The prayer of Gandhari! | Asramavasika-Parva-Section-29 | Mahabharata In Tamil
(புத்ரதர்சன பர்வம் - 1)
பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுடைய ஆசிரமத்தில் ஒரு மாதம் வசித்த பாண்டவர்கள்; மகன்களை நேரில் காண திருதராஷ்டிரனுக்கு விருப்பமிருப்பதை வியாசரிடம் சொன்ன காந்தாரி; குந்தியின் விருப்பத்தைக் கேட்ட வியாசர்...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "ஓ! கல்விமானான பிராமணரே, குரு குலத்தில் முதன்மையானவனும், பூமியின் தலைவனுமான திருதராஷ்டிரன், தன் மனைவியுடனும் {காந்தாரியுடனும்}, தன் மருமகளான குந்தியுடனும் காட்டில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்ட போது, உண்மையில் விதுரன் தன் உடலைவிட்டு யுதிஷ்டிரனுக்குள் நுழைந்த பிறகு, தவம் செய்யும் ஆசிரமத்தில் பாண்டவர்கள் அனைவரும் வசித்து வந்தபோது, உயர்ந்த சக்தியைக் கொண்ட பெருமுனிவர் வியாசர் அந்த முதிர்ந்த மன்னனுக்கு உறுதிமொழி அளித்த பிறகு, அவர் {வியாசர்} சாதித்த அருஞ்செயலென்ன என்பதை எனக்குச் சொல்வீராக.(1-3) மங்கா மகிமை கொண்ட குரு மன்னன் யுதிஷ்டிரன் தன் மக்களுக்களுடன் அந்தக் காட்டில் எத்தனை நாட்கள் தங்கினான்?(4) ஓ! பலமிக்கவரே, தங்கள் மக்கள் மற்றும் மனைவியருடன் கூடிய உயர் ஆன்மப் பாண்டவர்கள் அந்தக் காட்டில் வாழ்ந்து வந்தபோது எந்த உணவை உட்கொண்டு வாழ்ந்து வந்தனர்? ஓ! பாவமற்றவரே இதை எனக்குச் சொல்வீராக" என்று கேட்டான் {ஜனமேஜயன்}".(5)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஏகாதிபதி, பாண்டவர்கள் தங்கள் துருப்புகள் மற்றும் தங்கள் குடும்பத்துப் பெண்மணிகள் ஆகியோருடன் சேர்ந்து குரு மன்னனின் அனுமதியுடன் பல்வேறு வகை உணவுகள் மற்றும் பானங்களைக் கொண்டு தங்களைத் தாங்கிக் கொண்டு அந்தக் காட்டில் பெரும் மகிழ்ச்சியுடன் ஒரு மாத காலத்தைக் கடத்தினர். ஓ! பாவமற்றவனே, அந்தக் காலம் முடியும் தருணத்தில் வியாசர் அங்கே வந்தார்.(6,7) அந்த இளவரசர்கள் வியாசரைச் சுற்றிலும் அமர்ந்து பல்வேறு காரியங்களை விவாதித்துக் கொண்டிருந்தபோது வேறு முனிவர்களும் அந்த இடத்திற்கு வந்தனர்.(8) ஓ! பாரதா, நாரதர், பர்வதர், கடுந்தவங்களைக் கொண்ட தேவலர், விஸ்வாவசு, தும்புரு, சித்திரசேனன் அங்கே இருந்தனர்.(9) கடுந்தவங்களுடன் கூடிய குரு மன்னன் யுதிஷ்டிரன், திருதராஷ்டிரனின் அனுமதியுடன் உரிய சடங்குகளின் படி அவர்களை வழிபட்டான்.(10)
யுதிஷ்டிரனின் அந்த வழிபாட்டை ஏற்றுக் கொண்ட அவர்கள் அனைவரும் (குசப் புற்களாலான) புனித இருக்கைகளிலும், மயிலிறகுகளாலான சிறந்த இருக்கைகளிலும் அமர்ந்தனர்.(11) அவர்கள் அனைவரும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, பெரும் நுண்ணறிவைக் கொண்ட குரு மன்னன் {திருதராஷ்டிரன்} பாண்டு மகன்கள் சூழ தன் இருக்கையில் அமர்ந்தான்.(12) காந்தாரி, குந்தி, திரௌபதி, சாத்வத குலத்தவள், அரச குடும்பத்தைச் சார்ந்த வேறு பெண்கள் ஆகியோரும் அமர்ந்தனர்.(13) அப்போது எழுந்த உரையாடல், சிறந்ததாகவும், பக்தி, பழங்கால முனிவர்கள், தேவர்கள் மற்றும் அசுரர்கள் தொடர்புடைய காரியங்களைக் குறிப்பிடுவதாகவும் இருந்தது.(14)
அந்த உரையாடல் நிறைவை எட்டிய போது, நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரும், வேதங்களை அறிந்த மனிதர்கள் அனைவரிலும் முதன்மையானவரும், பெருஞ்சக்தி கொண்டவருமான வியாசர், உயர்வான நிறைவை அடைந்து, அந்தக் குருட்டு மன்னனிடம் மீண்டும், "ஓ! மன்னர்களின் மன்னா {திருதராஷ்டிரா}, பிள்ளைகளின் நிமித்தமான துயரில் எரிந்து கொண்டிருக்கும் உன் இதயத்தில் உன்னால் பேணி வளர்க்கப்படும் காரியம் என்ன என்பதை நான் அறிவேன். எந்தக் கவலை காந்தாரியின் இதயத்தில் எப்போதும் இருக்கிறதோ,(15-17) எது குந்தியின் இதயத்தில் இருக்கிறதோ, எது திரௌபதியின் இதயத்ததில் பேணி வளர்க்கப்படுகிறதோ, தன் மகனின் இறப்பின் நிமித்தமாகக் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையாலும் எது பேணி வளர்க்கப்படுகிறதோ அந்த எரியும் துயர் அனைத்தையும் நான் அறிவேன். ஓ! மன்னா, உன் வீட்டைச் சார்ந்தவர்களான இந்த இளவரசர்கள் மற்றும் இளவரசிகளுடன் உன் சந்திப்பை கேள்விப்பட்டே,(18,19) ஓ! கௌரவர்களைத் திளைக்கச் செய்பவனே, உன் ஐயங்களை விலக்கும் பொருட்டு நான் இங்கே வந்தேன். தேவர்கள், கந்தர்வர்கள், மற்றும் இந்தப் பெரும் முனிவர்கள் அனைவரும்,(20) நான் இத்தனை வருடங்கள் நீண்டிருக்கும் காலத்தில் அடைந்திருக்கும் தவத்தின் சக்தியை இன்று காணட்டும். எனவே, ஓ! மன்னா, நான் இன்று நிறைவேற்ற வேண்டிய உன் விருப்பமென்ன என்பதை எனக்குச் சொல்வாயாக.(21) நான் உனக்கு ஒரு வரத்தைத் தருமளவு பலம் கொண்டவன். என் தவங்களின் கனியை {பயனைக்} காண்பாயாக" என்றார்.
அளவற்ற புத்தியைக் கொண்ட வியாசரால் இவ்வாறு சொல்லப்பபட்டதும், மன்னன் திருதராஷ்டிரன்,(22) ஒரு கணம் சிந்தத்தவனாகப் பேச ஆயத்தமானான். அவன் {திருதராஷ்டிரன்}, "நான் பெரும் நற்பேறு பெற்றவனாவேன். உன் உதவியைப் பெறும் நல்வாய்ப்பையும் நான் பெற்றிருக்கிறேன். இன்று என் வாழ்வு வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டது.(23) பெரும் பக்திமான்களான உங்கள் அனைவருக்கும், எனக்கும் இடையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறதே. எனக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் உயர்ந்த இன்ப கதியை நான் இன்று அடையப் போகிறேன்.(24) தவங்களைச் செல்வமாகக் கொண்ட தவசிகளும், பிரம்மனுக்கு இணையானவர்களுமான உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் வென்றேனே. உங்கள் அனைவரையும் கண்டதே பாவங்கள் அனைத்தில் இருந்தும் என்னைத் தூய்மையடையச் செய்யும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(25) பாவமற்றவர்களே, மறுமையில் என் கதி குறித்த எந்த அச்சமும் இனி எனக்கில்லை. என் பிள்ளைகளின் அன்பு நிறைந்தவனாக இருப்பதால் நான் எப்போதும் அவர்களது நினைவுகளையே பேணி வளர்க்கிறேன். எனினும், மிகத் தீய புத்தி கொண்ட தீயவனான என் மகன் {துரியோதனன்} இழைத்த பல்வேறு குற்றச் செயல்களை நினைப்பதால் எப்போதும் என் மனம் வதைக்கப்படுகிறது. பாவம் நிறைந்த புத்தியைக் கொண்ட அவன் அப்பாவிகளான பாண்டவர்களை எப்போதும் துன்புறுத்தினான்.(26,27)
ஐயோ, குதிரைகள், யானைகள் மற்றும் மனிதர்களுடன் கூடிய மொத்த பூமியும் அவனால் அழிக்கப்பட்டது. உயர் ஆன்ம மன்னர்கள், பல்வேறு நாடுகளின் ஆட்சியாளர்கள் பலரும்,(28) என் மகனின் தரப்பை அடைந்து மரணத்திற்கு இரையாகினர். ஐயோ, அன்புக்குரிய தந்தைமார், மனைவியர் மற்றும் தங்கள் உயிர் மூச்சையே கைவிட்ட(29) அந்த வீரர்கள் அனைவரும் இறந்தோரின் மன்னனுடைய {யமனின்} விருந்தினர்களாகிவிட்டனர். ஓ! மறுபிறப்பாளரே, போரில் தங்கள் நண்பனுக்காகக் கொல்லப்பட்ட அந்த மனிதர்கள் அடைந்த கதியென்ன?(30) களத்தில் விழுந்த என் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் அடைந்த கதியென்ன? வலிமைமிக்கவரும், சந்தனுவின் மகனுமான பீஷ்மர், பிராமணர்களில் முதன்மையானவரான துரோணர் ஆகியோர் என் மூடத்தனம் மற்றும், நண்பர்களுக்குத் தீங்கிழைப்பவனான பாவம் நிறைந்த என் மகனின் மூலம் படுகொலைக்கு உள்ளானதை நினைத்து என் இதயம் எப்போதும் துன்புறுகிறது.(31,32) பூமியின் அரசுரிமையை அடைய விரும்பிய அவன் செழிப்பில் சுடர்விட்ட குரு குலத்தின் அழிவுக்குக் காரணனானான். இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் நான் துன்பத்தில் பகலும், இரவும் எரிந்து கொண்டிருக்கிறேன்.(33) துன்பம் மற்றும் துயரத்தால் ஆழமாகப் பீடிக்கப்பட்டிருக்கும் என்னால் மன அமைதியை அடைய முடியவில்லை. உண்மையில், ஓ! தந்தையே, இவை யாவற்றையும் நினைத்துப் பார்க்கும் என் மனத்தில் ஒருபோதும் அமைதி ஏற்படுவதில்லை" என்றான் {திருதராஷ்டிரன்}".(34)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "ஓ! ஜனமேஜயா, அந்த அரசமுனியால் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தப்பட்ட இந்தப் புலம்பல்களைக் கேட்ட காந்தாரிக்குத் துன்பம் புதுப்பிக்கப்பட்டது.(35) குந்தி, துருபதன் மகள் {திரௌபதி}, சுபத்திரை மற்றும் குரு குலத்தைச் சேர்ந்த வேறு ஆண்களும், பெண்களும், மருமகள்களும் அதே போலத் துன்பம் புதுப்பிக்கப்பட்டவர்கள் ஆனார்கள்.(36) கட்டப்பட்ட கண்களுடன் கூடிய ராணி காந்தாரி, தன் மாமனாரிடம் {வியாசரிடம்} பேசினாள். தன் மகன்களின் படுகொலையால் ஆழமான துயரில் பீடிக்கப்பட்டிருந்த அவள்,(37) "ஓ! தவசிகளில் முதன்மையானவரே, இந்த மன்னர் {திருதராஷ்டிரர்} தமது மகன்களின் மரணத்திற்கு வருந்தி, மன அமைதியை இழந்து பதினாறு வருடங்கள் கடந்துவிட்டன.(38) ஓ! பெரும் முனிவரே {வியாசரே}, தமது பிள்ளைகளின் படுகொலையின் நிமித்தமான துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் இந்த மன்னர் எப்போதும் பெருமூச்சு விட்டபடியே இரவில் உறங்காமலிருக்கிறார்.(39) உமது தவ சக்தியின் மூலம் நீர் புதிய உலகங்களையே படைக்கவல்லவராயிருக்கிறீர். இப்போது மறுமையில் இருக்கும் இந்த மன்னரின் பிள்ளைகளை இவருக்குக் காட்டுவதைக் குறித்து வேறென்ன நான் சொல்ல முடியும்?(40)
துருபதன் மகளான இந்தக் கிருஷ்ணையும் {திரௌபதியும்} தன் உற்றார் உறவினர் மற்றும் பிள்ளைகள் அனைவரையும் இழந்திருக்கிறாள். என் மருமகள்களில் எனக்கு மிகவும் அன்புக்குரியவள் இதன் காரணமாக மிகவும் துன்புறுகிறாள்(41) இனிய வாக்கைக் கொண்டவளும், கிருஷ்ணனின் தங்கையுமான சுபத்திரை, தன் மகனை இழந்து ஆழமான துன்பத்தில் எரிந்து கொண்டிருக்கிறாள்.(42) அனைவராலும் மதிக்கப்படுபவளும், பூரிஸ்ரவசின் மனைவியுமான இந்தப் பெண், தன் கணவனை விதி வென்றதால் துன்பத்தில் பீடிக்கப்பட்டு எப்போதும் இதயம் பிளக்கும் அழுகையில் ஈடுபட்டு வருகிறாள்.(43) குரு குலத்தவரும், நுண்ணறிவுமிக்கவருமான பாஹ்லீகர் இவளது மாமனார் ஆவார். ஐயோ, இந்தப் போரில் சோமதத்தரும் தன் தந்தையுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்[1].(44)
[1] "பாஹ்லீகர் சோமதத்தனின் தந்தையும், பூரிஸ்ரவஸின் பாட்டனுமாவார். எனவே, காந்தாரியால் குறிப்பிடப்படும் இந்தப் பெண்ணுக்கு கணவனின் பாட்டனாவார்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
ஐயோ, பெரும் நுண்ணறிவையும் பெருஞ்செழிப்பைக் கொண்ட உமது மகனான இந்த மன்னரின் {திருதராஷ்டிரனின்} மகன்களும், போரில் ஒருபோதும் பின்வாங்காத வீரர்களுமான அந்த நூறு பேரும் போரில் கொல்லப்பட்டனர்.(45) அந்த மகன்களின் நூறு மனைவியரும் துன்புறுபவர்களாக, மன்னன் மற்றும் எனது துயரத்தை அதிகரிக்கச் செய்கிறார்கள். ஓ! பெரும் தவசியே {வியாசரே}, அந்தப் பெரும்படுகொலையால் தாக்கப்பட்ட இவர்கள் அனைவரும் என்னைச் சூழ்ந்து திரண்டிருக்கின்றனர்.(46) ஐயோ, ஓ! பலமிக்கவரே, ஐயோ, அந்த உயர் ஆன்ம வீரர்கள், பெருந்தேர் வீரர்கள், என் மாமனார், சோமதத்தர் மற்றும் பிறரின் கதி என்னவானது?(47) ஓ! புனிதமானவரே, எதனால் இந்தப் பூமியின் தலைவரும், நானும், என்னுடைய மருமகளான இந்தக் குந்தியும், எங்கள் துயரில் இருந்து விடுபடுவோமோ அஃது உமது அருளின் மூலம் நடக்கட்டும்" என்றாள் {காந்தாரி}.(48)
காந்தாரி இவ்வாறு சொன்னதும், கடும் நோன்புகள் பலவற்றால் முகம் வற்றியிருந்த குந்தி, சூரியப் பிரகாசத்துடன் கூடியவனும், கமுக்கமாகப் {இரகசியமாகப்} பிறந்தவனுமான தன் மகனை {கர்ணனை} நினைக்கத் தொடங்கினாள்.(49) வரமளிக்கும் முனிவரும், தொலைவில் நடப்பதைக் காணவும், கேட்கவும் இயன்றவருமான வியாசர், அர்ஜுனனின் அரசத் தாய் துன்பத்தால் பீடிக்கப்பட்டிருப்பதைக் கண்டார்.(50) அவளிடம் வியாசர், "ஓ! அருளப்பட்டவளே, உன் மனத்தில் என்ன இருக்கிறது என்பதை எனக்குச் சொல்வாயாக. நீ சொல்ல விரும்புவதை எனக்குச் சொல்வாயாக" என்றார்.(51) இதன் பேரில் தன் மாமனாருக்குத் தலைவணங்கிய குந்தி, நாணத்துடன் கடந்த கால நிகழ்வுகள் தொடர்பான சொற்களைச் சொன்னாள்" {என்றார் வைசம்பாயனர்}.(52)
ஆஸ்ரமவாஸிகபர்வம் பகுதி – 29ல் உள்ள சுலோகங்கள் : 52
ஆங்கிலத்தில் | In English |