Showing posts with label பகவத்கீதை. Show all posts
Showing posts with label பகவத்கீதை. Show all posts

Monday, December 21, 2015

பகவத் கீதை - முழுவதும் - தமிழில்


கிசாரி மோகன் கங்குலியின் பகவத் கீதையை நான் மொழி பெயர்க்க ஆரம்பித்த போது, கங்குலியின் வரிகளைச் சுலோகங்களாகப் பிரித்து அறிந்து கொள்வதற்காக இஸ்கான் வெளியீடான "பகவத் கீதை - உண்மையுருவில்" தெய்வத்திரு.அ.ச.பக்திவேதாந்தசுவாமி பிரபுபாதர் அவர்களின் புத்தகத்தை எடுத்துக் கொண்டேன். வலைத்தளங்களில் தேடிய போது, www.asitis.com பிரபுபாதரின் ஆங்கில உரைகளோடு பகவத்கீதை இருந்தது. இவை இரண்டையும் கொண்டு கங்குலியின் ஆங்கில வரிகளைச் சுலோக எண்களுடன் கூடிய விளக்கங்களாகப் பிரித்தேன். அதன்படியே அவ்விரண்டு ஆக்கங்களையும் துணையாகக் கொண்டு மொழிபெயர்ப்பையும் ஆரம்பித்தேன்.


பகவத்கீதையின் மூன்றாவது பகுதியை மொழிபெயர்த்த போது http://www.sangatham.com/bhagavad_gita/ என்ற வலைத்தளம் கிடைத்தது. அதில் கீதா பிரஸ் வெளியீட்ட, ஸ்ரீஜயதயால் கோயந்தகா அவர்களின் தத்வவிவேசனீயில் இருந்து சம்ஸ்க்ருதப் பதங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு சுலோகத்தின் கீழே பாரதியாரின் உரையும் இருந்தது. மூன்றாவதாக இந்தத் தளத்தையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன். பகவத் கீதையின் 15வது பகுதியை மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது, நான் ஏற்கனவே தொலைத்திருந்த "தத்வவிவேசனீ" கிடைத்தது. நான்காவதாக அதையும் ஒப்பீட்டுக்கு எடுத்துக் கொண்டேன்.

"தத்வவிவேசனீ"யையும், பாரதியாரின் மொழிபெயர்ப்பையும் கொண்டு ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் பிரித்து வைத்திருந்த சுலோக எண்கள் ஒரு சில முரண்பட்டன. அதுவும் முதல் அத்தியாயத்திலேயே. நான் சுலோகங்களாகப் முதல் பகுதியில் பிரித்து வைத்திருந்தது 46 சுலோகங்கள் ஆகும். ஆனால் தத்வவிவேசனீ மற்றும் பாரதியாரில் 47 சுலோகங்கள் இருந்தன. சுலோக எண்களில் தத்வவிவேசனீ, பாரதியாரின் மொழிபெயர்ப்பும் ஒன்றாக இருக்கின்றன. மற்றபடி பிரபுபாதரின் மொழிபெயர்ப்பு மற்றும் பல ஆங்கிலப் பதிப்புகளில் 46 பகுதிகளே இருக்கின்றன. எனவே, நான் ஆரம்பத்தில் செய்தது போலவே சுலோகப் பிரிப்பில் இஸ்கானின் "பகவத் கீதை - உண்மையுருவில்" புத்தகத்தையே பின்பற்றியிருக்கிறேன்.

700 சுலோகங்களைச் சொல்ல 700 நிமிடம் என்றாலும் கிட்டத்தட்ட 12 மணி நேரம், அதாவது சூரியன் இருப்பதே அவ்வளவு நேரம்தானே. அதற்குள் எப்படி இது பேசப்பட்டிருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். விளக்கவுரைகள் இல்லாமல் பகவத்கீதையின் வரிகளை மட்டுமே படித்தால், மொத்த பகவத் கீதையுமே இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகும். போரென்றால், போராளிகள் சூரியன் உதிக்கும்போதே தயாராகிவிடுவார்கள். எனவே கிருஷ்ணனும், அர்ஜுனனும் இரண்டு மணிநேரத்திற்குள்ளாகவே பேசி முடித்திருப்பார்கள். அர்ஜுனனும் முதல் நாள் போருக்கு அன்றே தயாராகியிருப்பான்.

தமிழில், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படித்தால் 3 மணி, 51 நிமிடம், 4 விநாடி நேரம் ஆகிறது.  இதையே சம்ஸ்க்ருதத்தில் படித்தால் இதைவிடக் குறைவான நேரமே தேவைப்படும். நமது பதிப்பில், பேசும் பாத்திரத்தால் சொல்லப்படும் பெயர் ஒரு முறையும், அந்தப் பாத்திரத்தின் பிரபலமான பெயர் அடைப்புக்குறிக்குள் மற்றொரு முறையும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. உதாரணத்திற்கு, "புருஷரிஷப" என்ற சம்ஸ்க்ருதச் சொல், நம் மொழிபெயர்ப்பில், "ஓ மனிதர்களில் காளையே" என்று ஒரு முறையும், அடைப்புக்குறிக்குள் {அர்ஜுனா} என்று மற்றுமொரு முறையும் சொல்லப்பட்டிருக்கும். மேலும் சில, பல விளக்கங்களும் அடைப்புக்குறிகளுக்குள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மட்டுமே கூட நேரம் இரண்டு மடங்கு அதிகமாகியிருக்கலாம். மொழிபெயர்ப்பைப் படித்து ஒலிக்கோப்பாகவும், காணொளிக் கோப்பாகவும் பதிவு செய்த சகோதரி தேவகி ஜெயவேலன் மற்றும் வலையேற்றிய நண்பர் ஜெயவேலன் ஆகியோரின் தன்னலம் கருதாத உழைப்பால், நமது மொழிபெயர்ப்பில் பகவத் கீதையைப் படிக்க ஆகும் நேரத்தைக் கணக்கிட முடிந்தது. அவர்களுக்கு நன்றி என்று சொல்லி, என்னில் இருந்து அவர்களைப் பிரிக்க நான் விரும்பவில்லை.

மூலமொழியின் மொழிநடை 1600 வருடங்கள் முந்தையது என்றும், பகவத் கீதை ஓர் இடைசெருகல் என்றும். சிலர் சொல்கிறார்கள். ஆனால் இது குறைந்தது 6000 வருடங்களுக்காவது முந்தையது என்று நம்பப்படுகிறது. புத்தர் பகவத்கீதையைப் பற்றிப் பேசவில்லை எனவே இது புத்தருக்கும் பிந்தையது என்று சிலர் சொல்கிறார்கள். பகவத்கீதையிலோ, மகாபாரதத்திலோ புத்தர் குறித்தோ, பௌத்தம் குறித்தோ பேசப்படவில்லை. அதனால் புத்தருக்கு முந்தையது என்றும் கொள்ளலாமல்லவா? இதைச் சொல்லும்போது, நான் பகவத் கீதையை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது கேட்கப்பட்ட சில கேள்விகளையும் இங்கே நினைவுகூர வேண்டும்.

இது கொலை செய்யச் சொல்லும் நூல் தானே என்று ஒருவர் கேட்டார். அவருக்கு நான் பதில் சொல்லவில்லை. இது குழந்தைத் தனமான கேள்வி. பகவத்கீதை அருளப்படும்போது அவர்கள் நின்று கொண்டிருந்தது போர்க்களத்தில். போரில் கொல்வது நீதியாகாதா? கௌரவர்கள் பாண்டவர்களைக் கொல்லத் துணிந்தது எத்தனை முறை? நீதி வெல்லவும், அநீதி அழியவுமே கிருஷ்ணன் இங்கே அவர்களைப் போரிடத் தூண்டுகிறான்.

கர்மயோகத்தின்படி க்ஷத்திரியன் என்றால் போரிட்டே ஆக வேண்டுமா என்று ஒருவர் கேட்டார். க்ஷத்திரியர்களே நிலத்தைக் காப்பவர்களாக இருந்தார்கள். இன்றைய இராணுவ வீரரிடம் சென்று நாம் இப்படிப் பேச முடியுமா?  பாண்டவர்கள் போரைத் தடுக்க எவ்வளவோ முயன்றார்கள். துரியோதனனே போரைத் தூண்டினான். இறுதியாகத்தான் பாண்டவர்கள் போரைக் கைக்கொண்டார்கள். நாட்டைக் காப்பதே இராணுவ வீரனின் தொழில். தன் நாட்டை இழந்தும் அதை மீட்காமல் இருந்த அர்ஜுனனையே கிருஷ்ணன் போருக்குத் தூண்டுகிறான்.

போரிடவில்லை என்றால் உனக்குப் பழி வரும் என்று கிருஷ்ணன் அர்ஜுனனை மிரட்டுகிறானே, பழிக்கு அஞ்சி செயல்பட வேண்டுமா? என்று ஒருவர் கேட்டிருந்தார். இஃது அர்ஜுனனுக்கு உற்சாகமூட்ட சொல்லப்பட்ட வார்த்தை. அர்ஜுனன் போரிடாவிட்டால் நிச்சயம் கோழை என்றே சொல்லப்பட்டிருப்பான். அதன் விளைவு என்ன ஆகியிருக்கும். அவர்களுக்கு நாடும் கிடைக்காமல், ஒன்றும் கிடைக்காமல் அழிவை அடைந்திருப்பார்கள்.

இறந்தால் சொர்க்கம், வென்றால் நாடு என்கிறானே, நாட்டைச் சாக்காகக் கொண்டு பிறரைக் கொல்லலாமா? என்று ஒருவர் கேட்டிருந்தார். இதற்குப் பதில் கேள்விதான் கேட்க முடியும். ஒருவன் மற்றவர்கள் நாட்டையெல்லாம் திருடலாமா? அப்படி ஒருவன் தன் நாட்டைத் திருடினாலும் அதைவிட்டுக் கொடுத்துவிட்டு போய்விட வேண்டுமா? நாட்டை மீட்க வேண்டும் என்றால் கொல்ல வேண்டியிருக்கிறது வேறு வழியில்லை என்றால் கொன்றுத்தான் ஆகவேண்டும்.

கீதைக்கு விளக்கவுரை எழுதியவர்களில் முக்கியமானவர்கள் - ஆதிசங்கரர், ராமானுஜர், மத்வர் ஆகியோரும், பிற்காலத்தில் பால கங்காதர திலகர், வினோபாவே, காந்தி, அரவிந்தர், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சின்மயானந்தர் ஆகியோரும் ஆவர். இதற்குமேலும் கேள்விகளைக் கொண்டிருப்பவர்கள் மேற்கண்டவர்களின் விளக்கவுரைகளையோ, கோயந்தகரின் தத்வவிவேசனீ, பிரபுபாதரின் "பகவத்கீதை உண்மையுருவில்" ஆகியோரின் நூல்களையோ நாடினால் தெளிவு பெற முடியும். நான் இங்கே செய்திருப்பது வரிக்கு வரியான மொழிபெயர்ப்பு மட்டுமே. ஆனாலும், முடிந்தவரை உண்மைப் பொருள் மாறாதிருக்கப் பெரும் கவனத்தைச் செலுத்தியிருக்கிறேன். கடினமான சில இடங்களில் அடிக்குறிப்புகளையும் இட்டிருக்கிறேன்.

குருஷேத்திர இறுதிப் போருக்கு முன்னர், போரிட மறுத்த அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் அளித்த அறிவுரைகளே கீதை ஆகும். கீதைக்கு மூலம் மகாபாரதமே.

பகவத் கீதை 18 பகுதிகளில் 700 சுலோகங்களைக் கொண்டதாகும். {சில பதிப்புகளில் 711 சுலோகங்களும் உண்டு} ஒவ்வொரு பகுதியும் யோகம் என்று அழைக்கப்படுகிறது. பிரபஞ்சவுணர்வுடன் தனிப்பட்ட உணர்வை இணைக்கும் அறி்வே யோகமாகும். எனவே ஒவ்வொரு பகுதியும் முற்றான உண்மையை உணர்வதற்காக வெளிப்படுத்தப்படும் மிகச் சிறப்பான அறிவாகும் என்பதையே அஃது உணர்த்துகிறது.

பகவத் கீதையின் பகுதிகள் 1 முதல் 6 வரை கர்ம யோகமும், 7 முதல் 12 வரை பக்தி யோகமும், 13 முதல் 18 வரை ஞான யோகமும் முக்கியப் பொருளாகப் பேசப் படுகின்றன.

பொருளடக்கம்
பகுதி
எண்
பகுதியின் தலைப்பு காணொளி சுட்டி ஒலி சுட்டி நிமிட
ங்கள்
01 அர்ஜுனனின் மனவேதனை - அர்ஜுன விஷாத யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்12.29
02 கோட்பாடுகளின் சுருக்கம் - சாங்கிய யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்23.14
03 செயலில் அறம் - கர்மயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்13.33
04 அறிவறம் - ஞானகர்மசந்யாசயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்13.35
05 துறவின் அறம் - சந்யாசயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.47
06 தன்னடக்கத்தின் அறம் - தியானயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்14.28
07 பகுத்தறிவின் அறம் - ஞானவிஞ்ஞானயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.33
08 பரம்பொருளில் அர்ப்பணிப்பின் அறம் - அக்ஷர பிரம்மயோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.49
09 சிறந்த அறிவு மற்றும் பெரும்புதிரின் அறம் - ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்11.23
10 தெய்வீக மாட்சிமையின் அறம் - வீபூதி விஸ்தார யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்13.08
11 அண்டப்பெருவடிவக் காட்சி - விசுவரூப தரிசன யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்20.27
12 நம்பிக்கையறம் - பக்தி யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்07.08
13 பொருள் மற்றும் ஆத்ம பிரிவினையின் அறம் - க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்12.00
14 குணப்பிரிவினைகளின் அறம் - குணத்ரய விபாக யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்09.22
15 பரம நிலை அடைதலின் அறம் - புருஷோத்தம யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்08.12
16 தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்07.41
17 மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம் யூடியூப் MP3 பதிவிறக்கம்10.26
18 விடுதலை-துறவின் அறம் - மோஷ சந்நியாச யோகம்! யூடியூப் MP3 பதிவிறக்கம்24.49

மேற்கண்ட பொருளடக்கப் பட்டியிலிலுள்ள
பகுதியின் தலைப்பு சுட்டி: வலைப்பதிவு பக்கத்திற்கு (Post) இட்டுச் செல்லும்
காணொளி சுட்டி: காணொளி புத்தக காட்சிவிரிவுக்கு (Youtube link) இட்டுச் செல்லும்
ஒலிக்கோப்பு சுட்டி: ஒலிக்கோப்பிற்கு பதிவிறக்கத்திற்கு (Audio Download) இட்டுச் செல்லும்



பரம்பொருளைக் குறித்த துல்லியமான அடிப்படை அறிவு, உயர்ந்த உண்மை, படைப்பு, பிறப்பு, இறப்பு, செயல்களின் விளைவுகள், நித்தியமான ஆத்மா, விடுதலை {முக்தி, மோட்சம்} மனித இருப்பின் இலக்கு ஆகியவற்றைப் புரிந்து கொள்ளப் பகவத் கீதையில் ஏராளமான தகவல்கள் இருக்கின்றன. எனவே நண்பர்களே, கவனத்துடன் பொறுமையாகப் படிப்பீர்களாக...

நன்றி
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
21.12.2015, திருவொற்றியூர்


குறிப்பு: பதிவிறக்கத்திற்காகக் கொடுக்கப்படும் பிடிஎப் மற்றும் ஏனைய மின்நூல் வகைகள் இறுதியானவை அல்ல. தவறுகள் உணரப்படும்போதும், சுட்டிக்காட்டப்படும் போதும் எனத் தேவையான போதெல்லாம் பதிவுகள் திருத்தத்திற்குள்ளாகின்றன. எனவே இறுதியான பதிவுகளைப் படிக்க மேற்கண்ட சுட்டிகளைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். ஆடியோ கோப்பும், வீடியோ கோப்பும் திருத்தப்படுவதில்லை.
Bhagavad Geeta EPUB

Friday, October 09, 2015

விடுதலை மற்றும் துறவின் அறம் - மோக்ஷ சந்நியாச யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 042

Religion by Deliverance and Renunciation - Moksha–Sanyasa yoga! | Bhishma-Parva-Section-042 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 30) {பகவத் கீதை - பகுதி 18}

பதிவின் சுருக்கம் : முன்னர்ச் சொல்லப்பட்ட அனைத்து அறங்களின் முடிவுரைகளைக் கிருஷ்ணன் சுருக்கமாகத் தொகுப்பது; அற வடிவங்கள் அனைத்தையும் கைவிட்டுத் தன்னைச் சரணடையுமாறு அர்ஜுனனிடம் கிருஷ்ணன் சொல்வது; அதுவே வாழ்வின் முழுமை என்றும் அர்ஜுனனுக்குக் கிருஷ்ணன் விளக்குவது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, துறத்தல் {சந்நியாசம்} மற்றும் கைவிடல் {தியாகம்} ஆகியவற்றின் உண்மை இயல்புகளை, ஓ! புலன்களின் தலைவா, ஓ! கேசியைக் கொன்றவனே {கிருஷ்ணா} தனித்தனியாக அறிந்து கொள்ள விரும்புகிறேன்" என்றான் {அர்ஜுனன்} [1]. 18:1


[1] ""ஸந்ந்யாஸ Sanyasa" என்பதை நான் "துறத்தல்" எனக் கொண்டிருக்கிறேன். K.T.டெலங்க்-ம் அப்படியே செய்திருக்கிறார். திரு.டேவீசோ "விலகி நிற்கும் நிலை" எனக் கொள்கிறார். அதே போல "த்யாக Tyaga" என்பதை நான் "கைவிடல்" எனக் கொண்டிருக்கிறேன். திரு.டேவீசோ "துறவு" எனக் கொள்கிறார். எனினும், இந்த இரு வார்த்தைகள் என்ன பொருளைக் கொண்டிருக்கின்றன என்பதைப் பின்வரும் சுலோகங்கள் முழுமையாக விளக்குகின்றன. அப்போது அதை அறியலாம்" என்று இங்கே விளக்கமளிக்கிறார் கங்குலி.

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "ஆசையுடன் செய்யப்படும் செயல்களை நிராகரிப்பதே துறத்தல் {சந்நியாசம்} எனக் கற்றோரால் அறியப்படுகிறது. அனைத்துச் செயல்களின் பலனையும் கைவிடுவதே, பகுத்தறிவோரால், கைவிடல் {தியாகம்} என அழைக்கப்படுகிறது. 18:2

அறிவுடைய மனிதர்கள் சிலர் செயலையே தீமையென {கருதி} கைவிட வேண்டும் என்று சொல்கின்றனர், பிறரோ வேள்வி, கொடைகள் மற்றும் தவம் போன்ற செயல்கள் கைவிடப்படக்கூடாது என்று சொல்கின்றனர். 18:3

ஓ! மனிதர்களில் புலியே {அர்ஜுனா}, கைவிடல் {தியாகம்} என்பது மூன்று வகைப்படும் என்பதால், ஓ! பரதனின் மகன்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, கைவிடல் {தியாகம்} என்பதில் என் முடிவைக் கேட்பாயாக. 18:4

வேள்வி, கொடைகள், தவம் ஆகிய செயல்கள் கைவிடப்படக்கூடாது. உண்மையில் அவை செய்யப்படவே வேண்டும். வேள்வி, கொடை, தவம் ஆகியவையே அறிவுடையோரின் தூய்மைக்கானவை {தூய்மைக்கான செயல்களாகும்}. 18:5

ஆனால் அந்தச் செயல்களும் கூடப் பற்று மற்றும் பலன் ஆகியவற்றைக் கைவிட்டே செய்யப்பட வேண்டும். ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இதுவே எனது  தீர்மானமான உயர்ந்த {உத்தமமான}கருத்தாகும். 18:6

(சாத்திரங்களில்) பரிந்துரைக்கப்பட்ட ஒரு செயலைத் துறப்பது முறையாகாது. அதைத் துறப்பதென்பது மயக்கத்தினால் {மாயையினால்} ஏற்படுவதாகும். {எனவே}, அஃதை {அந்த முறையற்ற துறவு} இருளின் தன்மை வாய்ந்ததாகத் {தமோ குணம் எனத்} தீர்மானிக்க வேண்டும். 18:7

உடலின் வலியால் (அஞ்சி), அதைத் துயரமாகக் (துயரத்தின் மூலாதாரமாகக்) கருதி செயலைக் கைவிடும்போது, பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்ட அத்தகு கைவிடலைச் {தியாகத்தைச்} செய்யும் ஒருவன், அந்தக் கைவிடலின் {தியாகத்தின்} பலனை ஒருபோதும் அடையமாட்டான். 18:8

(சாத்திரங்களில்) பரிந்துரைக்கப்பட்ட செயல் ஒன்றை, {அது} செய்யப்பட வேண்டியதே என்று (அதைக் கருதி) செய்து, அதில் பற்றையும், பலனையும் கைவிட்டால் {தியாகம் செய்தால்}, ஓ! அர்ஜுனா, அந்தக் கைவிடல் {தியாகம்} நற்குணத்தின் தன்மை கொண்டது {சாத்வீகம்} எனக் கருதப்படுகிறது. 18:9

அறிவைக் கொண்டு, ஐயங்களை அகற்றி, நற்குணத்தன்மை கொண்டவனான கைவிடுபவன் {தியாகி} ஒருவன், ஏற்கத்தகாத செயலில் வெறுப்பையோ, ஏற்கத்தகுந்தவற்றில் பற்றையோ கொள்வதில்லை [2]. 18:10

[2] "இங்கே சொல்லுக்குச் சரியான பொருளைக் கொடுக்கும் திரு.டேவீஸ் {Mr.Davies}, இந்த வாக்கியத்தின் உண்மையான பொருளையோ, பயனிலையையோ சரியாகப் பின்பற்றவில்லை. "குஸலே kusala {ஏற்கத்தக்க} அகுஸலம் akusala {ஏற்கத்தகாத}" ஆகியவற்றுக்கு அவர் லாசனை {Lassen} பின்பற்றி "செழிப்பான", "செழிப்பற்ற" என்று பொருள் கொள்கிறார். "மேதாவீ medhabi {அறிவைக் கொண்டவன்}" என்பதற்கு K.T.டெலங்க் "திறன்வாய்ந்தவன்" என்று பொருள் கொள்கிறார். அது நல்ல பயன்பாடு என்று ஏற்கத்தகாதது" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

உடல் கொண்ட ஒரு மனிதனால் செயல்களை முற்றாகக் கைவிட முடியாது, (எனவே), செயல்களின் பலனை எவன் கைவிடுவானோ {தியாகம் செய்வானோ}, அவனே உண்மையாகக் கைவிடுபவன் {தியாகி} எனச் சொல்லப்படுகிறான். 18:11

கைவிடாதவர்கள் {தியாகம் செய்யாதோர்}, தீமையானது, நன்மையானது மற்றும் இரண்டும் கலந்தது என (இந்த) மூன்று வகைப் பலன்களை {கர்ம பயன்களை} இதன் பிறகு {மறுமையில்} அடைகிறார்கள். ஆனால் துறப்பவர்களுக்கோ {துறவிகளுக்கோ} எதுவும் இல்லை {அவர்கள் எதையும் அடைவதில்லை} [3]. 18:12

[3] இங்கே துறப்பவர் என்று சொல்லப்படுவது செயல்களின் பலனைத் துறந்தவர் எனப் பொருள் படும் என்று ஸ்ரீதரர் சொல்வதாக இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, செயல்களை அழிக்கும் முறைகளாகச் சாங்கியத்தில் அறிவிக்கப்பட்டவையும், செயல்கள் அனைத்தின் நிறைவுக்கானவையுமான ஐந்து{5} காரணங்களை என்னிடமிருந்து கேட்பாயாக [4]. 18:13

[4] ""க்ருதாந்தே Kritante {செயல்களின் அழிவுக்கான முறை}" என்பதைச் சங்கரர், "ஸாங்க்யே Sankhye {சாங்கியம்}" என்ற பெயர்ச்சொல்லின் உரிச்சொல்லாக {பெயர்ச்சொல்லின் விளக்கத்தைக் கூட்டப் பயன்படுத்தப்படும் தொடர்புச் சொல்லாக} எடுத்துக் கொண்டு, அது வேதாந்தத்தைக் குறிப்பதாக நினைத்துக் கொள்கிறார். {அதாவது, "செயல்களை அழிக்கும் முறைகளாகச் சாங்கியத்தில் அறிவிக்கப்பட்டவையும்" என்பதற்குப் பதில் "சாங்கிய சாஸ்த்திரத்தில் அறிவிக்கப்பட்டவையும்" என்று நினைத்துக் கொள்கிறார்}. ஸ்ரீதரரும் அதே கருத்தையே கொண்டிருப்பதாகத் தெரிகிறது" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

(அவை {ஐந்து காரணங்களாவன}) தளம் {இடம்}, செயல்படுபொருள் {கர்த்தா [அ] செயலைச் செய்பவன்}, பல்வேறு வகைகளிலான உறுப்புகள் {கரணங்கள்}, பல்வேறு விதமான முயற்சிகள் {செயல்முறைகள்} மற்றும் அவற்றுடன் ஐந்தாவதாக தெய்வங்கள் எனவும் கொள்வாயாக [5]. 18:14

[5] இங்கே "தளம்" என்பது உடலைக் குறிப்பதாகும். "செயல்படு பொருள்" என்பது தன்னைத் தானே செயல்படுபவன் என நினைத்துக் கொள்ளும் மனிதனைக் குறிப்பதாகும். இங்கே "உறுப்புகள்" எனப்படுவன பார்வை முதலிய புலனுறுப்புகளாகும். முயற்சி {செயல்முறை} என்பது பிராணன் முதலிய உயிர்க்காற்றுகளின் செயல்பாடுகளாகும். "தெய்வங்கள்" என்பன, கண்கள் முதலிய பிற புலனுறுப்புகளை ஆட்சி செய்வனவாகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

உடல், பேச்சு, அல்லது மனம் ஆகியவற்றைக் கொண்டு ஒரு மனிதன் எந்தச் செயலையும் நீதியுடனோ, மாறாகவோ {நீதியற்றோ} செய்தால், இவை ஐந்தே அதன் {அந்தச் செயலின்} காரணங்களாகும். 18:15

அஃது இப்படியிருக்கையில், தூய்மையில்லா அறிவின் காரணமாக, தன்னை மட்டுமே செயல்படுபொருளாக எவன் காண்பானோ, அவன் மந்த மனத்தால் {ஒன்றையும்} காணவில்லை {அவன் காட்சியற்றவன் ஆவான்}. 18:16

{நான் என்ற} அகங்கார உணர்வற்று, களங்கம் {பற்று} இல்லாத மனம் கொண்டவன் எவனோ, அவன் இந்த மக்கள் அனைவரையும் கொன்றாலும், கொலையாளியாவதில்லை, (அந்தச் செயலால்) {அவன்} பிணைக்கப்படுவதுமில்லை {கட்டப்படுவதுமில்லை} [6]. 18:17

[6] "அகங்கார உணர்வற்று" என்பது தன்னைச் செயல்படுபவனாகக் கருதாமல் என்று பொருள் படும், "களங்கம்" என்பது பலனில் ஆசை என்ற கறையாகும் என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகியவை செயல்களைத் தூண்டும் மூன்று பிரிவுகளாக அமைகின்றன. கருவி, செயல், செயல்படுபொருள் {கர்த்தா, தலைவன்} ஆகியவை செயல் நிறைவின் மூன்று பிரிவுகளாக இருக்கின்றன [7]. 18:18

[7] "ஸங்க்ரஹ Samgrahas" என்பதைத் திரு.டேவீஸ் "நிறைவு" எனக் கொள்கிறார். இதுவே சரி என நான் நினைக்கிறேன். K.T.டெலங்க் இதையே "சுருக்கம்" என்பதற்கு இணையாகப் பொருள் கொள்கிறார்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

அறிவு, செயல், செயல்படுபொருள் {கர்த்தா, தலைவன்} ஆகியவை தங்கள் குணங்களில் கொண்டுள்ள வேறுபாடுகளின் படி குண விளக்கக்கூற்றில் மூன்று வகையாக அறிவிக்கப்படுகிறது. அவற்றையும் முறையாகக் கேட்பாயாக [8]. 18:19

[8] இங்கே குணங்களின் விளக்கக்கூற்று என்பது சாங்கிய அமைப்பு {சாங்கியம்} ஆகும் என விளக்குகிறார் கங்குலி.

அனைத்துப் பொருட்களிலும் ஒரே நித்தியமான சாரம், பிரிவுபட்டனவற்றுள் பிரிவில்லாமல், எதனால் {எந்த அறிவால்} காணப்படுமோ, அதுவே நற்குணத் தன்மை கொண்ட அறிவு {சாத்வீகம்} என்பதை அறிவாயாக. 18:20

அனைத்துப் பொருட்களுக்குள்ளும் உள்ள பிரிவினையின் விளைவால், அவற்றைப் பல்வேறு வகையானவையாகவும், பல்வேறு சாரங்களாகவும் எந்த அறிவு பகுத்தறியுமோ, அந்த அறிவு பேரார்வத்தின் தன்மை கொண்ட அறிவு {ராஜசம்} என்பதை அறிவாயாக. 18:21

ஆனால், அதுவே முழுமையானது என்றெண்ணி (ஒவ்வொரு) தனிப்பொருளுடனும் எது பற்று கொள்ளுமோ, காரணம் இல்லாத {அறிவில்லாத}, உண்மையில்லாத, அற்பத்தனமான அஃது இருளின் தன்மை கொண்ட அறிவு {தாமசம்} என்று சொல்லப்படுகிறது. 18:22

பற்று, ஆசை, வெறுப்பு ஆகியன இல்லாமல், பலனை எதிர்பாராமல் ஒருவனால் செய்யப்படுவதும், {சாத்திரங்களில்} பரிந்துரைக்கப்பட்டதுமான செயல் நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீகம்} என்று சொல்லப்படுகிறது.

ஆசைக்குகந்த பொருட்களை நாடியோ, அகங்காரம் நிறைந்தோ ஒருவனால் செய்யப்பட்டு எது பெருந்துன்பத்தைத் தருமோ, அந்தச் செயல் பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜசம்} என்று சொல்லப்படுகிறது. 18:24

விளைவுகள், இழப்பு, (பிறருக்கு நேரும்) தீங்கு, (ஒருவனின் சொந்த) சக்தி ஆகியவற்றைக் கருதாமல், மயக்கத்தில் எது செய்யப்படுமோ, அந்தச் செயல் இருளின் தன்மை கொண்டது {தாமசம்} என்று சொல்லப்படுகிறது [9]. 18:25

[9] இங்கே இத்தகு செயலை கங்குலி "பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜசம்}" என்றே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் மூலத்தையும், இன்னும் பிற பதிப்புகளையும் ஒப்புநோக்குகையிலும், பொருளின் தன்மையை உணர்ந்து பார்க்கையிலும் இது தவறெனப் படுவதால் அந்தச் செயல் "இருளின் தன்மை கொண்டது {தாமசம்}" என்று இங்கே திருத்தி மூலத்தில் "தத் தாமஸம் உச்யதே tat tamasam ucyate" என்று உள்ளதின் தமிழ்ப் பொருளையே மேலே கொடுத்திருக்கிறேன்.

நிலையான தன்மையும் {உறுதியும்}, சக்தியும் {ஊக்கமும்} கொண்டு, வெற்றி மற்றும் தோல்வியால் அசைக்கப்படாமல், {நான் என்ற எண்ணம் அற்றவனாக} தன்னைப் பற்றி ஒருபோதும் பேசாதவனும், பற்றில் இருந்து விடுபட்டவனுமான செயல்படுபொருளானவன் {கர்த்தா} நற்குணத் தன்மை கொண்டவன் {சாத்வீகன்} என்று சொல்லப்படுகிறான். 18:26

பற்று நிறைந்து, செயல்களின் பலனை விரும்பி, பேராசை, கொடூரம் ஆகியவற்றைக் கொண்டு, தூய்மையற்றவனாக இருந்து, இன்பம் மற்றும் துன்பங்களை உணர்பவனான செயல்படுபொருளானவன் {கர்த்தா} பேரார்வத் தன்மை கொண்டவன் {ரஜோ குணத்தான்} என்று சொல்லப்படுகிறான். 18:27

யன்பாடு தெரியாமல், பகுத்தறிவற்று, பிடிவாதம் கொண்டு, வஞ்சகம் நிறைந்து, தீங்கு செய்து, சோம்பல் நிறைந்து, நம்பிக்கையற்று, காலந்தாழ்த்துபவனான செயல்படுபொருளானவன் {கர்த்தா} இருள் தன்மை கொண்டவன் {தமோ குணத்தான்} என்று சொல்லப்படுகிறான் [10]. 18:28

[10] ""ப்ராக்ருத: Prakrita" என்பதற்கு ஸ்ரீதரரைப் பின்பற்றி "பகுத்தறிவற்ற" என்று பொருள் கொண்டிருக்கிறேன். திரு.டேவீசோ இதை "தீங்கு செய்யும்" என்று பொருள் கொள்கிறார்" என இங்கே விளக்குகிறார் கங்குலி.

ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறிவாற்றல் {புத்தி, அறிவுத்திறன்} மற்றும் மனவுறுதி ஆகியவற்றின் மூன்றுவித பிரிவுகளை அதனதன் தன்மைகளின்படி {குணங்களின்படி} மிகவிரிவாகவும் துல்லியமாகவும் நான் அறிவிக்கப்போகிறேன் கேட்பாயாக. 18:29

{மூன்று வகை புத்தி/அறிவுத்திறன்:}
1. செயல் மற்றும் செயலின்மை, செய்யப்பட வேண்டியவை மற்றும் கூடாதவை, அச்சம் மற்றும் அச்சமின்மை, பற்று மற்றும் விடுதலை ஆகியவற்றை அறிந்த அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீக புத்தி} ஆகும். 18:30

2. சரி {அறம்} மற்றும் தவறு {மறம்} [11], செய்யப்பட வேண்டிவை மற்றும் கூடாதவை ஆகியவற்றில் குறையுடன் பகுத்தறியும் {உள்ளபடி அறியாத} அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பேரார்வத் தன்மை கொண்டது {ராஜச புத்தி} ஆகும். 18:31

[11] இது மூலத்தில் தர்மம் அதர்மம் என்றே இருக்கிறது. எனவே இங்கே அறம், மறம் என்றே நாம் கொள்ளலாம்.

3. தவறானதைச் சரியென்றும், அனைத்தையும் நேர்மாறாகவும் கருதி இருளால் மறைக்கப்பட்ட அறிவாற்றல் {புத்தி}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, இருளின் தன்மை கொண்டது {தாமச புத்தி} ஆகும். 18:32

{மூன்று வகையான மனவுறுதிகள்:}

1. மனம், உயிர்மூச்சுகள், புலன்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை அர்ப்பணிப்பின் {யோகத்தின்} மூலம் எது தளராமல் கட்டுப்படுத்துமோ, அந்த மனவுறுதி, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, நற்குணத்தின் தன்மை கொண்டது {சாத்வீக மனவுறுதி} ஆகும் [12]. 18:33

[12] திரு.டேவீஸ் "தளராமல்" என்பதை அர்ப்பணிப்பின் {பக்தி} உரிச்சொல்லாகக் {தளராத பக்தி எனக்} கொள்கிறார். இலக்கணப்படி இது தவறானதாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி. டேவீசைப் போலவே பாரதியாரும் இதை "பிறழ்ச்சியில்லாத யோகம்" என "தளராத அர்ப்பணிப்பு" என்பதற்கு இணக்கமாவே சொல்கிறார்.

2. ஆனால், ஓ! அர்ஜுனா, அறம், இன்பம், பொருள் ஆகியவற்றைப் பற்றின் மூலம் தாங்கி, பலனை எது விரும்புமோ, அந்த மனவுறுதி, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜச மனவுறுதி} ஆகும். 18:34

3. பகுத்தறிவற்ற ஒரு மனிதன், உறக்கம், அச்சம், கவலை, மனச்சோர்வு, மடமை ஆகியவற்றை எதனால் கைவிடாமல் இருப்பானோ, அந்த மனவுறுதி இருளின் தன்மை கொண்டதாக {தாமச மனவுறுதி எனக்} கருதப்படுகிறது. 18:35

ஓ! பாரதக் குலத்தின் காளையே {அர்ஜுனா}, மூவகை இன்பங்களை என்னிடம் இருந்து இப்போது கேட்பாயாக.
1. மீண்டும் மீண்டும் (அனுபவிப்பதால்) எதில் ஒருவன் இன்பதைக் காண்பானோ, எது வலிக்கு {துன்பத்துக்கு} ஒரு முடிவைக் கொண்டு வருகிறதோ, எது தொடக்கத்தில் விஷமாகவும், ஆனால் முடிவில் அமுதாகவும் இருக்கிறதோ, தன்னறிவினால் உண்டாக்கப்பட்ட மன அமைதியில் எழுந்த [13] அந்த இன்பமே நற்குணத் தன்மை கொண்டது {சாத்வீக இன்பம்} எனச் சொல்லப்படுகிறது. 18:36-37

[13] "'ஆத்ம புத்தி ப்ரஸாதஜம் Atma-budhi-prasadajam' - இதை K.T.டெலங்க், சங்கரரால் கொடுக்கப்படும் மாற்று விளக்கத்தைப் பின்பற்றிச் 'சுயத்தின் தெளிந்த அறிவு' எனக் கொள்கிறார். திரு.டேவீஸ், 'ஒருவனது சுய மன அமைதி' என அதை வழங்குகிறார். நானோ ஸ்ரீதரரைப் பின்பற்றி, அதற்குத் 'தன்னறிவினால் உண்டாக்கப்பட்ட மன அமைதியில் எழுந்தது" என்று பொருள் கொண்டிருக்கிறேன்" என இங்கே விளக்குகிறார் கங்குலி. "தன் மதியில் பிறப்பது" என இதைப் பாரதியார் பொருள் கொள்கிறார்.

2. புலன்நுகர் பொருட்களில் புலன்கள் கொள்ளும் தொடர்பால் எது உண்டாகுமோ, முதலில் அமுதமாகவும், முடிவில் விஷமாகவும் எது தோன்றுமோ, அந்த இன்பம் பேரார்வத்தின் தன்மை கொண்டது {ராஜச இன்பம்} எனக் கொள்ளப்படுகிறது. 18:38

3. தொடக்கத்திலும், அதன் விளைவுகளிலும் ஆத்மாவை எது மயக்குமோ, உறக்கம், சோம்பல், மடமை ஆகியவற்றில் இருந்து எது பிறக்குமோ, அந்த இன்பம் இருளின் தன்மை கொண்டது {தாமச இன்பம்} என விளக்கப்படுகிறது. 18:39

இயற்கையில் பிறக்கும் இந்த மூன்று குணங்களில் இருந்து விடுபட்ட ஒருவன், பூமியிலோ, சொர்க்கத்தில் தேவர்களுக்கு மத்தியிலோ கூட இல்லை. 18:40

பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் கடமைகளும் கூட, ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே {அர்ஜுனா}, இயற்கையில் பிறக்கும் (இந்த மூன்று) குணங்களின் மூலமே வேறுபடுகின்றன. 18:41

மன அமைதி {மனவடக்கம்}, தற்கட்டுப்பாடு {புலனடக்கம்}, தவத்துறவுகள், தூய்மை, மன்னிக்கும் தன்மை {பொறுமை}, நேர்மை, அறிவு, அனுபவம் மற்றும் (மறுமையில் உள்ள இருப்பின்) நம்பிக்கை {ஆத்திகம்} ஆகிய பிராமணர்களின் கடமைகள் (அவர்களுக்குச் சரியான) இயற்கையில் இருந்தே பிறக்கின்றன. 18:42

வீரம், ஆற்றல், உறுதி, திறமை, போரில் புறமுதுகிடாமை, ஈகை, இறைமை {ஆட்சியாளராக இருக்கும் தன்மை} ஆகிய க்ஷத்திரியர்களின் கடமைகள் (அவர்களுக்குச் சரியான) இயற்கையில் இருந்தே பிறக்கின்றன. 18:43

உழவு, கால்நடை வளர்த்தல் {கௌரக்ஷ்ய go-raksya = பசுக் காத்தல்}, வணிகம் ஆகியவை வைசியர்களின் இயல்பான கடமைகளாகும். 

அதே போலச் சூத்திரருக்கும், அவர்களுக்கு இயற்கையாக ஏற்பட்ட தொண்டே [14] கடமையாகும். 18:44

[14] இங்கே கங்குலியில் இருந்து நான் சற்று விலகியிருக்கிறேன். இங்கு அவர் "Servitude", அஃதாவது "அடிமைத்தனம்" என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். இது மூலத்தில் "பரிசர்யா paricaryā" என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு "தொண்டு" என்றும் "சேவை" என்றும் பொருள் கொள்ளலாம். அடிமைத்தனம் என்ற சொல் அங்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாரதியார், பிரபுபாதர், கோயந்தகர் ஆகியோர் இங்குத் தொண்டு என்றே பொருள் கொள்கின்றனர்.

தனது சொந்த கடமைகளில் ஈடுபடும் ஒவ்வொரு மனிதனும், முழுமை அடைகிறான் {சித்தி அடைகிறான்}. தனது கடமைகளின் பயன்பாட்டின் மூலம் ஒருவன் முழுமையை எப்படி அடைகிறான் என்பதை இப்போது கேட்பாயாக. 18:45

எவனில் இருந்து அனைத்து உயிரினங்களின் அசைவும் தோன்றுகின்றனவோ, எவன் இவை அனைத்திலும் படர்ந்தூடுருவி இருக்கிறானோ, அவனை, தனது சொந்த கடமையில் (ஈடுபட்டு) வழிபட்டே, ஒருவன் முழுமையை அடைகிறான் {தனக்குரிய கர்மத்தால் அவனைப் பூஜை செய்தே ஒருவன் ஈடேறுகிறான்}. 18:46

மற்றொருவனின் கடமையை {பரதர்மத்தை} நன்கு செய்வதை விட, குறையுடன் செய்யப்படும் தன் கடமையே {சுயதர்மமே - தன்னறமே} சிறந்ததாகும். (ஒருவனது சொந்த) இயல்பு {இயற்கை} பரிந்துரைக்கும் கடமையைச் செய்வதால், ஒருவன் பாவத்தை அடைவதில்லை [15]. 18:47

[15] இந்த இடத்தில் பாரதியார் மிக அழகாக, "இயற்கையிலேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்" என்கிறார். பிரபுபாதர், "ஒருவனது இயற்கைக்கு ஏற்ப விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பாவ விளைவுகளால் என்றும் பாதிக்கப்படுவதில்லை" என்கிறார்.

ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, செயல்கள் அனைத்திலும் தீமையானது [16] நெருப்பைச் சூழும் புகை போல உள்ளது என்பதால், தன் இயல்பான கடமையில் தீமையின் களங்கம் இருந்தாலும், அதை {தன் இயற்கை கடமையை} ஒருவன் கைவிடக்கூடாது. 18:48

[16] இங்கே மூலத்தில் "தோஷம் dosam" என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பாரதியார் "குறை" என்று பொருள் கொள்கிறார். பிரபுபாதர் இங்கே "தோஷம்" என்ற சம்ஸ்க்ருத சொல்லையே பயன்படுத்துகிறார். தீமை என்பதிலும் பெரிய தவறில்லை என்றே நான் புரிந்து கொள்கிறேன்.

எங்கும் பற்றற்ற மனம் கொண்டவன் எவனோ, தன்னைக் கட்டுப்படுத்தியவன் எவனோ, ஆசை விலகியவன் எவனோ, அவனே துறவின் மூலம் செயலில் இருந்து விடுதலையடைந்து உயர்ந்த முழுமையை அடைகிறான். 18:49

(இந்த வகை) முழுமையை அடைந்த ஒருவன், அறிவின் உயர்ந்த நிலையான பிரம்மத்தை எப்படி அடைகிறான் என்பதை என்னிடம் இருந்து சுருக்கமாக அறிந்து கொள்வாயாக. 18:50

தூய மனதுடன், தனது உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய பிற புலன்நுகர் பொருட்களைத் துறந்து, பற்றையும் வெறுப்பையும் கைவிட்டு, தனிமையான இடத்தில் வசித்து, குறைவாக உண்டு, பேச்சு, உடல், மனம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி {வென்று}, எவன் தியானம் மற்றும் நுண்மமாதலில் {யோகத்தில்} எப்போதும் நோக்கம் கொண்டுள்ளானோ, எவன் வேறுபாடின்றி இருக்கிறானோ, எவன் அகங்காரம், வன்முறை, செருக்கு, காமம், கோபம் மற்றும் சூழ்ந்திருப்பவற்றை (அனைத்தையும்) கைவிடுகிறானோ, தன்னலத்தில் இருந்து விடுபட்டு, (மன) அமைதியுடன் இருக்கும் அவனே பிரம்மத்தில் கலப்பதற்குத் தகுந்தவனாகிறான். 18:51-53

பிரம்மத்தில் ஒன்று பட்டு, ஆவியில் அமைதியடைந்த (அத்தகு) ஒருவன் வருந்தமாட்டான், ஆசைப்படமாட்டான்; அனைத்துயிரையும் ஒன்றாகக் கருதும் அவன் என்னிடம் உயர்ந்த அர்ப்பணிப்பை {பக்தியை} அடைகிறான். 18:54

(அந்த) அர்ப்பணிப்பைக் {பக்தியைக்} கொண்டு அவன் என்னைப் புரிந்து கொள்கிறான். நான் என்னவாக இருக்கிறேன்? நான் யார்? என்று உண்மையில் புரிந்து கொண்டு, அதன்காரணமாக அவன் என்னுள் {பிரம்மத்துள்} [17] நுழைகிறான். 18:55

[17] ""விஸதே ததநந்தரம் visate tad-anantaram" என்று மூலத்தில் உள்ளது. இதற்குப் பாரதியார் "தத் (அஃது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்" எனப் பொருள் கொள்கிறார். பிரபுபாதர் "இறைவனின் திருநாட்டில் நுழைய முடியும்" எனப் பொருள் கொள்கிறார். கோயந்தகர், "அக்கணமே என்னிடம் ஐக்கியமாகிறான்" என்று பொருள் கொள்கிறார். இங்கே கோயந்தகரின் தத்வவிவேசனீ கங்குலியின் மொழிபெயர்ப்புடன் பொருந்துகிறது.

என்னையே புகலிடமாகக் கொண்டு அனைத்துச் செயல்களையும் அனைத்து நேரங்களிலும் செய்யும் ஒருவன் எனது அருளால் நித்தியமான அழிவற்ற பதத்தை  அடைகிறான். 18:56

செயல்கள் அனைத்தையும் உனது இதயத்தில் எனக்கே அர்ப்பணித்து, என்னிடம் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} மன நுண்மையுடன் {புத்தி யோகத்தில் ஈடுபட்டு}, உனது எண்ணங்களை என்னில் நிலைக்கச் செய்வாயாக. 18:57

என்னில் உனது எண்ணங்களை நிலைக்கச் செய்தால், எனது அருளால் இக்கட்டுகள் அனைத்தையும் நீ வெல்வாய். ஆனால், ஆணவத்தினால் நீ கேட்க மாட்டாயென்றால், (பின்னர்) நீ முற்றிலும் அழிவாய். 18:58

"நான் போரிட மாட்டேன்" என்று நீ ஆணவத்துடன் நினைத்தாயானால், அந்த உனது தீர்மானம் வீணாகும், (ஏனெனில்) இயற்கையே உன்னைக் கட்டுப்படுத்தும். 18:59

(உனது சொந்த) இயற்கையில் இருந்து எழும் உனது சொந்த கடமையால் கட்டப்பட்டிருக்கும் நீ, மயக்கத்தால் செய்ய விரும்பாததை, வலுக்கட்டாயமாக {தன்வசமில்லாமல்} நீ செய்வாய். 18:60

ஓ! அர்ஜுனா, தனது மாய சக்தியால், கருவி மேல் அமர்ந்திருப்பவர்களாக அனைத்து உயிரினங்களையும் மாற்றி, அந்த உயிரனங்களின் இதயப் பகுதியில் தலைவன் {ஈஸ்வரன்} வசிக்கிறான். 18:61

ஓ! பாரதா {அர்ஜுனா}, அனைத்து வகையிலும் அவனையே நீ தஞ்சமாகக் கொள்வாயாக. அவனது கருணையால் நித்திய பதமான உயர்ந்த அமைதியை அடைவாயாக. 18:62

இப்படியே, (மற்ற) எந்தப் பொருளைவிடவும் புதிர் நிறைந்த அறிவை நான் உனக்கு அறிவித்திருக்கிறேன். அதை முழுமையாக ஆராய்ந்து, நீ விரும்பியவாறு செயல்படுவாயாக. 18:63

மீண்டும் ஒருமுறை, அனைத்திலும் மிகப் புதிரான எனது தெய்வீக வார்த்தைகளைக் கேட்பாயாக. நீ எனக்கு மிகவும் அன்பானவன், எனவே, எது உனக்கு நன்மையோ, அதை நான் உனக்கு அறிவிப்பேன். 18:64

உனது இதயத்தை என்னில் நிலைக்கச் செய்வாயாக, என்னிடம் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டவனாக இருப்பாயாக. எனக்கே வேள்வி செய்வாயாக, என்னையே வணங்குவாயாக. பிறகு என்னை நீ அடைவாய். நீ எனக்கு அன்பானவன் என்பதை நான் உனக்கு உண்மையாக {சத்தியமாக} அறிவிக்கிறேன். 18:65

அனைத்து (அறக்) கடமைகளையும் கைவிட்டு, {என்னையே} ஒரே புகலிடமாகக் கொண்டு வருவாயாக. பாவங்கள் அனைத்திலும் இருந்து நான் உன்னை விடுவிக்கிறேன். வருந்தாதே. 18:66

தவம் பயிலாதவன், அர்ப்பணிப்பில்லாதவன் {பக்தியில்லாதவன்}, குருவுக்காகக் காத்திருக்காதவன் {குருவிடம் கேட்க விரும்பாதவன்}, என் மீது பொய்க்குற்றம் சாட்டுபவன் {என்னிடம் பொறாமை கொண்டவன்} ஆகியோருக்கு உன்னால் இது எப்போதும் அறிவிக்கப்படத்தகாது. 18:67

உயர்ந்த அர்ப்பணிப்பை {பக்தியை} எனது காணிக்கையாக்கி, என்பால் அர்ப்பணிப்பு {பக்தி} கொண்டோரிடம் இந்த உயர்ந்த புதிரை உரைப்பவன் எவனோ, (தன் அனைத்து) ஐயங்களில் இருந்தும் விடுபடும் அவன் என்னையே அடைவான் [18]. 18:68

[18] "அஸம்ஸய: Asamsayas" என்பதே ஒவ்வொரு உரையிலும் காணப்படுகிறது. அஃது "அஸம்ஸயம் Asamsayam" அல்ல. எனவே, திரு.டேவீஸ், அதன் பொருளாக "ஐயமில்லை" என்று சொல்லி "என்னிடம் வருவான்" என்பதற்கு வினையுரிச்சொல்லாகக் கொள்வது பிழையானதாகும். "ஐயங்கள் விலகி" என்பதே இங்குச் சரியானது" என இங்கே விளக்குகிறார் கங்குலி. பாரதியார் "ஐயமில்லை" என்றே பொருள் கொண்டிருக்கிறார். பிரபுபாதர் "நிச்சயமாக வருவான்" எனப் பொருள் கொள்கிறார். கோயந்தகரும், "சந்தேகமில்லை" என்றே முடிக்கிறார். எனவே, கங்குலி மேற்கண்ட அனைவரிடமும் இருந்து இங்கே மாறுபடுகிறார்.

மனிதர்களுக்கு மத்தியில் அவனைத்தவிர எனக்கு அன்பானவன் வேறு எவனுமில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு அன்பானவன் வேறு எவனுமில்லை. 18:69

நமக்குள்ளான இந்தப் புனித உரையாடலை எவன் படிப்பானோ, அவன் {கல்வி என்ற} அந்த அறிவு வேள்வியை எனக்குக் காணிக்கையாக்கியவன் ஆவான். 18:70

என் கருத்து இத்தகையதே. எந்த மனிதன், அற்பத் தடைகளைச் சொல்லாமல் {அற்ப ஆட்சேபணைகள் செய்யாமல்}, நம்பிக்கையுடன் இதைக் கேட்பானோ (படிப்பானோ), அவன் (மறுபிறப்பில் இருந்து) விடுபட்டு, புண்ணியச் செயல்களைச் செய்தவர்களின் அருள் உலகத்தையே அடைவான். 18:71

ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, வேறு எந்தப் பொருட்களிலும் மனதைச் செலுத்தாமல் கவனத்துடன் இதைக் கேட்டாயா? ஓ! தனஞ்சயா {அர்ஜுனா}, அறியாமையால் (காரணத்தால்) விளைந்த உனது மயக்கம் அழிந்ததா?" என்று கேட்டான் {கிருஷ்ணன்} 18:72

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "என் மயக்கம் அழிந்தது. ஓ! அழிவில்லாதவனே {அச்யுதா, கிருஷ்ணா}, உனது அருளால் (நான் யார் எனும்) எனது நினைவை அடைந்தேன். நான் இப்போது உறுதியடைந்தேன். எனது ஐயங்கள் விலகின. நீ சொல்வதை நான் செய்வேன்" என்றான் {அர்ஜுனன்}. 18:73

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், "இப்படியே, வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பிருதையின் உயர் ஆன்ம மகனுக்கும் {குந்தியின் மகனான அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்ததும், அற்புதமானதும், மயிர் சிலிர்ப்பை ஏற்படுத்துவதுமான இந்த உரையாடலைக் கேட்டேன். 18:74

யோகத்தின் தலைவனான கிருஷ்ணன், இந்த உயர்ந்த புதிரை, இந்த யோகத்தை {சித்தாந்தத்தை} நேரடியாக அறிவித்த போதே, வியாசரின் அருளால் நான் இதைக் கேட்டேன். 18:75

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, கேசவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்}, அர்ஜுனனுக்கும் இடையில் நடந்ததும், அற்புதம் நிறைந்ததும், புனிதமானதுமான இந்த உரையாடலை மீண்டும் மீண்டும் நீனைத்து, மீண்டும் மீண்டும் மகிழ்கிறேன். 18:76

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, ஹரியின் {கிருஷ்ணனின்} அற்புதம் நிறைந்த அந்த வடிவத்தை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்த்து எனக்கு ஏற்படும் திகைப்புப் பெரியதாகும். மேலும் நான் மீண்டும் மீண்டும் எப்போதும் மகிழ்வேன். 18:77

யோகத்தின் தலைவனான கிருஷ்ணன் எங்கிருக்கிறானோ, அந்தப் பெரும் வில்லாளி (பார்த்தன் {அர்ஜுனன்}) எங்கிருக்கிறானோ, அங்கே செழிப்பு, வெற்றி, பெருமை, தவறாத நீதி ஆகியன இருக்கும் என்பதே எனது கருத்து" {என்றான் சஞ்சயன்}. 18:78 


ஆங்கிலத்தில் | In English

Thursday, October 08, 2015

மூவித நம்பிக்கைகளின் அறம் - சிரத்தாத்ரய விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 041

Religion by the Threefold Kinds of Faith - Sraddhatraya-Vibhaga yoga! | Bhishma-Parva-Section-041 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 29) {பகவத் கீதை - பகுதி 17}

பதிவின் சுருக்கம் : நம்பிக்கை, எண்ணங்கள், செயல்கள் மற்றும் உண்ணும் பழக்கங்கள் ஆகியவற்றில் உள்ள மூன்று விதங்களை மூன்று வித குணங்களுடன் தொடர்பு படுத்திக் கிருஷ்ணன் விளக்குவது...

அர்ஜுனன் {கிருஷ்ணனிடம்}, "ஓ! கிருஷ்ணா, சாத்திரங்களின் விதிகளைக் கைவிட்டாலும், நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களின் நிலை என்ன? அது நற்குணத்தினுடையதா {சத்வமா}? பேரார்வத்தினுடையதா {ரஜசா}? இருளினுடையதா {தமசா}?" என்று கேட்டான் {அர்ஜுனன்}. 17:1

அதற்கு அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "பண்புருவங்களின் (உயிரினங்களின்) நம்பிக்கைகள் மூன்று வகைப்படும். அவை அதனதன் (தனிப்பட்ட) இயல்பில் தோன்றுகின்றன. நன்னம்பிக்கை {நற்குணத்தால் விளையும் நம்பிக்கை = சாத்விகம்}, உணர்வுமிகுதியின் நம்பிக்கை {பேரார்வத்தால் உண்டாகும் நம்பிக்கை = ராஜசம்} மற்றும் மூடநம்பிக்கை {இருளால் உண்டாகும் நம்பிக்கை = தாமசம்} என்பவையே அவையாகும். அவற்றை இப்போது கேட்பாயாக. 17:2


ஓ! பாரதா {அர்ஜுனா}, ஒருவனின் நம்பிக்கையானது, அவனது சொந்த இயல்புக்கு தகுந்தபடியே அமைகிறது. இங்கே இருக்கும் ஓர் உயிர் நம்பிக்கை நிறைந்தே இருக்கிறது {மனிதன் எவனும் நம்பிக்கை நிறைந்தவனாகவே இருக்கிறான்}; ஒருவனின் நம்பிக்கை எதுவானாலும், அதுவே அவனாவான். 17:3

மூவித நம்பிக்கைகள்
1. நற்குணம் கொண்டவர்கள் {சாத்விகர்கள்} தேவர்களை வழிபடுகிறார்கள்; 
2. பேரார்வ குணம் கொண்டோர் {ராஜசர்கள்} யக்ஷர்களையும், ராட்சசர்களையும் {வழிபடுகிறார்கள்}; 
3. இருள் குணம் கொண்ட மக்கள் {தாமசர்கள்} இறந்தோரின் ஆவிகளையும், பூதக் கூட்டங்களையும் {பிரேத, பூத கணங்களை} வழிபடுகிறார்கள். 17:4

பாசாங்குத்தனம், செருக்கு ஆகியவற்றுக்குத் தன்னை இழந்து, பற்றில் விருப்பம் கொண்டு, வன்முறையில் ஈடுபட்டு, சாத்திரங்களால் விதிக்கப்படாத கடும் தவத்துறவுகளைப் பயின்று, (தங்கள்) உடல் உறுப்புகளின் தொகுதியையும் {பூதத்தொகுதியையும்}, (அவர்களின்) உடல்களுக்குள் நிலைத்திருக்கும் என்னையும் துன்புறுத்தி {சித்திரவதைக்குள்ளாக்கி} வரும் பகுத்தறிவில்லாத அம்மனிதர்கள், அசுர குணங்கொண்டவர்களாக அறியப்பட வேண்டும். 17:5-6

அனைவருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகையானதாக இருக்கிறது. வேள்வி, நோன்பு {தவம்}, கொடைகள் {தானங்கள்} ஆகியனவும் அதே போலவே உள்ளன (மூன்று வகையாக உள்ளன). அவற்றின் வேறுபாடுகளைப் பின்வருமாறு கேட்பாயாக. 17:7

{மூன்று வகை உணவு முறைகள்:}

1. வாழ்நாளின் அளவு, சக்தி, பலம், நோயின்மை {ஆரோக்யம்}, நன்னிலை, இன்பம் ஆகியவற்றை அதிகரித்து, சுவையுள்ளதாக, எண்ணெய்ப் பசையுள்ளதாக {குழம்பாக}, சத்துள்ளதாக, ஏற்கத்தக்க இனிமையுள்ளதாக இருக்கும் உணவு வகைகளே நல்லோரால் {சத்வ குணமுள்ளோரால்} [1] விரும்பப்படுகின்றன. 17:8

[1] இந்த இடத்தில் கங்குலியில் liked by God என்று இருக்கிறது. அஃது அச்சுப்பிழையாகவோ, ஸ்கேன் செய்ததில் ஏற்பட்ட குழப்பமாகவோ இருக்க வேண்டும். அங்கே liked by Good என்றே இருந்திருக்க வேண்டும். மூலத்தில் அது "ஸாத்த்விகப்ரியா sāttvikapriyāḥ" என்றே இருக்கிறது. அதனால் நானும் நல்லோர் விரும்புகின்றனர் என்று மொழிபெயர்த்திருக்கிறேன்.

உணவின் வகைகள்
2. கசப்பு, புளிப்பு, உப்பு, மிகுந்த சூடு, உறைப்பு, உலர்ந்த நிலை, எரிச்சல் ஆகியவற்றைக் கொண்டு, வலி, துயரம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும் உணவு வகைகள் உணர்ச்சிமிக்கோரால் {ராஜச குணமுள்ளோரால்} விரும்பப்படுகின்றன. 17:9

3. குளிர்ந்த, சுவையற்ற, அழுகிய, கெட்டுப் போன, பிறர் ஏற்க மறுத்த {எச்சிலான}, தூய்மையற்ற உணவு, இருள் தன்மை கொண்ட மனிதர்களால் {தமோ குணமுள்ளோரால்} விரும்பப்படுகிறது. 17:10

{மூன்று வகை வேள்வி முறைகள்:}

1. விதிகள் பரிந்துரைக்கும்படி, (அதனால் ஏற்படும்) பலனில் எந்த எதிர்பார்ப்பும் {ஏக்கமும்} இல்லாமல், வேள்வி புரிவதே கடமை என்று மனத்தில் தீர்மானித்து மனிதர்களால் எது {எந்த வேள்வி} செய்யப்படுமோ, அந்த வேள்வியே நல்லதாகும் {சத்துவக் குணமுடையதாகும்}. 17:11

2. ஆனால் பலனை எதிர்பார்த்தும், ஆடம்பரத்திற்காகவும் எது செய்யப்படுமோ, ஓ! பரதமகன்களின் தலைவனே {அர்ஜுனா}, அந்த வேள்வி பேரார்வ {ரஜோ} குணம் கொண்டது என்று அறிவாயாக. 17:12

3. விதிக்கு எதிரானது, {பிறருக்கு} உணவு அளிக்கப்படாதது, (புனித வரிகளைக் கொண்ட) மந்திரங்கள் அற்றது, துணை செய்த அந்தணர்களுக்குக் கூலி கொடுக்காதது, நம்பிக்கையில்லாமல் செய்யப்படுவது எதுவோ, அந்த வேள்வி இருள் {தமோ} குணம் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. 17:13

{மூன்று வகை நோன்பு{தவ} முறைகள்:}

1. தேவர்கள், மறுபிறப்பாளர்கள் {பிராமணர்கள்}, குருக்கள், அறிஞர்கள் ஆகியோரை வணங்குதல், தூய்மை, நேர்மை, பிரம்மச்சரியப் பயிற்சி, தீங்கிழையாமை ஆகியவற்றைக் கொண்டே உடலின் தவம் அமைவதாகச் சொல்லப்படுகிறது. 17:14

கோபத்தைத் தூண்டாத, உண்மையான, இனிமையான, நன்மை விளைவிப்பதான பேச்சு மற்றும் ஊக்கமான வேத கல்வி ஆகியனவே பேச்சின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:15

மன அமைதி, மென்மை, குறைவாகப் பேசும் தன்மை {மௌனம்}, தற்கட்டுப்பாடு, மனநிலையின் தூய்மை ஆகியனவே மனத்தின் தவமாகச் சொல்லப்படுகின்றன. 17:16

இந்த மூன்று வகைத் தவங்கள், {அதன்} பலனில் ஆசையற்ற அர்ப்பணிப்புள்ள மனிதர்களால் {யோகிகளால்} முழு நம்பிக்கையுடன் செய்யப்பட்டால், அது நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:17

2. மரியாதை அடைதல், பெருமை அடைதல், வழிபாட்டை அடைதல் ஆகியவற்றின் நிமித்தமாக, பாசாங்குத்தனத்துடன், நிலையற்ற மற்றும் உறுதியற்ற வழியில் செய்யப்படும் தவம் பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:18

3. மூட நம்பிக்கையுடன், தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டு, பிறரைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் தவம் இருளின் தன்மை {தமோக குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:19

{மூன்று வகை கொடைகள்:}

1. கொடுத்தே ஆக வேண்டும் என்ற காரணத்தினால், திரும்பக் கைம்மாறு செய்ய முடியாதவராக இருப்பினும் சரியான நபருக்கு, சரியான நேரத்தில் கொடுக்கப்படும் கொடை நற்குணத்தின் தன்மை {சத்வ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:20

2. எனினும், (கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தின்) கைம்மாறு எதிர்பார்த்தோ, பலனில் ஒரு கண் கொண்டோ, இதயத் தயக்கத்துடன் அளிக்கப்படும் கொடை பேரார்வத்தின் தன்மை {ரஜோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:21

3. தகாத ஓர் இடத்தில், தகாத ஒரு நேரத்தில், தகாத பொருளுக்கு, மதிப்பின்றி, இகழ்ச்சியுடன் அலட்சியமாகக் கொடுக்கப்படும் கொடை {தானம்} இருளின் தன்மை {தமோ குணம்} கொண்டது எனச் சொல்லப்படுகிறது. 17:22

 ஓம், தத், சத் என்று பிரம்மத்தின் நிலை மூன்று விதமாகச் சொல்லப்படுகிறது. அதனால்தான் (பிரம்மத்தினால்தான்), பிரமாணங்கள் {விதிகள் [அ] உறுதிமொழிகள்}, வேதங்கள், வேள்விகள் ஆகியன பழங்காலத்தில் விதிக்கப்பட்டன. 17:23

எனவே, விதியால் பரிந்துரைத்தபடி வேள்விகள், கொடைகள் மற்றும் தவங்கள் ஆகியவற்றைச் செய்யும்போது, பிரம்மத்தை உச்சரிக்கும் அனைவரும், "ஓம்" என்ற எழுத்தை உச்சரித்தே தொடங்குகிறார்கள். 17:24

"தத்" என்பதை {"தத்" என்ற சொல்லை} உச்சரித்து, பல்வேறு வேள்விச் சடங்குகள், தவம், கொடைகள் ஆகியவற்றை விடுதலையை {மோட்சத்தை} விரும்புபவர்கள் பலனை எதிர்பார்க்காமல் செய்கிறார்கள். 17:25

"சத்" என்பது இருப்பு {உண்மை} மற்றும் நன்மையைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. அதே போல, ஓ! பிருதையின் மகேன {அர்ஜுனா}, "சத்" என்ற சொல், மங்கலகரமான {சுபச்} செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 17:26

வேள்விகள், தவங்கள், கொடைகள் ஆகியவற்றில் கொண்ட மாறாவுறுதி நிலையும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. அதன் {பிரம்மத்தின்} [2] பொருட்டாகச் செய்யப்படும் செயலும் "சத்" என்றே அழைக்கப்படுகிறது. 17:27

[2] "முன்னர் சொன்ன பிரிவுகளின் படி இங்கே "அதன்" என்ற சொல் வேள்வி, தவம் மற்றும் தானத்தையே தெளிவாகக் குறிக்கிறது. எனினும், விரிவுரையாளர்கள், "அதன்" என்பது அவற்றைத் தவிரப் பிரம்மத்தையும் குறிக்கலாம் என்று கூறுகிறார்கள். "அதன்" என்பது பிரம்மத்தைக் குறிக்கவில்லை என்பதில் எனக்கு நிச்சயமில்லை" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.

நம்பிக்கையில்லாமலேயே, (நெருப்பில்) எதைப் படைத்தாலும், எது {தானமாக} அளிக்கப்பட்டாலும், என்ன தவம் செய்யப்பட்டாலும், என்ன செயலைச் செய்தாலும், ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அது "சத்"-க்கு எதிரானது {அசத்} என்று சொல்லப்படுகிறது. அவை இங்கும் {இம்மையிலும்}, இதன் பிறகும் {மறுமையிலும்} பயன்படாது [3]" என்றான் {கிருஷ்ணன்}. 17:28

[3] "ஓம்", "தத்", "சத்" என்ற வார்த்தைகளுக்குத் தனித்தனியான பயன்கள் இருக்கின்றன. அவை மூன்றும் பிரம்மத்தையே குறிக்கின்றன என்ற புரிதலோடு, இங்கே சுட்டிக்காட்டியபடி அவை பயன்படுத்தப்பட்டால், அத்தகு பயன்பாடு, {அவை சார்ந்த} அந்தந்த நடவடிக்கைகளின் குறைபாடுகளைக் குணப்படுத்தும் என்பதையே இந்த வரிகளின் மூலம் ஆசிரியன் {கிருஷ்ணன்} சொல்ல விரும்புகிறான்" என்று இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English

Wednesday, October 07, 2015

தெய்வ-அசுரத் தனித்தன்மைகள் - தெய்வாசுர சம்பத் விபாக யோகம்! - பீஷ்ம பர்வம் பகுதி - 040

The Separateness of the Divine and Undivine - Daivasura–Sampad–Vibhaga yoga! | Bhishma-Parva-Section-040 | Mahabharata In Tamil

(பகவத்கீதா பர்வம் – 28) {பகவத் கீதை - பகுதி 16}

பதிவின் சுருக்கம் : மனிதனின் பண்புகளில் காணப்படும் தெய்வீக மற்றும் அசுரத் தன்மைகளைக் கிருஷ்ணன் விளக்குவது; கைவிட வேண்டிய அனைத்தையும் கைவிட்டு பரமபதத்தை அடைவது எப்படி என்று கிருஷ்ணன் ஆலோசனை கூறுவது...

அந்தப் புனிதமானவன் {கிருஷ்ணன் அர்ஜுனனிடம்}, "அச்சமின்மை, இதயத் தூய்மை, அறிவில் (அறிவை அடையும் நோக்கில்) விடாமுயற்சி, யோகத் தியானம், கொடைகள் {ஈகை}, தற்கட்டுப்பாடு, வேள்வி, வேத கல்வி, தவ நோன்புகள், நேர்மை {1} [1], தீங்கிழையாமை, வாய்மை, கோபத்தில் இருந்து விடுதலை, துறவு, மன அமைதி, பிறர் குறை சொல்லாமை, அனைத்து உயிர்களிடத்தும் கருணை, பொருளாசையின்மை, மென்மை, பணிவு, அமைதியின்மையில் இருந்து விடுதலை,{2} வீரம், மன்னிக்கும் தன்மை {பொறுமை}, உறுதி, தூய்மை, சண்டித்தனமின்மை {துரோகமின்மை}, செருக்கின்மை ஆகியவை ஓ! பாரதா {அர்ஜுனா}, தெய்வீகத் தன்மைகளைக் கொண்டோரைச் சார்ந்தனவாகும் {3}. 1-3

[1] இங்குச் சங்கரரின் விளக்கத்தை ஏற்றே தான் பெயர்த்திருப்பதாகவும், ஸ்ரீதரர் இங்கு வேறு பொருள் கொள்கிறார் எனவும் இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஓ! பிருதையின் மகனே {குந்தியின் மகனே அர்ஜுனா}, பாசாங்கு, செருக்கு, அகந்தை, கடுங்கோபம், முரட்டுத்தனம் மற்றும் அறியாமை ஆகியவை அசுரத் தன்மை கொண்டோரைச் சார்ந்தனவாகும். 16:4

இருவகை மனிதர்கள்
தெய்வீகத்தன்மைகள் விடுதலைக்காவன எனக் கருதப்படுகின்றன; அசுரத்தன்மைகளோ பற்றை ஏற்படுத்துவனவாகும். ஓ! பாண்டுவின் மகனே வருந்தாதே, நீ தெய்வீகத்தன்மைகளுடனேயே பிறந்திருக்கிறாய். 16:5

இவ்வுலகில் படைக்கப்பட்ட உயிரினங்கள், தெய்வீகத் தன்மை, அசுரத் தன்மை என இரு வகைகளிலேயே இருக்கின்றன. தெய்வத்தன்மை விரிவாக விளக்கப்பட்டது. {எனவே}, ஓ! பிருதையின் மகனே {அர்ஜுனா}, அசுரத்தன்மை குறித்து இப்போது என்னிடம் கேட்பாயாக. 16:6

அசுர இயல்பு கொண்டோர் நாட்டத்தையோ {பற்றையோ}, நாட்டமின்மையையோ {பற்றின்மையையோ} [2] அறியமாட்டார்கள். தூய்மையோ, நன்னடத்தையோ, வாய்மையோ அவர்களிடம் {அசுரத்தன்மை கொண்டோரிடத்தில்} இருப்பதில்லை. 16:7

[2] "ப்ரவ்ருத்திம் Prabritti" என்பதை நாட்டம் என்றும், "நிவ்ருத்திம் Nivritti" என்பதை நாட்டமின்மை என்றும் தான் கொள்வதாகவும். நாட்டம் என்பதை நீதிமிக்கச் செயல்கள் என்றும், நாட்டமின்மை என்பதை நீதியற்ற செயல்கள் என்றும் விரிவுரையாளர்கள் அனைவரும் சொல்கிறார்கள் என்றும், K.T.டெலங்க் இதை "செயல்" மற்றும் "செயலின்மை" என விளக்குகிறார் என்றும், பர்னாஃப்-ன் பிரஞ்சு மொழி பதிப்பைப் பின்தொடரும் திரு.டேவீசோ "படைப்பு மற்றும் அதன் முடிவு" என அவற்றைக் கொள்கிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.

உண்மை {சத்தியம்}, வழிநடத்தும் கொள்கை {அறம்}, ஆட்சியாளன் {ஈஸ்வரன்} ஆகியவை அற்றதே இந்த அண்டம் எனவும், காமத்தினால் (ஆணும் பெண்ணும்) ஒன்றோடு ஒன்று கலந்து அது {இந்த அண்டம்} உண்டானது; வேறில்லை என்றும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} சொல்கிறார்கள். 16:8

இந்தப் பார்வையிலேயே தங்களை {ஆத்மாவை} இழந்தவர்களான இந்த {அசுரத்தன்மை கொண்ட} மனிதர்கள், சிறுமதிபடைத்தவர்களும், கொடுஞ்செயல்கள் புரிபவர்களுமான இந்த (உலகத்தின்) எதிரிகள், அண்டத்தின் அழிவுக்காகவே பிறந்திருக்கிறார்கள். 16:9

தணியாத ஆசைகளில் இன்புற்று, பாசாங்குத்தனம், இறுமாப்பு, மடமை ஆகியவற்றுடன் இருந்து, மாயையால் தவறான கருத்துகளை ஏற்று, புனிதமற்ற நடைமுறைகளில் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} ஈடுபடுகின்றனர். 16:10

மரணத்தால் (மட்டுமே) {முடிவை} ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு எண்ணற்ற எண்ணங்களை {கவலைகளை} வளர்த்து, (தங்கள்) ஆசைகளை அனுபவிப்பதே உயர்ந்த எல்லை எனக் கருதும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, அதுவே அனைத்தும் என நம்புகின்றனர். 16:11

நம்பிக்கையின் நூறு கயிறுகளால் கட்டப்பட்டு, காமத்திற்கும், கோபத்திற்கும் அடிமையாகும் அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} இன்று இந்தச் செல்வத்தை அடையவே விரும்புகிறார்கள். 16:12

அசுரத்தன்மைகள்
"இதை நான் பின்பு அடைவேன், இந்தச் செல்வத்தை நான் கொண்டுள்ளேன், இஃது (இந்தச் செல்வம்) எனக்குக் கூடுதலாகக் கிடைத்ததாகும் {13}. இந்த எதிரி என்னால் கொல்லப்பட்டான். நான் இன்னும் பிறரையும் கொல்வேன். நானே தலைவன் {ஆள்பவன்}, நானே அனுபவிப்பவன் {போகி}, நானே வெற்றியாளன் {சித்தன்}, சக்தி நிறைந்தவன் {பலவான்}, மகிழ்ச்சியானவன் {சுகி} {14}, நான் செல்வந்தன், நான் உன்னதப் பிறப்பைக் கொண்டவன். என்னைப் போல் வேறு எவன் இருக்கிறான்? நான் வேள்வி செய்வேன், நான் கொடைகள் அளிப்பேன், நான் இன்பமாக இருப்பேன்" {15} என இப்படி அறியாமையில் மயங்கி எண்ணற்ற எண்ணங்களால் {கவலைகளால்} கலங்கி, மாய வலைகளில் சிக்கி, ஆசைக்குகந்த பொருட்களை அனுபவிப்பதில் பற்றுதல் கொண்ட அவர்கள் {அசுரத் தன்மை கொண்டோர்} தூய்மையற்ற நரகத்தில் மூழ்கிப் போகிறார்கள் {16}. 16:13-16

தற்பெருமை, பிடிவாதம், செருக்கு, செல்வத்தில் போதை ஆகியவற்றைக் கொண்ட அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, பாசாங்குத் தனத்துடனும், (பரிந்துரைக்கப்பட்ட) விதிகளுக்கு எதிராகவும், பெயரளவில் மட்டுமே வேள்விகளைச் செய்வார்கள். 6:17

பகட்டு, சக்தி, செருக்கு, காமம், கோபம் ஆகியவற்றைக் கொண்ட இந்த வசைபாடுவோர் {அசுரத் தன்மை கொண்டோர்}, தங்கள் சொந்த உடல்களிலும் பிறரின் உடல்களிலும் இருக்கும் என்னை வெறுக்கிறார்கள். 16:18

(என்னை) வெறுக்கும் இவர்கள், கொடூரர்களாகவும், மனிதர்களில் பயங்கரமானவர்களாகவும், புனிதமற்றவர்களாகவும் இருக்கிறார்கள். நான் {அசுரத் தன்மை கொண்ட} அவர்களைத் தொடர்ச்சியாக அசுரத் தன்மை கொண்ட கருவறைகளில் வீசி எறிகிறேன். 16:19

அசுரத்தன்மை கொண்ட கருவறைகளை அடைந்து, அடுத்தடுத்த பிறவிகளிலும் மயக்கமடையும் அவர்கள் {அசுரத்தன்மை கொண்டோர்}, ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா} என்னை அடையாமலேயே இழிந்த நிலைக்கு வீழ்ச்சியடைகிறார்கள். 16:20

காமம், கோபம், பேராசை ஆகியவையே தனக்கு {ஆத்மாவுக்கு} அழிவைத் தரும் நரகத்தின் மூன்று வகை வழிகளாகும். எனவே, இம்மூன்றையும் ஒருவன் துறக்க வேண்டும். 16:21

இருளின் இந்த மூன்று வாயில்களில் {காமம், கோபம், பேராசை ஆகியவற்றில்} இருந்து விடுபட்ட மனிதன், ஓ! குந்தியின் மகனே {அர்ஜுனா}, தனக்கான சொந்த நலனைத் தேடிக் கொண்டு, பிறகு, தனது உயர்ந்த இலக்கை {பரகதியை} அடைகிறான். 16:22

சாத்திரங்களின் விதிகளைத் துறந்து {மீறி}, ஆசையின் உந்துதல்களால் மட்டுமே செயல்படுபவன் எவனோ, அவன் முழுமையையோ, இன்பத்தையோ, உயர்ந்த இலக்கையோ {பரகதியையோ} ஒருபோதும் அடைவதில்லை. 16:23

எனவே, எது செய்யப்பட வேண்டும்? எது செய்யப்படக்கூடாது? என்பதைத் தீர்மானிக்க உனக்குச் சாத்திரங்களே அதிகாரம் கொண்டதாக இருக்கட்டும். சாத்திரங்களின் விதிகளால் தீர்மானிக்கப்பட்டவற்றை உறுதி செய்த பிறகு செயல்புரிவதே உனக்குத் தகும்" என்றான் {கிருஷ்ணன்}. 16:24


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்