The one that pervadeth the Universe! | Bhishma-Parva-Section-008 | Mahabharata In Tamil
(ஜம்பூகண்ட நிர்மாண பர்வம் – 8)
பதிவின் சுருக்கம் : ரோமணகம், ஹிரண்யமயம், ஐராவதம் ஆகிய வர்ஷங்களைக் குறித்துச் சஞ்சயன் திருதராஷ்டிரனுக்குச் சொல்வது; பாற்கடலின் வடக்கில் இருக்கும் விஷ்ணுவின் மகிமையைச் சஞ்சயன் சொல்வது; காலமே பெரியதென்றும், அனைத்திலும் ஊடுருவி படர்ந்திருக்கும் காலத்தையே, வைகுண்டன் எனத் தேவர்களும், விஷ்ணு என மனிதர்களும் அழைக்கிறார்கள் என்று திருதராஷ்டிரன் சொல்வது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்} சொன்னான், "ஓ! சஞ்சயா, அனைத்து வர்ஷங்கள், அனைத்து மலைகள் அனைத்தின் பெயர்களையும், அந்த மலைகளில் வசிப்போர் அனைவரின் பெயர்களையும் உண்மையில் எனக்குச் சொல்வாயாக"
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஸ்வேதத்திற்கு {ஸ்வேத மலைக்குத்} தெற்காகவும், நிஷதத்திற்கு வடக்காகவும், ரோமணகம் {ரமணகம்} என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே பிறக்கும் மனிதர்கள் அனைவரும் வெள்ளை நிறம் கொண்டோராகவும், நல்ல தாய் தந்தையரை உடையவராகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே பிறப்பவர்கள் அனைவரும் எதிரிகளற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அங்கே {ரோமணகத்தில்} அவர்கள் பதினோராயிரத்து ஐநூறு {11,500) ஆண்டுகள் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்த இதயங்களுடன் வாழ்கிறார்கள்.
நிஷதத்திற்குத் தெற்கே ஹிரண்யமயம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே ஹைரண்யவதி என்று அழைக்கப்படும் நதி ஒன்று இருக்கிறது. அங்கேதான், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பறவைகளின் முதன்மையானவன் எனப் பெயர் கொண்டவனான கருடன் வாழ்கிறான். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அங்கே இருக்கும் மக்கள் அனைவரும் யக்ஷர்களைப் பின்பற்றுபவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அழகிய குணநலன்களைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அங்கே இருக்கும் மனிதர்கள் பலம் கூடியவர்களாகவும், மகிழ்ச்சி நிறைந்த இதயத்தைக் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். மேலும் அவர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பனிரெண்டாயிரத்து ஐநூறு {12,500} ஆண்டுகள் வாழ்கிறார்கள். அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.
ஓ! மனிதர்களின் ஆட்சியாளரே {திருதராஷ்டிரரே}, சிருங்காவத மலைகள் மூன்று அழகிய சிகரங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தங்கத்தாலும், {ஒன்று} ரத்னங்களாலும் ஆனது. மற்றொன்று அனைத்து வகை ரத்தினங்களாலும் செய்யப்பட்டு மிக அற்புதமானதாக இருக்கிறது. அது பெரிய மாளிகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அங்கேதான் சாண்டிலி என்ற பெயர் கொண்டவளும், சுய காந்தி கொண்டவளுமான மங்கை எப்போதும் வாழ்கிறாள்.
சிருங்காதவதத்திற்கு வடக்கே கடலின் எல்லை வரை, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே} ஐராவதம் என்று அழைக்கப்படும் வர்ஷம் இருக்கிறது. அங்கே இந்த ரத்தினமயமான மலையிருப்பதால், இந்த வர்ஷம் அனைத்திலும் மேன்மையானதாக இருக்கிறது. அங்கே சூரியன் வெப்பத்தைக் கொடுப்பதில்லை. மனிதர்கள் அங்கே கிழட்டுத் தன்மைக்கு ஆளாவதில்லை. நட்சத்திரங்களுடன் கூடிய நிலவுதான் அங்கே வெளிச்சத்துக்கான ஒரே தோற்றுவாயாக (ஆகாயத்தை) மூடிக் கொண்டிருக்கிறது. தாமரையின் நிறம் மற்றும் பிரகாசத்தைக் கொண்டவர்களும், தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்களுமான அங்கே பிறக்கும் மனிதர்கள், தாமரையின் மணத்தையும் தங்களிடம் கொண்டிருக்கிறார்கள். சிமிட்டாத கண்களும், (தங்கள் உடல்களில் இருந்து வெளிவரும்) இனிமையான நறுமணமும் கொண்ட அவர்கள் உணவின்றித் தங்கள் புலன்களை அடக்கி வாழ்பவர்களாவர். அவர்கள் அனைவரும் தேவர்களின் பகுதியில் இருந்து விழுந்தவர்களாவர். மேலும் அவர்கள் அனைவரும், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, எந்தவிதமான பாவத்தையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள். ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவர்கள் பதிமூன்றாயிரம் {13,000} ஆண்டுகளுக்கு அந்த வாழ்வை வாழ்கிறார்கள். ஓ பாரதர்களில் சிறந்தவரே {திருதராஷ்டிரரே}, அதுவே அவர்களது வாழ்வின் அளவாகும்.
அப்படியே பாற்கடலின் வடக்கில், அளவிலா வலிமை கொண்டவனான தலைவன் ஹரி {விஷ்ணு}, தனது தங்கத்தேரில் {பொற்சகடத்தில்} வசிக்கிறான். அந்த வாகனம், எட்டு சக்கரங்களையுடையதும், இயல்புக்குமிக்க எண்ணிலா உயிரினங்களைக் {பூதங்களைக்} கொண்டதும், மனோ வேகம் கொண்டதாகவும் இருக்கிறது. நெருப்பு போன்ற நிறமும், வலிமைமிக்க சக்தியும் கொண்ட அது ஜம்பூநதத் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்துயிர்களுக்கும் தலைவனான அவன் {ஹரி}, ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தன்னில் அனைத்து வகைச் செழிப்பையும் கொண்டிருக்கிறான். (பிரளயம் ஏற்படும்போது) அவனிலேயே இந்த அண்டம் கலக்கிறது. (படைப்பின் விருப்பம் அவனைப் பீடிக்கும்போது) அவனிலிருந்தே அது மீண்டும் உற்பத்தியாகிறது. செயல்படுபவனாகவும், அனைவரையும் செயல்பட வைப்பவனாகவும் இருப்பவன் அவனே {விஷ்ணுவே}. ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, நிலமாகவும், நீராகவும், வெளியாகவும் {ஆகாயமாகவும்}, காற்றாகவும், நெருப்பாகவும் இருப்பவன் அவனே. அனைத்துயிர்களுக்கும் வேள்வியின் வடிவமாக இருப்பவன் அவனே. நெருப்பு {அக்னியே} அவனது {விஷ்ணுவின்} வாயாக இருக்கிறது {இருக்கிறான்}" என்றான் {சஞ்சயன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சஞ்சயனால் இப்படிச் சொல்லப்பட்ட அந்த உயர் ஆன்ம மன்னன் திருதராஷ்டிரன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, தனது மகன்களைக் குறித்த {நினைவில்} தியானத்தில் ஆழ்ந்தான். பெரும் சக்தி கொண்ட அவன் {திருதராஷ்டிரன்}, {இப்படிச்} சிந்தித்த பிறகு, இந்த வார்த்தைகளைச் சொன்னான், "ஓ! சூதனின் மகனே {சஞ்சயா}, அண்டத்தை அழிப்பது காலமே என்பதில் ஐயமில்லை. அனைத்தையும் மீண்டும் படைப்பதும் காலமேயாகும். இங்கே எதுவும் நிலையானதில்லை {நித்தியமில்லை}. அனைத்திலும் ஊடுருவி பரந்திருக்கும் தன்மை பெற்ற {சர்வ வியாபிகளான} நரன் மற்றும் நாராயணனே அனைத்து உயிர்களையும் அழிப்பவர்களாவர். தேவர்கள் அவனை வைகுண்டன் (அளவிலா வலிமை கொண்டவன்) என்று சொல்கின்றனர். அதே வேளையில் மனிதர்கள் அவனை விஷ்ணு (அண்டத்தில் படர்ந்து ஊடுருவி இருப்பவன்) என்று அழைக்கின்றனர்" என்றான் {திருதராஷ்டிரன்}.
ஆங்கிலத்தில் | In English |