The sorrow of Kunti! | Asramavasika-Parva-Section-30 | Mahabharata In Tamil
(புத்ரதர்சன பர்வம் - 2)
பதிவின் சுருக்கம் : கர்ணனின் பிறப்பைக் கூறிய குந்தி; கர்ணனைப் பார்க்க விரும்புவதாக வியாசரிடம் சொன்னது; குந்தியின் ஐயத்தைக் காரணத்துடன் போக்கிய வியாஸர்...
குந்தி, "ஓ! புனிதமானவரே {வியாசரே}, நீர் என் மாமனாராக இருப்பதால் என்னுடைய தேவர்களுக்குத் தேவராகவும் இருக்கிறீர். உண்மையில், நீர் தெய்வங்களுக்கு தெய்வமாக இருக்கிறீர். நீர் என்னுடைய உண்மையான சொற்களைக் கேட்பீராக.(1) மறுபிறப்பாள வகையைச் சார்ந்தவரும், கோபம் நிறைந்தவரும், துர்வாசர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு தவசி பிச்சை கேட்டு உண்பதற்காக என் தந்தையின் வீட்டிற்கு வந்தார்[1]. புறம் மற்றும் அக ஒழுக்கத்தின் தூய்மையினாலும், அவர் {துர்வாசர்} செய்த பல பிழைகளைக் காண மறுத்ததாலும் நான் அவரை நிறைவடையச் செய்தேன். கோபத்தைத் தூண்டும் வகையில் அவரது நடத்தை இருந்தாலும் நான் அவரிடம் கோபங்கொள்ளவில்லை.(3) கவனத்துடன் தொண்டாற்றப்பட்ட அந்தப் பெருந்தவசி என்னிடம் உயர்வான நிறைவை அடைந்து எனக்கு ஒரு வரம் அருளும் மனநிலையை எட்டினார். அவர் {துர்வாசர்}, "நான் கொடுக்கும் வரத்தை நீ ஏற்க வேண்டும்" என்பதே அவருடைய சொற்களாகும்.(4)
[1] இந்தக் கதை ஏற்கனவே ஆதிபர்வம் பகுதி 111ல் சொல்லப்பட்டது. குந்தி இதை நேரடியாகக் கர்ணனிடம் சொல்லும் காட்சி உத்யோக பர்வம் பகுதி 145ல் சொல்லப்பட்டுள்ளது.
அவருடைய {துர்வாசருடைய} சாபத்திற்கு அஞ்சிய நான், "அவ்வாறே ஆகட்டும்" என்றேன். அந்த மறுபிறப்பாள முனிவர், மீண்டும் என்னிடம்,(5) ஓ! அருளப்பட்ட காரிகையே, ஓ! அழகிய முகம் படைத்தவளே, நீ தர்மனுக்கு அன்னையாவாய். நீ அழைக்கும் தேவர்கள் உனக்குக் கீழ்ப்படிந்தவர்களாக இருப்பார்கள்" என்றார்.(6)
அந்த மறுபிறப்பாளர் {துர்வாசர்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு என் பார்வையில் இருந்து மறைந்தார். நான் ஆச்சரியத்தால் நிறைந்தேன். எனினும், அந்த முனிவர் கொடுத்த மந்திரம், எப்போதும் என் மனத்தில் வசித்து வந்தது.(7) ஒரு நாள் நான் என் அறையில் அமர்ந்து கொண்டு உதிக்கும் சூரியனைக் கண்டேன். நாள் சமைப்பவனை என் முன்னே கொண்டு வர விரும்பிய நான் அந்த முனிவர் சொன்ன சொற்களை நினைவுகூர்ந்தேன்.(8) நான் குற்றத்தை உணராமல், சிறுமிக்குரிய தன்மையினால் அந்தத் தேவனை {சூரியனை} அழைத்தேன். எனினும், (என்னால் அழைக்கப்பட்ட) அந்த ஆயிரங்கதிர் தேவன் என் முன்னிலைக்கு வந்தார்.(9) அவர் தம்மை இரண்டாகப் பிரித்துக் கொண்டார். ஒரு பகுதியைக் கொண்டு ஆகாயத்திலும், மற்றொன்றினால் என் முன்னே பூமியிலும் அவர் நின்று கொண்டிருந்தார்.(10)
அவரைக் கண்டு நடுங்கிக் கொண்டிருந்த என்னிடம் அவர் இந்தச் சொற்களில், "என்னிடம் இருந்து ஒரு வரத்தைக் கேட்பாயாக" என்றார். அவருக்குத் தலைவணங்கிய நான், என்னைவிட்டுச் சென்றுவிடுமாறு அவரிடம் கேட்டேன்.(11)
அவர் {சூரிய தேவன்}, "பயனற்ற வருகை என்ற கருத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. உன்னையும், உனக்கு வரமாக இந்த மந்திரத்தை அளித்த பிராமணரையும் {துர்வாசரையும்} நான் எரிக்கப் போகிறேன்" என்றார்.(12)
ஒரு தீமையும் செய்யாத அந்தப் பிராமணரை சூரியனின் சாபத்தில் இருந்து பாதுகாக்க நான் விரும்பினேன். எனவே நான், "ஓ! தேவா, உம்மைப் போன்ற ஒரு மகனை நான் பெறுவேனாக" என்றேன்.(13) அந்த ஆயிரங்கதிர் தேவன் தன் சக்தியால் என்னுள் ஊடுருவி, என்னை முழுமையாகக் கலங்கடித்தார். பிறகு அவர், "நீ ஒரு மகனைப் பெறுவாய்" என்று சொல்லிவிட்டு ஆகாயத்திற்கே திரும்பிச் சென்றார்.(14) நான் என் தந்தையின் கௌரவத்தைக் காக்க விரும்பி, இவ்வாறு உலகிற்குக் கமுக்கமாக {இரகசியமாக} வந்தவனும், கர்ணன் என்ற பெயரைக் கொண்டவனுமான குழந்தையைத் தண்ணீரில் விட்டுவிட்டு அந்தப்புரத்திலேயே தொடர்ந்து வாழ்ந்தேன்.(15) ஓ! மறுபிறப்பாளரே, முனிவர் துர்வாசர் என்னிடம் சொல்லி இருந்ததைப் போலவே, அந்தத் தேவனுடைய அருளின் மூலம் ஐயமில்லாமல் நான் மீண்டும் கன்னிகையானேன்.(16)
அவன் வளர்ந்து வந்தபோது நானே அவனது அன்னை என்பதை அவன் அறிந்திருந்தாலும், மடமை கொண்ட நான் அவனை அங்கீகரிக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. ஓ! மறுபிறப்பாள முனிவரே, உமக்கு நன்றாகத் தெரிந்த இஃது என்னை எரித்துக் கொண்டிருக்கிறது.(17) இது பாவம் நிறைந்ததாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் உம்மிடம் உண்மையைச் சொன்னேன். ஓ! புனிதமானவரே, என்னுடைய மகனான அவனைக் {கர்ணனைக்} காண்பதற்கான என் ஏக்கத்தை நிறைவடையச் செய்வதே உமக்குத் தகும்.(18) ஓ! தவசிகளில் முதன்மையானவரே, ஓ! பாவமற்றவரே, இந்த மன்னரின் நெஞ்சில் இருப்பதும், நீர் அறிந்ததுமான அந்த விருப்பம் இன்று கனியட்டும்" என்றாள் {குந்தி}.(19)
குந்தியால் இவ்வாறு சொல்லப்பட்டவரும் மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவருமான வியாசர் அவளுக்கு மறுமொழியாக, "நீ அருளப்பட்டிருப்பாயாக. நீ என்னிடம் சொன்ன அனைத்தும் நடக்கக் கூடியவையே.(20) (கர்ணனின் பிறப்பைப் பொறுத்தவரையில்) எக்குற்றமும் உன்னைச் சாராது. நீ கன்னித்தன்மையை அடைந்தாய். தேவர்கள் (யோக) பலம் பொருந்தியவர்களாவர். அவர்களால் மனித உடல்களில் ஊடுருவ முடியும்[2].(21) தேவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் எண்ணத்தை மட்டுமே கொண்டு (சந்ததியைப்) பெற இயலும். சொல், பார்வை, தீண்டல், பாலியல் கலவி ஆகியற்றின் மூலமும் அவர்கள் பிள்ளைகளைப் பெறுகின்றனர்.(22) நீ மனித வகையைச் சார்ந்தவளாவாய். (நடந்தவற்றில்) உன்னிடம் குற்றமேதும் இல்லை. ஓ! குந்தி, இதையறிவாயாக. உன் இதயத்தில் உள்ள நோய் அகலட்டும்.(23) வலிமையானவர்களுக்கு அனைத்தும் இனிமையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் தூய்மையானவை, வலிமையானவர்களுக்கு அனைத்தும் புண்ணியமிக்கவை. வலிமையானவர்களுக்கே அனைத்தும் உரியவை" என்றார் {வியாசர்}.(24)
[2] "இங்கே குறிப்பிடப்படும் பலம் அணிமா, லகிமா உள்ளிட்ட மிக நுட்பமான சித்திகளாகும்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 24
ஆங்கிலத்தில் | In English |