The Manifesting of the One and Manifold - Visvarupa–Darsana yoga! | Bhishma-Parva-Section-035 | Mahabharata In Tamil
(பகவத்கீதா பர்வம் – 23) {பகவத் கீதை - பகுதி 11}
பதிவின் சுருக்கம் : அர்ஜுனனின் வேண்டுகோளின் பேரில் கிருஷ்ணன் தனது அண்டப்பெருவடிவை {விஸ்வரூபத்தை} வெளிப்படுத்தல்; அந்தப் பயங்கர வடிவத்தைக் கண்டு அர்ஜுனன் அஞ்சுவது; கிருஷ்ணன் தனது இயல்பான உருவை அடைவது...
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "எனது நலனுக்காக உன்னால் சொல்லப்பட்ட, அத்யாத்மம் {ஆத்ம அறிவு} என்று அழைக்கப்படும் தலைமையான புதிரை {பரம ரகசியத்தை} குறித்த இந்த விவாதம் எனது மயக்கத்தைப் போக்கியது [1]. 11:1
[1] "அத்யாத்ம Adhyatman" என்பதற்குத் தனிப்பட்ட ஆத்மாவுக்கும், தலைமை ஆத்மாவுக்குமான உறவு குறித்தது எனப் பொருள் கொள்ள வேண்டும். "இந்த எனது மயக்கம்" என்பதற்கு நான் "கொலைகாரன் என்ற மயக்கம்" என்று பொருள் கொள்ள வேண்டும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.
ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, உயிர்களின் படைப்பையும் அழிப்பையும் குறித்து உன்னிடம் விரிவாகக் கேட்டேன். அழிவற்ற உனது பெருமையையும் கேட்டேன். 11:2
ஓ! பெரும் தலைவா {பரமேஸ்வரா, கிருஷ்ணா} உன்னைப் பற்றி நீ சொல்லியவாறே இருக்கிறாய். ஓ! ஆண்மக்களில் சிறந்தவனே {புருஷோத்தமா, கிருஷ்ணா}, உனது இறைமை பெற்ற வடிவத்தைக் {ஈஸ்வர ரூபத்தைக்} காண நான் விரும்புகிறேன். 11:3
ஓ! தலைவா {கிருஷ்ணா}, அதைக் (அந்த வடிவத்தைக்) காணத் தகுந்தவன் என என்னை நீ கருதினால், ஓ! யோகசக்தியின் தலைவா {யோகேஸ்வரா, கிருஷ்ணா}, உனது நித்தியமான {அழிவற்ற} [2] ஆத்மாவை எனக்கு வெளிப்படுத்துவாயாக" என்றான் {அர்ஜுனன்}. 11:4
[2] "அவ்யயம் Avyayam {நித்தியமான}" என்பது சிதைவற்றது என்று இங்கே பொருள்படும். வழக்கமாக இது "நித்தியமானது" என்றே சுட்டிக்காட்டப்படும். டெலங்க் இதை "வற்றாதது" என்று பொருள் கொள்கிறார் என்றும் மற்ற இடங்களில் எல்லாம் தான் இதை "புரிதல்" என்றே சொல்லியிருப்பதாகவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, பல்வேறான, பல்வேறு நிறம் மற்றும் வடிவம் கொண்ட, தெய்வீகமான எனது வடிவங்களைப் பார். 11:5
ஆதித்யர்கள், வசுக்கள், ருத்ரர்கள், அசுவினிகள், மருத்துகள் ஆகியோரைப் பார். ஓ! பாரதா {அர்ஜுனா}, இதற்குமுன் (நீ) கண்டிராத எண்ணிலடங்கா அற்புதங்களைப் பார். 11:6
ஓ! சுருள்முடி கொண்டவனே {குடாகேசா, அர்ஜுனா}, அசைவன மற்றும் அசையாதன ஆகியவை கொண்ட அண்டம் முழுமையும் ஒன்றாக {ஒரே இடத்தில்} திரண்ட எனது உடலையும், இன்னும் நீ காண விரும்பும் அனைத்தையும் பார் [3]. 11:7
[3] "ஏகஸ்தம், Ekastham" என்பது ஒன்றில் அனைத்துமாக, அஃதாவது ஒன்றாக ஒரே இடத்தில் திரண்ட என்ற பொருளைத் தரும் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
எனினும், உனது இந்தக் கண்களைக் கொண்டு என்னைக் காணத் தகுந்தவனாக நீ இல்லை. {எனவே}, நான் உனக்குத் தெய்வீகப் பார்வையை {ஞானக் கண்ணை} அளிக்கிறேன். இறைமை பெற்ற எனது மறைபொருள் இயல்பைப் {ஈஸ்வர யோகத்தைப்} பார்" என்றான் {கிருஷ்ணன்}. 11:8
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, இதைச் சொன்னவனும், வலிமைமிக்கப் பெரும் யோக சக்தியின் தலைவனுமான ஹரி {கிருஷ்ணன்}, பல வாய்களும், கண்களும் கொண்டதும், பல அற்புத அம்சங்களைக் கொண்டதும், பல தெய்வீக ஆபரணங்களைப் பூண்டதும், பல தெய்வீக ஆயுதங்களை ஏந்தியதும், தெய்வீக மாலைகள் மற்றும் ஆடைகளைச் சூடியதும், தெய்வீக மணமிக்க நறுமணத் தைலங்கள் பூசியதும், அனைத்து அற்புதங்களையும் கொண்டதும், பிரகாசமாகவும், எல்லையற்றதாகவும், அனைத்துப் புறங்களிலும் முகங்களைக் கொண்டதுமான தலைமையான தனது இறைமை வடிவத்தை அந்தப் பிருதையின் மகனுக்கு {குந்தியின் மகன் அர்ஜுனனுக்கு} வெளிப்படுத்தினான். 11:9-11
ஒரே நேரத்தில், வானத்தில், ஆயிரம் சூரியன்களின் ஒளி வெடிக்குமாயின், (அப்போது) அதுவே {அந்த ஒளியே} அந்த வல்லமையுள்ளவனின் {கிருஷ்ணனின்} ஒளியைப் போன்றதாக இருக்கும். 11:12
பல கூறுகளாகப் பிரிக்கப்பட்ட அண்டம் முழுமையும், அந்தத் தேவதேவனின் {கிருஷ்ணனின்} உடலில் ஒன்றாகத் திரண்டிருப்பதை அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, கண்டான். 11:13
அப்போது, பெரும் வியப்பால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, மயிர் சிலிர்த்தபடி தலைவணங்கி, கூப்பிய கரங்களுடன் அந்தத் தேவனிடம் {கிருஷ்ணனிடம்} பேசினான். 11:14
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! தேவா {கிருஷ்ணா}, தேவர்கள் அனைவரையும், உயிரினங்களின் பல்வேறு கூட்டங்கள் அனைத்தையும், (தனது) தாமரை இருக்கையில் அமர்ந்திருக்கும் பிரம்மனையும், முனிவர்கள் அனைவரையும், தெய்வீகப் பாம்புகளையும் நான் {உன்னில்} காண்கிறேன். 11:15
ஓ! எல்லையற்ற வடிவங்களைக் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் எண்ணற்ற கரங்களையும், வயிறுகளையும், வாய்களையும், (மற்றும்) கண்களையும் கொண்டவனாக நான் உன்னைக் காண்கிறேன். ஓ! அண்டத்தின் தலைவா {விஸ்வேஸ்வரா, கிருஷ்ணா}, ஓ! அண்டத்தின் வடிவானவனே {விஸ்வரூபா, கிருஷ்ணா}, உனது {வடிவின்} முடிவையோ, இடையையோ, தொடக்கத்தையோ நான் காணவில்லை. 11:16
பார்க்கக் கடினமானவனும், அனைத்துப் புறங்களில் பிரகாசிக்கும் சுடர்மிகும் நெருப்போ, சூரியனோ போன்றவனும், அளவிடமுடியாதவனுமான உன்னை, (உனது) கிரீடம், கதாயுதம், சக்கரம் ஆகியவற்றைத் தாங்கியபடி, அனைத்துப் புறங்களிலும் ஒளிரும் சக்தியின் திரளாகக் காண்கிறேன். 11:17
அழிவற்றவனாகவும், இந்த அண்டத்தின் தலைமை பொருளாகவும் {பரம்பொருளாகவும்} நீயே இருக்கிறாய். சிதைவில்லாதவனாகவும், நித்தியமான அறத்தின் {சாஸ்வத தர்மத்தின்} காவலனாகவும் நீயே இருக்கிறாய். நித்தியமான {முடிவற்ற} ஆண்மகனாக {சநாதன புருஷனாக} நான் உன்னைக் கருதுகிறேன். 11:18
தொடக்கம், இடைநிலை, முடிவு ஆகியவை இல்லாதவனாகவும், வரம்பில்லா ஆற்றல் கொண்டவனாகவும் {வீரனாகவும்}, எண்ணிலா கரங்களைக் கொண்டவனாகவும், சூரியனையும், சந்திரனையும் கண்களாகக் கொண்டவனாகவும், சுடர் மிகும் நெருப்பை உனது வாயாகக் கொண்டவனாகவும், உன் சொந்த சக்தியால் இந்த அண்டத்தையே சுடுபவனாகவும் நான் உன்னைக் காண்கிறேன். 11:19
சொர்க்கத்திற்கும் {வானிற்கும்}, பூமிக்கும் இடைப்பட்ட வெளியும், அடிவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் {திசைகள் அனைத்தும்} உன் ஒருவனால் மட்டுமே முழுதும் படர்ந்து ஊடுருவப்பட்டுள்ளது. இந்த உனது அற்புதமான பயங்கர வடிவத்தைக் கண்டு, ஓ! பரமாத்மாவே {கிருஷ்ணா}, மூவுலகங்களும் நடுங்குகின்றன. 11:20
இந்தத் தேவர்களின் கூட்டங்கள் உன்னுள் நுழைகின்றன. அச்சமுற்ற சிலர், கூப்பிய கரங்களுடன் வேண்டுகின்றனர். "நீ வாழ்க" எனச் சொல்லும் பெருமுனிவர்கள் மற்றும் சித்தர்களின் கூட்டங்கள், வளமான துதி பாடல்களால் உன்னைப் புகழ்கின்றனர். 11:21
ருத்ரர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், சித்தர்கள் (என்று அழைக்கப்படுபவர்கள்), விஸ்வர்கள், அசுவினிகள், மருத்துகள், உஷ்மபர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், அசுரர்கள், சாத்யர்கள் உன்னைக் கண்டு வியக்கின்றனர். 11:22
ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பல வாய்களும் கண்களும், எண்ணிலடங்கா கரங்களும், தொடைகளும், பாதங்களும், பல வயிறுகளும் கொண்ட உனது பெருவடிவையும், பயங்கரமான உனது கோரைப்பற்கள் பலவற்றையும் கண்டு உயிரினங்கள் அனைத்தும், நானும் அஞ்சுகிறோம். 11:23
உண்மையில், வானத்தையே தொட்டுக் கொண்டு, சுடர்மிகும் ஒளியுடனும், பல வண்ணங்களுடனும், விரிந்து திறந்திருக்ககும் வாயுடனும், சுடர்மிகும் பெரிய கண்களுடனும் இருக்கும் உன்னைக் கண்டு, ஓ! விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அச்சத்தால்) நடுங்கும் (எனது) உள் ஆன்மாவுடன் என்னால் துணிவுடனும், மன அமைதியுடனும் இனியும் இருக்க முடியாது. 11:24
பயங்கரக் கோரைப் பற்களின் விளைவாக (யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் நெருப்பைப் போல) பயங்கரமாக இருக்கும் உனது வாய்களைக் கண்டு, என்னால், அடிவானின் புள்ளிகளையோ {திசைகளையோ}, மன அமைதியையோ உணர முடியவில்லை. ஓ! தேவர்களின் தேவா, ஓ! அண்டத்தின் புகலிடமே {கிருஷ்ணா} அருள்புரிவாயாக {கருணை கொள்வாயாக}. 11:25
இந்தத் திருதராஷ்டிரர் மகன்கள் அனைவரும், மன்னர்களின் கூட்டங்களுடனும், பீஷ்மர், துரோணர், சூதனின் மகன் (கர்ணன்) ஆகியோருடனும் எங்கள் புறத்தில் இருக்கும் முக்கியப் போர்வீரர்களுடனும், கொடிய கோரைப் பற்களைக் கொண்ட உன்னுடைய வாய்களில் விரைவாக விழுகின்றனர். சிலர், தங்கள் தலைகள் நசுங்கியவாறு (உனது) பற்களின் இடைவெளிகளில் அகப்பட்டுக் காணப்படுகின்றனர். 11:26-27
பல நீரூற்றுகள் {ஆறுகள்} பல்வேறு வழிகளில் கடலை நோக்கி விரைவாக உருள்வதைப் போல, மனித உலகத்தின் இந்த வீரர்களும் அனைத்துப் புறங்களிலும் சுடர்விட்டெரியும் உனது வாய்களுக்குள் நுழைகின்றனர். 11:28
(தங்களை) அழித்துக் கொள்வதற்காகவே சுடர்மிகும் நெருப்பை நோக்கி வேகமாக விரையும் விட்டில் பூச்சிகளைப் {பதங்காக்களைப்} போல, (இந்த) மக்களும், தடையில்லா வேகத்துடன், (தங்கள்) அழிவுக்காகவே உனது வாய்களில் நுழைகின்றனர். 11:29
அனைத்துப் புறங்களில் இருந்தும் வந்த இந்த மனிதர்களை விழுங்கிவிட்டு, உனது சுடர்மிகும் வாய்களால் அவர்களை நக்குகிறாய். முழு அண்டத்தையும் (உனது) சக்தியாலும், உக்கிரமான கதிர்களால் நிரப்பி, ஓ! விஷ்ணுவே {கிருஷ்ணா}, (அனைத்தையும்) சுடுகிறாய். 11:30
(இத்தகு) உக்கிர வடிவம் கொண்ட நீ யார் என்று எனக்குச் சொல்வாயாக. ஓ! தேவர்களின் தலைவா {கிருஷ்ணா}, நான் உன்னை வணங்குகிறேன், எனக்கு அருள்புரிவாயாக {எனக்குக் கருணை காட்டுவாயாக}. மிகப்பழமையானவனான உன்னை நான் அறிய விரும்புகிறேன். உனது இயக்கத்தை {செயலை} [4] என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்றான் {அர்ஜுனன்}. 11:31
[4] "ப்ரவ்ருத்திம், Pravritti" {செயல்} என்பதைச் சங்கரரும், ஸ்ரீதரரும், இயக்கம் அல்லது செயல் எனப் பொருள் கொள்கின்றனர் எனவும், திரு.டேவீசோ, "பரிணாமம், அல்லது வளர்ச்சியடைந்த உருவம்" எனக் கொள்கிறார் எனவும் திரு.டேவீசின் இந்தக் கருத்து சரியல்ல எனத் தான் கருதுவதாகவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.
அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "உலகங்களை அழிக்கவே முழுமையாக வளர்ந்த மரணம் {காலன்} நான் [5அ]. நான் இப்போது மனித குலத்தைக் கொல்வதில் {அழிப்பதில்} ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். இங்கே பல்வேறு பிரிவுகளில் நிற்கும் போர்வீரர்கள் அனைவரும் நீ இல்லாமலேயே [5ஆ] அழிவார்கள். 11:32
[5அ] ஜெ.இராபர்ட் ஓப்பன்ஹீமர் (J. Robert Oppenheimer 1904-67) ஓர் அமெரிக்க அறிவியலாளரும், கோட்பாட்டு இயற்பியலாளரும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றியவரும் ஆவார். இரண்டாம் உலகப் போரில் மன்ஹாட்டன் செயல்திட்டத்தால் "அணுகுண்டுகளின் தந்தை" என்று அறியப்படுபவர் ஆவார். அணுகுண்டை வெடித்துச் சோதித்த அவர், "உலகங்களை அழிக்க வந்த மரணமாக நான் இப்போது இருக்கிறேன்" என்று பகவத் கீதையின் இந்தச் சுலோகத்தைத் தான் மேற்கோளாகக் காட்டினார். 1933ல் அவர் சம்ஸ்கிருதம் பயின்றார். மூல மொழியிலேயே பகவத் கீதையை அறிந்தார். இதை "வாழ்வின் தத்துவம் - Philosophy of life" என்ற தனது புத்தகத்தில் அவரே குறிப்பிட்டிருக்கிறார். இதே பகுதியின் 12ம் சுலோகத்தையும் அணுகுண்டின் வீரியத்தை ஒப்பிடுவதற்காக சொல்லியிருக்கிறார்.[5ஆ] இங்கே குறிப்பிடப்படும் "கால: Kala" என்பது மரணமாகும். திரு.டேவீஸ் பிற மொழிபெயர்ப்பாளர்களைப் பின்பற்றிக் காலம் என்று இதற்குப் பொருள் கொள்கிறார். "ப்ரவ்ருத்த: Pravriddha" என்பது (திரு.டேவீஸ் சொல்வது போல) பழமையானது அல்லது மிகப் பழமையானது என்று பொருள் தராது, மாறாக அது "முற்றிய" அல்லது "முழுமையாக வளர்ந்த" என்ற பொருளையே தரும். பின்னர் மீண்டும் திரு. டேவீஸ், "ருதேऽபி த்வாம் rte 'pi tvam" என்பதற்கு "உன்னைத் தவிர" என்று பொருள் கொண்டு நகைப்புக்கிடமான ஒரு பெரும்பிழையைச் செய்திருக்கிறார். லெக்சிக்கானை மட்டுமே தங்கள் வழிகாட்டியாகக் கொண்ட வெளிநாட்டவர் நிச்சயமாகத் தடுமாறும் மொழி வழக்குகளில் {idioms} இதுவும் ஒன்றாகும். இங்கே கிருஷ்ணன் "அர்ஜுனனைத் தவிர மற்ற அனைவரும் அழிந்து விடுவார்கள்" என்று சொல்லவில்லை. மாறாக, "அர்ஜுனன் இல்லாவிட்டாலும், அஃதாவது அவன் போரிடாவிட்டாலும் அவர்கள் அனைவரும் அழிவார்கள்" என்றே சொல்கிறான் என்கிறார் கங்குலி. இங்கே, பாரதியாரும், பிரபுபாதரும் உன்னைத் தவிர என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள். கோயந்தகர், கங்குலி போலவே "நீ இல்லாமலேயே" என்று தனது “தத்வ விவேசனி"யில், பொருள் கொண்டிருக்கிறார்.
ஆகவே, எழுவாயாக, புகழை அடைவாயாக, (மேலும்) எதிரிகளை வீழ்த்தி, விரிவடைந்து வரும் (இந்தப்) பேரரசை அனுபவிப்பாயாக. இவர்கள் அனைவரும் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள். ஓ! இடது கையால் (கூட) வில் வளைப்பவனே {அர்ஜுனா}, (நீ) எனது கருவியாக மட்டுமே இருப்பாயாக. 11:33
என்னால் (ஏற்கனவே) கொல்லப்பட்ட துரோணன், பீஷ்மன், ஜெயத்ரதன், கர்ணன் மற்றும் பிற துணிவுமிக்க வீரர்களை {வெளிப்படையாக} நீ கொல்வாயாக. திகைக்காதே, போரிடுவாயாக; (உனது) எதிரிகளைப் போரில் நீ வெல்வாய்" என்றான் {கிருஷ்ணன்}. 11:34
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "கேசவனின் {கிருஷ்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட கிரீடம் தரித்தவன் {கிரீடி, அர்ஜுனன்}, நடுங்கியவாறும், (மேலும்) கூப்பிய கரங்களோடும், (அவனை) வணங்கி, அச்சம் நிறைந்து தடைபட்ட குரலுடன் {வாய் குழறி} தனது வணக்கங்களைக் கிருஷ்ணனுக்கு மீண்டும் ஒரு முறை சொன்னான். 11:35
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ரிஷிகேசா {கிருஷ்ணா}, இந்த அண்டமே மகிழ்வதும், உனது புகழைச் சொல்லி மயங்குவதும், அச்சத்தால் ராட்சசர்கள் அனைத்துப் புறங்களிலும் ஓடுவதும், சித்தர்க் கூட்டங்கள் (உன்னை) வணங்குவதும் பொருத்தமானதே. 11:16
ஓ! பெரும் ஆத்மாவே {கிருஷ்ணா}, பிரம்மனைவிட (அவனையே விடப்) பெரியவனும், முதன்மை காரணமுமான {ஆதிகர்த்தாவுமான} உன்னை அவர்கள் ஏன் வணங்காதிருப்பார்கள்? ஓ! எல்லையில்லாதவனே {அனந்தா}, ஓ! தேவர்களின் தேவா {தேவேசா}, ஓ! அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அழிவற்றவன் {அக்ஷரம்} நீயே, இருப்பும் {சத்-ம்}, இல்லாமையும் {அசத்-ம்} நீயே, அவற்றை (அந்த இரண்டைக்) கடந்தவனும் {பிரம்மமும்} நீயே. 11:37
பழமையான ஆண்மகனும் {புராண புருஷனும்}, முதல் தேவனும் {ஆதிதேவனும்} நீயே. இந்த அண்டத்தின் தலைமைப் புகலிடம் நீயே. அறிபவன் நீயே, அறியப்பட வேண்டிய பொருள் நீயே. உயர்ந்த வசிப்பிடம் {பரமபதம்} நீயே. ஓ! எல்லையற்ற வடிவம் கொண்டவனே {அனந்தரூபா, கிருஷ்ணா}, உன்னால் இந்த அண்டமே படர்ந்தூடுருவப் பட்டுள்ளது [6]. 11:38
[6] "நிதாநம் Nidhanam" என்பதைப் புகலிடம் என்றோ, ஆதரவு என்றோ, வசிப்பிடம் என்றோ, கொள்ளிடம் என்றோ பொருள் கொள்ளலாம். திரு.டேவீஸ் அவர்கள் தவறாக "புதையலகம் Treasure house" என்று சொல்கிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.
வாயு, யமன், அக்னி, வருணன், சந்திரன், பிரஜாபதி, முப்பாட்டன் {பிரம்மன்} ஆகியோர் நீயே. உன்னை ஆயிரம் முறை வணங்குகிறேன். மீண்டும் மீண்டும் உன்னை வணங்குகிறேன் {நமோ நமஸ்தே}. 11:39
முன்னாலும், பின்னாலும் உன்னை வணங்குகிறேன். ஓ! அனைத்தும் ஆனவனே {கிருஷ்ணா}, அனைத்துப் புறங்களிலும் {என்} வணக்கம் உனதாகட்டும். எல்லையில்லா சக்தி, அளவிட முடியா ஆற்றல் ஆகிய அனைத்தும் நீயே. அனைத்தையும் தழுவி நிற்பவன் {சர்வன்} நீயே. 11:40
இந்த உனது பெருமையை அறியாமல், (உன்னை) நண்பனாகக் கருதி, அலட்சியமாக, "ஓ! கிருஷ்ணா, ஓ! யாதவா, ஓ! நண்பா" என்று தவறுதலாகவோ, அன்பாலோ என்னவெல்லாம் சொல்லியிருப்பேனோ, விளையாட்டிலும், படுத்திருக்கும் போதும், அமர்ந்திருக்கும் போதும், உணவருந்து போதும் தனிமையிலோ, பிறரின் முன்னிலையிலோ, மகிழ்ச்சியின் பொருட்டோ உனக்கு என்னென்ன அவமதிப்புகளைச் செய்தேனோ, ஓ! சீர்குலையாதவனே {கிருஷ்ணா}, {அவற்றிற்காக} அளவிடமுடியாதவனான உன்னிடம் மன்னிப்பை நான் வேண்டுகிறேன். 11:41-42
அசைவன மற்றும் அசையானவற்றைக் கொண்ட இந்த அண்டத்தின் தந்தை நீயே. வழிபடத்தகுந்த பெரும் குரு {ஆசான்} நீயே. உனக்கு நிகராக எவனுமில்லை எனும்போது, ஓ! மூவுலகங்களில் ஒப்பற்ற பெருமை கொண்டவனே {கிருஷ்ணா}, {உன்னைவிட} உயர்ந்தவன் எவன் இருக்க முடியும்? 11:43
எனவே, ஓ! தலைவா {ஈஸ்வரா}, ஓ! புகழத்தக்கவனே {கிருஷ்ணா}, (எனது) உடலை நெடுஞ்சாண் கிடையாகக் கிடத்தி, (உன்னை) வணங்கி உனது அருளைக் கேட்கிறேன். ஓ! தேவா {கிருஷ்ணா}, தந்தை ஒருவன் (தனது) மகனையும், தோழன் ஒருவன் (தனது) தோழர்களையும் [7], அன்பன் ஒருவன் (தனது) அன்புக்குரியவர்களையும், {அவர்களது தவறுக்காகப் பொறுப்பது} போல என்னைப் (எனது தவறுகளைப்) பொறுப்பதே உனக்குத் தகும். 11:44
[7] கங்குலி இங்கே Friend என்று சொல்கிறார். மூலத்தில் இது சகா என்று இருக்கிறது. சகா என்றால் தோழன் என்ற பொருள் வரும். பாரதியார் தோழன் என்றே பெயர்த்திருக்கிறார்.
இதற்கு முன் (காணப்படாத) உனது வடிவத்தைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தேன், (எனினும்) அச்சத்தால் எனது மனம் கலங்குகிறது. ஓ! தேவா {கிருஷ்ணா}, எனக்கு உன் (வழக்கமான மற்ற {முந்தைய}) வடிவத்தையே காட்டுவாயாக. ஓ! தேவர்களின் தலைவா {தேவேசா}, ஓ! அண்டத்தின் புகலிடமே {ஜகந்நிவாசா}, அருள்புரிவாயாக. 11:45
கிரீடம் (தரித்து), கதாயுதம் (ஏந்தி), கையில் சக்கரத்துடன் முன்பு போலவே நான் உன்னைக் காண விரும்புகிறேன். ஓ! ஆயிரம் கரங்களைக் கொண்டவனே {சஹஸ்ரபாஹோ}, அண்டப்பெருவடிவே {விஸ்வமூர்த்தி}, அதே நான்கு கர வடிவைக் கொள்வாயாக" என்றான் {அர்ஜுனன்}. 11:46
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "உன்னிடம் மகிழ்ச்சி கொண்டே, ஓ! அர்ஜுனா, மகிமை நிறைந்ததும், உலகந்தழுவியதும், எல்லையற்றதும், முதலானதும் {ஆதியானதும்}, இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாராலும் காணப்படாததுமான இந்தத் தலைமையான வடிவத்தை {பரவடிவை}, எனது யோக சக்தியின் மூலம் {ஆத்மயோகத்தால்} உனக்கு நான் காண்பித்தேன். 11:47
குரு குல வீரனான {அர்ஜுனனான} உன்னை மட்டுமே தவிர, மனித உலகத்தில் உள்ள வேறு எவனாலும், வேத கல்வியாலோ, வேள்விகளாலோ, கொடைகளாலோ, செயல்களாலோ, ஏன் கடுந்தவங்களாலோ கூட இந்த எனது வடிவத்தைக் காண இயலாது. 11:48
இந்த எனது பயங்கர வடிவைக் கண்டு அச்சமோ, மனக்குழப்பமோ உனதாகாதிருக்கட்டும். மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், அச்சத்தில் இருந்து விடுபட்டு, வேறு வடிவமான அதை மீண்டும் நான் அடைவதைக் காண்பாயாக" என்றான் {கிருஷ்ணன்}. 11:49
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இவை யாவையும் அர்ஜுனனுக்குச் சொன்ன வாசுதேவன் {கிருஷ்ணன்}, மீண்டும் ஒருமுறை தனது சொந்த {நாராயண} வடிவத்தையே (அவனுக்குக்_அர்ஜுனனுக்குக்) காட்டினான். அதன்பிறகு, அந்த உயர் ஆன்மா கொண்டவன் {கிருஷ்ணன்}, (தனது) மென்மையான வடிவத்தை {கிருஷ்ண வடிவத்தை} ஏற்று அச்சத்திலிருந்த அவனுக்கு {அர்ஜுனனுக்கு} ஆறுதலளித்தான். 11:50
அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "உனது மென்மையான மனித வடிவைக் கண்டு, ஓ!ஜனார்த்தனா {கிருஷ்ணா}, இப்போது எனது மனம் சரியானதாகி {அமைதியுற்று}, எனது இயல்பான நிலையை அடைந்தேன்" என்றான் {அர்ஜுனன்}. 11:51
அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "நீ கண்ட இந்த எனது வடிவம் காண்பதற்கு அரியதாகும். தேவர்களும் கூட இந்த (எனது) வடிவைக் காண எப்போதும் விரும்புகிறார்கள். 11:52
வேதங்களாலோ, தவத்துறவுகளாகோ, கொடைகளாலோ, வேள்விகளாலோ நீ கண்ட இந்த எனது வடிவில் என்னைக் காண முடியாது. 11:53
எனினும், ஓ! அர்ஜுனா, (தனது நோக்கங்களின்) தனிப்பட்ட மதிப்பால் {வேறு எதையும் வேண்டாத அர்ப்பணிப்பால்}, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, நான் இந்த வடிவத்திலேயே அறியப்பட்டு, உண்மையில் காணப்பட்டு, அடையவும் படலாம். 11:54
எனக்காகவே அனைத்தையும் செய்பவன் எவனோ, என்னையே தனது தலைமை நோக்கமாகக் கொள்பவன் எவனோ, பற்றில் இருந்து விடுபட்டவன் எவனோ, அனைத்து உயிரினங்களிடமும் பகைமையின்றி இருப்பவன் எவனோ, ஓ! அர்ஜுனா, அவனே என்னிடம் வருகிறான்" என்றான் {கிருஷ்ணன்}. 11:55
ஆங்கிலத்தில் | In English |