Religion by the Heavenly Perfections - Vibhuti–Vistara–yoga! | Bhishma-Parva-Section-034 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 22) {பகவத் கீதை - பகுதி 10}
பதிவின் சுருக்கம் : பொருள் மற்றும் ஆன்ம இருப்பின் மாட்சிமையின் முழுமையான காரணகர்த்தாவாகத் தன்னை விவரிக்கும் கிருஷ்ணன்; பெருமுனிவர்களின் மேற்கோள்களைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணனையே பரம்பொருளாக அர்ஜுனன் ஏற்றுக் கொள்வது; கிருஷ்ணனுடைய யோக சக்திகளின் மாட்சிமையைச் சொல்லுமாறு அர்ஜுனன் அவனை வேண்டுவது; கிருஷ்ணன் மேலும் தன்னை விவரிப்பது...
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, (உனது) நன்மையை விரும்பி, சொல்லப்படும் மேன்மையான எனது வார்த்தைகளை மீண்டும் ஒருமுறை கேட்பாயாக. (அதனால்) மகிழ்ச்சியடைவாய் என்பதால் உனக்கு நான் இதைச் சொல்கிறேன். 10:1
அனைத்துவகையிலும் தேவர்கள் மற்றும் பெருமுனிவர்களின் மூலமாக {தோற்றுவாயாக} நான் இருந்தாலும், எனது மூலத்தை, தேவ படைகளும் அறியமாட்டார்கள்; பெருமுனிவர்களும் அறிய மாட்டார்கள். 10:2
பிறப்போ, தொடக்கமோ இல்லாதவனாகவும் உலகங்களின் பெருந்தலைவனாகவும் என்னை அறிபவன், மனிதர்களுக்கு மத்தியில் மயக்கமில்லாதவனாக இருந்து, பாவங்கள் அனைத்திலும் இருந்து விடுபடுகிறான். 10:3
அறிவாற்றல் {புத்தி}, அறிவு, மயக்கமின்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உண்மை {சத்தியம்}, தற்கட்டுப்பாடு, அமைதி, இன்பம், வலி {துன்பம்}, பிறப்பு, இறப்பு, அச்சம், பாதுகாப்பு {அச்சமின்மை}, தீங்கிழையாமை {அஹிம்சை}, மனத்தின் சமன்திறன் {நடுநிலை}, மனநிறைவு, தவத்துறவுகள், கொடை, புகழ், இகழ் ஆகிய இப்படிப்பட்ட பல பண்புகள் என்னில் இருந்தே உயிரினங்களில் எழுகின்றன {உண்டாகின்றன}. 10:4-5
இவ்வுலகின் சந்ததியர் எவரில் இருந்து உண்டானார்களோ, அந்த ஏழு {7} பெரு முனிவர்கள், (அவர்களுக்கு) முந்தைய பெருமுனிவர்கள் நால்வர் {4}, மனுக்கள் ஆகியோர் எனது இயல்பில் பங்கெடுத்து, என் மனத்தில் இருந்தே பிறந்தார்கள். 10:6
இந்த எனது மேலாதிக்கத்தையும், ஆன்ம சக்தியையும் உண்மையில் அறிந்தவன், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாவான் {யோகத்தில் அமர்ந்தவனாவான்}. இதில் (எந்த) ஓர் ஐயமுமில்லை. 10:7
நான் அனைத்துப் பொருள்களின் மூலமாக {தோற்றுவாயாக} இருக்கிறேன். என்னிலிருந்தே அனைத்தும் இயங்குகின்றன. இப்படிச் சிந்திப்போரும், எனது இயல்பைக் கொண்டோருமான அறிஞர்கள் [1] என்னை வழிபடுகின்றனர். 10:8
[1] "பாவஸமந்விதா: Bhava-samanwitas" என்பதை ஸ்ரீதரர் "அன்பு நிறைந்தோர்" என்று விளக்குகிறார். அதையே K.T.டெலங்கும் ஏற்கிறார். சங்கரரோ, "பரம்பொருளில் அறி்வால் ஊடுருவியோர்" என்று விளக்குகிறார் என இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி. நம்பிக்கையும், பக்தியும் கொண்ட அறிஞர்கள் என்று இது பொருள் கொள்ளப்படுகிறது.
தங்கள் இதயங்களை என்னில் வைத்து, தங்கள் வாழ்வை எனக்கே அர்ப்பணித்து, ஒருவருக்கொருவர் {என்னைக் குறித்து} விளக்கியும், என்னைப் புகழ்ந்து கொண்டும் எப்போதும் மனநிறைவுடனும், மகிழ்ச்சியுடனும் அவர்கள் {அந்த அறிஞர்கள்} இருக்கிறார்கள். 10:9
எப்போதும் அர்ப்பணிப்புடனும் {யோகத்துடனும்}, அன்புடனும் (என்னை) வழிபடுவோருக்கு, அந்த அர்ப்பணிப்பை அறிவின் வடிவில் {புத்தி யோகத்தை} நான் அவர்களுக்குக் கொடுக்கிறேன். அதைக் கொண்டே அவர்கள் என்னை அடைகிறார்கள். 10:10
அவர்களது ஆன்மாக்களில் குடியிருக்கும் நான், அவர்களிடம் கருணை கொண்டு, அறிவு எனும் ஒளிமிக்க விளக்கால், {அவர்களிடம்} அறியாமையில் பிறந்த இருளை {அவர்களிடமிருந்து} அழிக்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}. 10:11
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "தலைமையான பிரம்மம் {பரப்பிரம்மம்} நீயே, தலைமையான வீடு {பரவீடு} நீயே, தூய்மையனைத்திலும் தூயவன் நீயே, நிலையான தெய்வீகத் தலைவன் {நித்திய புருஷன்} நீயே, பிறப்பற்ற தேவர்களில் முதல்வனும், தலைவனும் நீயே. முனிவர்கள் அனைவரும், தெய்வீக முனிவரான நாரதர், அசிதர், தேவலர் மற்றும் வியாசர் ஆகியோரும் இப்படியே உன்னைச் சொல்கிறார்கள். நீயும் (அதையே) எனக்குச் சொல்கிறாய். 10:12-13
ஓ! கேசவா {கிருஷ்ணா}, நீ சொல்வது அனைத்தையும் நான் உண்மையெனவே கருதுகிறேன். ஓ! தூய்மையானவனே {கிருஷ்ணா}, தேவர்களோ, தானவர்களோ உனது வெளிப்பாட்டை {தோற்றத்தை} அறிவதில்லை. 10:14
ஓ! ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உன்னை நீயாக அறிந்தவன் நீயே. ஓ! அனைத்து பொருட்களையும் படைத்தவா, ஓ! அனைத்துப் பொருட்களின் தலைவா, ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் தலைவா {கிருஷ்ணா}, எதையும் ஒதுக்காமல், எந்த மாட்சிமைகளை {ஒழுங்குமுழுமைகளைக்} கொண்டு இந்த உலகங்களில் நீ உடுருவி வசிக்கிறாயோ, அந்த உனது தெய்வீக மாட்சிமைகள் {ஒழுங்குமுழுமைகள்} கொண்டவற்றை அறிவிப்பதே உனக்குத் தகும். 10:15-16
ஓ! யோக சக்திகள் கொண்டவா {கிருஷ்ணா}, எப்போதும் தியானித்து உன்னை நான் அறிவது எப்படி? ஓ! தூய்மையானவனே {கிருஷ்ணா}, எந்தக் குறிப்பிட்ட நிலைகளைக் கொண்டு உன்னை நான் தியானிப்பது [2]? 10:17
[2] உன்னை முழுமையாக அறிவது என்பது இயலாதது. எனவே, எந்தக் குறிப்பிட்ட வடிவங்களில் அல்லது வெளிப்பாடுகளில் உன்னை நான் நினைக்க வேண்டும்? என இங்கே பொருள் கொள்ள வேண்டும் என்றும், இரண்டாவது வரியில் உள்ள "பாவே Bhava" {நிலைகள்} என்பதை "பொருட்கள்" என்று K.T.டெலங்கும், "உருவம்" என்று திரு.டேவிசும் பொருள் கொள்கின்றனர் என்றும் இங்கே விளக்கியிருக்கிறார் கங்குலி.
அமுதம் போன்ற உனது வார்த்தைகளைக் கேட்டு எனக்கு ஒருபோதும் தெவிட்டுவதில்லை என்பதால், ஓ! ஜனார்த்தனா {கிருஷ்ணா}, உனது ஆன்ம {யோக} சக்திகள் மற்றும் (உனது) மாட்சிமைகளை {கச்சிதங்களை} மேலும் விரிவாகச் சொல்வாயாக" என்றான் {அர்ஜுனன்}. 10:18
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "நன்று. எனது தெய்வீக மாட்சிமைகளில் {ஆத்ம கச்சிதங்களில்} முக்கியமானவற்றை மட்டும் நான் உனக்கு அறிவிக்கிறேன். ஏனெனில், ஓ! குருக்களின் தலைவா {அர்ஜுனா}, எனது (மாட்சிமைகளின்) எல்லைக்கு ஒரு முடிவு கிடையாது. 10:19
ஓ! சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, ஒவ்வொரு உயிரினங்களின் இதயங்களிலும் வசிக்கும் ஆத்மா நானே. உயிர்கள் அனைத்தின் தோற்றம், இடைநிலை மற்றும் முடிவு ஆகியவையும் நானே. 10:20
ஆதித்யர்களில் விஷ்ணுவும், ஒளி வடிவங்களில் பிரகாசமான சூரியனும் நானே; மருத்துகளில் {காற்று தேவர்களில்} மரீசியும், நட்சத்திரக்கூட்டங்களில் நிலவும் {சந்திரனும்} நானே. 10:21
வேதங்களில் சாமவேதம் நானே; தேவர்களில் வாசவன் {இந்திரன்} நானே; புலன்களில் மனம் நானே; உயிரினங்களின் அறிவாற்றல் {புத்தி} நானே. 10:22
ருத்ரர்களில் சங்கரன் {சிவன்} நானே; யக்ஷர்கள் மற்றும் ராட்சசர்களில் பொக்கிஷத்தலைவன் {குபேரன்} நானே; வசுக்களில் பாவகனும் {அக்னி தேவன்}, முகடுகள் கொண்டவற்றில் (மலைகளில்) மேருவும் நானே. 10:23
ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, புரோகிதர்களின் தலைவன் பிருஹஸ்பதி நானே என்று அறிவாயாக. படைத்தலைவர்களில் ஸ்கந்தன் நானே. நீர் கொள்ளிடங்களில் கடல் நானே. 10:24
பெரும் முனிவர்களில் பிருகு நானே, வார்த்தைகளில் அழிவற்றது (ஓம் என்ற எழுத்து) நானே. வேள்விகளில் ஜெப வேள்வி நானே [3]. அசையாதனவற்றில் இமயம் நானே. 10:25
[3] ஜெப வேள்வி என்பது வேள்விகள் அனைத்திலும் மேன்மையான தியான வேள்வியாகும் என்று இங்கு விளக்குகிறார் கங்குலி.
மரங்கள் அனைத்திலும் அரசமரம் நானே; தெய்வீக முனிவர்களில் நாரதர் நானே. கந்தர்வர்களில் சித்திரரதன் நானே, யோகத்தில் வெற்றி மணிமகுடம் தரித்த தவசிகளில் கபிலர் நானே. 10:26
குதிரைகளில், அமிர்தத்தில் (கடையும்போது) உதித்த உச்சைசிரவஸ் நானே என்பதை அறிவாயாக. அரச யானைகளில் ஐராவதம் நானே. மனிதர்களில் மன்னன் நானே. 10:27
ஆயுதங்களில் வஜ்ராயுதம் நானே, பசுக்களில் காமதுக் {காமதேனு} (என்று அழைக்கப்படுபவள்) நானே. இனப்பெருக்கக் காரணத்தில் கந்தர்பன் {மன்மதன்} நானே. பாம்புகளில் வாசுகி நானே. 10:28
நாகர்களில் {பாம்பினத் தலைவர்களில்} அனந்தன் நானே. நீர்வாழ் உயிரினங்களில் வருணன் நானே. பித்ருக்களில் அரியமான் நானே, நீதிவழங்கி தண்டிப்போரில் {நீதிமான்களில்} யமன் நானே. 10:29
தைத்தியர்களில் பிரகலாதன் நானே. கணக்கில் கொள்ளும் பொருள்களில் காலம் நானே. விலங்குகளில் சிங்கம் நானே. பறவைகளில் வினதையின் மகன் {கருடன்} நானே. 10:30
தூய்மை செய்வனவற்றில் காற்று நானே. ஆயுதம் தாங்கியோரில் ராமன் நானே. மீன்களில் மகரம் {சுறா} நானே. ஓடைகளில் ஜானவி {கங்கை} நானே [4]. 10:31
[4] "பவதாம், Pavatam, தூய்மை செய்வனவற்றுள்" என்பதை "அசைவனவற்றில்" என்றும் பொருள் கொள்ளலாம். இங்கே குறிப்பிடப்படும் ராமன், வால்மீகியின் செய்யுளில் வரும் தசரதமைந்தனான ராமன் ஆவான். கங்கை முழுதும் குடிக்கப்பட்ட பிறகு, ஜானு என்ற முனிவரின் கால் முட்டுகளில் இருந்து வெளிப்பட்டதால் அவள் ஜானவி என்று அழைக்கப்படுவதாகவும் இங்கே குறிப்பிடுகிறார் கங்குலி.
ஓ! அர்ஜுனா, படைக்கப்பட்ட பொருட்களில் அதன் தொடக்க நிலையாகவும், இடைநிலையாகவும், கடைநிலையாகவும் இருப்பவன் நானே. அறிவின் வகைகள் அனைத்திலும் {வித்தைகளில்}, தலைமையான ஆத்ம அறிவு {அத்யாத்ம = ஆத்மஞானம்} நானே. வழக்காடுவோர் {பேசுவோர்} மத்தியில் விவாதம் {பேச்சு} நானே. 10:32
எழுத்துகள் அனைத்திலும் அகரம் {அ என்ற எழுத்து} நானே. தொடர்மொழிகள் {புணர்ப்புகள்} அனைத்திலும் துவந்தம் {இரட்டைப் புணர்ப்பு} (என்றழைக்கப்படும் தொடர்மொழி) நானே. நித்தியமான காலமும் நானே. அனைத்துப் புறங்களில் முகம் கொண்ட விதிசமைப்பவனும் நானே. 10:33
அனைத்தையும் பீடிக்கும் மரணமும், அனைத்துக்கும் மூலமும் நானே. பெண்களுக்கு மத்தியில், புகழ், நற்பேறு, பேச்சு, நினைவு, அறிவாற்றல் {புத்தி}, பண்புமாறா நிலை, மன்னிக்கும் தன்மை {பொறுமை} ஆகியவை நானே. 10:34
சாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பத்தி செய்யும் பருவமான மார்கசீரிஷம் {மார்கழி மாதம்} நானே [5]. 10:35
[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. அதாவது கங்குலி குறிப்பிடுவது போல இருப்பின் அது மகம் (மாசி} மாதமாகும். ஆனால், பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் சந்திரமான மாதங்களின் அடிப்படையில் பாரதியார் சொல்லும் மார்கழியே சரியாகப் படுகிறது.
வஞ்சகரில் சூதாட்டம் நானே. ஒளியுடையோரில் ஒளி நானே. வெற்றி நானே, உழைப்பு நானே, நல்லவற்றில் நல்லது நானே. 10:36
விருஷ்ணிகளுக்கு மத்தியில் வாசுதேவன் {கிருஷ்ணன்} நானே; பாண்டு மகன்களுக்கு மத்தியில் தனஞ்சயன் {அர்ஜுனன்} நானே. தவசிகளில் வியாசர் நானே. கவிகளில் உசனஸ் {சுக்கிரன்} நானே. 10:37
தண்டிப்போரின் கோல் நானே. வெற்றிக்கு உழைப்போரின் கொள்கை {நீதி} நானே. கமுக்கங்களில் {இரகசியங்களில்} பேசாநிலை {மௌனம்} நானே. அறிவாளிகளில் அறிவு நானே. 10:38
ஓ! அர்ஜுனா, அனைத்துப் பொருள்களிலும் விதை எதுவோ அது நானே. அசைவனவற்றிலோ, அசையாதனவற்றிலோ நான் இன்றி எதுவுமில்லை. 10:39
ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, எனது தெய்வீக மாட்சிமைகளுக்கு {ஒழுங்குமுழுமைகளுக்கு, கச்சிதங்களுக்கு} ஒரு முடிவில்லை. (அந்த) மாட்சிமைகளின் அளவைக் குறித்த இந்த ஒப்பித்தல், எடுத்துக்காட்டுகளாகச் சொல்லும் வழியில் (மட்டுமே) என்னால் சொல்லப்பட்டது.10:40
எவையெல்லாம் மேன்மையானவையோ, புகழ்பெற்றவையோ, வலிமையானவையோ, அவை அனைத்தும் எனது சக்தியின் பகுதியைக் கொண்டே பிறந்தன என்பதை அறிவாயாக. 10:41
அல்லது மாறாக {இன்னும் சரியாகச் சொல்வதாயின்}, ஓ! அர்ஜுனா, இவை அனைத்தையும் விரிவாக அறிவதால் நீ செய்யப்போவது என்ன? {உனக்குப் பயன் என்ன?} (என்னில்) ஒரு பகுதியை மட்டுமே கொண்டு இந்த அண்டம் முழுமையையும் தாங்கியபடி நான் நிற்கிறேன்" என்றான் {கிருஷ்ணன்}. 10:42
ஆங்கிலத்தில் | In English |