The destruction of Yadhavas! | Mausala-Parva-Section-3 | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : துவாரகை மக்கள் கண்ட தீய கனவுகள்; கிருஷ்ணனின் ஆணைப்படி பிரபாஸம் சென்றது; கிருதவர்மனைக் கொன்ற ஸாத்யகி; பலரால் கொல்லப்பட்ட சாத்யகியும், பிரத்யும்னனும்; கிருஷ்ணன் செய்த படுகொலை; உலக்கைப் பொடிகளால் உண்டான புற்களால் இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொன்றது...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தக் காலத்தில், விருஷ்ணி பெண்கள், கரிய நிறத்தவளும், வெண்பற்கள் கொண்டவளுமான ஒரு மங்கை, தங்கள் வசிப்பிடத்திற்குள் நுழைந்து, உரக்க நகைத்து, தங்கள் மணிக்கட்டுகளிலிருந்து மங்கலக் கயிறுகளைப் பறித்துக் கொண்டு துவாரகை முழுவதும் ஓடுவதைப் போல ஒவ்வொரு நாள் இரவும் கனவு கண்டனர்.(1) ஆண்களோ, பயங்கரக் கழுகுகள் தங்கள் இல்லங்களுக்கும், நெருப்பறைகளுக்குள்ளும் நுழைந்து தங்களை எடுத்து அவற்றின் கழுத்தில் அணிந்து கொள்வதைப் போலக் கனவு கண்டனர்.(2) ஆபரணங்கள், குடைகள், கொடிமரங்கள், கவசங்கள் ஆகியவற்றைக் கொடிய ராட்சசர்கள் எடுத்துக் கொள்வதும் காணப்பட்டது.(3) அக்னியால் கொடுக்கப்பட்டதும், இரும்பாலானதும், கடினமான வஜ்ரத்தால் அமைந்த குழிசியை {நடு குழியைக்} கொண்டதுமான கிருஷ்ணனின் சக்கரமானது, விருஷ்ணிகள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆகாயத்தில் உயர்ந்தது.(4)
சூரியப் பிரகாசம் கொண்டதும், முறையாக ஆயத்தம் செய்யப்பட்டதுமான வாசுதேவனின் சிறந்த தேரானது, தாருகன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தன்னுடன் பூட்டப்பட்டிருந்த குதிரைகளால் இழுத்துச் செல்லப்பட்டது. (சைப்யம், சுக்ரீவம், மேகபுஷ்பம், வலாகம் என்ற பெயர்களையுடையவையும்) எண்ணிக்கையில் நான்கானவையும், எண்ணத்தின் வேகம் கொண்டவையுமான அந்த முதன்மையான குதிரைகள், பெருங்கடலின் பரப்பின் வழியே தேரை இழுத்துச் சென்று தப்பி ஓடின[1].(5) கருட சின்னத்தையும், பனைமரச் சின்னத்தையும் கொண்டவையான கிருஷ்ணன் மற்றும் பலதேவனுடைய தேர்களில் உள்ளவையும், அவ்விரு வீரர்களால் மதிப்புடன் வழிபடப்படுவையுமான இரு பெரும் கொடிமரங்களும், புனித நீர்நிலைக்குப் புனிதப்பயணம் மேற்கொள்ள இருந்த விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் இரவும் பகலும் அழைத்துக் கொண்டிருந்த அப்சரஸ்களால் இழுத்துச் செல்லப்பட்டன.(6) இந்தச் சகுனங்கள் காணப்படவும், கேட்கப்படவும் நேரிட்டப்போது, மனிதர்களில் முதன்மையானவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களுமான விருஷ்ணிகளும், அந்தகர்களும் தங்கள் மொத்த குடும்பங்களுடன் ஏதோவொரு நீர்நிலைக்குப் புனிதப் பயணம் புறப்பட விரும்பினர்.(7) அவர்கள் பல்வேறு வகை உணவுவகைகளையும், பானவகைகளையும், பல்வேறு வகை மது மற்றும் இறைச்சிகளையும் தயாரித்தனர்.(8) அழகில் சுடர்விட்டவையும், கடுஞ்சக்தி கொண்டவையுமான விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களின் துருப்புகள், அந்த நகரத்திலிருந்து தேர்கள், குதிரைகள் மற்றும் யானைகளில் வெளியே புறப்பட்டன.(9) அப்போது தங்கள் மனைவியருடன் பிரபாஸத்திற்குச் சென்ற யாதவர்களில் ஒவ்வொருவரும், தங்களுக்கென ஒதுக்கப்பட்டதும், உணவு மற்றும் பான வகைகள் அபரிமிதமாக இருந்ததுமான (தற்காலிக) வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.(10)
[1] கும்பகோணம் பதிப்பில், "மனம்போன்ற வேகமுள்ளவைகளும், குதிரைகளுள் சிறந்தவைகளுமான அந்த நான்கு குதிரைகளும், தாருகன் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே, ஆயத்தமாக இருப்பதும், திவ்யமானதும், சூரியன் போல விளங்குகின்றதுமான ரதத்தை இழுத்துக் கொண்டு ஸமுத்திரத்துக்கு மேலே சென்றன" என்றிருக்கிறது.
கடற்கரையில் அவர்கள் தங்கள் வசிப்பிடத்தை அமைத்திருப்பதைக் கேள்விப்பட்டவரும், யோகத்தை நன்கறிந்தவரும், மனிதர்களில் ஞானியுமான உத்தவர், அங்கே சென்று அவர்களிடம் (புறப்படுவதற்கான) அனுமதியை பெற்றுக் கொண்டார்.(11) உத்தவர் (உலகில் இருந்து) செல்ல விரும்புவதைக் கண்டும், விருஷ்ணிகளின் அழிவு மிக நெருக்கத்தில் இருப்பதை அறிந்தும் கிருஷ்ணன், அவரைத் தடுக்கும் மனநிலை கொள்ளாமல் அவரை வணங்கினான்.(12) அப்போது விருஷ்ணிகள் மற்றும் அந்தகர்களில் வலிமைமிக்கவர்களும், தங்களுக்கான வேளை வந்தவர்களுமான அந்தத் தேர்வீரர்கள், மொத்த ஆகாயத்தையும் தன் காந்தியால் நிறைத்தபடி பெரும்பயணம் செல்லும் உத்தவரைக் கண்டனர்.(13) விருஷ்ணிகள், உயர் ஆன்ம பிராமணர்களுக்காகச் சமைக்கப்பட்ட உணவை மதுவுடன் கலந்து குரங்குகளுக்குக் கொடுத்தனர்.(14) கடுஞ்சக்தி கொண்ட அந்த வீரர்கள், குடிப்பதையே முக்கிய அம்சமாகக் கொண்ட தங்கள் உயர்ந்த விழாவை பிரபாஸத்தில் தொடங்கினர். நூற்றுக்கணக்கான எக்காளங்களின் முழக்கம் மொத்த களத்திலும் எதிரொலித்தது, தங்கள் தொழிலைச் செய்வதற்காக வந்திருந்தவர்களான நடிகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களால் அது நிறைந்திருந்தது.(15)
கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ராமன் {பலராமன்} கிருதவர்மனுடன் சேர்ந்து குடிக்கத் தொடங்கினான், யுயுதானன் {சாத்யகி}, கதன், பப்ரு ஆகியோரும் அதையே செய்தனர்.(16) அப்போது மதுவால் ஊக்கமடைந்திருந்த யுயுதானன், அந்தச் சபையின் நடுவில் வைத்துக் கிருதவர்மனை கேலி செய்யும் வகையில் அவமதித்து,(17) "ஆயுதந்தரித்த எந்த க்ஷத்திரியன், உறக்கத்தின் அரவணைப்பில் கட்டுண்டவர்களும், அதனால் ஏற்கனவே இறந்தவர்களைப் போன்றவர்களுமான மனிதர்களைக் கொல்வான்? எனவே, ஓ! ஹிருதிகன் மகனே {கிருதவர்மனே}, நீ செய்ததை யாதவர்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்றான்.(18) யுயுதானன் {சாத்யகி} இந்தச் சொற்களைச் சொன்னதும், தேர்வீரர்களில் முதன்மையான பிரத்யும்னன், ஹிருதிகன் மகனிடம் {கிருதவர்மனிடம்} தான் கொண்ட மதிப்பின்மையை வெளிப்படுத்தும் வகையில் அவற்றை {சாத்யகியின் சொற்களை} மெச்சினான்.(19) இதனால் கோபம் மூண்ட கிருதவர்மன், இடது கையால் சாத்யகியைச் சுட்டிக் காட்டியதன் மூலம் அவனை வன்மையாக அவமதித்துச் செய்து, இந்தச் சொற்களைச் சொன்னான்.(20)
{கிருதவர்மன்}, "தன்னைத் தானே வீரன் என்று சொல்லிக் கொள்பவனான நீ, போர்க்களத்தில் (பகை எண்ணங்கள் அனைத்தையும் கைவிட்டு) பிராயத்தில் அமர்ந்திருந்தவனும், கரங்களற்றவனுமான பூரிஸ்ரவஸை கொடூரமாகக் கொன்றதெவ்வாறு?" என்று கேட்டான்.(21)
பகைவீரர்களைக் கொல்பவனான கேசவன் {கிருஷ்ணன்}, அவனுடைய சொற்களைக் கேட்டு, கோபவசப்பட்டவனாக, கிருதவர்மன் மீது தன் கோபப்பார்வையைச் செலுத்தினான்.(22) அப்போது சாத்யகி, மதுசூதனனிடம் {கிருஷ்ணனிடம்}, கொண்டாடப்படும் சியமந்தகம் என்ற ரத்தினத்தை {சியமந்தக மணியை} சத்ரஜித்திடம் இருந்து அபகரிப்பதற்காக, கிருதவர்மன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதைத் தெரிவித்தான்.(23) இந்தக் கதையைக் கேட்ட சத்தியபாமை, கோபவசப்பட்டவளாகக் கேசவனை அணுகி, அவனது மடியில் அமர்ந்து கொண்டு கண்ணீர் சிந்தியபடியே (கிருதவர்மன் மீது) அவனது கோபத்தை அதிகரித்தாள்.(24)
அப்போது சினத்துடன் எழுந்த சாத்யகி, "உறங்கிக் கொண்டிருந்தவர்களான திரௌபதியின் ஐந்து மகன்கள், திருஷ்டத்யும்னன், சிகண்டி ஆகியோரைத் துரோணரின் மகனுடைய {அஸ்வத்தாமனின்} துணையுடன் கொன்ற இவனை {கிருதவர்மனை}}அவர்களைப் பின்பற்றிச் செல்லச் செய்வேன் என வாய்மையின் பேரில் நான் ஆணையிடுகிறேன். ஓ! கொடியிடையாளே {சத்யபாமையே}, கிருதவர்மனின் வாழ்வு மற்றும் புகழுக்கான காலம் முடிவுக்கு வந்துவிட்டது" என்றான்.(25-27)
இந்தச் சொற்களைச் சொன்ன சாத்யகி, கிருதவர்மனை நோக்கி விரைந்து, கேசவன் {கிருஷ்ணன்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே வாளால் அவனது தலையைத் துண்டித்தான்.(28) அந்த அருஞ்செயலைச் செய்த யுயுதானன் {சாத்யகி}, அங்கே இருந்த பிறரையும் தாக்கத் தொடங்கினான். மேலும் தீங்கு செய்வதில் இருந்து அவனைத் தடுப்பதற்காக ரிஷிகேசன் {கிருஷ்ணன்} ஓடினான்.(29) எனினும், ஓ! ஏகாதிபதி, அந்த நேரத்தில் வந்திருந்த கால முரணால் தூண்டப்பட்ட போஜர்கள், அந்தகர்களில் அனைவரும் கூடி சிநியின் மகனை {சாத்யகியைச்} சூழ்ந்து கொண்டனர்.(30) வலிமையும், சக்தியும் கொண்ட ஜனார்த்தனன், அனைத்துப் பக்கங்களில் இருந்தும் கோபத்துடன் சாத்யகியை நோக்கி விரையும் வீரர்களைக் கண்டும், காலத்தின் தன்மையை அறிந்தும் கோபவசப்படாமல் அசையாமல் அப்படியே நின்றான்.(31) விதியால் தூண்டப்பட்டவர்களும், மதுவால் ஊக்கமடைந்தவர்களுமான அவர்கள், தாங்கள் உண்டு கொண்டிருந்த பானைகளால், யுயுதானனை {சாத்யகியைத்} தாக்கத் தொடங்கினர்.(32)
சிநியின் மகன் {சாத்யகி} இவ்வாறு தாக்கப்பட்ட போது, ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்} பெருஞ்சினம் கொண்டான். போஜர்களுடனும், அந்தகர்களுடனும் போரிட்டுக் கொண்டிருந்த சாத்யகியை மீட்பதற்காக அவன் விரைந்து ஓடினான்.(33) வலிமைமிக்கக் கரங்களையும், செல்வசக்தியையும் கொண்ட அந்த வீரர்கள் இருவரும் பெருந்துணிவுடன் போரிட்டனர். ஆனால் முரண்பட்டவர்கள் அதிகம் பெருகியிருந்ததால் கிருஷ்ணன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.(34) யதுக்களைத் திளைக்கச் செய்பவன் {கிருஷ்ணன்}, தன் மகனும் {பிரத்யும்னனும்}, சிநியின் மகனும் {சாத்யகியும்} கொல்லப்பட்டதைக் கண்டு கோபமடைந்தவனாக அங்கே வளர்ந்திருந்த ஏரகப்புற்களை[2] கைநிறையப் பிடுங்கி எடுத்தான்.(35) கைநிறைந்தவையாக இருந்த அந்தப் புற்கள், வஜ்ரத்தின் சக்தியோடு கூடியதும், பயங்கரமானதுமான ஓர் இரும்பு உலக்கையாக {முசலமாக} மாறியது. கிருஷ்ணன் அதைக் கொண்டு தன் முன் வந்த அனைவரையும் கொன்றான்.(36)
[2] கும்பகோணம் பதிப்பில் இதற்கான அடிக்குறிப்பில் "ஒருவகைக் கோரை" என்று விளக்கப்பட்டிருக்கிறது.
அப்போது, அந்தகர்கள், போஜர்கள், சைனேயர்கள், விருஷ்ணிகள் ஆகியோர் காலத்தால் தூண்டப்பட்டவர்களாக அந்தப் பயங்கரக் கைக்கலப்பில் ஒருவரையொருவர் தாக்கினர்.(37) உண்மையில், ஓ! மன்னா, ஓ! பலமிக்கவனே, அவர்களில் எவர் அந்த ஏரகப் புற்களைக் கோபத்துடன் பிடுங்கி எடுத்தாலும், உடனே அவை அவன் கரங்களில் ஒரு வஜ்ரமாக மாறின.(38) அங்கே காணப்பட்ட ஒவ்வொரு புல்லும் பயங்கரமான இரும்பு உலக்கையாக {முசலங்களாக} மாறின. ஓ! மன்னா {ஜனமேஜயா}, இவை அனைத்தும் பிராமணர்கள் கொடுத்தச் சாபத்தினால் உண்டானவை என்பதை அறிவாயாக.(39) புல்லை ஏவிய எவனும், முற்றிலும் துளைக்கப்பட முடியாத பொருட்களை அஃது எளிதாகத் துளைத்துச் செல்வதைக் கண்டான். உண்மையில் அங்கே இருந்த ஒவ்வொரு புல்லும் வஜ்ரத்தின், சக்தியைக் கொண்ட ஒரு பயங்கரமான உலக்கையானது {முசலமானது}.(40)
ஓ! பாரதா {ஜனமேஜயா}, மகன் தந்தையைக் கொன்றான், தந்தை மகனைக் கொன்றான். மதுவினால் ஊக்கமடைந்திருந்த அவர்கள் விரைந்து சென்று ஒருவர்மீது ஒருவர் பாய்ந்தனர்.(41) குகுரர்களும், அந்தகர்களும், சுடர்மிக்க நெருப்பிடம் விரைந்து செல்லும் விட்டில்பூச்சிகளைப் போல அழிவை அடைந்தனர். இவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டபோது, அவர்களில் எவனும் தப்பிச்செல்ல நினைத்தானில்லை.(42) அழிவுக்கான காலம் வந்துவிட்டதை அறிந்தவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான கேசவன் {கிருஷ்ணன்}, அனைத்தையும் கண்டபடியே அங்கே நின்றான். உண்மையில் அந்த மதுசூதனன், புல்லாலான ஓர் இரும்பு உலக்கையை உயர்த்தியபடியே அங்கே நின்றான்.(43) ஸாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோர் கொல்லப்பட்டதைக் கண்ட மாதவன் {கிருஷ்ணன்} சினத்தால் நிறைந்தான்.(44)
கொல்லப்பட்டுத் தரையில் கிடக்கும் கதனைக் கண்டதும், அவனது கோபம் பெருகுகிறது, சாரங்கம், சக்கரம் மற்றும் கதாயுதத்தைத் தரிப்பவனான அவன் அப்போது விருஷ்ணிகளையும், அந்தகர்களையும் முற்றாக அழித்தான்.(45) ஓ! மன்னா, அப்போது, பகை நகரங்களை வெல்பவனும், வலிமையும், சக்தியும் கொண்டவனுமான பப்ருவும், தாருகனும் கிருஷ்ணனிடம் சொன்னதைக் கேட்பாயாக.(46) {பப்ருவும், தாருகனும்}, "ஓ! புனிதமானவரே, உம்மால் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் கொல்லப்பட்டனர். ராமர் {பலராமர்} இருக்கும் இடத்திற்குத் திரும்புவீராக. அவர் எங்கே சென்றாரோ அங்கேயே நாங்கள் செல்ல விரும்புகிறோம்" என்றனர்".(47)
மௌஸலபர்வம் பகுதி – 3ல் உள்ள சுலோகங்கள் :47
ஆங்கிலத்தில் | In English |