்பட்ட உயர்ந்த, மங்கல விதிகளுக்கு இணக்கமான வகையில் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் இருந்த அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் திரியும் தேவர்களைப் போலத் தெரிந்தனர்.(1,2) ஓ! மன்னா {ஜனமேஜயா}, மகன் தன் தந்தையையோ, தாயையோ சந்தித்தான், மனைவிமார் தங்கள் கணவர்களையும், சகோதரன், தன் சகோதரனையும், நண்பன் தன் நண்பனையும் சந்தித்தனர்.(3) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த பாண்டவர்கள், பெரும் வில்லாளியான கர்ணனையும், சுபத்திரையின் மகனையும் {அபிமன்யுவையும்}, திரௌபதியின் மகன்களையும் சந்தித்தனர்.(4) ஓ! ஏகாதிபதி, பாண்டுவின் மகன்கள் மகிழ்ச்சிமிக்க இதயங்களுடன் கர்ணனை அணுகி, அவனோடு இணக்கம் கொண்டனர் {சமரசமாகினர்}.(5)
ஓ! பாரதக் குலத்தின் தலைவா {ஜனமேஜயா}, அந்தப் போர்வீரர்கள் அனைவரும் அந்தப் பெருந்தவசியின் அருளால் ஒருவரையொருவர் சந்தித்துத் தங்களுக்குள் இணக்கமாகினர்.(6) பகைமை அனைத்தையும் கைவிட்ட அவர்கள் நட்பு மற்றும் அமைதியை நிறுவினர். இவ்வாறே மனிதர்களில் முதன்மையானவர்களான அந்தக் கௌரவர்கள் அனைவரும், பிற மன்னர்களும், குருக்களுடனும், பிள்ளைகளுடன் கூடிய தங்கள் உற்றார் உறவினருடனும் சேர்ந்தனர். அந்த இரவு முழுவதையும் பெரும் மகிழ்ச்சியில் கடத்தினர்.(7,8) உண்மையில், அந்த க்ஷத்திரிய வீரர்கள் தாங்கள் உணர்ந்த மகிழ்ச்சியின் விளைவால் அந்த இடத்தைச் சொர்க்கமாகவே கருதினர். ஓ! ஏகாதிபதி, அந்தப் போர் வீரர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்ட அந்த இரவில் துன்பமோ, அச்சமோ, ஐயவுணர்வோ, நிறைவின்மையோ அங்கே இல்லை. தந்தைமார், சகோதரர்கள், கணவர்கள், மகன்கள் ஆகியோரைச் சந்தித்த(9,10) பெண்கள் தங்கள் துயர் அனைத்தையும் கைவிட்டு, மகிழ்ச்சியாரவாரத்தை அடைந்தனர்.
இவ்வாறு ஓரிரவு ஒருவரோடு ஒருவர் விளையாடிய அந்த வீரர்கள், பெண்கள்,(11) ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு, ஒருவரிடமொருவர் விடைபெற்றுக் கொண்டு தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குத் திரும்பிச் சென்றனர். உண்மையில் அந்த முதன்மையான தவசி {வியாசர்} போர்வீரர்களின் அந்தக் கூட்டத்திற்கு விடைகொடுத்தனுப்பினார்.(12) (உயிரோடு இருந்த) அவர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கண்ணிமைக்கும் காலத்திற்குள் அந்தப் பெருங்கூட்டம் மறைந்து போனது. அந்த உயர் ஆன்ம மனிதர்கள், தங்கள் தேர்களுடனும், கொடிமரங்களுடனும் புனித ஆறான பாகீரதிக்குள் மூழ்கி, தங்கள் தங்களுக்குரிய வசிப்பிடங்களுக்குச் சென்றனர். சிலர் தேவலோகத்திற்கும், சிலர் பிரம்மலோகத்திற்கும்,(13,14) சிலர் வருண லோகத்திற்கும், சிலர் குபேரலோகத்திற்கும் சென்றனர். அந்த மன்னர்களில் சிலர் சூரியலோகத்திற்குச் சென்றனர்.(15)
ராட்சசர்கள் மற்றும் பிசாசங்களுக்கு மத்தியில் சிலர் உத்தரக் குருக்களின் நாட்டுக்குச் சென்றனர். இனிமை நிறைந்த மனத்துடன் திரிந்த வேறு சிலர் தேவர்களின் தோழமையை அடைந்தனர்.(16) இவ்வாறே அந்த உயர் ஆன்ம மனிதர்கள் அனைவரும் தங்கள் வாகனங்கள், விலங்குகள் மற்றும் தங்கள் தொண்டர்களுடன் மறைந்தனர். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு, அந்தப் புனித ஓடையின் நீருக்குள் நின்றிருந்தவரும், பேரறமும், சக்தியும் கொண்டவரும், குருக்களுக்கு நன்மை செய்பவரும், பெருந்தவசியுமான வியாசர், விதவைகளாக இருந்த க்ஷத்திரியப் பெண்மணிகளிடம் இந்தச் சொற்களில்,(17,18) "இந்த முதன்மையான பெண்களில், தங்கள் கணவர்கள் அடைந்த உலகத்தை அடைய விரும்புகிறவர்கள், சோம்பலனைத்தையும் கைவிட்டு, புனிதமான பாகீரதிக்குள் விரைவாக மூழ்குவீராக" என்றார்.(19)
அவருடைய இந்தச் சொற்களைக் கேட்ட முதன்மையான பெண்கள், அவற்றில் நம்பிக்கை கொண்டு, தங்கள் மாமனாரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு பாகீரதியின் நீருக்குள் மூழ்கினர்.(20) மனித உடல்களில் இருந்து விடுபட்ட அந்தக் கற்புடைய பெண்கள், ஓ! மன்னா, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குத் தங்கள் கணவர்களுடன் சென்றனர்.(21) இவ்வாறே அறவொழுக்கம் கொண்டவர்களும், கணவர்களிடம் அர்ப்பணிப்பு கொண்டவர்களுமான பெண்கள், பாகீரதியின் நீருக்குள் நுழைந்து, மனிதக்குடியிருப்பில் இருந்து விடுபட்டு, தங்கள் கணவர்களால் அடையப்பட்ட உலகங்களுக்குச் சென்று தங்கள் கணவர்களின் துணையை அடைந்தனர்.(22) தெய்வீக வடிவங்களுடன் கூடியவர்களாக, தெய்வீக ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவர்களாக, தெய்வீக உடுப்புகளையும், மலர்மாலைகளையும் அணிந்து கொண்டு, தங்கள் கணவர்கள் அடைந்த வசிப்பிடங்களான அந்த உலகங்களுக்குச் சென்றனர்.(23) சிறந்த ஒழுக்கத்தையும், பல நற்குணங்களையும் கொண்ட அவர்களது கவலைகள் அனைத்தும் களையப்பட்டு, தங்களுக்கு உரிமையானவையும், அனைத்தையும் கொண்டவையுமான அந்த இன்பலோகங்களுக்குச் சிறந்த தேர்களில் செல்பவர்களாக அவர்கள் காணப்பட்டனர்.(24) பக்திக்கடமைகளில் அர்ப்பணிப்புடைய வியாசர், அந்நேரத்தில் வரங்களை அளிப்பவராக மாறி, அங்கே கூடியிருந்த மனிதர்கள் அனைவரின் விருப்பங்களும் கனியும் வரத்தை அளித்தார்.(25) பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள், இறந்தவர்களான புனிதர்களுக்கும், உயிருடன் கூடிய மனிதர்களுக்கும் இடையில் நடந்த இந்தச் சந்திப்பைக் கேள்விப் பட்டு பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர்.(26)
இந்தக் கதையை முறையாகக் கேட்கும் மனிதன், தனக்குப் பிடித்தமான அனைத்தையும் அடைவான். உண்மையில், இம்மையிலும், மறுமையிலும் உள்ள ஏற்புடைய பொருட்கள் அனைத்தையும் அவன் அடைவான்.(27) கல்வி கற்றவனும், அறிவியல் அறிந்தவனும், அறவோரில் முதன்மையானவனுமான எந்த மனிதன், பிறர் கேட்கும்படி இந்தக் கதையைச் சொல்வானோ அவன் இம்மையில் பெரும்புகழையும், மறுமையில் மங்கல கதியையும், உற்றார் உறவினர் சேர்க்கையையும், விரும்பத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடைவான். அத்தகைய மனிதன் தன் வாழ்வாதாரத்திற்காகத் துன்பம் நிறைந்த செயல்களில் ஈடுபடாமல், வாழ்வில் அனைத்து வகை மங்கலப் பொருட்களையும் அடைவான். வேத கல்வி மற்றும் தவங்களில் அர்ப்பணிப்புள்ளவனும், பிறர் கேட்க இந்தக் கதையைச் சொல்பவனுமான மனிதன், அறுவடை செய்யப்போகும் வெகுமதிகள் இவையே.(28,29) நல்லொழுக்கம் கொண்டவர்களும், தற்கட்டுப்பாட்டில் அர்ப்பணிப்புள்ளவர்களும், தாங்கள் அளிக்கும் கொடைகளின் மூலம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் தூய்மை அடைந்தவர்களும், நேர்மை கொண்டவர்களும், அமைதியான ஆன்மாவைக் கொண்டவர்களும், பொய்மையில் இருந்தும், பிறருக்கும் தீங்கிழைக்கும் விருப்பத்தில் இருந்தும் விடுபட்டவர்களும், நம்பிக்கையுடன் கூடியவர்களும், சாத்திரங்களையும், நுண்ணறிவையும் நம்புகிறவர்களுமான மனிதர்கள், அற்புதம் நிறைந்த இந்தப் பர்வத்தைக் கேட்டு மறுமையில் நிச்சயம் உயர்ந்த கதியை அடைவார்கள்" {என்றார் வைசம்பாயனர்}".(30,31)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 33ல் உள்ள சுலோகங்கள் : 31
ஆங்கிலத்தில் | In English |