Jamvudwipa! | Bhishma-Parva-Section-007 | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 7)
பதிவின் சுருக்கம் : வடக்கு குருவைக் குறித்த வர்ணனை; அங்கிருக்கும் மரங்கள், மனிதர்கள், குளங்கள் பற்றிய குறிப்பு; பத்திராசுவம் குறித்த குறிப்பு; நாவலந்தீவு குறித்த வர்ணனை; அங்கிருக்கும் நாவல் மரம், மற்றும் அதன் கனி குறித்த குறிப்பு; நாவலந்தீவில் இருந்து உத்திர குருவுக்கு ஓடும் நதியைப் பற்றிய குறிப்பு; மால்யவாத மலையினைப் பற்றிய குறிப்பு...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, பெரும் புத்திக்கூர்மை கொண்டவனே, மேருவின் வடக்கு மற்றும் கிழக்கு பக்கத்தின் பகுதிகளையும், மால்யவான் மலைகளையும் குறித்து விரிவாக எனக்குச் சொல்வாயாக."
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "நீல மலையின் தெற்காகவும், மேருவின் வடக்காகவும், சித்தர்களின் வசிப்பிடமானதும், புனிதமானதுமான வடக்கு குரு {உத்தரக் குரு} இருக்கிறது. அங்கே இருக்கும் மரங்கள் இனிமையான கனிகளைச் சுமக்கின்றன. அவை எப்போதும் கனிகளாலும், மலர்களாலும் நிறைந்திருக்கின்றன. (அங்கே இருக்கும்) அனைத்து மலர்களும் மணமிக்கவையாகவும், கனிகள் அற்புத சுவை கொண்டவையாகவும் இருக்கின்றன. மேலும், அங்கே இருக்கும் மரங்களில் சில, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, (பறிப்பவரின்) விருப்பத்தின்படி கனிகளைக் கொடுக்கின்றன.
மேலும், அங்கே சில மரங்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பால் சுரப்பவை {க்ஷீரிகள்} என்று அழைக்கப்படுகின்றன. அவை எப்போதும் பாலைச் சுரந்து, அமிர்தத்தைப் போன்ற சுவை கொண்ட ஆறு வேறுபட்ட வகைகளிலான உணவைக் கொடுக்கின்றன. அந்த மரங்கள் ஆடைகளையும் தருகின்றன. அவற்றின் கனிகளில் (மனிதர்களின் பயன்பாட்டுக்கான) ஆபரணங்களும் இருக்கின்றன. அந்த முழு நிலமும் தங்க மணற்துகள்களால் நிரம்பியிருக்கின்றன. அந்த இடத்தின் ஒரு பகுதி மிக இனிமை நிறைந்ததாகவும், மாணிக்கம், அல்லது வைரம், அல்லது வைடூரியம், அல்லது பிற கற்கள் மற்றும் ரத்தினங்களின் பிரகாசத்தையும் கொண்டிருக்கிறது. அனைத்து பருவகாலங்களும் அங்கே இனிமையானதாக இருக்கின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்த நிலத்தில் எங்கும் சேறு இருப்பதில்லை. அங்கிருக்கும் குளங்கள் அழகானவையாகவும், சுவை நிறைந்தவையாகவும், தெளிந்த நீரைக் கொண்டனவாகவும் இருக்கின்றன.
தேவலோகத்தில் {தேவநிலையில்} இருந்து விழுந்தவர்களே அங்கே மனிதர்களாகப் பிறக்கிறார்கள். அங்கே அனைவரும் தூய பிறப்பு கொண்டவர்களாகவும், மிக அழகான தோற்றத்துடனும் இருக்கிறார்கள். (எதிர்பாலினம்) கொண்ட இரட்டையர்கள் அங்கே {தம்பதியினராகவே} பிறக்கிறார்கள். மேலும் பெண்கள் அப்சரசுகளைப் போன்ற அழகுள்ளவர்களாக இருக்கிறார்கள். (ஏற்கனவே குறிப்பிடப்பட்ட) பால்சுரக்கும் மரங்களில் இருந்து அமிர்தத்தைப் போன்ற இனிய சுவை கொண்ட பாலை அவர்கள் பருகுகின்றனர். அங்கே பிறக்கும் (எதிர் பாலினம் = ஒரு ஆண், ஒரு பெண் கொண்ட) இரட்டையர்கள் சமமாகவே வளர்கின்றனர். இருவரும் சம அழகுடனும், இருவரும் ஒத்த குணநலன்களுடனும், இருவரும் சமமாக உடுத்திக்கொண்டும் இருக்கிறார்கள். அந்த இருவரும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அன்றில் {சக்கரவாகப் பறவைகளின்} இணையைப் போலக் காதலுடன் {அன்புடன்} வளர்கின்றனர்.
அந்த நாட்டில் இருக்கும் மக்கள் நோயின்றி எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். பதினோராயிரம் {11,000} வருடங்கள் {ஒன்றாக} வாழும் அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒருபோதும் ஒருவரை ஒருவர் கைவிடுவதில்லை. கூர்மையான அலகுகளைக் கொண்டவையும், பெரும் பலம் கொண்டவையுமான பாருண்டங்கள் என்று அழைக்கப்படும் ஒருவகைப் பறவைகள், அவர்கள் இறந்ததும், அவர்களை எடுத்துக் கொண்டு போய், மலைக்குகைகளில் வீசுகின்றன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நான் இப்போது உமக்கு வடக்குக் குருக்களை {உத்தரக் குருக்களைக்} குறித்துச் சுருக்கமாக விவரித்துவிட்டேன்.
உமக்கு நான் இப்போது முறையாக மேருவின் கிழக்குப் பக்கத்தை விவரிக்கிறேன். அங்கிருக்கும் பகுதிகள் அனைத்திலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பத்திராசுவம் முதன்மையானதாகும். அங்கேதான் பத்திரசாலம் எனும் பெரும் காடும், காலாம்ரம் என்று அழைக்கப்படும் பெரும் மரமும் இருக்கின்றன. இந்தக் காலாம்ரம், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எப்போதும் கனிகளாலும், மலர்களாலும் நிறைந்திருக்கிறது. மேலும், ஒரு யோஜனை உயரம் கொண்ட அந்த மரம் சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படுகிறது. அங்கே இருக்கும் மனிதர்கள் வெண்ணிறமும், பெரும் சக்தியும், பெரும் பலமும் கொண்டிருக்கின்றனர்.
அங்கே இருக்கும் பெண்கள் ஆம்பல் {மலரின்} நிறத்தோடு மிக அழகாகவும், பார்வைக்கு இனிமையானவர்களாகவும் இருக்கிறார்கள். நிலவின் காந்தியையும், நிலவின் வெண் நிறத்தையும் கொண்டவர்களான அவர்களின் முகங்களும் முழு நிலவைப் போலவே இருக்கின்றன. அவர்களின் உடல்கள், நிலவின் கதிர்களைப் போலவே குளுமையாக இருக்கின்றன. அவர்கள் அனைவரும் பாடவும், ஆடவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, அங்கே மனித வாழ்வின் காலம் பத்தாயிரம் {10,000} வருடங்களாகும். காலாம்ரத்தின் சாறை அருந்தும் அவர்கள் எப்போதும் இளமையுடனே இருக்கிறார்கள்.
நீலத்திற்கு {நீல மலையின்} தெற்காகவும், நிஷதத்திற்கு {நிஷதமலையின்} வடக்காகவும், நித்தியமான ஒரு பெரும் ஜம்பூ {நாவல்} மரம் இருக்கிறது. சித்தர்களாலும், சாரணர்களாலும் துதிக்கப்படும் அந்தப் புனித மரம், விரும்பிய அனைத்தையும் கொடுக்கவல்லதாக இருக்கிறது. அந்த மரத்தின் பெயரால்தான் இந்தப் பகுதி எப்போதும் ஜம்பூத்வீபம் {நாவலந்தீவு} என்று அழைக்கப்படுகிறது. ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஓ! மனிதர்களின் மன்னா {திருதராஷ்டிரரே}, ஆயிரத்துநூறு {1,100} யோஜனைகள் உயரம் உள்ள இந்த மரங்களின் இளவரசன் {ஜம்பூ}, சொர்க்கத்தையே தொட்டுக் கொண்டு நிற்கிறான்.
இரண்டாயிரத்து ஐநூறு {2,500} முழங்கள் [1] பரப்பளவு கொண்ட அந்த மரத்தின் கனி பழுக்கும்போது வெடிக்கிறது. பூமியில் விழும் இந்தக் கனிகள் உரத்த ஒலியை எழுப்புகின்றன. மேலும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவை வெள்ளி நிறத்திலான சாறை பூமியில் பொழிகின்றன. அந்த நாவற்சாறு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஒரு நதியாகி, மேருவை வலம் வந்து, வடக்குக் குருக்களுக்கு {உத்தரக் குருவுக்கு} செல்கிறது. அந்தக் கனியின் சாறு பருகப்படும்போது, அது மன அமைதியை விளைவிக்கிறது. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அதன் பிறகு தாகமே உணரப்படுவதில்லை. {அதைப் பருகுபவர்களை} முதுமை பலவீனமாக்குவதில்லை.
[1] வேறொரு பதிப்பில் இது முழங்கள் என்றில்லாமல், அரத்னி என்றிருக்கிறது. அரத்னி என்றால் சிறு விரலைச் சேர்க்காமல் முஷ்டியுடன் கூடிய கையளவு என்றும் அங்கே சொல்லப்பட்டுள்ளது.
தெய்வீக ஆபரணங்களுக்குப் பயன்படுத்தப்படுவதும், இந்திரகோபக பூச்சிகளின் {பட்டுப்பூச்சிகளின்} நிறத்தைப் போன்றதும், பெரும் பிரகாசம் கொண்டதுமான ஜாம்பூநதம் என்ற தங்கத்தின் வகைகளில் ஒன்று இந்த இடத்தில் உண்டாகிறது. இந்த இடத்தில் பிறப்பவர்கள் காலைச் சூரியனின் நிறத்தைக் கொண்டிருக்கின்றனர்.
மால்யவாத மலையின் உச்சியில், ஓ! பாரதக்குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, யுகத்தின் முடிவில், அண்ட அழிவுக்காகச் சுடர்விட்டு எரியும் சம்வர்த்தகம் என்று அழைக்கப்படும் நெருப்பு எப்போதும் காணப்படுகிறது. மால்யவாதத்தின் சிகரத்தில் கிழக்கு நோக்கி பல சிறு மலைகள் இருக்கின்றன. அந்த மால்யவாதம், ஓ! மன்னா, பதினோராயிரம் {11,000} யோஜனைகள் அளவைக் கொண்டதாகும் [2]. அங்கே பிறக்கும் மனிதர்கள் தங்க நிறத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பிரம்ம லோகத்தில் இருந்து விழுந்தவர்களும், பிரம்மத்தை உச்சரிப்பவர்களுமாவர். அவர்கள் தங்கள் உயிர்வித்தை மேலெழுப்பிக் கடும் தவத்துறவுகளை மேற்கொள்கின்றனர். உயிரினங்களின் பாதுகாப்புக்காக அவர்கள் அனைவரும் சூரியனுக்குள் நுழைகிறார்கள். எண்ணிக்கையில் அறுபத்தாறாயிரம் {66,000} கொண்ட அவர்கள், அருணனுக்கு முன்பாகவே சூரியனைச் சூழ்ந்து கொண்டு செல்கிறார்கள். சூரியக் கதிர்களால் அறுபத்தாறாயிரம் {66,000} ஆண்டுகள் சுடப்பட்ட பிறகு அவர்கள் சந்திரவட்டிலில் நுழைகிறார்கள்" என்றான் {சஞ்சயன்}.
[2] பர்துவான் மற்றும் பம்பாய்ப்பதிப்புகளில் Panchashat {ஐந்தும் ஆறும்} என்று கூறப்படுவது, அதாவது பதினொன்று என்று கூறப்படுவது, வங்காள உரைகளில் பொதுவாக panchasat {ஐம்பது} என்று கூறப்படுகிறது என்கிறார் கங்குலி.
பூவும் நற்றளிரும் செற்றிப் பொழில் மிகச் சூழ்ந்து இலங்கும்
நாவலர் மரத்தினாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற்கடல் கடாமும் ஒன்றிற்கொன்று இரட்டி சூழ்ந்த
நாவலந்தீவு நந்தினன் மணி போன்ற தன்றே.
- உதயண குமார காவியம் 6
ஆங்கிலத்தில் | In English |